ஈழத் திருநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆன்மீகமும் வாழ்வியலும் எப்போதும் இயற்கையோடு இணைந்தே பயணித்திருக்கின்றன. குடாநாட்டின் வளம் மிக்க விவசாயக் கிராமங்களில் இயற்கை கடவுளாகவும், கடவுள் இயற்கையுடனும் ஒன்றித்திருக்கும், அவ்வாறான இடங்களில் நீர்முகாமைத்துவம் சரியாகப்பேணப்பட்டிருக்கும்.
இவ்வாறாக இவை அனைத்தும் ஒன்றாக, நவீனத்திலும் அடிபட்டுப்போகாமல், ஏழாலையில் அமைந்துள்ள "ஏழாலை பெரியதம்பிரான் கோவில்" மற்றும் அதன் சூழலில் அமைந்துள்ள "பெரியதம்பிரான் குளம்" ஆகியவை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, தொன்மையான நீர்முகாமைத்துவம், குறுங்காடுகளுக்கு வாழும் சாட்சிகளாகவும் விளங்குகின்றன. ஆன்மீகப்பற்றை, இயற்கையைப் பாதுகாக்கும் ஒரு கருவியாக மாற்றி, "பக்தியுடன் கூடிய ஒரு பசுமைப்புரட்சியை" இக்கிராமம் எவ்வாறு சாத்தியமாக்கியுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஏழாலைக் கிராமத்தின் மையப்பகுதியில் இவ்வாலயம்/குளம் அமைந்துள்ளது. சுன்னாகம் சந்தியிலிருந்து ஏழாலை நோக்கிச் செல்லும் வீதிகள் வழியாக இக்கோவிலை அடையலாம். பசுமையான செம்மண் நிலமும், சுற்றிலும் அமைந்த பயிர்நிலங்களும், குளமும் மரங்களும் இவ்வாலயத்திற்கு ஒரு தூய்மையான கிராமிய அழகைத் தருகின்றன.
ஏழாலை கிராமத்தின் பெயர்க் காரணமே இங்கு தோன்றிய ஏழு தெய்வக் கன்னிப் பெண்களை அடிப்படையாகக் கொண்டது என்று நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. ஏழு ஆலயங்களின் இணைப்பு ஏழாலை எனவும் கூறுவார்கள். இப்போதும் ஏழுகோயில் தொடர்பாகவே ஊரின் வரலாற்றை மக்கள் சொல்லமுனைகின்றார்கள். ஆனாலும் ஏழு கோவில்களை விட அதிகமாக கோவில்கள் உண்டு என மறுப்போர், ஏழு தொழிகள்/ ஆலைகள் காணப்பட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்.
கொன்றைமரம் பூத்துக்குலுங்கவும் மருதமரம் பரந்துகிடக்கும் குளக்கரையிலும் சோலைக்குள் இருக்கும் தம்பிரான் மக்களிடையே மிகுந்த போற்றுதலுக்குரியதாக விளங்கிவருகிறது. தொடக்கத்தில் 'நாதம்பிரான்' என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் 'பெரியதம்பிரான்' காவல் தெய்வம் ஆனார்.
ஏழாலை மண்ணின் வரலாற்றை அங்கு வாழும் மூத்த குடிகளின் செவிவழிக் கதைகளை விடுத்துப் பார்க்க முடியாது. இக்கோவிலின் தோற்றம் பற்றிப் பல சுவாரசியமான கதைகள் நிலவுகின்றன. தொடக்க காலத்தில் இப்பகுதியில் இருந்த ஒரு பாம்புப் புற்றையே மக்கள் தெய்வமாக வழிபட்டனர். அந்தப் புற்றில் வாழும் நாகமே தங்களைக் காக்கும் "நாதம்பிரான்" என்று நம்பியதாக ஒருவர் குறிப்பிட்டார்.
சாடியடி/சாடிமனை என்று சொல்லப்படுகின்ற ஒரு இடம் பெரியதம்பிரானின் தோற்றத்துடன் தொடர்புபடுகின்றது. இங்கு நிறைய மருதமரங்களும் , அரசமரங்களும் நிறைந்து காணப்படுகின்றன. மரங்களுக்கு கீழ் மூன்று சிறிட மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தான் தெய்வக்கன்னிப்பெண்கள் தோன்றினார்கள் என்கிறார்கள், ஏழு கன்னிமார் ஆலயம் ஒன்றும், நீலாசோதயன் கோவிலும் காணப்படுகின்றுது. உருவம் பெறாத பீடம் நீலாசோதையனுக்குரியது எனப்படுகின்றது. மூன்றாவது மடத்தில் மரத்தின் கீழ் பாம்பினுடைய ஓவியம் வரையப்பட்டுள்ளது. அது பெரியதம்பிரானுடையது.
முன்னொரு காலத்தில் சலவைத்தொழில் செய்ய பயன்படுத்தும் சாடியினுள் சிவபெருமான் தோன்றியதாகவும் தன்னை அதரிக்கும் படியும், இது நிகழ்ந்தது ஆவணி மாத கடைசிச்சனிக்கிழமை எனவும் அக்கினி மூட்டி தீ மிதிப்பு வைபவம் நடைபெறவேண்டும் எனவும் இவ்வாறு தீ வளர்த்த போது பெரியதம்பிரான் தோன்றினார் என்பதும், பின்னர் இப் பெரியதம்பிரான் குளத்துக்கு அருகில் கொண்டுவரப்பட்டு பூசிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இன்றும் பெரியதம்பிரான் ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு பூசைகளுக்கும் சாடியடியில் இருந்து தான் மடைப்பண்டங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது.
ஏழாலை பெரியதம்பிரான் கோவில் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. ஆரம்பத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள், இயற்கைப் பேரிடர்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள இத்தெய்வத்தை வழிபடத் தொடங்கினர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் குடாநாட்டின் பல பெரிய ஆலயங்கள் சிதைக்கப்பட்டபோதும், இத்தகைய கிராமிய வழிபாட்டுத் தலங்கள் அடர்ந்த மரங்களின் மறைவிலும், குளக்கரைகளிலும் மக்கள் நம்பிக்கையால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன.
'தம்பிரான்' என்ற சொல்லுக்கு "தலைவன்", "இறைவன்" என்று பொருள். சிவபெருமானை "ஆளுடைய தம்பிரான்" என்று பக்தி இலக்கியங்களில் சைவர்கள் போற்றி அழைப்பார்கள். நாட்டுப்புற மற்றும் சிறுதெய்வ வழிபாட்டில் 'தம்பிரான்', ஈழம் (குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னிப் பகுதிகள்) மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட குலதெய்வத்தை 'தம்பிரான்' என்ற பொதுப் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது. அது நாகதம்பிரான், பெரியதம்பிரான், பூதத்தம்பிரான், சுடலைத் தம்பிரான் என்று நீண்டு செல்கின்றது.
பெரியதம்பிரான் தக்கன் யாக கதையுடன் உருவாகின்றார். சைவப் புராணங்களின்படி, சிவபெருமானை அவமதித்து அவரது மனைவி தாட்சாயணியின் மரணத்திற்குக் காரணமான தாட்சாயணியின் தந்தை தக்கனின் (தட்சன்) ஆணவத்தை அடக்க, சினங்கொண்ட சிவபெருமான், தன் முடியிலிருந்து பேரொளியோடு தோற்றுவித்த உக்கிர வடிவமே வீரபத்திரர். வீரபத்திரர் சிவபெருமானின் கட்டளைப்படி பூதகணங்களுடன் சென்று, தக்கனின் யாகசாலையை முற்றிலும் அழித்து, தக்கனின் தலையைக் கொய்து அவனது ஆணவத்தை அடக்கினார். யாகத்தில் இருந்து யாக புருக்ஷனாகத் தோன்றியவர் பெரியதம்பிரான், தேவர்களைக் கொன்ற வீரபத்திரர் பெரியதம்பிரானைக் கொல்வதற்காக துரத்தி வரும் வேளையில், ஊர்வழியில் குளத்தங்கரையொன்றில் சலவைத்தொழிலாளி ஒருவரின் உதவியைநாடி தன்னை காக்கும் படி கூறினார் என்றும், சலவைத்தொழிலாளி அவரை, தாம் துவைக்கப் பயன்படுத்தும் பெரிய சாடி ஒன்றில் மறைத்து வைக்கிறார். பின் அவரை துரத்திவந்த வீரபத்திரரைச் சமாதானம் செய்து தான் பெரியதம்பிரானை ஒளித்து வைத்த கதையைய் சொல்லி மன்னிக்க கோருகிறார். அதன் பின் வீரபத்திரர், பெரியதம்பிரானை சலவைத்தொழிலாள்ர்களின் குலதெய்வமாக வணங்கும்படி பணித்தார் என்று கூறப்படுகின்றது. இது குளிர்ந்த குளக்கரைகளிலும் கொன்றை மர நிழல்களிலும் அமர்ந்து மக்களைக் காக்கும் பேராற்றல் மிக்க காவல் தெய்வமாக பெரியதம்பிரான் மாறியதை கதையாக விவரிக்கிறது. இந்த கர்ணபரம்பரைக்கதை ஏழாலை பெரியதம்பிரானின் தோற்றத்துடன் இயைந்து போகின்றது,
இதன் பூசை முறை முற்றிலும் மாறுபட்டது, ஆகமம் சாராத பாரம்பரிய கிராமிய வழிபாட்டு முறையைக் கொண்ட இந்த ஆலயத்தில், பூசாரி/பூசகர் வாய்கட்டிப் பூசை செய்யும் மரபு காணப்படுகிறது. சலவைத்தொழில் செய்யும் வம்சத்தினரே இதன் பராமரிப்பாளர்களாகவும், பூசகராகவும் காணப்படுகிறார்கள். இக்கோவிலின் மிக முக்கிய திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறும் "பொங்கல் தீமிதிப்பு விழா" ஆகும். சித்திரை மாதத்தில் வருடப்பிறப்பு முடிந்து வரும் புதன்கிழமை கொடியேறி அதையடுத்து வரும் 08வது நாள் பொங்கலும் தீமிதிப்பும் இடம்பெறும். பின் அடுத்த புதன்கிழமை கொடியிறக்கமும் பொங்கல் நிகழ்வும் நடைபெறும். கொடியேறி தீ மிதிப்பு வைபவம் கொடியிறக்கம் இடம்பெறும் வரையும் கோவிலுக்கு யாரும் செல்லக்கூடாது என்பது விதிக்கப்படாத ஒன்றாக உள்ளது.
புதன்கிழமை, கோவில் பூசாரி அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கும் சடங்குகள் ஊர்வலமாக சென்று. ‘சாடியடி/சாடிமனை’ என்று அழைக்கப்படும் பரந்த முற்றவெளியில் வீற்றிருக்கும் கன்னியர் ஆலயத்தில் மடைப்பண்டங்கள் எடுக்கும் மங்கலகரமான நிகழ்வு மாலை ஆரம்பமாகும். அன்றைய தினம் நள்ளிரவில் பறை ஒலிகள் அதிர, கலையாட்டங்கள் அரங்கேற, ஆன்மீக அதிர்வலைகளுடன் சிறப்புப் பூசைகள் வெகு விமசையாக இடம்பெறும் என்று இன்னொருவர் கூறினார்.
இந்த வழிபாட்டின் ஆகச்சிறந்த மரபாக, கொடிமரம் கமுகமரத்தில் அமைக்கப்படுவதும், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு குடும்பம் அதனை வழங்குவதும் வழக்கமாகக் காணப்படுகின்றது. இவை நள்ளிரவு 12.00 மணி எட்டும்போது, கன்னியர் ஆலயத்து மடைப்பண்டங்கள் அனைத்தும் தூய்மையின் அடையாளமான வெள்ளைச் சேலையினால் போர்த்துக் கட்டப்படும். பின்னர் அவை இருள் சூழ்ந்த வயல்வெளிகளைக் கடந்து, கொன்றை மரங்கள் சூழ்ந்த குளிர்ச்சியான குளக்கரையில் வீற்றிருக்கும் பெரியதம்பிரான் ஆலயத்தை வந்தடைகின்றதாம்.
குளக்கட்டுகளில் காணப்படும் மரங்களும் அதனுடன் தொடர்புபட்ட பூசை முறையும். அதன் இலைகளினை எடுத்து காப்புக்கட்டி கொடியேற்றம் நடைபெறும் என்றும். அதன் பின் அடுத்த புதன் தான் பொங்கல் நடைபெறும். மாலை சாடியடியில் பூசைகள் ஆரம்பமாகி மடைப்பண்டம் பெரியதம்பிரானை சென்றடையும். அதிகாலை 2.00 மணிக்கு, இருளைப் போக்கும் ஆன்மீக ஒளியாக ஆலய முன்றலில் அக்கினி வளர்க்கப்படும். அதனைத் தொடர்ந்து, விடியற்காலை 3.00 மணி என்ற பிரம்ம முகூர்த்தத்தில், இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் விதமாக, பக்தர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வளந்து வைத்து பெரும் பொங்கல் இடம்பெறும்.
தொடர்ச்சியாக அடுத்தபுதன் கிழமை கொடியிறக்கமும் பொங்கலும் இடம்பெறும். மாதம்தோறும் மடை வைத்தல் ஆவணி மாதக் கடைசிப் புதன் நடைபெறும் பெரிய மடையுடன் முடிவுறும் எனக்கூறுகின்றார்கள்.
புதன்கிழமைகளில் மாத்திரமே இங்கு பூசை நடைபெறும், இது தவிர, கார்த்திகை மாதக் கடைசியில் வரும் புதன்கிழமைகளில் மிகப்பிரமாண்டமான திருவிளக்கு பூசை இக்கோவிலில் நடத்தப்படுவது வழக்கமாகும். ஆலயத்தை சூழ சிட்டிகளிலும் பந்தங்களில் ஏற்றி இறைவனை வழிபடுவார்கள். இவை அனைத்துக்கும் முதல் சாடியடியில் பூசைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்தே இங்கு பூசைகள் ஆரம்பமாகும். திருவிளக்கு பூசையுடன் ஆலயம் நடைசாத்தப்படும். பின் தைப்பொங்கலுடன் மீண்டும் புதன் கிழமைகளில் பூசைகள் ஆரம்பமாகும்.
இந்த முற்றவெளிகளில் கிராம இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடுவார்கள், தோட்ட வெளிகளில் மக்கள் வேலை செய்வார்கள், ஆனால் இந்த ஆலயத்தில் கொடியேறினால் யாரும் விளையாடக்கூடாது. ஆலயத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள். அந்த அளவு பயபக்தியுடன் மக்கள் இயங்குகின்றார்கள்.
பெரியதம்பிரான் கதைகள் வாய்மொழி மரபாகவும், 'உடுக்கடிப் பாடல்கள்' மற்றும் 'பஜனைகள்' மூலமாகவும் இன்றும் பாடப்பட்டு வருகின்றன. ஆலய திருவிழாக்களின் போது, பெரியதம்பிரான் எப்படி காட்டைத் திருத்தி நாடாக்கிய மக்களுக்குத் துணையாக நின்றார், குளக்கரையைக் காத்தார், புற்றிலிருந்து வெளிப்பட்டு பக்தர்களுக்கு எப்படிக் காட்சியளித்தார் போன்ற கதைகள் பாடல்களாகப் பாடப்படும். இந்த வழிபாட்டில் கொன்றை மலர்கள், பால், மற்றும் பொங்கல் படைத்தல் மிக முக்கியமான சடங்குகளாகும்.
ஏழாலையில் சாடியடி, நீலாசோதையன் கோயில், பெரியதம்பிரான் கோயில் என்பன தனித்தனியேயுள்ளன. சாடியடி, நீலாசோதையன் கோயில் உரிய சடங்குகள் நடைபெற்றபின் மடை பரவப்படும். பல்வேறு மடைகள் எல்லாத் தெய்வங்களுக்கும் வைக்கப்படும். பூசை நடைபெற்ற பின் மடையேற்றலுக்கான பாடல் நடைபெறும். பூசாரி கலையாடுவார்.
கிராமத்தின் எல்லைக் காவலராக 'நீலாசோதையன்' என்னும் துணைத்தெய்வம் வீற்றிருக்கிறார். இரவு வேளைகளில் இவர் குதிரையில் ஏறி ஊர்க் காவல் வருவதாகவும், தீய சக்திகளிடமிருந்து கிராம எல்லையைப் பாதுகாப்பதாகவும் இன்றும் மக்கள் ஆழமாக நம்புகின்றனர்.இந்தப் நீலன் அவரது பெயர் என்றும், சோதையன் என்பது சாதிப்பெயர் என்றும் கூறப்படுகின்றது. சோதையன் என்பது குளம் வெட்டும் மக்களைக் குறிக்கும். அவர்களின் தெய்வம் நீலாசோதையன் எனவும் சொல்லப்படுகின்றது.
| பெரியதம்பிரான் குளம் : Sanjay |
பெரியதம்பிரான் கோவிலின் தெற்கு அல்லது மேற்குப் புறத்தை அண்டி அமைந்துள்ள பெரியதம்பிரான் குளம் வெறும் நீர்நிலை மட்டுமல்ல, அது முன்னோர்களின் நீர்முகாமைத்துவத்துக்கு எடுத்துக்காட்டு. அதனை சூழ உள்ள மரங்கள் உயிர்பல்வகைமையின் எடுத்துக்காட்டு. பெரியதம்பிரான் குளத்தைச் சுற்றிப் பழமையான மரங்கள் சூழ்ந்துள்ளன. இவற்றுள் மருத மரங்கள், அரச மரங்கள், ஆல மரங்கள், இத்தி, வேம்பு, நுணா,வாகை, நாவல், அத்தி, கொன்றை, புளி, மற்றும் பனை மரங்கள் முக்கியமானவை. இவற்றுடன், செடிகள் கொடிகள், புற்கள் என பல குறுங்காடுகள் காணப்படும் அதேவேளை அனைத்து மூலிகைச்செடிகளும் நிறைந்து காணப்படுகின்றது. பெரியதம்பிரான் பேருக்கு ஏற்றால்போல் பாம்புகள் நிறைந்து காணப்படும் இடமாக இது இருந்தாலும். பாம்பு எவரையும் தீண்டியதில்லை என்கிறர்கள். கோவிலைச்சுற்றிய தரைகள் மாடுகள் ஆடுகள் மேயும் இடங்களாக இருந்தாலும், பாம்புகள் அவற்றையும் தீண்டியதில்லை.
ஏழாலை பெரியதம்பிரான் கோவிலும் அதன் குளமும் இன்று நமக்குப் புகட்டும் பாடம் மிகவும் தெளிவானது; ஆன்மீகம் என்பது வெறும் சடங்குகளுக்குள் மட்டும் சுருங்கிவிடுவதல்ல, அது நாம் வாழும் சூழலையும் வளத்தையும் பேணிப் பாதுகாப்பதிலும் கலந்திருக்கிறது என்பவதே அதுவாகும்.
பக்தியைப் பசுமையோடு இணைத்து, நீர்நிலைகளைத் தெய்வமாகப் போற்றிப் பாதுகாத்த நம் முன்னோரின் தொன்மையான நீர், வள முகாமைத்துவ அறிவை, அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் உன்னதமானதொரு "பக்தியுடன் கூடிய பசுமைப்புரட்சி"க்கு ஏழாலை பெரியதம்பிரான் ஆலயமும் அவ் ஊரின் இளைஞர்களும் தயாராகின்றார்கள்.
அன்புடன் - ச.
இளம் நீர் வாண்மையாளர் வட்டத்தினரின் நேர்காணல்கள்,
செல்வமனோகரன், தி., 2025. நீலாசோதையன் என்னும் துணைத்தெய்வம். எழுநா ஆன்லைன்.
.png)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா