யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான நகரின் பிரதான வீதியோரங்களில் நிறைந்து காணப்படுபவை பாதீனியம். அழிக்க வேண்டும் என்று அனேகர் விரும்பியும், பலர் அழிக்க முயன்றும், அழித்தும் இன்னும் அழியாது நிற்கும் இந்த பாதீனியங்கள் எங்கள் சமூகத்தின் சாபங்கள்.
அமெரிக்காவின் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் தோன்றிய பாதீனியம் செடியின் கொடிய விளைவுகள் ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் அதிகமாக உணரப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து கோதுமைத்தானியங்களோடு பாதீனியம் விதைகளும் கலப்படமாகி இந்தியாவின் மும்பைத் துறைமுகத்தின் வழியாக வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. பாதீனியம் செடியானது இந்தியாவில் இருந்து 1987ம் ஆண்டுக்கு பிறகு எமது வடக்கின், யாழ்மாவட்டத்தின் பகுதிகளிற்கு பரம்பல் ஏற்பட்டு தீவகம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தாராளமகவும் சுதந்திரமாகவும் வளர்ந்து வரும் செடித்தாவரம் ஆகும். குறிப்பாக தோட்ட நிலங்கலுள்ள கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமத்தின் பல பிரதேசங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நிறைந்துள்ளது.
![]() |
பாதீனியம் |
பாதீனியம் ஏற்படுத்தும் பாதிப்புகள்
ஆரம்பத்தில் கால்நடைகளை அடைக்கப்பட்ட பட்டிகள் இருந்த நிலங்களில் தான் உருவாகியது என்கிறார்கள். பின்னர் அக் கால்நடைகளை மேச்சலுக்கு விடப்பட்ட நிலங்களில் அவை வளர்ச்சி கண்டது, பாதீனியம் என்பது ஒரு பூக்கும் தாவரம், சூரியகாந்தி அல்லது செவ்வந்தி இனத்தைச் சேர்ந்த செடி, ஒன்றரை மீற்றர் /மூன்றடி உயரம் வரையில் வளர்ச்சியுடைய இத்தாவரம் வளர்வதற்கு சிறியளவு நீர் போதும். இது வளரும் நிலத்திலுள்ள மண்வளம் பாதிக்கப்படுவது மட்டும் அல்ல.அதில் சுரக்கும் ஒருவகை பதார்த்தம் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கினை ஏற்படுத்துகின்றது.
தெருவோரங்களில் வளர்ந்து நிற்கும் பாதீனியச்செடியானது கால்நடைகளின் உணவாகிறது, பாதீனியச்செடிகளை உண்ணும் கால்நடைகளின் பால் சுவையில் மாற்றம் பெறுகிறது. பசு மாட்டின் மடியில் படும் இவை கன்றுக்கும், பால் கறக்கும் போதும் தீங்கினை ஏற்படுத்துகின்றன. கன்றுகளுக்கு வாய்ப் புண் மற்றும் குடல்புண் நோய்களை ஏற்படுத்துகிறது. தோல் அரிப்புக்கள் புண்கள் என்பன ஏற்படவும் செய்கின்றது. பாலைக் குடிக்கும் மனிதர்களிலும் இவை உணரப்படுகின்றது.
தோட்டப் பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. குறிப்பாக பெரும் சதவீதத்தில் வளர்ச்சியைக் குறைகின்றது. மண்ணில் வெளிவிடும் நச்சுப் பொருள்களின் மூலம் பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. அவரையினப் பயிர்களின் வேர் முடிச்சுக்களை பாதிப்படையச் செய்கிறது. இந்த பாதீனியச்செடிகளின் நஞ்சுகள் இந்த வேர் முடிச்சுக்களை அழித்து விடுகின்றது இதனால் மண்ணில், வளிமண்டலத்தில் நைதரசன் சமநிலையை பாதிக்கின்றது என தாவரவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதீனியச்செடிகள் மனிதர்களுக்கும் தீங்கு அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பாதீனியச்செடிகள் பரவியுள்ள இடங்களில் காற்றில் மிதக்கும் மகரந்தங்கள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த மகரந்தங்கள் தம்மீது நச்சுப்பொருள்களை அதிகமாக கொண்டுள்ளன. இதனைச்சுவாசிப்பவர்கள் சுவாச பிரச்சனைகள், ஆஸ்மா நோயின் பாதிப்புக்குள்ளாகின்றனர். பாதீனியசெடியைத் தொடர்ச்சியாகத் தொடுபவர்களுக்கு தோலில் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகிறது.
பாதீனியச்செடிகளால் ஏற்படுத்தப்படும் நோய்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சைகளுக்கும் இல்லை.
![]() |
பாத்தீனியம் பூ |
வேடிக்கையான விடையம் என்னவெனில் யாழ்ப்பாணத்தில் கூடுதலான அரச திணைக்களங்களின் வளாகங்களில் அல்லது அவர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இவை காணப்படுகின்றன .அத்துடன் பிரதான வீதிகளில் பெரும்பாலான இடங்களில் இருமருங்குகளிலும் காணப்படுகின்றன.
குறிப்பாக கண்டி வீதி, கைதடி வடமாகாணசபையின் அலுவலகத்துக்கு முன்பாக, பனை அபிவிருத்தி சபையும் அதனை சூழவுள்ள பகுதியும், செம்மணி வீதி, யாழ் முற்றவெளிப்பகுதியில், ஆஸ்பத்திரி வீதியில், வேம்படி வீதி, பருத்தித்துறை வீதி. சரசாலை புலோலி வீதி, கொடிகாமம் பருத்தித்துறை வீதி, பலாலி.வீதி. காங்கேசன் துறை வீதி, போன்றவற்றின் ஓரங்களிலும் பரவலாக காணப்படுகின்றது. என்பது கவனிக்கத்தக்கது.
நிலங்களில் பாதீனியத்தை இல்லாமல் அழிப்பதற்கு வடமாகாண சபையின், முன்னாள் விவசாய அமைச்சர் திரு பொ ஐங்கரநேசன் தலைமையில், விவசாய அமைச்சு தனது சகல திணைக்களங்களையும் பெருமெடுப்பில் முடக்கி விட்டு பணிகளை ஆரம்பித்தன. அத்துடன்பாதீனியம் அழிக்கும் இளைஞர் படையணி ஒன்றையும் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியதுடன் பாதீனீயம் காணப்படும் இடங்களில் அது சார்ந்த விளம்பர பதாகைகளை வைத்தனர்.
ஆனால் அவற்றை அழிக்கமுடியாது போனது தான் இங்கு நோக்கவேண்டியது. சட்டங்கள் கூட வைத்தார்கள் பாதீனீயம் காணப்படும் இடத்தின் சொந்தக்காரர் அல்லது பாதீனியம் வளந்துள்ள காணியின் உரிமையாருக்கு சிறைதண்டனை அல்லது தண்டப் பணம் அறவிடப்பட்டும் என்றும் கூறி வந்தார்கள் ஆனால் இன்னும் குறைந்தபாடில்லை.
அழிக்கும்போது கையாளவேண்டியவை..
ஒரே நேரத்தில் பாத்தீனியத்தை அழிப்பதென்பது சாத்தியமில்லாததொன்று, ஏன் எனில் விழுந்தவை முளைக்க காத்திருக்கும் அல்லது முளைத்திருக்கும். இச்செடிகளை பூக்கும் தருணத்திற்கு முன்பாக பிடுங்கி அழிப்பதே சிறந்த முறையாகும். பூக்காத பார்த்தீனியங்களை பிடுங்கி துண்டு களாக வெட்டி அழிக்கலாம், அல்லது இக்களைகளை அகற்றுவதற்கு இவற்றை வேருடன் அகற்றி எரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
![]() | |
|
மேலும் இவைகளை அழிக்கச் செடிகளைப் பிடுங்கிப் பள்ளத்தில் இட்டு உப்புக்கரைசல் இட்டு குழிகளை மூடுவதன் மூலம் இக்களைகளை அழிக்கமுடியும் என்றும் சொல்கிறார்கள். இவற்றை விட பல்வேறு பட்ட வேதியல் பொருட்கள் கொண்டு அளிக்கலாம் என்று சொல்லப்படுகின்றபோதும் நான் அவற்றை இங்கு இணைக்கவில்லை, காரணம் அவை செலவீனம் கூடிய முறைகள், அதை வடக்கு மாகாண சபை, மாநகர, நகர பிரதேச சபைகள், அல்லது பிரதேச செயலகங்கள் பார்த்துக்கொள்ளட்டும். உங்களால் முடிந்தவரை நீங்கள் காணும் பகுதிகளில் உள்ளவற்றை பிடுங்கி அழியுங்கள். முக்கியமாக கையுறை அணிந்து செயற்படுங்கள். உடனடியாக எரிக்கமுடியாவிட்டால் அந்த வீதியில் எங்காவது எரியூட்டிடப்படும் இடம் இருக்கும் அதில் போட்டுவிடுங்கள். யாராவது எரியூட்டுவார்கள். எல்லோரும் இணைந்தால் மட்டுமே இவற்றை அழிக்கமுடியும். என்பது எனது கருத்து.
சிந்திப்போம் - செயல்படுவோம்.
-தமிழ்நிலா-
மாநகர சபைகளும் மாகாண அரசும் இணைந்து இதனை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் தங்கள் நிலங்களில் விளையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDeleteநமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்