Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

ரவுண்டப்..

1 comment

90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப்ப பொருளாதார நெருக்கடி, பாதை பூட்டு, சாமானுகளும் விலை, தட்டுப்பாடு.  அதனால அம்மாவின் தாலி வித்துத்தான் பால்பக்கட் வாங்கினது எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.


வளர்ந்தபிறகு றோட்டில ரோந்து போற, இல்ல என்றால் வீட்டு வேலியை பிரித்து பாதை வைத்து, மதில் என்றால் பாய்ந்து போற ஆமியை பார்த்து வியந்திருப்பீர்கள். எங்களுக்கு அவைதான் நல்லது செய்யப் போராடினம் என்றுதான் ஆரம்பத்திலநினைச்சனான். புலிகளின் குரல்ல போன பாட்டை கேற்றுக்க நின்று பாட, அதை அப்பாட்ட சொல்லி பேச்சு வாங்கித்தந்த ஆமியால தான் முதலில அவங்களை பிடிக்காமல்  போனது. இப்பவரை அப்படித்தான். ஆனால் பிறகு தான் தெரியும் இவை எங்கட ஆக்கள் இல்ல என்று.

அப்படியே வருடங்கள் போக சிந்திக்கத்தொடங்கியிருக்க வேணும் உந்த கொலசிப்பும் வந்திட்டுது. அதை எழுதுற காலம் வரேக்க அடிபாடு இடப்பெயர்வு என்று மாற்றங்கள். நிறையநாள் இல்லை ஒரு இரண்டு வருடங்களில் அது முடித்து வீடுகளுக்கு திரும்பி வந்திருந்தோம். 2006ல அப்படி ஒரு சண்டைக் காலத்தை திருப்ப அனுபவிக்க வேண்டி வந்தது. அது எல்லாருக்கும் பொதுவானது தான். இருந்தாலும் எங்களுக்கு அது ஒரு விதமானது.

அப்படித்தான் 2006ல, நாங்கள் சாதாரண தரம் எழுதுவதற்கு காத்திருந்த காலம் அது. ஆகஸ்ட் மாதம் என்று தான் நினைக்கிறேன். அப்ப தான் அந்த கேவியூ என்ற ஒன்றை போட்டவங்கள், முழுநேரமும் போட்டு பிறகு ஒருமணிநேரம் மட்டும் தளரும். கரண்ட் ஒருமணிநேரம் தான் வரும். என்ன தண்ணியை ராங்ல அடித்து வைக்கலாம், லைட்டுக்கு சார்ஜ் போட்டு வைக்கலாம், கரண்ட் ரேடியோ வைத்திருப்பவை செய்தி கேப்பினம்.  போன் சார்ஜ் போட்டுவைத்தும் பிரயோசனம் இல்லை, ஏன் என்றால் சிக்னல் நிப்பாட்டிப் போட்டுத்தான் சண்டைபிடிச்சவை. பழையபடி கொமினிகேசன் வாசல் தான் சனத்துக்கு. கிட் காட் தான் அப்ப அதுகும் இல்லை.

ஒரே பல்குழல் செல் அடிக்கிற சத்தம் கேக்கும், விழும் சத்தமும் கேக்கும். தாக்குதல் பயம் இருந்தாலும் சங்கத்தில மண்ணெண்ணெய்க்கு கிறவுட்ல நிக்க போகத்தான் வேணும். இல்லை என்றால் சிமினி விளக்கு எரியாது. பெற்றோல் செட்டில அப்பப்ப குடுக்கிறதை நிப்பாட்டிபோடுவினம். கப்பல் வரேல எண்டுறது அதுக்குச் சாட்டு. அந்த ஒருமணி நேரத்துக்கு பலசரக்குக்  கடைகளும் திறக்கும். அனால் அவை நினைச்சவிலைக்கு விற்பினம். உப்படி எல்லாம் கனக்க நடந்தது. 

அந்த ஒருமணிநேரம் வெளில போறவை திரும்பி வாறது என்டுறதும் ஒரு சந்தேகம். போன பலபேர் வரவும் இல்லைத்தான். எங்களை வேலிப்பக்கமோ கதவுக்கு கிட்டவோ விடமாட்டினம். அந்த நேரத்தில அப்பா சங்கத்துக்கு போக அம்மாவை உச்சி வெளில போன அனுபவமும் நிறையவே இருக்கு, எங்களை பிடிக்கமாட்டினம் என்ற நம்பிக்கைதான். காற்சட்டை போடுற காலம் அது. தாடி மீசை முளைத்தாலும் கிளீன் சேவ் கட்டாயம்.

கேவியூ பிறகு கொஞ்சம் கூட நேரம் விலக்கி விட்டாங்கள், அப்ப ஓ லெவல் வகுப்புகள் திருப்ப நடக்கத்துவங்கியது. ரியூசன் எங்களுக்கு லக்கி வீட்டை தான் நடத்த வேண்டிய காட்டாயம். ரியூசன் நடத்திறது தெரியக்கூடாது. அதனால கொஞ்ச கொஞ்ச நேரம் அநேகமான பாடங்கள் நடக்கும். மகேந்திரன் சேர், அருட்சோதி சேர் அப்படி முக்கியமான பாடங்களுக்கு  வகுப்பு எடுப்பினம். அந்த கொஞ்ச நேரத்துக்க அநேகமான தேவைகளும் நிறைவேற்றவேண்டி இருக்கும்.

படிக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் பெடியளை பாக்க கதைக்க நல்ல நேரத்தை அந்த வகுப்புக்கள் எற்படுத்தித் தந்தன. அப்ப தான் நானும் தர்சனும் கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தோம். அவன் மித்திரன் பேப்பரில வாற மீராஜாஸ்மினின் படத்தை கொப்பியில ஒட்டி எழுதிக்கொண்டுவருவான். நேரங்களை அங்க செலவிட்டுக்கொண்டே இருந்தோம். எங்களோட படிச்ச கனபேர் வன்னிக்கு போட்டிம். ஏன் என்றால் திருப்ப இடப்பெயர்வு என்றுதான் கதை. 

கேவியூ பிரச்னையை விட பெரிய பிரச்சனை ஒன்றும் அப்ப இருந்தது ரவுண்டப். அவங்கள் காலமையே கிண்ட தொடங்கிடுவாங்கள். ரவுண்டப் எண்டு சொல்லி வீடு வீடா வந்து, பார்த்து கூட்டிப் போவினம். போட்ட உடுப்போடை போகவேண்டியது தான். நைட்டியோ சாரமோ அதோடையே போகவேணும். சில பெற்றோர் பிள்ளைகளை வயதனவர்களாகவே காட்ட விரும்பினர். ஏனென்றால் இளம்வயதினர் எண்டால் பயம். முதிர்தோற்றம் எனில் உயிர் அச்சுறுத்தல் இருக்காது என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. நாங்கள் ரவுண்டப் போக வீடுகளை உடுப்புகளை கிண்டிப்பார்துவிட்டு வருவார்கள்

ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது கோவில் தான் அவங்கட சென்டர். பொது இடங்களில் தான் ஆக்களை சேர்ப்பாங்கள். போனால் இரண்டு மூன்று மணி கூட ஆகும். அதால பொய் சொல்வதும் உண்டு. வருத்தம் போகஏலாது எண்டு கொச்சையிலை கதைக்கிற அப்படி எண்டால் வயசுபோனவையை விட்டுவிடுவினம், சின்னாக்களும் போகத்தேவையில்லை.

ரவுண்டப்புக்கு போனால் கடலை இல்லாட்டி பணிஸ், பாண் தருவாங்கள்.  அதுக்காக போறவையம் இருந்தவை. அது போக ரவுண்டப்பின்ரை பவர் உங்களுக்கு விளங்காது அப்ப அது ஒரு காதல் ஊடகம் என்றும் சொல்லலாம். அங்க பார்த்து பட்டாம்பூச்சி பறந்து செட்டில் ஆனவையும் இருக்கினம்.

ஆனால் ரவுண்டப்பின்ர மற்றப்பக்கம் மிகக் கொடூரமாக இருக்கும். தற்செயலா பிடிபட்டு ரவுண்டப்புக்குள்ள மாட்டுப்பட்டாலும் அது எங்களுக்கு பெரிய விசயமில்லை. ஆனால் வாற தலையாட்டி மாறிக்கீறி தலையை ஆட்டிப்போட்டா அவங்கள் கொண்டுபோய் அடிக்கிற அடிய நினைச்சால் தான் பயம். என்னவென்று விளங்காது உங்களுக்கு, அப்ப இருந்தவைய கேட்டுப்பார்த்தால் தெரியும்.

ரவுண்டப் என்று கூட்டிப் போனால் பவள், தலையாட்டிக்காரன் இரண்டு பேரையும் கடந்து வாறதும் அப்ப சந்தேகம் தான். பவளுக்கு முன்னால விடுவாங்கள், அதுக்குள்ள தலையாட்டி. அவன் தலையை ஆட்டினால் அங்க நேரடியாவே கைதாவினம், ரவுண்டப் போன பலபேர் காணாமலும் போவினம். இல்ல பின்னேரம் காம்புக்கு வரச்சொல்லுவினம். அங்க போனால் வெளுவை தான், வயது வேறுபாடுகளே இல்லை.

ஆனால் பிறகு தான் தெரியும் அந்த தலையாட்டிகள் எல்லாம் எங்கட ஆக்கள் எண்டுறது. நாட்போக வெளியான கதைகள் அவை.. ஆனால் முன்னுக்கு போய்நிக்க அந்த பவள் கண்ணாடிக்கால என்னத்தை பார்த்து தலையாட்டினவை எண்டுறது தான் எனக்கு இப்பவரை கேள்வி. எல்லாம் பழிவாங்கல்.

ரவுண்டப் எண்டாலும் அவனுக்கு உச்சிப்போட்டு நாள்கள் ரியுசனுக்கு போடுவம். அவன் அப்பிடி பிடிச்சாலும் கிளாஸ் எண்டால் கொப்பிய வாங்கிப் பார்த்துட்டு விட்டுவான். பேந்தென்ன அவன் ஹரி யன்ட யன்ட எண்டா நாங்கள் பொயிண்ர கடந்து போறதுதான். முந்தி படிக்கிறமோ இல்லையோ காரியல்ல ஒரு கொப்பி இருக்கும். பொக்கற்றில பேனை இருக்கும்.

காலமை பின்நேரம் எண்டு சந்து பொந்து எல்லாம் திரிவாங்கள் பீல்ட்பைக் காரணுங்கள். சந்தியள்  ஒழுங்கையளுக்க ஒளிச்சு நிக்கிற அவனுகளிட்ட மாட்டுப்படாமல் போறது லேசுப்பட்ட விசயம் இல்லை, பார்த்தா பயம் வாறமாதிரி இருப்பாங்கள். அவங்கட பீல்ட்பைக் போய் சத்தம் கொஞ்சம் ஓய “டக் டக்” சத்தம் கேக்கும். எங்கையாவது அவை மினக்கிட்டா அங்க காலமையோ இரவோ சத்தம் கேட்டே ஆகும்.

கூடவே கொன்வே, என்று ஒன்றும் இருந்தது. அவங்கள் தங்கடை ராணுவ வாகனம் போறதுக்கு வைச்சிருந்தது. வாகனங்கள் செல்வதற்காக யாழ்பாணத்தில வீதிகளில் போடப்படும் தடை அது, அது தான் கொன்வே. றோட்டுக்கு அங்காலையும் போகவிடமாட்டாங்கள், இஞ்சாலையும் வர விடமாட்டாங்கள். ஆனா அந்த நேரத்தில றோட்டாலை ஒரு வாகனமும் போகவும் மாட்டுது. மாறிக் கடந்தால் காது சிவக்கும். ஒரு விசில் சத்தம் கேக்கும் உடனே எல்லாம் பூட்டி போடுவாங்கள். எப்ப போடுவான் எண்டும் தெரியாது எப்ப எடுப்பான் எண்டதும் தெரியாது. மூண்டு மணித்தியாலம் செல்லவும் வாகனம் வரும். அதுவரை நிற்கத்தான் வேணும். நிக்கிறதும் பயம் தான்.

ஓ லெவல் எழுதிப்போட்டு ஏஎல் படிக்க மணியம் சேர் வீட்டை தான் வகுப்புக்கு போறநாங்கள். இப்படித்தான் ஒருநாள் சைக்கிள்ல போகும் போது திடீர் எண்டு விசில் சத்தம், பக்கத்தில ஒழுங்கையும் இல்ல, எங்க போறது? மறிச்சுப் போட்டாங்கள். பிறகு நடந்தது தான் விசயமே, நான் நினைத்தேன் நடத்தித் தான் விடுவாங்கள் என்று, என்ன மனநிலையில நிண்டானோ சாத்தான் சைளையும் தூக்கிக்கொண்டு நட எண்டு விட்டுட்டான். நடந்தது தான். ஒரு 150 200 மீற்றர் வரும்.

சென்ரிபொயின்ட் ஆமிட்ட அடிவாங்கிறதும் நாங்கள் தான். சிகரெட் வாங்கி வா என்று சொன்னால் அப்பா பேசுவார் எண்டு சொல்ல, அவன் விடாமல் கொப்பியை பறிச்சபடியால் போய் வாங்கி, கையுக்க வைத்து ஹாடிலோட பிடித்து கொண்டு வந்தால் அது மடிஞ்சு ஈரமா போக அதுக்கு அடி எல்லாம் வாங்கி இருக்கிறன். சின்னப்பெடியளுக்கும் பயம் தான்.



ஆனா எங்கைளைப் பார்த்து தலையை ஆட்டினாலோ, இல்ல பிடிச்சு கொண்டுபோனாலோ தலையாட்டிக்கு இல்லயெண்டால் பிடிச்சவனுக்குத்தான் விசர் எண்டு பெரிய ஆமியாக்கள் விட்டுவிடுவாங்கள். முயல் பிடிக்கிற நாய மூஞ்சியிலை பார்க்கவே தெரியும் தானே பாருங்கோ. 

இது போக ஒருநாள் டினோசன், கூட படிச்ச நண்பன் ஒருத்தன், அவன் தன்ர பிறந்த நாள் கொண்டவேணும் எண்டு சொல்ல,  கெமிஸ்ட்ரி வகுப்பை கட் அடிச்சு, அவங்கட வீட்டில ஒழுங்குபடுத்திப்போட்டு, பெடியளை கூட்ட அவன்ர வீட்டை நின்ற சுப்பர் கப் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு மணியம் சேர் வீட்டடிக்கு இரண்டுபேரும் வந்தால் கொன்வே, சரி எண்டு டினோசன் தான் உள்ள போனவன் கூட்ட, நான் வகுப்பை கட் அடிச்ச பயத்தில வெளில நிண்டுட்டன், முன் சென்ரில நின்ற பாழப்போனவன் கூப்பிட்டுப் போட்டான், கொண்டுவந்த மோட்டார்சைக்கிளுக்கும் ஒண்டும் இல்ல, என்னட்டை ஐசிய தவிர ஒண்டும் இல்ல, அப்ப எப்படி, 

உள்ள தகவல் டினோசன் மூலம் போய், படிக்கிற பிள்ளையள் பயந்திருக்கவேணும் இல்ல எண்டால் பாசமா இருந்திருக்க வேணும்.  சிலர் அழுத போது எனக்கு இன்னும் பயம் வந்துட்டுது. கிறுனைட் கொண்டுவந்து இப்படி நிண்டுட்டு எறிஞ்சு போட்டு ஓடிடுவாங்கள். என்னையும் ஏறிய வந்த எண்டுதான் நினைச்சிருக்கவேணும். ஒருமாதிரி மணியம் சேர்ட சொல்லி பேச்சை வாங்கி, இரண்டுபேரும் தப்பி வந்தம். அதுக்கு பிறகு நான் நாலு வருஷம் மோட்டார் சைக்கிள் தொடவே இல்ல, 

இப்ப இதை எழுத இன்னும் ஒரு கதை நினைவில வருது இப்படி வந்த ஒரு இரண்டு பேர் மீசாலைல எறிஞ்சுபோட்டு போட்டாங்கள். அதல வகுப்பு முடிச்சு வந்த குட்டி, துசானந் ஆக்களை பிடிச்சு முட்டுக்காலில விட்டுட்டாங்களாம். இவங்கள் சோலை அம்மன் அறிய நாங்கள் ஏறியல எண்டு சத்தியம் கட்டினவங்களாம். அவனுக்கு எங்க தமிழ் விளங்கப்போது, ஆனால் அப்ப வயசுவேறுபாடில்லாம பயம் மட்டும் தான் இருந்தது. அடியோ சூடோ நிச்சயம், இல்ல பிடிச்சால் காம்புக்கு.

இப்படி பிடிபடுறவை தான் சைன் வைக்க காம்புக்கு போறவை, அந்த நேரம் கப்பல்ல தப்பி போறதெண்டா கிளியரன்ஸ் எடுக்கவேணும். அப்படி கிளியரன்ஸ் எடுக்கவேணும் எண்டா ஆரையேனும் காட்டி குடுக்கவேணும். எங்கட ஆட்களுக்கு அது கைவந்த கலைதானே. இப்படி போறதுக்காக சும்மா சும்மா ஆக்களை சாட்டி போனவை கனபேர். சமைச்சவைய, சாப்பாடு குடுத்தவைய, சைக்கிள் மோட்டசைக்கிள் குடுத்தவைய, ரயருக்கு காத்து அடிச்சுவிட்டவைய, வன்னில சொந்தம் இருக்கிறவைய காட்டிக் குடுப்பாங்கள். ஊரில முக்கால்வாசிப்பேர் சைன் வைக்க போறவை. போய் சும்மா திரும்பி வரேலாது. அடி மிதி எண்டு சித்திரவதை முடிச்சு தான் வரவேணும். உயிர் பயத்தில காட்டிக் கொடுத்தவையும் உண்டு. 

இப்படி போன எங்களுக்கு  2009 தோட எல்லாம் போச்சு. ஏ எல் சோதினையும் வந்துடுது. அந்தநேரம் அடிவாங்கின கனபேருக்கு இப்ப சிட்டிசனும் கிடைச்சுட்டுது.

Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

  1. அன்றைய காலத்தை அப்பிடியே கண்ணுக்கு முன்னால கொண்டுவந்திட்டீங்கள். நானும் நேரடியா அனுபவப்பட்ட காலம் அது. இலங்கைத்தமிழரின் நிம்மதி என்னைப்பொறுத்தவரை தற்காலிகமானதே.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா