Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நிலத்தடி நீரும் சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வும்

Leave a Comment

தென்மராட்சி ஒரு காலத்தில் செழுமை தரும் விவசாய நிலங்களால் நிரம்பிய பகுதி, இன்று சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு, நீர்நிலைகள் அற்றுப்போதல் போன்ற அதிகழவான குழாய் கிணறுகள் அமைத்தல் போன்றவற்றால் நிலத்தடி நீரின் அழிவை கண்முன்னே காண்கிறோம். 

தென்மராட்சியில் நடைபெறும் சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வின் பின்னணி

கணக்கற்ற அளவிற்கு நடைபெற்றுவரும் சுண்ணாம்புக் கல் அகழ்வுகள், யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைப்பையும், குடிநீர் ஆதாரங்களையும் இல்லாதொழிக்கப்போகின்றன. இது வெறும் சூழலியல் பிரச்சினை அல்ல, இது வளச்சுரண்டல், அதிகார சவால் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் உயிரச்சுறுத்தல்.

மக்கிமாபியா : ஒரு கதை

சுண்ணக்கல் ஆனது பல்வேறு கிராமங்களில் பொதுவாக விவசாய நிலங்களில் நிலத்தை பண்படுத்துவதற்காகவோ அல்லது வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டப்படும்போதோ எடுக்கப்படும், அவ்வாறு எடுக்கப்படும் கண்ட கற்கள், வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தியது போக சிறிய அளவிலான கிரேசர்களுக்கு வழங்கப்பட்டு சல்லியாக மாற்றப்படும். அவ்வாறு கற்களை உடைக்கும் பொழுது உருவாகும் மக்கிகள், கட்டடங்களின் உள் போட்டு நிரவியோ அல்லது வீதிகள் அமைக்கவோ பயன்படுத்தப்பட்டன. பழைய மக்கி வீதிகள் இன்னமும் பலர் நினைவில் இருக்கும்.

இவற்றை சிறிய அளவிலான வேலையாட்கள் அலவாங்குகள், கடப்பாறைகள் கொண்டு மெது மெதுவாக வெட்டி எடுத்து மண்ணை அரித்து அங்கேயே கொட்டி விட்டு, கற்களை மாத்திரம் வெளியே கொண்டு செல்வார்கள். அவர்களால் நில மட்டத்திற்கு கீழே வெட்ட முடியாது. கற்களில் பட்டு தெறிக்கும் கடப்பாறைகள் மூலம் மிகுந்த உடல் உழைப்புடன் அவை சிறிய அளவில் எடுக்கப்படும். அவ்வாறான வேலையாட்கள் இன்னமும் இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின்னரே கிரனைட் கற்கள் அதிகமாக அறிமுகமாகியிருக்கவேண்டும்.

ஆங்காங்கே காணப்படும் கல்லுடைக்கும் ஆலைகள் வெள்ளை படிந்து காணப்படும், உதாரணமாக சொல்வதானால் கோப்பாய், புத்தூர், தொண்டமானாறு, வீதிகளில் மேற்படி கல் உடைக்கும் ஆலைகளைக் கண்டுள்ளேன்.
கண்டகல் என்று, வெள்ளைச் சல்லி என்று, மக்கி என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அவற்றில் தான் அக்காலத்தில் பல வீடுகள் கட்டப்பட்டிருக்கும். இப்போதும் சில வீட்டுத் திட்ட வீடுகள் இவற்றினால் கட்டப்படுகின்றன.

எனவே சுண்ணாம்புக்கல் பாவனை என்பது தவறானதா, அகழ்வது பிழையானதா, கொண்டு செல்வது முறையானதா எனக் கேட்க கூடும்.
தோட்டப் பயிர்களின் வேர் இரண்டடிக்கு மேல் பெரும்பாலும் செல்வதில்லை, அத்திவரக் கிடங்குகள் பெரும்பாலும் இரண்டரை அடியிலே வெட்டப்படுகின்றன, லாண்ட் மாஸ்டர், உளவு இயந்திரங்கள் மூலம் ஒருடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றப்பட்டன. டிப்பர்கள் A9 வீதி போன்றன செப்பனிடும் போதும், புகையிரத மார்க்கங்களை அமைக்கும் பொழுதும் இங்கு அதிகளவு அறிமுகமான ஆகியது.

வீதிகள் செப்பனிட்டு முடிய, புகையிரத மார்க்க வேலைகள் முடிந்த பின்னர். லீசிங் கட்ட முடியாமல் அவஸ்தை பட்ட டிப்பர்கள். அதனை கட்டுவதற்காக நேரடியாகவே சட்டவிரோத மண், சுண்ணக்கல் போன்ற கனிமங்களின் அகழ்வுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அச்சட்டவிரோத செயற்பாடுகள் இன்று மிகப்பெரிய மாபியாக்களாக உருவாகி நிற்கின்றன.

இப்போதைய பேசு பொருள் என்பது அகழ்வது பற்றியதே, கொண்டு செல்வது பற்றியதோ, விற்பனை செய்வது பற்றியதோ அல்ல. அதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளினை வைத்து, அனுமதியற்ற முறையிலும், வழங்கப்பட்ட சட்ட வரையறைக்கு அப்பால் அச்சட்டங்களுக்கு விரோதமான செயல்பாடுகள் செய்வது பற்றியதே ஆகும்.

யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களங்கள அனுமதிகளுடன், சட்டங்களுக்கு உட்பட்டு சுண்ணாம்புக் கல் அகழ்கிறோம், அவற்றைக் கொண்டுசெல்கிறோம் என்று சொன்னால் நமது எதிர்காலச் சந்ததியிற்கு கடல் நீரை ஊரிற்குள் கொண்டுவந்து நன்நீரை உவர் நீராக மாற்றுகின்றோம் என்று வெளிப்படையாக சொல்லுவது போன்றது.

அரச அனுமதி என்பது புவியில் அடிப்படை ஆய்வுடன் கொடுக்கப்படுகிறதா என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இரண்டரை அடிக்கி மேல் அகழக்கூடாது என அனுமதிகளில் கூறப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கு காணப்படுபவை 30 அடிக்கு மேற்பட்டவை. சில இடங்களில் அவற்றை விட கூடுதலாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்த பிரதேசம்; அப்படியிருப்பினும் எப்படி நன்னீர் வளம் இருந்தது என்பதற்கு விசேடமான புவியியல் அமைப்புக்கள் காரணமாக இருக்கிறது.

நிலத்தடி நீர் – யாழின் உயிரணு

நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுக்கை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர், நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள்.  யாழ்ப்பாணம், கடலால் சூழப்பட்டதிலும், நன்னீர் வளமிக்க இடமாக இருந்ததற்கு காரணம் அதன் "Shallow Karstic Aquifer" எனப்படும் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை அமைப்பு. இது Miocene limestone பாறைகளால் ஆனது. இந்த பாறைகள் துளைகள் (karsts) கொண்டவை, தண்ணீர் ஊடுருவி நிலத்தடி நீராக சேமிக்கப்படும்.

இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இவற்றுக்கிடையில் நீரோட்டம் உண்டு, நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம்பழம் போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்க கதைகளில் உள்ள உண்மை இதுதான். இந்த பாறைகளை உடைத்து அகழ்வது, கட்டுப்படுத்த முடியாத அளவில் நன்னீரை உவர்நீராக்கும் செயல். சரி இந்தப் பாறையெல்லாம் அனுமதி பெற்று உடைத்துக்கொண்டிருந்தால் கடல் உள்ளே வந்தபின் அதைப் பற்றி விமர்சித்து பயனில்லை. 

விவசாய நிலங்கள் குப்பைகளாக மாறுகின்றன

இந்த அகழ்வுப் பணிகள் அனுமதி பெறப்பட்டு சட்டத்தைப் பின்பற்றாமல் குறிப்பாக சரசலை, மந்துவில் மற்றும் வேம்பிராய் போன்ற தனியாருக்கு சொந்தமான நிலங்களில் அகழப்படுகின்றன. அனுமதிக்கப்பட்டதற்கு மேலதிகமாக அழகழ்ந்தால் அதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினர் தண்டம் அறவிடுகின்றனர், குறித்த இடத்தில் காணப்படும் ஆலையின் உரிமையாளர் 35 இலட்சங்கள் கட்டியதாக கூறியிருந்தார். அரச நிலங்களில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் எந்த அனுமதியும் இல்லாமல் வெளிப்படையாக நடக்கின்றன. 

சுண்ணாம்பு மற்றும் மக்கி ஆகியவை இங்குஅனுமதி இல்லாமல் 3 முதல் 6 மீட்டர் ஆழத்துக்குள் அகழப்பட்டு, திருகோணமலை உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன என மக்கள் கூறுகின்றார்கள்.  அகழப்படும் கல், மக்கி அருகில் உள்ள ஆலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அரைக்கப்பட்டு குவிக்கப்படும். பின் ஒரு நிறுவனம் அவற்றை சட்டப்படி பணம் செலுத்தி அதற்குரிய விலைப்பட்டியல் பெறப்பட்டு கொண்டு செல்லும். அதனை Mines and Minerals Act, No. 33 of 1992: பாதுகாக்கும்.




சட்டம் என்ன சொல்கிறது - ஏற்பாடுகள் உண்டா

இலங்கையின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது இயற்றப்பட்டது. இதன் மூலம் அனைத்து கனிமங்களும் அரசுக்கு சொந்தமானவை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினர் (GSMB) உருவாக்கப்பட்டது.

GSMB-க்கு அனுமதி வழங்கும், கண்காணிக்கும், சட்டத்தைக் கடைப்பிடிக்க வைக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் உரிமைச் சோதனை (Prospecting), ஆய்வு (Exploration), கனிமங்கள் அகழ்வு (Mining), கொண்டுசெல்லல், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி (Transport, Trade, Export) போன்றவற்றுக்கு பொறுப்பாக உள்ளார்கள். அனுமதி இல்லாமல் சுரங்கம் தோண்டுதல், கனிமங்களை எடுத்தல், விற்பனை செய்தல், ஏற்றுமதி செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால் சுண்ணக்கல் தொடர்பாக ஏதும் இல்லை, காரணம் பொதுவான கனிமமாக இல்லை அல்லது சிறப்பாக இங்கு மட்டுமே உண்டு. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விடயங்கள் இதில் கூறப்பட்டுள்ளன. 

சுரங்கப்பணிகள் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது. பெரும்பாலான செயற்பாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) அறிக்கையுடன் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பன சிலவாகும் 

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்த, வழக்கு தொடர, மற்றும் தண்டனை விதிக்க சட்டவழி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் இவையெல்லாம் வெளிப்படுத்தப்பட்டன.

மழைநீரை உள்வாங்கி அதனை குடிநீராக மாற்றுவதில் சுண்ணம்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் இந்த அகழ்வால் நிலத்தடி நீரில் உப்பு தன்மை அதிகரித்து, குடிநீர் கிடைப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்படுகின்றது. அகழப்பட்ட இடங்கள் தற்போது ஆழமான, ஆபத்தான குழிகள் ஆகியவையாக மாறியுள்ளது, இதனுள் குப்பைகள் சூழலுக்கு ஒவ்வாத பொருட்களை இடுகிறார்கள் இதன் விளைவும் மோசம் தான். இவை விவசாய நிலங்களின் பயன்பாட்டை குறைத்துள்ளன.

அரசின் பொறுப்பின்மை – அதிகாரிகளின் மீதான கேள்விக்குறி

இந்நிலையில்,  அனுமதிகளைத் தாண்டியும், அரசுத் துறைகளின் கண்காணிப்பின்றியும், சுரங்கச் சட்டங்களை மீறியும் நடைமுறையிலுள்ள செயல்கள், ஒரு முற்றுப்புள்ளிக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

முன்னர் என்ன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது, சட்டத்தரணி கேசவன் சயந்தனுக்கு இவ்விடையம் தெரிவிக்கப்பட்டு,  நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபின் சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்தது.

சட்டவிரோத அகழ்வு தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டபின்னர் விசேட அதிரடிப்படை மூலம் சட்டவிரோத அகழ்வாளர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

மீளவும் இவை ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தபின் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு கொண்டு செல்லப்பட்டபின் கெளரவ இளங்குமரன் பார்வையிட்டிருந்தார். சூழலியலாளர் திரு ஐங்கரநேசன் அவர்கள் பார்வையிட்டு ஆளுனரிடம் கோரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். 

மக்கள் சார்பில் பல கடிதங்கள் ஜனாதிபதி, சுற்றுச்சூழல் தொடர்பான அமைச்சர் போன்றோருக்கு அனுப்பப்பட்டது

அதிகாரிகள் முன்பு உறுதி அளித்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை நடத்துவதாக கூறியும், இதுவரை உயரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சோகமான உண்மை.

உடனடித் தீர்வுக்கான பரிந்துரைகள்:

தென்மராட்சியின் மக்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்க, அரசாங்கம் உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

  1. விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – அனுமதி இல்லாத சுண்ணாம்பு அகழ்வுகளை பற்றிய முறையான விசாரணையை தொடங்குதல்.

  2. சட்டங்களை அமல்படுத்தல் – சுற்றுச்சூழல் சட்டங்களையும் சுரங்கச் சட்டங்களையும் உறுதியுடன் செயல்படுத்துதல்.

  3. அமைச்சரவைத்தீர்மானம் - கொள்கை ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஊடாக அமைச்சரவைக்கு இந்த யோசனை சமர்பிக்கப்பட்டு அமைச்சரவைத் தீர்மானமாக இதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.

  4. மீளமைப்புத் திட்டங்கள் – பாதிக்கப்பட்ட நிலங்களையும் நீர்ப்படுக்கையையும் மறுசீரமைக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.

  5. குற்றவாளிகளை கைது செய்தல் – சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களைப் கண்டறிதல், குற்றவாளிகளை சட்டத்திற்கு உட்படுத்தல்.

  6. அதிகாரிகளுக்கு கட்டளையிடுதல் – கட்டுப்பாடுகளை செயல்படுத்தத் தவறிய அதிகாரிகளிடம் இருந்து அறிக்கையை பெறுதல், தண்டணைக்குட்படுத்தல். .

  7. பொதுமக்களுக்கு தகவல் வெளியீடு – விசாரணையின் முன்னேற்றம், எதிர்கால தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தகவல்கள் வழங்கல்.

தீர்வு இல்லா தடங்கள்:

இயற்கையை சுரண்டும் செயலை நேரடியாக நிறுத்துவது என்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கைத் தரத்துக்கும் அத்தியாவசியமானது. யாழ் மக்களின் குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம் அனைத்தும் பாதிக்கப்படும். இப்போதாவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாளைய யாழ்ப்பாணம் ஒரு உவர்நீர் பாலைவனமாக மாறக்கூடும்.

ஏற்கனவே எண்ணைக் கழிவு மாசு, விவசாய இரசாயன மாசால் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாண நிலத்தடி நீரிற்கு கடல் நீரையும் வரவேற்கும் முயற்சி இந்த சுண்ணாம்புக்கல் அகழ்வு.

-தமிழ்நிலா-

Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா