Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


என் யன்னலோரோ இருக்கைகள்..

எல்லோருக்கும் பிடித்துப்போகும்
யன்னலோரோ இருக்கைகள்..
விரும்பியும் விரும்பாமலும்
சிலநேரங்களில்
எப்படியோ பறிபோய் விடும்..
கர்ப்பிணிகள் உரிமையுடன்
பெறுகின்றனர்..
முதியவர்கள் அனுதாபத்தில்
பெறுகின்றனர்....

காதலர்கள், நோயாளிகள்,
வயோதிபர், குழந்தைகள்..
யார் வேண்டும் என்றாலும்
இந்த இருக்கையில் இருந்தால்
உலகத்தையே பார்த்துவிடலாம்...
உலகத்தை மறந்தும் விடலாம்..

மழைக்காலத்தில் சாரலையும்
வெயிற்காலத்தில் தென்றலையும்
சில நாட்களில் செம்மண் துசிகளையும்
அள்ளி தந்துவிடும்...

எப்போதும் யாவர்க்கும்
இரசிக்கும் இடமாகவே
இருந்துவந்துள்ளன....
யன்னலோரோ இருக்கைகள்.
எப்போதும் எனக்கும்..!
உலகம் அழகு என்பதை என் 
யன்னலோரம் அடிக்கடி சொல்லும்..
உலகம் சிறிது என்பதையும் கூட..

சில நேரங்களில் யாவற்றையும்
இழக்கத்தான் வேண்டும்
எதுவும் நிரந்தரம் இல்லை என்பதையும்
என் யன்னலோரோ இருக்கைகள்
அடிக்கடி சொல்லாமல் சொல்லும்...

தமிழ்நிலா

அழுக்குத் துணிகள்
லேசான மழுங்கிய தாடி
கண்களில் புன்னகை
புயங்களில் வலிமை
துப்பாக்கி ஏந்திய
ஒரு இளைஞன்
நினைவுக்கு வருவான்...

யார் அவன்?
புரட்சியின் குறியீடு...
முதலாளித்துவத்தின் எதிரி..
மக்களின் விடுதலை விரும்பி...
புனிதப் புரட்சியாளன்..

சே குவேரா
மற்றவரிடமிருந்து மாறுபட்டவன்
என்னிடத்தில் ஒன்று பட்டவன்...
என் சே குவரா இப்படி இருப்பான்

அழகிய துணிகள்
மழிக்கப்பட்ட தாடி...
கண்களில் மாறாத புன்னகை..
நெஞ்சினில் அதே திடம்..
கைகளில் பேனா
வைத்திருப்பான்...

இளைஞர்கள் கோபடுகிறார்கள்
சே தடுத்துவிடுகிறான்...
அநீதியை கண்டு 
ஆத்திரம் வருகிறதா? 
நீயும் என் தோழன்....
துப்பாக்கிகள் போடப்பட்டு
பேனாக்கள் ஆயுதமாகிறது...

வடுக்கள் பெற்றவர்கள்
விருதுகள் பெறப் பழகிக்கொண்டார்கள்
மறைந்து தாக்கியவர்கள்
நேருக்குநேர் தாக்க பழகினார்கள்..
புரட்சி புது வடிவம் பெற்றது...

சே குவேரா
சிலையாகவில்லை.. - இப்போது 
சரித்திரம் ஆனான்...
புரட்சியின் தந்தையாக அல்ல 
புரட்சியின் குழந்தையாக...

தமிழ்நிலா

சே குவேரா (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

காலத்தின் சாக்கடைக்குள்
காதல் கல் வீழ்கிறது..
விழுகையில் ஏற்படும்
நீர் வளையங்கள்
வேலி போடமுயன்றும்
தெறித்த நீர்த் திவலைகள்
கீழே விழமுன்,
ஆழச் சென்று
அடைந்து விடுகின்றது
கூரான அந்தக் கல்..

உள்ளே சில கொத்திப்பார்த்தன..
சில தட்டிப்பார்த்தன..
அசைவதாய் இல்லை..
நாட்கள் நச்சரித்து நகர்ந்து கொண்டன..
கூரான அந்த கல் மழுங்கியது..
வேலிகளுக்கு வெளியே
வழுக்கத் தொடங்கியது..

மகிழ்ந்து தலைதிருப்பி
உன்னிப்பார்த்தது எழுந்துவர..
முடியவில்லை,
அமிழ்ந்து கொண்டது
அந்த சகதிக்குள்...

தமிழ்நிலா

நண்பன் ஒருவனுடன் கதைக்கும் போது மனதில் பதிவாகிய ஒருவிடயம்.. இதில் தவறுகள் இருக்கிறது, உண்மைக் காதலர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.... 


மரண நதிகள்
சலசலத்துக் கொண்டன..
பிணம் தின்னிக் கழுகுகள்
மரங்களில் வந்தமர்ந்தன..
இருட்டில் கரைந்துவிடுகின்றது
மெழுகுதிரியின் சுவாலை...

எழுத்துக்கள்
தூங்கிக்கொண்டிருந்தன..
எப்படிக் கவிதையாவது என்றும்
தெரியாது அதற்கு..
அடிக்கடி என்னைக்
கேட்டுக்கொள்ளும்...

இரண்டு வரிகளை
இணைத்தா...?

அல்லது

ப்

டி
எழுத்துக்களைப் பிரித்தா..?

ஒரு
முழுவரியை
நான்காக
உடைத்தா...?

அல்லது
அலை போல நாபுரளும்
உவமைகளை அடுக்கியா...?
ஆனால் பொய் சொல்வதற்கு
துளியளவும் சம்மதம் இல்லை
என்றது பேனா.... என்ன செய்வது..??

இணைத்தும், பிரித்தும்
அடுக்கியும், உடைத்தும்..
இப்படி எழுதினேன்..

நன்று என்றார்கள்
எழுத்துக்கள் மார்தட்டிக்கொண்டன
நாம் கவிதையென்று...
பொய்ப்புகழ்ச்சி பிடித்துவிட்டது போலும்
பொய்களையே எழுதிக்கொண்டது...

இது கவிதையே இல்லை
என்றார்கள் கவிஞர்கள்
மீண்டும் தூங்கிவிட்டது...
எனது கவிதை...
எழுந்திரு என்றேன்
புரண்டு படுத்துக்கொண்டது
எழுந்துவர விருப்பமின்றி...

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home