யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, தாவடி போன்ற இடங்களில், தென்மராட்சி மட்டுவில் மற்றும் வடமராட்சிகளில் உள்ள சிற்பக் கூடங்களிலும் செய்யப்படுகின்றன.

சிற்பக்கலைக்கூடங்கள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டு அங்கே பரம்பரை பரம்பரையாக தேர், வாகனங்கள் செய்யும் தொழிலை செய்துவருகின்றனர் தேர்ச்சி பெற்ற ஆசாரிமார். அப்படியான சிற்பக்கலைக்கூடத்தில் சிற்பாச்சாரி ஒருவரை சந்தித்தோம் "வணக்கம் ஐயா உங்களைப்பற்றி சொல்லுங்கோ?"
வேலைகளை சரிபார்க்கும் திரு.ஜெயப்பிரகாஸ்
"அப்பாவின் அப்பா ஆறுமுகம் ஆசாரியார்தான் முதன் முதலில் யாழ்ப்பாணத்தில வாகனம் செய்ய வெளிக்கிட்டவர். முதன் முதல் வட்டுக்கோட்டையில் செய்திருப்பினம். பிறகு திருநெல்வேலி எண்டேக்கை இங்கைதான். 1941ல் யாழ்ப்பாணத்தில் முதல் சித்திரத்தேர் செய்தது அவர்தான். யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மனுக்கு. அதைத் தெடர்ந்து இந்தியாக்காரர் வந்து தேர் செய்துகொண்டிருக்கேக்கை தேர் செய்யக்கூடிய குடும்பமாய் தான் எங்கடை குடும்பம் இருந்து கொண்டிருந்தது. எங்கட அப்பா, அவரின் சகோதரர் இரண்டு பேரும் சேர்ந்துதான் அவர்களின் தகப்பனாற்றை மறைவுக்குப் பிறகு அவரின் பெயரில் "ஆறுமுகம் சிற்பக் கூடம்" என்ற நிறுவனத்தை உருவாக்கி செய்து கொண்டு வந்தவை. பிறகு அவர்களின் மறைவுக்குப் பிறகு நான் தொடர்து செய்யுறன்" மிகுந்த பழமையான சிற்பக் கலைக்கூடத்தினை வைத்திருப்பவரும், ஏனைய சிற்பாலையங்களை வைத்திருப்போரால் "அப்பண்ணை" என்று அழைக்கப்படும் திரு ஜீவரட்ணம் ஜெயப்பிரகாஸ் எங்களுடன் அனுபவங்களைச்சொல்லத் தயாரானார்.
1941 இல் செய்த அந்த தேர் இப்பவும் கோயில்லை இருக்கா என்ற கேள்வி எழுந்தது. "ஓஓ இப்பவும் ஓடுது. இன்றைக்கு 78 வருடம் ஆச்சு. 1941ம் ஆண்டு வெள்ளோட்டம் ஓடினது. அந்தக் காலத்திலயே ஆறு மாத காலத்தில செய்து முடிக்கப்பட்ட தேர். கையால செய்தது. இப்ப மிசினறி." என்று சலிப்புடன் நிறுத்திக்கொண்டார்.
"அப்பாவோட சேர்ந்து உதவிக்கு நிண்டு நிண்டுதான் பழகினது. யாழ்ப்பாணத்திலை அப்பா மட்டும் 100, 110 தேர் செய்திருப்பர். கூடுதலாய் எல்லா ஊரிலையும் இருக்கு. நானும் 40, 45 தேர் செய்திருப்பன். 2002ல் அப்பா மறைஞ்சதும் அவர் விட்ட வேலையளை பிறகு நாங்களும் எடுத்து செய்துகொண்டிருக்கிறம்."
நாங்கள் அவருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போதும் தனது உதவியாளர்களை வழிநடத்திக்கொண்டு கதைத்துக்கொடிருந்தார். எங்களுக்கு அப்போது ஒரு கேள்வி எழுந்தது. இவ்வாறாக கலைகளின் எதிர்காலம் தொடர்பாக.
"ஐயா இந்த தொழிலை அடுத்த தலைமுறை கற்றுக்கொள்றதுக்கு வாய்ப்பிருக்கிறதா..?"

ஆனாலும் நல்ல ஒரு பெறுமதி அல்லது வேலைக்கு ஏற்ற ஊதியம் அவர்களுடைய தொழிலுக்குத் தருவதில்லை என நொந்துகொண்டார். உதாரணமாக நகை வேலை செய்வோர், தகட்டு வேலை செய்வோர் சேதாரம் என்று கணக்கில் போடுவதாகவும் ஆனால் தாங்கள் ஒரு மரத்தைக் சிறிதாக குறைத்து நறுக்கினால் கூட பின்னர் எதுவும் செய்யமுடியாது. அவற்றை விறகுக்குத்தான் போடவேணும். என்கிறார்
"இலாபம் இல்லாமல் ஒருத்தரும் தொழில் செய்யிறதில்லை. நாங்கள் சில வேலைகளை செய்ய வேணுமெண்டு ஆசைப்பட்டுக் காசு கேக்கேக்கை சில பேர் அந்த பெறுமதிக்குத் தராயினம். நாங்கள் 50 இலட்சம் கேட்டால் அவர் 40 இலட்சமுக்கு செய்யிறார். நீங்கள் செய்யேலாதோ என்று கேக்கினம். அப்பிடிக் கேட்டாக் கூடப் பறவாயில்லை. உடன குறைஞ்ச றேட்டுக்கு குடுத்திடுகினம். என்ன செய்யப் போறம் என்றது கடைசி வரைக்கும் தெரியாது. எங்கடை கற்பனையில உள்ளதுதானே.
போதிகை

இவ்வளவு விடையங்கள் கேட்டபின்னர் ஒரு தேர் செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் என்பது ஒரு கேள்வியாக இருக்கும். தேர் இப்ப உள்ள நவீன வசதிகள், தேரின் வேலைப்பாடுகளையும் பொறுத்து காலம் வேறுபடும். சாதாரணமாக ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் தேவைப்படும், சிறிய தேர் என்றால் மூன்று மாதத்திலையே செய்து முடிக்கலாம் என்கின்றார். இவற்றை விட ஆளணி முக்கியமான பங்கு வகிக்கின்றது. இப்ப தொழில்நுட்ப உதவிகள் இயந்திங்களுன்ர உதவியள் இருக்கிறதால அந்தத் தாக்கம் இல்லை என்கின்றார் அவர்.
பொதுவாக இத்தேர் சதுரம், நீள் சதுரம், அறுகோணம், எண்கோணம், நவகோணம், வட்டம், நீள் வட்டம் போன்ற சில வகைகள் தான் எமக்கு தெரியும், இவைற்றைவிட வேறு வகைகளும் உள்ளது என்கிறார்

அவரது வேலை நேரத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு இடத்தை நாடினோம். அங்கே குதிரை வாகனங்கள் உளிகளினால் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். இது எந்த கோயிலுக்கு என்று கேட்டோம். இது புத்தளத்தில் இருந்து வந்த ஓடர் என்றார். புத்தளத்தில் எந்தக்கோயில் என்றோம். கோவில் இல்லை புத்தளத்தில் இருந்து வரும் வியாபாரி ஒருவர் ஆறு குதிரைகளை கேட்டிருந்தார். அடிக்கடி இப்படி வாங்கிச் செல்வார், இதை கொழும்புக்கு கொண்டே விக்கிறவையாம் என்றார்.
![]() |
அன்ரிக் கடையொன்றில் வாகனம். படம் : சுஜீ
|
நண்பர் ஒருவர் சொல்லிருந்தார் இவ்வாறான கடைகள் பல இலங்கையில் இருப்பதாக. வெளிநாட்டவர்களுக்கு பழைய பொருட்களில் ஆர்வம் உண்டு. அதனால் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே கிழக்கின் சில பகுதிகளில் இருந்து வரும் பழைய பொருள் வியாபாரிகள் சிலர் போரின்போது சேதமடைந்தவை, கோவில் புனர் நிர்மானம் செய்யும் போது கழித்து விடப்பட்டவற்றைப் குறைந்த விலைகளில் பெற்று அவற்றை தங்கள் கொழும்பு கடைகளில் காட்சிப்படுத்தி விற்கிறார்கள். யுத்தத்த காலத்தில் சூறையாடப்பட்டவை, அண்மைக்காலமாக கோவில்களில் காணாமல் போகும் வாகனங்கள் கூட இந்த வகையில் அடங்கும்,
இந்தக் குதிரைகளைப் போல் புதிதாகவும் செய்து அவற்றை சில திராவகம் கொண்டும், சில முறைகளிலும் உருமாற்றம் செய்து, பழையனவாக மாற்றி "அன்ரிக்" பொருட்கள் என்ற போர்வையிலும் விற்பனை செய்கிறார்கள்.

0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா