எனக்கு குளம் விருப்பம், பார்க்கையில் நன்றாக இருக்கும், ஆனால் பயம் ஒன்று இருந்துகொண்டே இருக்கும், தாமரையோ இல்ல ஐதரில்லா தாவரத்தையோ புடுங்க போனவை தாமரை கொடியில சிக்குபட்டு காணாமல் போயிருக்கினம், தூர்வாராம இருக்கும் குளத்தின் சகதிக்குள் புதைந்திருக்கினம், முதலை இழுத்திட்டுதாம் என்ற கதையோ வதந்தியையோ கேள்விப்பட்டிருப்பம். ஆனாலும் குளத்தைப்பார்க்க பார்க்க ஆசை வந்திருக்கவேணும்.
ஆனால் நகர்பகுதியில் வாழ்ந்தமையினால் குளம் பிரயாணங்களின் போதுமட்டுமே கண்ணில்பட்டது. ஆனால் தனியே இயங்க ஆரம்பித்தபிறகு பல விதமான குளங்களை மிக அருகினில் கடந்து சென்றிருக்கிறேன். அவை வெறும் குப்பை போடும் இடமாகவோ, நீர் இன்றிய நிலையிலோ சிறிய குட்டைகள் போலவோ இருக்கும். சில மட்டுமே தாமரைகளோடும் நிறைந்தும் காணப்படும். அவ்வாறு எதேர்ச்சையாக கடந்த இடம் தான் ஆண்டவன் குளம். குளம் இருந்ததற்கான தடம் மட்டும் இருந்தது, கேள்விகளுடன் இருந்தபோதும் அப்போது அவ் ஊர்பரீட்சயம் இன்றி இருந்தது.
2021 இன் பிற்பகுதியில் கல்வயல் சமூக சேவா சங்கத்தினை மீள இயங்க வைக்க எடுத்த முயற்சியின் பயனாக ஒரு சம்பாசனை இடம் பெற்றது. அப்போது என்னுடன் அதே சிந்தனையுடன் இருவர் இணைந்துகொண்டார்கள். இருவரும் கல்வயலைப் பிறப்பிடமாக கொண்டவர். ஒருவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபரான திரு ந.சர்வேஸ்வரன் மற்றயவர் திரு க.செல்வபாலன், அவர் கட்டட நிர்மாண துறையில் சிறந்து விளங்கும் ஒருவர்.
குளங்களின் மரணம்: ஒரு நிலப்பரப்பின் ஆன்மா சிதைக்கப்படுதல்
அந்தச் சந்திப்பு வெறும் சம்பாஷணையாக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு நிலப்பரப்பின் தாகத்தைத் தீர்ப்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. யாழ் மாவட்டத்தின் நீர் மேலாண்மையில் குளங்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஆனால், 249 குளங்கள் காணாமல் போயின என்ற தரவு, ஒரு இனத்தின் வாழ்வாதாரச் சங்கிலி அறுக்கப்பட்டிருப்பதையே பறைசாற்றியது.
திரு. ந. சர்வேஸ்வரன் அவர்கள் ஒரு கல்வியாளராக, வருங்காலச் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். "பாடப்புத்தகங்களில் மட்டும் குளம் என்றால் என்னவென்று படிக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிவிடக் கூடாது" என்ற அவரின் வார்த்தைகள் கனதியானவை. மறுபுறம், திரு. க. செல்வபாலன் அவர்கள் ஒரு தொழில்நுட்ப வல்லுநராக, சிதைந்து போன நீர்நிலைகளை எவ்விதம் மீளமைக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்தார்.
கல்வயல் சமூக சேவா சங்கத்தின் முன்னெடுப்பு
இந்த உரையாடல்களின் விளைவாக, 'ஆண்டவன் குளம்' போன்ற கைவிடப்பட்ட நீர்நிலைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் திட்டம் உருப்பெற்றது. ஒரு காலத்தில் சிறுவர்களாக தாங்கள் குதித்து விளையாடிய அந்தக் குளங்கள், இன்று குப்பை மேடுகளாகவும் வெறும் மணல் தடங்களாகவும் மாறியிருப்பது எதனால்? என்ற கேள்வி அவர்களால் கேட்கப்பட்டது.
அந்த வரலாற்றை அவர்கள் கூறினார்கள், அருகிலிருந்த கிராமிய வழிபாட்டுடன் தொடர்புடைய வைரவர் ஆலய பயன்பாட்டிலிருந்துள்ளது அதன் பழமை 100 வருடங்களைத் தாண்டியது. அருகில் உள்ள மருதமரம் அக்கோவிலின் பண்டம் எடுத்தல், பொங்கல் படையல் செயற்பாடுகளில் பயன்பட்டுள்ளது, அதனால் அது ஆண்டவன் கேணி/ஆண்டவன் - ஆண்டான் குளம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சிறிய தூரத்தில் மாண்டான்/மாண்டவன் குளம் என்ற ஒன்று இருந்துள்ளது. இதன் பெயரானது இறந்தவர்களுக்குக் கிரிகை செய்யும் இடமாக இருந்ததினால் உருவானது.
தென்மராட்சியின் ஒருபகுதி நீரோட்டமானது ஒரு தொடராக இருந்துள்ளது. கண்டுவில் குளம் நிரம்பி, கற்குழி குளத்தை வந்தடைகின்றது, அவ்வாறே. கற்குழி குளம் நிரம்பி பெருங்குளத்தையும், பெருங்குளம் இல்வாரைக்கும், இல்வாரை நிரம்பி பருத்தித்துறை வீதி, புத்தூர் வீதியைக் கடந்து சரசாலையின் மாத்தளாய் குளத்தை அடைந்து மேலும் சில குளங்கள் நிரம்பி குருவிக்காடு வழியாக தொண்டமனாற்றை அடையும்.
இதனால் மக்கள் நம்பிக்கை, இறந்தவர் அஸ்தியானது கடலை சென்றடையும் என்பது, கீரிமலை எப்படியோ அங்கு செல்லமுடியாத ஆட்களுக்கு தொண்டமனாறு ஒரு புனித இடமாக இருந்தது. அது இங்கு மாண்டான் குளத்தினூடாக தொண்டமனாறு செல்ல மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. ஆனால் அது 20 வருடங்களுக்குள் இருந்த இடமே இல்லை என்று ஆகிவிட்டது.
நிலத்தின் மதிப்பு அதிகரித்தபோது, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது எளிதான வழியாகப் பார்க்கப்பட்டது. தூர்வாருதல் மற்றும் வரப்புகளைப் பலப்படுத்துதல் போன்ற வேலைகள் நிறுத்தப்பட்டதால், குளங்கள் மேடாகிப் போயின. குழாய் வழி நீருக்குப் பழகிப்போன சமூகம், இயற்கையான நீர்ச் சேமிப்பு முறைகளை மறக்கத் தொடங்கியது. சலவை இயந்திரம் வந்தபின் ஆடைகளைத் தோய்க்கக் குளங்கள் தேவைப்படவில்லை, தோட்டத்துக்குள் குழாய்க் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்யப் பழக்கப்பட்டபின் நீர்நிலைகள் தேவைப்படவில்லை. நிலத்தடி நீர்பற்றியோ , நிலமேல் நீர்பற்றியோ எந்த சிந்தனையும் எம்மிடம் இருக்கவில்லை, நீரின்றி போன பள்ளங்கள் குப்பைகளால் நிரப்பப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்டு காணிகள் ஆக்கப்பட்டன. பின் அவை குடியிருப்பு நிலங்களாக விற்கவும் பட்டன.
கல்வயல் சமூக சேவா சங்கம் இந்தச் சவால்களை எதிர்கொள்ளத் தீர்மானித்தது. வெறும் தூர்வாருதலோடு நின்றுவிடாமல், அந்தக் குளத்தைச் சுற்றியுள்ள சூழலமைப்பை (Ecosystem) எப்படிக் கட்டியெழுப்புவது என்பது பற்றி அவர்கள் ஆலோசித்தனர்.
அதிகாரச் சிக்கல்களும் மக்கள் சக்தியின் வெற்றியும்
இறுதியாக, 2022 மாசி மாதத்தில் நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் அவர்களின் ஊடாக எமது கோரிக்கையை முன்வைத்தோம். சபைக்குள் அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு உறுப்பினர் எமது முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும், பொதுநலன் கருதிய ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடும், சுகாதாரப் பிரிவினரின் கடின உழைப்போடும் முதற்கட்டத் தூய்மையாக்கல் பணிகள் ஆரம்பமாகின.
சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருமுறை அப்பகுதியைச் சுத்தப்படுத்தினர். ஆனால், மாற்றத்தை விரும்பாத சில கிராமத்து நபர்கள் வட்டார உறுப்பினரைத் தவறாக வழிநடத்தி, சபைக் கூட்டங்களில் எமக்கு எதிரான குரல்களை ஒலிக்கச் செய்தனர். அந்த இக்கட்டான தருணத்தில், திரு. ம. நடனதேவன் மற்றும் திரு. க. கஜீவன் ஆகியோர் எமது நோக்கத்தின் தூய்மையை உணர்ந்து எமக்காகக் குரல் கொடுத்தனர்.
அனுமதி கிடைத்தாலும், தூர்வாருவதற்கான நிதி நகரசபையிடம் இருக்கவில்லை. அரசாங்க இயந்திரம் கைகொடுக்காத இடத்தில் மக்கள் பங்களிப்பு தேவைப்பட்டது. மீண்டும் நிதிக்காக காத்திருந்தோம்.
பங்களிப்பு ஒன்று மகத்தானதாக உருவெடுத்தது. திரு. ந. சர்வேஸ்வரன் அவர்களின் சகோதரி திருமதி தேவகி அவர்கள் வழங்கிய நிதியுதவி, இத்திட்டத்தின் உயிர்நாடியாக அமைந்தது.
விரைவாக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது, இரண்டு நாட்களாக இவ்வேலைகள் இடம்பெற்றன அதிகளவான கழிவுகள் உள்ளிருந்து ஏற்றப்பட்டது. வண்டல் மண்ணாணாது அணை கட்ட பயன்பட்டது. மிகவும் சிறப்பாக அவ் இடம் உருவாக்கப்பட்டது. இவ் வேலைகள் 2023 வைகாசி இல் நிறைவு பெற்றது.
திரு. க. செல்வபாலன் அவர்களின் தொழில்நுட்ப குழு அவர்களின் நிறுவன ஊழியர்களைக்கொண்டு அணைக்கட்டுகள் பலப்படுத்தப்பட்டன.
மீண்டெழுந்த ஆண்டவன் குளம்:
தூர்வாரப்பட்ட பின், வெறும் குட்டையாகக் காட்சியளித்த அந்த இடம் மெல்ல மெல்ல ஒரு குளத்தின் வடிவத்தைப் பெற்றது. 2023 மார்கழி மாத மழையை அக்குளம் எதிர்கொண்ட விதம் ஒரு வரலாற்றுத் தருணம். வானம் பார்த்த பூமியில், வழிந்தோடி வீணாகப் போக வேண்டிய மழைநீர் அந்த ஆழமான மடியில் தஞ்சம் புகுந்தது.
இன்று ஆண்டவன் குளம் வெறும் நீர்நிலை மட்டுமல்ல; அது நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை வங்கி. ஒவ்வொரு வருடமும் சுமார் 25,000 கன அடி நீரை நிலத்திற்குள் செலுத்தி, அந்தச் சூழலின் நிலத்தடி நீரை தக்கவைத்து வருகின்றது.
பலரது எதிர்ப்புகளையும், அதிகாரக் கிடுக்கிப்பிடிகளையும் தாண்டி, ஒரு சிறு குழுவின் விடாமுயற்சியால் இன்று ஒரு கிராமத்தின் தாகம் தீர்க்கப்பட்டிருக்கின்றது. இது வெறும் ஒரு குளத்தின் மீட்சி மட்டுமல்ல, அழிந்து வரும் எமது நீர்நிலைப் பண்பாட்டை மீட்டெடுப்பதற்கான ஒரு சிறிய முன்னுதாரணம்.
இது தொடரும்.
மீண்டும் அந்தக் குளத்தை நான் கடக்கையில், அது வெறும் பள்ளமாகத் தெரியவில்லை. அதன் அடியில் புதைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான வருட வரலாறும், தொலைந்து போன நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வும் என் கண்ணுக்குத் தெரிந்தன. காணாமல் போன 249 குளங்களையும் தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம், ஆனால் எஞ்சியிருக்கும் குளங்களை "ஆண்டவன் குளம்" போல மீட்டெடுப்பது நம் கைகளில்தான் இருக்கிறது.
***** 2023 மார்கழி எடுக்கப்பட்ட படம்
அன்புடன் தமிழ்நிலா
.png)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா