Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அணையா விளக்கு: செம்மணி மனித புதைகுழிக்கான நீதி வேண்டிய போராட்டம்

Leave a Comment


யாழ்ப்பாணத்திற்கு அருகே செம்மணி என்னும் இடம் உண்டு, இது கண்டி வீதியில் நாவற்குழி - அரியாலைக்கு இடையேயான பகுதியாகும். இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களின் சாட்சியாக இங்கு பல புதைக்குழிகள் இருக்கிறது. கிருசாந்தி படுகொலை வழக்குடன் பேசுபொருளாகின்றது. இது செம்மணி மனிதப் புதைகுழி என்று அன்றுமுதல் அழைக்கப்படுகிறது.

1990களின் பின்னர்களில், பல தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவர்களில் சிலரின் உடல்கள் இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தவருடம் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணியின் சித்துபாத்தி மயானத்தில் அபிவிருத்தி வேலைகளுக்காக கிடங்கு ஒன்றை வெட்டும் போது மனித என்புச்சிதிலங்கள் வருகின்றது, பின் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நீதிமன்றம் அகழ அனுமதிக்கின்றது.

அதன்போது குழந்தைகள், சிறுவர், இளையோர் முதியவர் என 19 தொகுதிகள் அடையாங்காணப்படுகின்றது. இது செம்மணியிலுள்ள இரகசியமான புதைகுழிகளில் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. அவ் என்புக்கூடுகள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவங்களாக சமூக ஊடகங்களில் உலவத்தொடங்குகின்றது. அது பலரை நித்திரையில்லாமல் செய்கின்றது.

மீண்டும் ஒருமுறை இந்த உண்மைகள் வெளிவந்தும், பல ஆண்டுகள் கடந்தும், அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்களின் குடும்பங்கள் இன்னும் உண்மை தெரிந்து கொள்ளாமல் வலியில் வாழ்கின்றனர். என்னும் சிந்தனை இந்த ஏற்பாட்டாளர்களைப் பற்றிக்கொள்கின்றது.

அதாவது செம்மணிப் புதைக்குழி வழக்குத் தொடர்பாக இராணுவ சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு 26 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் மனிதப் புதைகுழி தொடர்பான எவ்விதமான நீதியான விசாரணைகளும் நடத்தப்படவில்லை . அதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பரிகாரங்களும் செய்யப்படவில்லை.

இதை மாற்றுவதே “அணையா விளக்கு” போராட்டத்தின் நோக்கம். இது ஒவ்வொரு ஆண்டும் ஒளிவிடும் நினைவொளியாகவும், பாரம்பரிய அரசியலுக்கு எதிரான கருத்துருவாக்கமாகவும் மாற்றம்பெற்றுள்ளது. மக்களால் மக்களுக்கு என்னும் இப்போராட்டத்தில் தன்னார்வ இளைஞர்கள் மக்கள் செயல் என்னும் ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றார்கள்.

செம்மணியின் பின்னணி

1996 மற்றும் 1997 ஆண்டுகளுக்கு இடையில், இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், ரிவிரேசா படையெடுப்பின் (Operation Riviresa) போது, ஏராளமான தமிழர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் காணாமல் போனார்கள். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் உறவுகளை இழந்தார்கள். செம்மணி அரியாலை, குருநகர், நாவற்குழி, கைதடி போன்ற பல இடங்களைச்சேர்ந்தோர் காணாமல் போனார்கள்.

1998ல், இந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. கிருசாந்தி வழக்கின் சந்தேகநபரான இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சே, நீதிமன்றத்தில் கொடுத்த சாட்சியில், இராணுவமே கடத்தி, கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தார். இவர் காட்டிய இடத்திலேயே செம்மணி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இங்கே 600க்கு மேற்பட்டவர்கள் கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

1999ல், 15 உடல்கள் மட்டும் தோண்டி எடுக்கப்பட்டன. அதன் பிறகு இந்த விசாரணை நிறுத்தப்பட்டுவிட்டது.

கிருசாந்தி படுகொலை கொலைவழக்கு
செல்வி கிருசாந்தி, சுண்டுக்குளி மகளில் கல்லூரி மாணவி, பாடசாலை சென்று வரும் வழியில் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வன்புணார்வின் பின் கொலைசெயப்படுகின்றாள், அவளைத்தேடிச்சென்ற தாய், தம்பி, அயலவர் ஒன்றன்பின் ஒன்றாக கொன்று புதைக்கப்படுகின்றார்கள். இது நீதிமன்றம் செல்கின்றது.

படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னர் நீங்கள் எதாவது கூறப்போகின்றீர்களா என வினவியதற்கு, சோமரத்ன ராஜபக்ச எனும் இராணுவ அதிகாரி வழங்கிய பதில் செம்மணி படுகொலையை வெளி கொணர்ந்திருந்தது . சுமார் 400 தொடக்கம் 600 வரையான இளைஞர், யுவதிகள் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதே போல ஜெயவர்தனா, துடுகல்ல, உதயமார, லலித் ஹோவகே, அப்துல் நஷார் ஹமீத், சமரசிங்க உட்பட்ட 20 இராணுவ அதிகாரிகளையும் சூத்திரதாரிகளாக அவர் அடையாளம் காட்டியிருந்தார்.


யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய செல்வரத்தினம், அரியாலையைச் சேர்ந்த பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்கள், இளம் தம்பதிகள் என பாதிக்கப்பட்ட பலருக்கு நடந்த கொடூரத்தை விபரித்தார் செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை நான் அடையாளம் காட்டுவேன் என்றார் மற்றுமொரு குற்றவாளியான ஏ.எம். பெரேரா ஐந்து இடங்களைக் காட்ட இருக்கின்றார் என சொன்னார்.

ஒரே புதைகுழியில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன என சொன்னார். குற்றவாளிகள் வழங்கிய வாக்குமூலத்தினையடுத்து, செம்மணி புதைகுழியினை அகழ்வதற்கு நீதிபதி திரு மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ் நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். செம்மணி புதைகுழி 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2000 ஆம் ஆண்டு பங்குனி 27 ஆம் திகதி வரையான ஒன்பது மாதங்கள் நடைபெற்றன. கைதிகளை விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு செம்மணி புதைகுழிகள் தோண்டப்பட்டன. செம்மணியில் 25 புதைகுழிகள் தோண்டப்பட்டு 16 சடலங்கள் மீட்கப்பட்டன, எனினும், அவர்கள் அடையாளப்படுத்திய 10 புதைகுழிகளில் சடலங்கள் இருக்கவில்லை. இதில் அடையாளம் காணப்பட்ட இரண்டு உடல்கள் 1996 இல் காணாமல் போன ஆண்கள் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து ஏழு ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

செம்மணி, அரியாலை, கொழும்புத்துறை ஆகிய இராணுவ முகாம்களில் கொலை செய்யப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட 16 பேரினது சடலங்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டவை என மரண விசாரணை தீர்ப்பு வழங்கி, யாழ். நிரந்தர நீதிபதியிடம் வழக்கினை பாரப்படுத்திவிட்டு செம்மணி புதைகுழியின் விசேட நீதிபதி திரு மா.இளஞ்செழின் தனது பணியினை நிறைவு செய்தார். ஆறு மாதங்களின் பின்னர் செம்மணி புதைகுழி வழக்கின் பிரதிவாதிகள் தமக்குச் சட்டத்தரணிகள் இல்லை எனத் தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஒரு சில மாதங்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஏழு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


போராட்டத்தின் ஆரம்பம்


2025 ஆம் ஆண்டு ஜூன் 23 ம் திகதி, “அணையா விளக்கு” எனும் மக்கள் போராட்டம் தொடங்கப்பட்டது. இது காணாமல் போனவர்களின் குடும்பங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதகுருமார் மற்றும் ஆதரவாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன்போது அரசியல் செயற்பாட்டாளர்களும் ஒன்றுகூடியிருந்தார்கள். 25 ம் திகதி ஐநா மனித உரிமையாணையாளர் வருகையின் பின் முடிவுக்கு வந்தது.

“அணையா விளக்கு” — அணையாத விளக்கு — என்ற பெயர், மறக்க முடியாத இழப்பையும், தளராத நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இது எம்பாரம்பரிய முறையாகும், தீபம் ஏற்றி நாம் இறைவனிடம் மன்றாடுதல், தீபம் இருள் அகற்றி ஒளி தரும் என்பது நம்பிக்கை.

தொடர்ச்சியாக மூன்று தினங்கள் அணையா விளக்கு எரிந்தது. போராட்டம் இடம்பெற்ற மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக ஆற்றுகைகளும் இடம்பெற்றது. 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்(Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொண்ட நிலையில் அவரது கவனத்தை ஈர்த்தவகையில் இந்தப் போராட்டம் அமைந்தது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக பல போராட்டங்கள் நடைபெறவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் வருகை

2025 இல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையராக உள்ள வோல்கர் டர்க் இலங்கைக்கு வந்தது, எங்கள் போராட்டத்துக்கு முக்கியமான தருணமாக இருந்தது. அவரிடம் எங்கள் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக் கூறல் செயற்திட்ட அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீட்டை வழங்கவும் கண்காணிப்பில் ஈடுபடவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46/1 தீர்மானத்துக்கமைய இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக் கூறல் செயற்திட்ட அதிகாரிகளுக்கு தங்கு தடையற்ற அனுமதி இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும்.
மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தமது சமூகத்தின் வளங்களை பெற்று அதன் மூலம் சுதந்திரமான தொழிநுட்ப உள்ளீட்டைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாறு அழுத்தம் வழங்க வேண்டும்.
புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் கோரப்படும் அனைத்து நிதி கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இது வரை வெளிவந்த தகவல்கள் பிரகாரம் அனைத்து புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கண்காணிப்புடனான அகழ்வுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஊடாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு விடயம் பாரப்படுத்தப்பட்டு அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை சாத்தியப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் முடுக்கி விட வேண்டும்.


நீதி கிடைக்காமல் தடுக்கும் சவால்கள்

இலங்கை அரசாங்கங்கள் எதுவாக இருந்தாலும், இந்த வழக்கை நியாயமாக விசாரிக்க தயாராக இல்லை. முக்கியமான தடைகளாக நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன. சாட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது பயமுறுத்தல் தொடர்ந்தவண்ணமே உள்ளது. சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். நீதித்துறை அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றது அல்லது இன்னமும் சுயாதீனமாக இல்லை.

இவ்வாறான நிகழ்வுகள் மீதும், போராடும் மக்கள் மீதும் இராணுவ கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இது மக்கள் பயத்தில் வாழச் செய்கிறது. செம்மணி புதைக்குழி இடம் இன்னும் பாதுகாக்கப்படவில்லை.
பல ஆண்டுகள் ஓடிவிட்டதால் சில குடும்பங்கள் போராட்டத்தில் இருந்து விலகியிருக்கின்றனர். நீதி கிடைக்குமென்பதில் நம்பிக்கையில்லை. இவை அனைத்தும், உண்மை மறைப்பும், அக்கறையற்ற பார்வையும் மட்டுமல்ல, நாட்டின் மறுசீரமைப்புக்கு தடையாகவும் இருக்கின்றன. இதனால் தான் மக்கள் நீதியான சர்வதேச விசாரணையை கோருகின்றார்கள்.
எதிர்காலத் திட்டங்கள்


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணிக்கு விசேட விசாரணை அமைய வலியுறுத்தல்.


சர்வதேச சட்ட நிபுணர்களுடன் இணைப்பு.


செம்மணி பகுதியில் நினைவகம்.


வெளிநாடுகளுக்குச் சென்ற குற்றவாளிகளை universal jurisdiction சட்டம் மூலம் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல்.


பிற இனத்தவரோடு (சிங்களர், முஸ்லிம்கள்) கூட்டமைப்புகள் உருவாக்குதல்.

இவ்வாறே நீதியைப்பெறவும் நினைவுகள் சந்ததி கடத்தவும் உதவும். உலகமெங்கும் உள்ள நம் மக்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகளுக்கு வேண்டுகோள் உள்ளது செம்மணிக்கு நீதி என்பது இலங்கை அரசின் உள்ளகக் பொறிமுறையில் அல்ல.


“அணையா விளக்கு” என்பது நினைவுகள் மட்டும் அல்ல. அது எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கை விளக்காகும். நீதி, உண்மை, மனித கௌரவம் என்ற மூன்றும் எங்களின் உரிமைகள்.

இனி ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 23ஆம் திகதி, செம்மணி பகுதியில் விளக்கேற்றி, “எங்கே எங்கள் பிள்ளைகள்?” எனும் கோஷங்களும், “உண்மை – நீதி – பொறுப்பு” என்பதையும் வலியுறுத்தி மக்கள் ஒன்றிணையத்தான் போகிறார்கள்.


“அந்த புதைகுழியில் நமது அன்புக்குரியவர்கள் மட்டும் அல்ல — இந்த நாட்டின் மனச்சாட்சியும் புதையுண்டிருக்கிறது.”


விளக்கை அணையவிட முடியாது. அது எப்போதும் எரியவேண்டும். Until justice rises.

#JusticeForChemmani, #UnquenchableFlame -தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா