Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சுமைதாங்கி - நம் கலாசாரத்தின் அடையாளம்.

1 comment


எமது கலாசாரத்தின் அடையாளங்கள், நினைவுகளின் சந்ததி கடத்தல்கள் பல அண்மைக்காலங்களில் காணாமல் போய்விட்டது. நம் முன்னோர்கள் ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக இருந்திருக்கிறார்கள், அவர்கள் அறிவியல் பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொள்ளாமலே அழித்துவிடுகின்றோம். அவற்றை நாம் தெரிந்து கொண்டால் நம் பாரம்பரியம், மரபுரிமைகள் காக்கப்படும்.

முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் சுமைதாங்கிகள் நாம் செல்லும் பாதையில் ஆங்காங்கே இருக்கும். இன்றைய தலைமுறை அது ஏதோ ஒரு கல் என்று நினைக்கிறது, தேவையற்ற கட்டுமானம் என நினைத்துக் கொண்டிருக்கிறது.

கருவுற்ற பின்னர் வயிற்றில் குழந்தையுடன் இறந்துபோன ஒரு பெண்ணின் சுமை, சுமைதாங்கி மீது பாரமாக அவர்களின் துயரமாக அந்தக் குடும்பத்தினரால் இறக்கி வைக்கப்பட்டிருக்கும். கிராமங்களில் அன்று இந்த வழக்கம் இருந்து வந்துள்ளது.

அது வெறும் நினைவுக்கல் மட்டுமல்ல, தற்போது போல பேருந்துகள், மோட்டார் வண்டிகள் போன்றன இல்லாத காலம், மாட்டுவண்டி கூட ஆடம்பரமாக இருந்த அந்தக் காலத்துக் கிராமத்து மக்கள் தங்கள் விளைபொருட்களைத் தலையில் சுமந்து அங்கிருந்து நகரச் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்று வரவேண்டும். அவ்வாறு சுமைகளைத் தலையில் தூக்கிச் செல்பவர்கள், வீதியோரமாகத் தென்படுகின்ற சுமைதாங்கிகளில் தலைச்சுமையினை இறக்கிவைத்து, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துப் பின்னர் தங்களது சுமைகளை மீண்டும் தூக்கிச் செல்வார்கள்.

இந்த சுமைதாங்கிகளுடன், கிணறு, மடம் என்பனவும் இருக்கும். தாகம் தீர்க்கவும், உறங்கி ஓய்வெடுத்துச்செல்லவும் இது பயன்பட்டுவந்தது. சுமைதாங்கி, அண்ணளவாக நான்கு தொடக்கம் ஐந்து அடி (1.2-1.5 மீட்டர்) உயரமும், 18 அங்குலம் தொடக்கம் இரண்டு அடிவரை தடிப்புக் கொண்டதுமான சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இருக்காது, இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் மற்றவர் துணையின்றி இறக்கி வைப்பதற்குரியவாறும், பின் அதே போன்று எவர் தயவுமின்றி எளிதாகத் தூக்கிச்செல்லக்கூடியவாறும் தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்கும். மட்டமாக காணப்படும் சுமைதாங்கிகளும் உண்டு.

சிலவற்றில் இதன் நடுவில் ஒன்று அல்லது பல சதுரங்கள் இருக்கும், இது விளக்கு கொளுத்தி வைக்கக்கூடியவாறு இருக்கும், இந்த விளக்குகள் இரவினை அவ்விடத்தில் கழிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

சுமைதாங்கிகள், வீதிகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், வேறு வசதிகள் உள்ள இடங்களிலும் இவை அமைக்கப்பட்டன. மடங்கள், சத்திரங்கள், நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட கிணறுகள், கேணிகள், குளங்கள், ஆடு, மாடுகளுக்கு நீர் அருந்துவதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், ஆவுரஞ்சிக்கல் போன்றவற்றுக்கு அண்மையிலும், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு பகுதியாச் சுமைதாங்கியும் அமைவதுண்டு.

சுமைதாங்கி வெறும் ஓய்வு எடுக்கும் இடமல்ல, அது சமூக ஒற்றுமையை வளர்த்த இடமாகவும் இருந்தது. வழிப்போக்கர்கள், விவசாயிகள், வணிகர்கள் இங்கு சந்தித்து உரையாடி, தகவல் பரிமாற்றம் செய்து கொண்டனர். அவ்வாறான இடங்கள் ஒரு வகையில் "கிராமச் சந்திப்பு மையம்" போலவும் செயல்பட்டது.

சுமைதாங்கிகள் எப்போதும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்போடு மனிதர் வாழ்வை இணைத்த பழங்கால அறிவியலின் சான்றாகும். இன்றைய "சூழல் நட்பு கட்டுமானங்கள்" என்ற கருத்து, முன்னோர்களின் வாழ்வியலிலேயே இருந்ததற்கான சாட்சி.

இது மறக்கப்பட்ட ஒரு காலத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவையாக, நவீனத்துவத்தின் இடைஞ்சல்களாக ஆகிவிட்டன. எனினும் முப்பதாண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. அக்காலத்தில், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது, அவற்றுடன் இணைந்த கட்டுமானங்களை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது.


இப்போது அது அருவருக்கத்தக்கப் பொருள் என ஆகிப்போய்விட்டது. ஆனாலும் எம்மத்தியில் இறந்தவர் நினைவாகப் பேருந்து நிறுத்தம், நிழற்குடை அமைத்தல், நீர்த்தாங்கி அமைத்தல் போன்றன இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன பல நூறு ஆண்டுகளுக்கு மேலான சுமைதாங்கிகள் பிராமி எழுத்துக்களுடன் இனங்காணப்பட்டுள்ளன.

இலங்கை போன்ற நாடுகளில் தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்படவேண்டிய சின்னங்களாகப் பட்டியலிட்டுள்ளன. ஆனாலும் கிராமங்களில் அவை அடையாளப்படுத்தப்பட வேண்டிய பல சுமைதாங்கிகள் உள்ளன.

உள்ளூராட்சி சபைகள் வெறுமனே குப்பை அள்ளுவதும், தெருவிளக்கு பூட்டுவதும், வீதிகளுக்கு தாரிடுவதும் மட்டுமே தமது வேலையெனக்கொள்ளாமல், மரபுரிமை, பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாக்கவேண்டும். தமது ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்யவேண்டும்.

பிரதேச செயலகங்களில் கலாசார பிரிவு உண்டு, வெறுமனே கலாசார விழாக்களை நடத்துவதும், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகளை நடத்துவதும் பண்பாட்டைப் பேணி நிற்காது. இவ்வாறான விடையங்களிலும் செல்வாக்கு செலுத்த வேண்டும்.

இவர்களால் முடியாது போனால் அதைப் பராமரித்து நம் பாரம்பரியம் காக்க நாமே முன்வருவோம். இதன் பெருமைகளை நம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவோம். நம் கலாசாரத்தின் அடையாளங்களை நாம் காப்பாற்ற முன் வரவேண்டியது நம் கடமை அல்லவா?

சுமைதாங்கி என்பது கல்லில் கட்டப்பட்ட பாரம்பரிய சின்னம் மட்டுமல்ல; அது எம் முன்னோர்களின் உழைப்பு, பண்பாடு, அன்பும், பகிர்வும் கலந்த வாழ்வியலின் அடையாளம். இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வெறும் தொல்லியல் கடமையல்ல, அது நம் தலைமுறைகளுக்கான பண்பாட்டு கடனாகும். சுமைதாங்கி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாள், நம் மரபை மீண்டும் கண்டெடுக்கும் நாளாகும்.

-ச-
Previous PostOlder Post Home

1 comment:

  1. Anonymous12:08:00 pm

    அருமையான கருத்துக்கள். தெரியாத பலவிடயங்களை அறியக்கிடைத்தது. நாம் பாதுகாக்கவேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இவற்றில் கரிசனை காட்டவேண்டும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா