ஆனால் அண்மைக் காலங்களில் மலசலக் கழிவுகள் மற்றும் வர்த்தகக் கழிவுகள் முறையான சுத்திகரிப்பு இல்லாது, தென்னங்காணிகளுக்குள் நேரடியாகக் கொட்டப்படுகின்றன என்பது மிகக் கவலைக்குரியதாகியுள்ளது. இது ஒரு சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; யாழ்ப்பாணத்தின் தனித்துவமான புவியியல் அமைப்பைக் கருத்தில் கொண்டால், இது நிலத்தடி நீருக்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.
யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைப்பு என்ன – ஏன் இது மிக அபாயகரமானது?
யாழ்ப்பாணம் தீபகற்பம், பெரும்பாலும் சுண்ணாம்புக்கல் (Limestone) அடித்தளத்தில் அமைந்துள்ளது. இந்த சுண்ணாம்புக்கல் அடுக்குகள் நீரை வேகமாக ஊடுருவ விடும் தன்மையுடையவை. நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுக்கை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துணிக்கையால் ஆக்கப்பட்டிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர், நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். யாழ்ப்பாணம், கடலால் சூழப்பட்டதிலும், நன்னீர் வளமிக்க இடமாக இருந்ததற்குக் காரணம் அதன் "Shallow Karstic Aquifer" எனப்படும் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை அமைப்பு. இது Miocene limestone பாறைகளால் ஆனது. இந்த பாறைகள் துளைகள் (karsts) கொண்டவை, தண்ணீர் ஊடுருவி நிலத்தடி நீராகச் சேமிக்கப்படும்.
இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இவற்றுக்கிடையில் நீரோட்டம் உண்டு, வெவ்வேறு குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது போல் அவை தொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மழைநீர் ஊடுருவி நிலத்தடி நீராகச் சேமிக்கும்.
மழைநீர் மட்டும் அல்ல தரையில் கொட்டப்படும் திரவக் கழிவுகள், சுத்திகரிக்கப்படாத மலசலக் கழிவுகள், மருத்துவ மற்றும் வர்த்தக கழிவுகளிலிருந்து வெளியேறும் இரசாயனச் சுரப்புகள், இவை அனைத்தும் மிக விரைவாக நிலத்தடி நீர் அடுக்குகளுக்குள் சென்று கலக்கக்கூடியவை.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான மக்கள் குடிநீருக்கு கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர். ஒரு இடத்தில் மாசடைந்த நீர், சில வாரங்களுக்குள் பல கிராமங்களுக்கு பரவக்கூடிய சூழல் உள்ளது.

சுண்ணாகம் பகுதியில் இடம்பெற்ற எண்ணெய் பரவல் சம்பவம், யாழ்ப்பாணத்தின் Karst அடிப்படையிலான நிலத்தடி நீர் அமைப்பு எவ்வளவு எளிதில் மாசுபடக்கூடியது என்பதை வெளிப்படையாகக் காட்டிய ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் எச்சரிக்கை நிகழ்வாகும். மின்நிலைய செயல்பாடுகளுடன் தொடர்புடைய எண்ணெய் கசிவுகள் மண்ணின் மேற்பரப்பில் மட்டுமல்லாமல், சுண்ணாம்புக்கல் அடுக்குகள் வழியாக வேகமாக நிலத்தடி நீர்த்தொட்டிகளுக்குள் ஊடுருவியதாகப் பதிவாகியுள்ளது. அதன் விளைவாகப் பல வீடுகளின் கிணறுகளில் எண்ணெய் மணம், நிறமாற்றம், குடிநீர் பயன்பாட்டிற்குத் தகுதியின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகின. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு காரணமாக ஒரு இடத்தில் ஏற்பட்ட மாசுபாடு விரைவில் பரவக்கூடியது என்பதையும், முறையான கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லையெனில் குடிநீர் பாதுகாப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதையும் இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டியது.
இது சாதாரண நிலப்பரப்பல்ல; “Karst topography” என அழைக்கப்படும் இந்த இயற்கை அமைப்பில், நிலத்தடி நீர் பாதுகாப்பு மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் முழுமையாக Karst ஆதிக்கம் செலுத்தும் தீபகற்பமாகும். இப்பகுதியில் பெரிய ஆறுகள் இல்லை; அணைகள் இல்லை; இயற்கை நீர்த்தேக்கங்கள் மிகக் குறைவு. எனவே, நிலத்தடி நீரே மக்களின் வாழ்வாதாரத்தின் மையமாக உள்ளது.
ஆனால் Karst அமைப்பு மிகவும் உணர்வூட்டும் (highly sensitive) தன்மை கொண்டது. அறிவியல் அடிப்படையிலான திட்டமிடல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாத பட்சத்தில், நைட்ரேட் மாசுபாடு, கிருமி கலப்பு (bacterial contamination/E-Coli), கடல் நீர் உள்வீழ்ச்சி (seawater intrusion) போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும் அபாயம் அதிகமாகும்.
இதனால், யாழ்ப்பாணத்தின் நீர்வள மேலாண்மை விஞ்ஞான ரீதியாகவும், நீண்டகாலத் திட்டமிடலுடனும் மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது.
மலசலக் கழிவுகள் தென்னங்காணிக்குள் – உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகள்
ஈ.கோலை (E.coli) போன்ற நோய்க்கிருமிகள், நைட்ரேட் மற்றும் நைட்ரைட் சேர்மங்கள், அமோனியா மற்றும் பிற உயிர்க்கழிவுச் சேர்மங்கள், இவை குடிநீரில் கலந்து குடல் நோய், வயிற்றுப்போக்கு, காமாலை, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
தென்னங்காணிகள் வடமாநிலத்தின் முக்கிய வருமான மூலங்களில் ஒன்று. மலசலக் கழிவுகள் நேரடியாகக் கொட்டப்படும்போது, மண் அமைப்பு மாறி, மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். நேரடியாகக் கொட்டப்படும் கழிவுகள் உரம் ஆகச் செயற்படாது, அது உரிய முறையில் சுழற்சிப்படுத்தி பசளையாக்கப்படவேண்டியது அவசியமாகின்றது.
மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இத்தகைய கொட்டுதல்கள் நடைபெறும்போது, வாழ்வாதாரத் தரம் குறைகிறது. சூழல் மாசாக்கமும் நடைபெறுகின்றது.
இவை சீரற்ற முறையில் கொட்டப்படும்போது, நீண்டகால இரசாயன மாசுபாடு உருவாகிறது.
பொது அமைப்புகளின் முயற்சிகள்
பல்வேறு அமைப்புக்கள் இவைதொடர்பாக முயற்சி செய்திருந்தாலும், தென்மராட்சி அபிவிருத்திக்கழகம், 2023 அக்டோபர் மாதம் அப்போதைய ஆளுநர் திருமதி சார்ள்ஸ் அவர்களைச் சந்தித்து, தென்மராட்சிக்கான கழிவு மீள் சுழற்சி மற்றும் சுத்திகரிப்பு மையம் அமைக்கக் கோரிக்கை வழங்கியது. அவர் இதனை ஒருங்கிணைப்புக்குழுவிற்கு எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.
அப்போதைய ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரடியாகச் சந்தித்து இது தொடர்பாக டிசம்பர் 2023 கடிதம் வழங்கப்பட்டது. அவர் ஜனாதிபதியிடம் நேரடியா கூறும்படி கூறி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், அதனைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலின் பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த பின்னர் 2024 இல் புதிய ஆளுநரை இரண்டு முறைக்கு மேற்பட்டதாகச் சந்தித்து கோரிக்கை வழங்கப்பட்டது. அவரின் பணிப்பின் பேரில் உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவந்தினி பாபு வருகைதந்து இடம் ஒன்றைத் தெரிவு செய்தார்.
தென்மராட்சி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ இளங்குமரன் பா,உ அவர்களையும் கேட்டுக்கொண்டோம். அவர்களும் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
மீண்டும் தாமதம், எந்த முயற்சிகளும் இல்லாத போது, புதிய ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், ஆளுநர் ந. வேதநாயகன் அவர்களுக்கும் பல்வேறு வழிமுறைகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண – கிளிநொச்சி நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி அனுசரணையுடன் நகரசபை ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அண்மைய தென்மராட்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், மக்களால் தென்னங்காணிகளில் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் அதை புதிய விடயம் போல் சிலர் காட்டிக்கொண்டதும், அதன் பாரதூர விடயங்கள் தெரியாது நியாயப்படுத்த முனைந்ததும், வெறுமனே பொதுச்சுகாதார பரிசோதகரைக் குற்றம் சுமத்த முனைந்ததும் பொறுப்பற்ற செயலாகவே கொள்ளவேண்டும்.
யார் பொறுப்பு? யார் குற்றவாளி?
இன்று நகரசபை, பிரதேச சபை, தனியார் வாகனங்கள் எனப் பலர் தென்னங்காணிகளில் கழிவுகளைக் கொட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால் இங்கு ஒரு முக்கியமான உண்மை உள்ளது: அவர்களுக்கு மாற்று வசதி இல்லை.
முறையான சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல், கழிவுகளை எங்கு கொண்டு செல்ல முடியும்? வசதி வழங்காமல் குற்றம் சாட்டுவது நியாயமல்ல.
கடந்த 2016 ஆம் ஆண்டு தென்மராட்சியில் சாவகச்சேரியில் மலக்கழிவுகளைச் சுத்திகரிப்பதற்கான இயந்திரத்துடன் கூடிய பெரும் கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கட்டட வேலைகள் ஆறு மாத காலத்தில் முழுமையடையும் எனக்கூறப்பட்டிருந்தாலும், கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இன்னமும் வேலைகள் முழுமை செய்யப்படவில்லை. அவை நிரந்தரமாக கைவிடப்பட்ட ஒன்றாக போயுள்ளது.
உடனடியாக தென்மராட்சிக்கான தனித்த கழிவு மீள் சுழற்சி மையம், மலசல சுத்திகரிப்பு நிலையம், மருத்துவக் கழிவுகளுக்கான தனிப்பட்ட முகாமை அமைப்பு, எரியூட்டி வசதிகள், பொது விழிப்புணர்வு மற்றும் நிலத்தடி நீர் தரப் பரிசோதனை என்பன அவசியமாகின்றது.இது ஒரு நிர்வாகத் தாமதத்தின் விளைவு மட்டுமல்ல; இது எதிர்கால தலைமுறைகளின் குடிநீர் பாதுகாப்பைச் சுற்றியுள்ள மிகப் பெரிய சவால்.
யாழ்ப்பாணத்தின் சுண்ணாம்புக்கல் புவியியல் அமைப்பு காரணமாக, ஒரு முறை நிலத்தடி நீர் மாசடைந்தால் அதை மீட்டெடுப்பது மிகக் கடினம்.
தென்மராட்சியில் இன்று தென்னங்காணியில் கொட்டப்படும் மலசலக் கழிவுகள், நாளை ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீரில் கலக்கக்கூடும்.
எனவே, உடனடி மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டம் இன்றி இந்தப் பிரச்சினையை விட்டுவிட்டால், அது சுகாதாரப் பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது.
தென்மராட்சியின் நிலத்தடி நீரை காக்க – இன்றே செயல்படுவோம்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா