Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அந்த நாள்..

3 comments

இண்டைக்கு சமாதானம், பாதை திறந்து  முகமாலை பாதையால இயக்கம் யாழ்ப்பாணத்துக்கு வரினம் எண்டு பள்ளிக்கூடத்தில கதைக்கினம், பெரியவகுப்புக்கார் பெரிய அளவில தடல் புடலா மாலைகள் தோறணங்கள் எண்டு கனக்க செய்து கொண்டிருந்தினம். அந்த நாளில இது எல்லாம் எங்களுக்கு புதுசு. இயக்கம் பற்றி நிறய கேள்விபட்டாலும் பார்த்தது மிக மிக குறைவு எண்டு தான் சொல்லவேணும். இயக்க பாட்டு பாட தெரியும் அல்லது விருப்பம் எண்டு சொல்லலாம், ஏன் எண்டா அப்ப புலிகளின் குரல் வேலைசெய்யும்.  வேற பேப்பரில நியூஸ் வரும் அவ்வளவுதான் அறிதல்களும் புரிதல்களும்.

2000 ஆம் ஆண்டு அடிபாடுக்க நாங்கள் இடம் பெயர்ந்து வடமராட்சில இருந்தம், சிலர் வலிகாம பக்கம். இன்னும் கன பேர் ஆமி பயத்துல கிலாலிக்கால வன்னிக்கு போட்டினம், இப்படி வேற வேற இடத்தில காலம் கழிஞ்சுது, இரண்டு வருசத்தால திரும்பி ஊருக்கு போகலாம் எண்டு சொல்லி ஆமி  வீடுகளை விட்டு விலக, சனம் வீடுகளை பாக்க திருத்த எண்டு  இஞ்சால வரத்தொடங்கின காலம். எங்கட  பள்ளிக்கூடமும் மிச்ச சாமானுகளோட தொடங்கி நெல்லியடியால சாவகச்சேரிக்கு மாற்றமாகி நடந்து கொண்டிருந்தது.


ஏழாமாண்டுக்கு இஞ்ச வந்துட்டம். ஆனால்  அங்க இருந்து பஸ்ல தான் வரவேணும், கூடுதலா பள்ளிக்கூடத்துக்கு வந்து போறது வறணி றோடால, அந்த றூட் சீசன் ரிக்கட் தான் இருந்தது காரணம். பஸ்  குறிப்பிட்ட நேரத்துக்கு தான் வரும், காத்து நிக்கிறது குறைவு, பஸ் இல்லாடா தட்டிவான் தான், 

தட்டி வான் காலத்தின் கடைசி பரம்பரை நங்கள் எண்டு தான் சொல்லவேணும். பெரும்பாலான விசயங்கள் எங்கடகாலத்தோட சரி. தொண்ணூறுகளில பிறந்தவைக்கு அது வரம். பிறகு பாக்கலாம் அதைப்பற்றி. தட்டிவான்ர பின் தட்டில இருந்திருக்கிறம், மேல ஏறி இருந்திருக்கிறம். சில நாளில காசு குடுக்காம கூட போயிருக்கிறம். வயல்வெளிகள்,  வானங்கள் ரசிக்கவும், மாற்றவைக்கு இடைஞ்சல் இல்லாமல் அரட்டைகள் அடிக்கவும் நாங்கள் கண்டு பிடிச்சது தான் மேல்தட்டு. சித்திரை வெய்யிலையும் தூக்கி போட்டும். அப்படி ஒரு பயணம் இனி வராது.


அண்டைக்கும் அப்படி தான் பள்ளிக்கூடம் வெள்ளன முடிஞ்சு நாங்கள் சங்கத்தானையில இருந்து கொடிகாமத்துக்கு தட்டி வான்ல தொங்கி ஏறி போட்டம். அங்கால போறதுக்கு பஸ் இல்ல எல்லாம் இந்த வரவேற்கிற வேலையா சனங்களை ஏத்தி றக்கிக்கொண்டு திரிஞ்சுது. நல்ல பாட்டுகள், தோரணங்கள் அப்படி இப்படி எண்டு வரவேற்பு சொல்லி வேலையில்ல.  வாறது எங்கட ஆக்கள். அங்க இங்க எண்டு ஆமிமாரும் நிக்கினம். பயத்துக்குள்ளேயும் சனம் அப்படி வரவேற்பு. எனக்கு சின்னனில அங்கயற்கண்ணி ஊர்வலம்  சரசாலை ரோட்டுல அப்பாவோட பார்த்ததா ஞாபகம். அதைவிட பெரிசா தெரியாது. ஆனால் இந்த சனக்கூட்டம் எல்லாத்தையும் தூக்கிப்போட்டது.

இந்த யுத்த காலத்தில் கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325km நீள பாதை,  A9 என்றும் சொல்லுவினம்,  2002  இல்  சமாதான ஒப்பந்தத்தின் படி பல ஆண்டுகளின் பின் 08.04.2002 இல் பாதை திறக்கப்பட்டது.  பின்னர் 2006 இல் மூடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.  இந்த பாதை திறப்பு தான் இப்படி திருவிழா கோலம் ஏற்படக் காரணம்.

பாக்கிறதுக்கு ஆசை  இருந்தது ஆனால் ஏத்திக்கொண்டு வீட்டை போக அப்பா நெல்லியடியில நிப்பார், அப்ப நாங்கள் கரவெட்டி கரணவாய்ல இருந்தம். பிந்திப்போன பேச்சோ அடியோ கட்டாயம் விழும் எண்டு தெரியும். ஒன்பதாம் ஆண்டு வரை அடிவேண்டினது வேற கதை. சரி இருக்கட்டும்.   ஆக எதுக்கும் ரிங்ஸ் குடிப்பம், குடிச்சுட்டு வீட்டை போவம் எண்டு போய், சரி நாங்களும் நிண்டு அவையள பாப்பம் எண்டு நினைக்கிற அளவுக்கு அந்த சூழல் என்னை மாற்றி இருந்தது. 

என்னோட பெடியள் இரண்டு பேரையும் இழுத்துக்கொண்டு நடந்து முகமாலைக்கு போவம் இது தான் எங்கட பிளான், நடந்தம். உசன் வர போகவே களைத்துவிட்டது. ஆசைப்பிள்ளைல வந்துடினம். ஆங்கால போக ஏலாது அவ்வளவு சனம், வான்ல வரீனம். சனம் முகமாலையை முட்டி நிக்குதாம் இது தான் திரும்ப திரும்ப கதை. நேரம் கழிச்சு சனத்த விலத்தி ஒருமாரி பார்த்தா, எங்களை மாரி ஆக்கள் தான் ஆனாலும் பார்த்தா  அவையள்ள உடன ஒரு மரியாதை தானா வரும். வந்திச்சு, அடுத்தவை அவையளை பற்றி சொல்ல கேட்டது. அந்த கதையள் தான் அவையள பற்றி பிரமாண்டமாய் பொதிகைலபோற சக்திமான் மாதிரி எங்களுக்குள் வைத்தது.

மேளம் கொட்ட தோள்களில சுமந்து ஊர்வலமாய் வந்து என்ன ஒரு வரவேற்பு, சிவப்பு மஞ்சள் கொடி, பாட்டு எண்டு மொத்த ரோடே அதிர்ந்தது,  இன்னும் இருக்கலாம். அப்பாவின் நினைப்பு வர நாங்களும் கைய குடுத்துட்டு, பஸ்ஸில ஏறி வீட்ட வந்துட்டம்.  அண்டு பின்னேரம் ஊரில இதைப்பற்றி தான். ஏன் எண்டா அங்க இருந்து இங்க வந்து வரவேற்றது நான் தான்.

அடுத்த நாள் இது தான் வகுப்பு புள்ளா கதை. ஆளுக்கு ஒருகதை. காலம் கடந்தாகிற்று இந்த நினைவுகளை விட வேறு ஒன்றும் மிச்சமாகவோ எச்சமாகவோ இல்லை. வருவதற்கோ.. வரவேற்பதற்கோ....

-தமிழ்நிலா -

Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

  1. அருமை அருமை

    ReplyDelete
  2. Anonymous4:15:00 pm

    The listing below shows you eight of the most popular slot machine video games with a progressive jackpot. Compare their RTPs with these of the non-progressive video games above and you will notice why taking part in} for a jackpot is not at all times the best 카지노사이트 choice|the only option|your best option}. Also, whenever you play real money slots on-line, have the ability to|you presumably can} verify the video games themselves.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா