இலங்கை, இந்து சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் ஒரு அழகிய தீவு. எனினும், அதன் புவியியல் அமைப்பும், பருவமழைக் காலங்களும் அவ்வப்போது பலத்த இயற்கை அனர்த்தங்களுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள், வரட்சி மற்றும் கடலோர அரிப்பு போன்ற அனர்த்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் வெகுவாகப் பாதிக்கின்றன.
இத்தகைய அனர்த்தங்களின் பின்னணியில் உள்ள காரணங்கள், அவற்றின் தாக்கங்கள், அதனால் ஏற்பட்ட இழப்புகள், இயற்கையின் எச்சரிக்கை மற்றும் நிரந்தரத் தீர்வுக்காக நாங்கள் என்ன செய்தோம்.என்பதெல்லாம் பேசப்படவேண்டியவையே.
அபிவிருத்தி நடவடிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு நீண்டகாலத்தை கடந்திருக்கின்றோம், அதனால் இயற்கையையும் இயற்கை சார்ந்த நடைமுறைகளையும் கைவிட்டு அனர்த்தத்துக்கு ஆளாகியுள்ளோம். இதுவே இன்றைய இலங்கையின் கசப்பான உண்மை. பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இயற்கையின் சமநிலையை நாம் புறக்கணித்ததன் விளைவுகளை இன்று நேரடியாகச் சந்தித்து வருகிறோம். திட்டமிடப்படாத நகரமயமாக்கல், முறையற்ற காடழிப்பு மற்றும் சதுப்பு நிலங்களை நிரப்புதல் போன்ற பல செயல்பாடுகள், இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தை பல மடங்கு அதிகரித்துள்ளன. வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்கள் நிகழும்போது நாம் தடுமாறுகிறோம். இதற்கு முக்கிய காரணம், இயற்கைச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் உணரத் தவறியதேயாகும்.
வெள்ளநீர் வடிந்து வரும்போது அதன் நிறமானது மண்நிறமாக காணப்படுகின்றது. இது ஒரு அபாயகரமான அறிகுறி. இந்த மண்நிறத்திற்குக் காரணமாக இருப்பது, நீர் வரும்பகுதியில் எந்தவிதமான காடுகளோ, புற்தரைகளோ இல்லாமல் போனமையே ஆகும். மேல் மண்ணைப் பிடித்து நிறுத்துவதற்கான தாவரப் போர்வைகள் இல்லாத காரணத்தால், கனமழையின்போது வரும் நீர், மேலே காணப்படும் மண்ணை தன்னுடன் அடித்துக் கொண்டு வருகின்றது. இவ்விதம் அடித்து வரப்படும் மண்ணானது கால்வாய்கள், வாய்க்கால்கள், மதகுகளில் படிவதால், நீரோட்டவேகம் குறைவடைகின்றது. இது மேலும் வெள்ளப்பெருக்கை துரிதப்படுத்துகிறது. மேலும், இந்த நீரானது குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்களை அடையும்போது அங்கும் படிகின்றது. இதனால், குளம் விரைவாகத் தூர்வாரப்பட வேண்டிய நிலையை அடைகின்றது. இதன் மூலம், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு குறைந்து, விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இலங்கையில் அனர்த்தங்களின் தாக்கம் இப்போது தொடர்ச்சியாக அதிகரிப்பதற்கு, காலநிலை மாற்றம் மட்டும் காரணமல்ல; மனித நடவடிக்கைகளும் பிரதான பங்களிக்கின்றன. இங்கு விவசாய தேவைகளுக்கோ, சட்டவிரோத குடியேற்றத்திற்கோ அல்லது அரசியல் சார் அபிவிருத்திக்கோ காடுகள் அழிக்கப்படுகின்றன. சூழல் சமநிலையின்மை, சட்டவிரோத மற்றும் முறையான காடழிப்பு நடவடிக்கைகள் எதுவாயினும் நாட்டின் வனப்பரப்பை வெகுவாகக் குறைத்துள்ளன. மரங்கள் வேர்களினால் மண்ணைப் பிடித்து நீரைப் பூமிக்குள் உறிஞ்சும் திறனைக் கொண்டவை. காடுகள் அழிக்கப்படும்போது, மழைநீர் நேரடியாக மண்ணில் விழுந்து மேல்மண்ணை அரித்துச் செல்கிறது. இதுவே வெள்ளநீரின் மண்நிறத்திற்குக் காரணமாக அமைகிறது.
வெள்ள நீரை இயற்கையாக சேமித்து வடிகட்டும் சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்கள் (Wetlands) நிரப்பப்பட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதால், வெள்ளநீர் செல்ல வழியின்றி நிலப்பகுதிகளில் தேங்குகிறது. இங்கு திட்டமிடப்படாத கட்டுமானங்கள் மற்றும் நகரமயமாக்கல் போன்றன இதன் காரணமாகின்றன. உதாரணாமாக இவ் அனத்த காலத்தின் முன் சூழல் ஆர்வலர்கள் மண்டதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானம் பற்றி தமது எதிர்ப்பினை பகிர்ந்திருந்தார்கள். ஆனாலும் கட்டுமானங்கள் தொடர்கின்றன. அரசால் பெறப்படும் சூழல் தாக்க அறிக்கைகள் தொடர்பில் சந்தேகங்கள் பெறப்படுகின்றன.
நீர்வழித்தட ஆக்கிரமிப்பு என்பது ஒரு பாரிய சிக்கல்களை இந்தச்சமூகத்துக்கு ஏற்படுத்திவிடுகின்றன. ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வெள்ளப்பெருகும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள், இயற்கை நீரோட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதில்கள், மற்றும் மண் நிரப்பப்படுதல் என்பது நீரின் இயற்கையான ஓட்டத்தைத் தடைசெய்து வெள்ளப்பெருக்கிற்கு வழிவகுக்கின்றன.
கழிவு முகாமைத்துவமின்மை இவ் இடர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது, இவை சூழலில் வெவ்வேறு தக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவை விரிவாக ஆராயப்பட வேண்டும். ஆனாலும் நகரங்களில் குப்பைகள் மற்றும் நெகிழிப் பொருட்கள் வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்துவதால், சிறிய மழைகூட உடனடியாக வெள்ளமாக மாறுகிறது.இப்போது நீர்நிலைகள் நீரினால் அல்ல இவை போன்ற உக்காத கழிவுகலால் நிரம்பிவிடுகின்றன. முன்பு வெள்ளங்களில் எதுவும் அடித்துவருவதில்லையா என்ற கேள்வியும் எழலாம், ஆம் அவை உக்கும் கழிவுகளாக இருக்கும், அவை நீர் உயிரினங்களுக்கு உணவாகும், மக்கிப்போகும் அல்லது பின் தூர்வாரலின் போது வயலுக்கு உரமாகும். ஆனால் இப்போது அடித்து வரப்படுவது மக்காத கழிவுகளே.
காலநிலை மாற்றம் மற்றும் புவியியல் அமைப்பு ரீதியான மாற்றம் என்பதும் முக்கிய செலவாக்கினை செலுத்துகின்றது. தீவிர மழைவீழ்ச்சி அல்லது குறித்த நேரத்தில் அதிகமழைவீழ்ச்சி, அதை இப்படியும் சொல்லலாம் ஒரு ஆண்டுச்சராசரி மழைவீழ்ச்சி இப்போது ஒரே நாளில் கிடைத்துவிடுகிறது. புவி வெப்பமடைதலின் விளைவாகவா? அல்லது புவியின் அமைவிட மாற்றமா? எதுவோ இப்போது இவ் விளைவில் செல்வாக்கு செலுத்துகின்றது. இதனால் மண்ணால் இவ் அதிகப்படியான நீரை உறிஞ்ச முடியாத நிலை ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் காணப்படும் குடியேற்றம், அதிக மழையின்போது மண்ணில் நீர் நிரம்புவதால் மற்றும் நீரோட்டத்தின் போது நிலம் அரிக்கப்பட்டு மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அபாயகரமான பகுதிகளில் மக்களின் குடியேற்றம் தொடர்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
இலங்கை சந்திக்கும் அனர்த்தங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. அனர்த்தங்களின் வடிவங்கள் மற்றும் பாதிப்புகள் வேறுபடுகின்றன. வெள்ளப்பெருக்கு தாழ்நிலப் பகுதிகள், ஆற்றுப் படுக்கைகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மிக முக்கிய அனர்த்தமாக உள்ளது. வெள்ளம் விவசாய நிலங்களை மூழ்கடித்து, பயிர்ச் சேதத்தை ஏற்படுத்துகிறது. வீடுகள், போக்குவரத்து வழிகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சேதப்படுத்துகிறது. கடந்த டிட்வா புயலின் பின்னான வெள்ளம் இலங்கையை முற்றாக மாற்றியுள்ளது. இலங்கை இன்னமும் மீளவில்லை.
மண்சரிவுகள் மத்திய மலைநாட்டிலும், சில பகுதிகளிலும் அதிதீவிர மழைக் காலங்களில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன. இது பல நேரங்களில் உயிர்கள் மற்றும் உடமைகளை ஒரேயடியாக புதைத்து விடுகிறது. குறிப்பாக, தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.
ஒருபுறம் வெள்ளம் என்றால், மறுபுறம் நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் வரட்சியால் பாதிக்கப்படுகின்றன. தொடர் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளுக்கு அத்தியாவசியமான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து செல்கின்றது, இது மின்சார உற்பத்திக்கும் அச்சுறுத்தலாகிறது. மழைமூலம் கிடைத்த நீரினை கடலுக்கு ஓட விட்டுவிட்டு, மீண்டும் கடலிடம் நீரினை மிகக்கூடிய செலவினைக் கொடுத்து பரிகரித்து பெறுகின்றோம். நாம் கட்டமைத்து சரிசெய்யவேண்டிய விடயங்கள் பல உள்ளன.
அனர்த்த முகாமைத்துவம் என்பது மீட்புப் பணிகளுடன் முடிந்துவிடக் கூடாது. இது நீண்டகால, நிலையான அபிவிருத்தி திட்டமாக இருக்க வேண்டும். இயற்கையை மீட்டெடுத்தல் மிகப்பிரதானமான ஒன்றாகும். மீள் காடாக்கம், குறிப்பாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மண் அரிப்பு ஏற்படும் இடங்களில் காடுகளை மீட்டெடுக்க வேண்டும். தற்போது எஞ்சியுள்ள சதுப்பு நிலங்களைச் சட்டரீதியாகப் பாதுகாத்து, அவற்றின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திறனைப் பராமரிக்க வேண்டும். புதிய சதுப்பு நிலங்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள்: அபாயகரமான மண்சரிவு மற்றும் வெள்ளப் பகுதிகளில் கட்டுமானங்களை முற்றிலுமாகத் தடைசெய்தல். மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று நிலங்களை வழங்குதல், நீர்ப்பாசனக் கட்டமைப்புச் சீரமைப்பும் அவசியமாகின்றது. ஆழமற்றுக் காணப்படும் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை உரிய நேரத்தில் தூர்வாருதல். அத்துடன், நீரோட்டத்தின் வேகத்தை அதிகரிக்க கால்வாய்கள் மற்றும் மதகுகளைச் சீரமைத்தல் என்பதும் அவசியமாகின்றது. நவீன நீர்நிலை முகாமைத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வெள்ளநீரைத் திசைதிருப்பி வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இயற்கை முன்னெச்சரிக்கை பல்வேறு தடவைகளில் செய்துள்ளது. நீர் நிலைகளில் காணப்பட்ட மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன, டொல்பின்கள் ஆழமற்ற கடற்பரப்புக்கு வந்துள்ளன, சூழல் வெப்பநிலை அனர்த்தத்துக்கு முன்னர் மிகவும் குறைந்து குளிர் காலநிலை தோன்றியிருந்தது. அரசு கூட பல எச்சரிக்கை விடுத்தது, நிறுவனங்கள் முன்னேற்பாட்டுடன் தயாராக இருந்தது, இருப்பினும் அனர்த்தம் நிகழ்ந்தே இருந்தது. இந்த அனர்த்தம் ஒன்றை உணர்த்தியது குறித்த தகவல்களை மக்களிடம் விரைவாகவும், துல்லியமாகவும் கொண்டு சேர்ப்பதற்கான நவீன எச்சரிக்கை முறைகளை நிறுவுதல் அவசியமாகின்றது என்பதும்.
அரசாங்கம் வகுத்துள்ள கொள்கைத் திட்டங்களும், நீண்டகாலத் தீர்மானங்களும் வெறும் காகிதத்தில் மட்டுமன்றி, களத்திலும் அமுல்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, எதிர்கால சந்ததியினரின் கடமை மட்டுமல்ல, இன்று நாம் எதிர்கொள்ளும் அனர்த்தங்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாகும்.
அன்புடன் நான்
.png)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா