யாழ்ப்பாணம் நிலத்தடி நீரைத் தமது குடிநீருக்கான பிரதான ஆதாரமாகக் கொண்ட ஒரு தனித்துவமான பிரதேசமாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவக பகுதிகளில் வெட்டு அல்லது கட்டுக் கிணறுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் ஆலயங்களில் கிணறுகள் போன்ற நீராதாரங்கள் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து செல்வந்தர்கள் தங்கள் வீடுகளில் கிணறுகளை அமைத்தார்கள். சிலர் பொது இடங்களில் கிணறுகளை அமைத்து, ஊருக்குத் தானமாக வழங்கினார்கள். இவை “நல்லதண்ணி கிணறுகள்” என அழைக்கப்பட்டன. இன்றும் பல ஆலயங்களிலும், பொதுக்கிணறுகளிலும் பல மக்கள் நீரைப்பெற்று வருகின்றார்கள். அவ் இடங்கள் இன்னமும் நல்லதண்ணிக் கிணற்றடி என்றே அழைக்கப்பட்டது.
பின்னாளில் “பங்குக்கிணறு” என்ற சொல் வழக்கில் வந்தது. இன்றும் அந்தப் பெயரில் கிணறுகள் காணப்படுகின்றன. கிணறு அமைப்பது அதிக செலவானதால், ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து ஒரு கிணற்றை அமைத்தார்கள்.
அவ்வாறு இணைந்தவர்களுக்கு அந்தக் கிணற்றிலிருந்து நீர் எடுக்கும் உரிமை இருந்தது. பெரிய காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் பிள்ளைகள் அல்லது உறவினர்களுக்குக் காணிகளைப் பிரித்து வழங்கும்போது, கிணற்றுக்குப் பங்கு உண்டு என உறுதிப் பத்திரங்களில் எழுதுவார்கள். நீர் எடுக்க “வழிவாய்க்கால்” என ஒரு பகுதியையும் ஒதுக்குவார்கள். அது அந்த கிணற்றுக்கு எல்லாக் காணிகளிலும் இருந்து வரக்கூடிய பாதை ஆகும்.
அவர்கள் தமக்குள் ஒற்றுமையாக நீரைப் பகிர்ந்தார்கள், பயன்படுத்தினார்கள். சுழற்சி முறையில் கிணற்றைத் தூய்மைப்படுத்தினார்கள். நீரின் புனிதத்தைப் பேணிய அதே அளவுக்கு, கிணற்றையும் புனிதமாகவே கருதினார்கள்.
கிணற்றடிகள், உறவு வளர்க்கும் இடமாகவும். அவை செய்தி பரிமாறும் இடங்களாகவும் இருந்தன, கிணற்றடி மேடைகள் பலரின் அறிவு வளர்க்கும் இடமாகவே இருந்தது, நாளடைவில் கிணற்றடி வெட்டிப்பேச்சுக்கள், நீருக்கான சண்டைகள், வேறுபட்ட அளவுகளில் நீர் நுகர்தல் போன்ற பல காரணங்களால் சொந்தக்கிணற்றுக்கான தேவை உண்டானபோது பங்கு நீக்கம் நடைபெற்றது. அவரவர் தம் காணியில் கிணறுகளை அமைத்தார்கள். பங்கு நீக்கமானது பணம் கொடுத்தும், நன்கொடையாகவும் நடைபெற்றது.
ஆரம்பத்திலிருந்து பொதுக் கிணறுகள் சாதி அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன, இவர்கள் தான் இக்கிணற்றில் நீர் எடுக்கலாம், இவர்கள் அந்தக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது என்ற வழமையும் இருந்தது.அது கிணற்றடிச் சண்டைகளாக மாறின. அதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிணறு என்பது கௌரவப் பிரச்சினையாகவும் அவசியமாகவும் மாறியது.
யாழ்ப்பாணத்தில் கிணறு வெட்டுவது என்பது ஒரு சாதாரண கட்டுமானப் பணி அல்ல; அது அனுபவமும், நம்பிக்கையும், தொழில்நுட்பமும் கலந்த ஒரு கலை. "கிணறு பார்த்தல்"/ “நீரோட்டம் பார்த்தல்" என்பதில் தொடங்கி, நீர் ஊற்றைக் கண்டுபிடித்து கிணற்றை அமைப்பது வரை பல பாரம்பரிய முறைகள் பின்பற்றப்பட்டன. கிணறு வெட்டுவதற்கு முன்னதாக நிலத்தடி நீர் ஓட்டத்தைக் கண்டறிய அனுபவம் வாய்ந்த "நீரோட்டம் பார்ப்பவர்கள்" அழைக்கப்படுவர். இதற்குப் பல சுவாரஸ்யமான முறைகள் கையாளப்பட்டன, உள்ளங்கையில் தேங்காயை வைத்துக்கொண்டு நிலத்தில் வெறும் காலுடன் நடப்பார்கள். நீர் ஊற்று இருக்கும் இடத்திற்கு மேல் வரும்போது தேங்காய் தானாகவே செங்குத்தாக நிமிரும் என நம்பப்பட்டது.
தென்னோலையின் ஈக்கினை இரண்டு உள்ளங்கைக்கும் நடுவில் பிடித்துக்கொண்டு நடக்கும்போது, அது சுற்றுமிடம் நீரோட்டம் உள்ள இடமாகக் கருதப்பட்டது. குறிப்பிட்ட சில மரங்கள் (உதாரணமாக: வேம்பு, நாவல்) செழிப்பாக வளர்ந்திருக்கும் திசையை வைத்தும், எறும்புகள், கறையான்கள் புற்று வைத்திருக்கும் இடங்களை வைத்தும் ஊற்றின் இடத்தை ஊகிப்பார்கள்.
யாழ்ப்பாணத்தின் மண் அமைப்பு பெரும்பாலும் சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்டது. எனவே, கிணறு வெட்டுவது கடினமான உழைப்பைக் கோரும் காரியம். ஆதலால் தான் அது செலவு கூடிய முறை என்று ஆரம்பத்தில் கூறினேன். ஆரம்பத்தில் சதுர அல்லது வட்ட வடிவில் பெரிய குழிகள் தோண்டப்படும். கடப்பாரை, மடத்தல், வெட்டிரும்பு மற்றும் உளி போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பாறைகள் மனித உழைப்பின் மூலம் உடைக்கப்படும். கடினமான பாறைகள் வரும்போது, சிறு துளைகளிட்டு வெடிமருந்து வைத்துப் பாறைகளை உடைப்பார்கள். குறிப்பிட்ட ஆழத்திற்குப் பிறகு "ஊற்றுக்கண்" திறக்கும். அது "வெள்ளை ஊற்று" (தெளிவான நீர்) அல்லது "செந்நிற ஊற்று" என அதன் தன்மையைப் பொறுத்து அழைக்கப்படும்.
அதிக பாறையான இடங்களில் அப்படியே விடுவது வழக்கமாக இருந்தது, வெட்டப்பட்ட கிணறு இடிந்து விழாமல் இருக்க, சுண்ணாம்புப் பாறைக் கற்களைக் கொண்டு உட்புறம் சுவர் எழுப்பப்படும். அப்போதைய காலத்தில் இதற்குப் பெரும்பாலும் சீமெந்து பயன்படுத்தப்படுவதில்லை; கற்களை ஒன்றின் மேல் ஒன்றாகக் கச்சிதமாக அடுக்கி (Dry masonry) கட்டுவார்கள். இதுவே "கட்டுக்கிணறு" என அழைக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுவதால், பக்கவாட்டில் உள்ள சிறு ஊற்றுகளும் கிணற்றுக்குள் கசிந்து வர ஏதுவாக இருக்கும். பண நிலமையைப்பொறுத்து அது பொழிகற்கலால் கட்டப்பட்டது. இன்னும் சிலர் சீமெந்து கற்களால் கட்டினார்கள்.
கிணறுகளில் ஆரம்பத்தில் துலா பின்னர் வளர்ச்சியடையக் கப்பிகளைப் பயன்படுத்தி நீரினை பெற்றுவந்தோம். துலா: ஒரு நீண்ட மரம் (பெரும்பாலும் பனை மரம்) நடுவில் அச்சாணியுடன் பொருத்தப்படும். ஒரு முனையில் பாரமான கல்லும், மறுமுனையில் நீண்ட தடி/சங்கிலி/கயிற்றில் இணைக்கப்பட்ட "பட்டை" (நீர் இறைக்கும் பாத்திரம்) இருக்கும். பின்னர் பட்டைக்குப்பதில் வாளி பயன்படுத்தப்பட்டது. இன்னமும் அந்த துலா பொருத்திய எச்சம் அனேக வீடுகளில் உண்டு.
"கிணற்றுக்குக் கல் கட்டுதல்", "கிணறு தூர்த்தல்", "ஆடியில் கிணற்றை இறைத்தல், " போன்ற சடங்குகள் இன்றும் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றன. கிணறு இறைத்தபின் சாம்பிராணி புகை போடுதல், தொடக்கு கழித்தல் நிகழ்வின் பின் பால் ஊற்றுதல் என்னும் செயற்பாடுகள் மக்களில் கிணறுகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதை அறிய முடிகின்றது.
பின்னர் மண்ணெண்ணெய், மின் நீர் இறைக்கும் இயந்திரங்கள் வருகையின் பின் நீர் எடுக்கும் முறை மாறியது. துலா மிதிக்க ஆட்கள் தேவைப்பட்ட காலம் போய், ஒரு பொத்தானை அழுத்தினால் நீர் கிடைக்கும் நிலை உருவானது. தேவைக்கு நீரை வாளிகளிலும் குடங்களிலும் நிரப்பி தேவைக்குப் பயன்படுத்தி வந்தோம். நீர் இலகுவாகக் கிடைத்ததால், சிக்கனமாகப் பயன்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் பின்னர் தாராளமாகச் செலவு செய்யப்பட்டது. இது நிலத்தடி நீர் மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆரம்ப நீர் இறைக்கும் செயற்பாடுகளின் போது நீர் வற்றவில்லையா என்றால் வற்றியது, ஆனால் மீண்டும் நீர் ஊற நேரம் வழங்கினார்கள். விவசாய கிணறுகள் காலையில் ஒருமுறை, மதியம் ஒருமுறை மீண்டும் இரவு என்று மாறி மாறி பயிர்களுக்கு பாய்ச்சினார்கள். அவர்கள் தமக்குள் இறைப்பு முறை என்ற ஒன்றைப் பேணினார்கள். சுழற்சிமுறையில் நீரிணை இறைத்து பயிர்செய்கைகளை மேற்கொண்டார்கள். அப்போதும் நிலத்தடி நீர் ஆரோக்கியமாகவே பேணப்பட்டது.
போர்க்காலமும் கிணற்றின் முக்கியத்துவமும்
யாழ்ப்பாணத்தின் இடப்பெயர்வுகள் மற்றும் போர்க்கால நெருக்கடிகளில் இந்தக் கிணறுகளே மக்களின் உயிரைக்காத்தன. பொது விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்து, கையில் கொண்டு வந்த நீர் தீர்ந்துபோன இக்கட்டான தருணங்களில், ஊரெங்கும் எஞ்சியிருந்த "நல்லதண்ணி கிணறுகள்" ஆயிரக்கணக்கான மக்களின் தாகத்தைத் தீர்த்தன.
இன்றும் இடம்பெயர்ந்து சென்றவர்கள் தசாப்தங்களுக்குப் பின் தமது பழைய காணிகளுக்குத் திரும்பும்போது, முதலில் தேடுவது சிதைந்து போன வீட்டையல்ல; மாறாகத் தூர்க்கப்பட்ட அல்லது பாழடைந்து கிடக்கும் தமது கிணற்றையே. ஏனெனில், கிணறு உயிர்த்தெழுந்தால் தான் அந்த நிலம் மீண்டும் உயிர் பெறும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அக்காலத்தில் இயந்திரத் துளைப்பான்களுக்கு (Tube wells Drillers) அனுமதி மறுக்கப்பட்டதற்கும், இயக்கங்கள் குழாய்க்கிணறுகளை ஊக்குவிக்காததற்கும் பின்னால் ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதிலும், மண்ணின் தன்மையைப் பேணுவதிலும் அவர்களுக்கு இருந்த தேசப்பற்றும், விரிந்த பார்வையும் இன்று நாம் சந்திக்கும் நெருக்கடிகளின் மூலம் நிரூபணமாகிறது.
அக்காலத்தில் பெரும்பாலான விவசாயம் இயற்கை விவசாயமாகவே காணப்பட்டது, விவசாயம் என்பது வெறும் தொழிலாக மட்டுமன்றி, இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்வியலாகவே இருந்தது. வீடுகளில் சேரும் குப்பைகள், ஆடு, மாடுகளின் எருக்கள் என்பன உரமாக்கப்பட்டன. இது மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவியது. இரசாயன உரங்களில் குறிப்பிட்ட வகையே காணப்படும். பல உரங்கள், கிருமிநாசினிகளுக்கு உள்வர அல்லது பாவனைத்தடை இருந்தது. கட்டுப்பாடுகள் காரணமாக இரசாயனங்களின் ஊடுருவல் குறைவாக இருந்தது. இன்று யாழ்ப்பாணத்துக் கிணறுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உவர்நீர் உட்புகுதல் இருந்தாலும் அதனுடன் நைத்திரேற்று (Nitrate) மாசடைதலும் மிகமுக்கியமான ஒன்றாக உள்ளது.
அதிகப்படியான கிருமிநாசினிகள் மற்றும் உரங்களின் பயன்பாடு, மழைநீருடன் கலந்து நிலத்தடி நீரை நைத்திரேற்று நஞ்சாக மாற்றியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறையத் தொடங்கியதும், மரபுசார்ந்த கட்டுக்கிணறுகளை விடுத்து ஆழமான குழாய்க் கிணறுகள் பெருகிவிட்டன.
யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு தனித்துவமான சுண்ணாம்புப் பாறைகளால் ஆனது. இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை நாம் அளவுக்கதிகமாக இறைக்கும்போது, தரைக்கீழ் நன்னீர் மட்டம் குறைந்து கடல் நீர் உட்புகத் தொடங்குகிறது. இதனால், தலைமுறை தலைமுறையாக இனிமை தந்த நன்னீர் கிணறுகள் இன்று உவர்நீராக மாறிப் பயனற்றுப் போகின்றன.
தொடர்ச்சியான நீர்த்தேவை எழுந்தபின், ஆழ ஊடுருவுகிறோம். இயந்திரத்துளைப்பான்கள் நிலத்தை நூறு அடிகளுக்கு மேல் துளைத்து உவர் நீர்ப்பகுதியை அடைகின்றது. அதன் மூலம் மேலெழும் உவர்நீர் நன்னீர் ஓட்டத்துடன் கலந்துவிடுகின்றது.
முன்பு ஐந்து காணிகளுக்கு பொதுவாக ஒரு கிணறு என நீரைப் பகிரும் பண்பு இருந்தது. ஆனால் இன்று, ஒரு காணிக்குள்ளேயே ஐந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இது நாம் மண்ணுக்கும், வருங்காலச் சந்ததிக்கும் செய்யும் பெரும் துரோகமாகும். ஆழ்துளைக் கிணறுகள் நிலத்தின் ஆழத்திலுள்ள கடைசிச் சொட்டு ஈரப்பதத்தையும் உறிஞ்சி, நிலத்தை மலடாக்கி வருகின்றன.
மக்கள் தொகை அதிகரிப்பால், மலசலக்கூடக் குழிகளுக்கும் கிணறுகளுக்கும் இடையிலான இடைவெளி ஆபத்தான முறையில் குறைந்துள்ளது. இது குடிநீரில் கிருமித் தொற்றுகளை உருவாக்குகிறது. இப்போது எமது குடி நீரில் ஈ-கோலி பக்றீரியா காணப்படுகின்றது. இது அடுத்து உருவாகிவரும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகிவருகின்றது.
கிணறு: ஒரு பண்பாட்டு அடையாளம் இன்றும் யாழ்ப்பாணத்தவர் புலம்பெயர்ந்து எங்கு சென்றாலும், தமது ஊர் நினைவுகளில் கிணற்றடிக்கு முக்கிய இடமுண்டு. உறவுகளை வளர்த்த பங்குக்கிணற்றில் தொடங்கிய இந்த நீர் வரலாறு, இன்று போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் (Mineral Water) வரை வந்து நின்றாலும், "நல்லதண்ணி கிணறு" என்பது யாழ்ப்பாணத்து ஆன்மாவின் ஒரு பகுதியாகவே இன்றும் இருக்கிறது. கிணறு என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் உறவுப்பாலமாகவும், நில உரிமையின் அடையாளமாகவும் இருந்துள்ளது.
நாம் நிலத்தைத் துளைப்பது என்பதினூடாக அதன் இதயத்தைத் துளைக்கிறோம் என்பதை உணர வேண்டும். மரபுசார்ந்த கிணறுகளைப் பாதுகாப்பதும், நிலத்தடி நீர்ச் சேகரிப்பை ஊக்குவிப்பதுமே நம் மண்ணை இனிமையாக வைத்திருக்க ஒரே வழி.
அன்புடன் SaNa
.png)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா