Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கேணிகள் – உயிர்காக்கும் பாரம்பரிய நீர்க் கட்டமைப்பு

Leave a Comment



பண்டைய காலம் முதலே நீர்நிலைகளை உருவாக்குவதும், வழிப்போக்கர்களுக்கும் விலங்குகளுக்கும் உதவும் கட்டமைப்புகளை அமைப்பதும் பெரும் அறமாகக் கருதப்பட்டது. மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில், தண்ணீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான உரிமை என்ற எண்ணமே சமூகத்தின் வாழ்வியல் நெறியாக இருந்தது. அதனால்தான் குளங்கள், கிணறுகள், ஊரணிகள், ஏரிகள் மட்டுமன்றி சிறிய அளவிலான கேணிகளும் பல இடங்களில் அமைக்கப்பட்டன.

ஆழமற்ற நிலத்தடி நீர்நிலைகள் அல்லது நீரூற்றுகளை மையமாகக் கொண்டு வெட்டப்படும் சிறு நீராதாரங்கள் கேணி எனப்படும். கிராமங்கள், வணிகப் பாதைகள், கோயில் வளாகங்கள் மற்றும் விவசாய நிலங்களின் எல்லைகளில் இவை அமைக்கப்பட்டன. ஊர் மக்கள் தாகம் தீர்க்கவும், கால்நடைகளுக்கு நீர் புகட்டவும், பயணிகள் இளைப்பாறும் இடமாகவும் இவை பயன்பட்டன. அன்றைய சமூகத்தில் கேணி அமைப்பது ஒரு பொதுநலச் சேவையாகவும், தர்மச் செயலாகவும் கருதப்பட்டது.

கேணிகளுக்கு அருகில் பொதுவாக ஓய்வு மடம், சுமைதாங்கி மற்றும் ஆவுரஞ்சிக்கல் போன்ற பொதுநலக் கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. இவை வழிப்போக்கர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஓய்வும் நலனும் அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை.

ஆவுரஞ்சிக்கல் என்ற சொல்லில், 'ஆ' என்பது பசுவையும், 'உரஞ்சுதல்' என்பது தேய்த்தல் அல்லது உரசுதலையும் குறிக்கிறது. நீண்ட தூரம் பாரம் சுமந்து செல்லும் மாடுகளுக்கும், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளுக்கும் உடலில் அரிப்பு, பூச்சிக்கடி அல்லது சோர்வு ஏற்படும் போது, அவை தமது உடலை உரசித் துன்பத்தைப் போக்கிக் கொள்வதற்காக செவ்வக அல்லது உருளை வடிவிலான கருங்கற்கள் வழியோரங்களிலும், கேணிகளுக்கு அருகிலும் நிலத்தில் உறுதியாக நட்டு வைக்கப்பட்டன. 

மனிதர்களின் தேவைகளை மட்டுமன்றி, கால்நடைகளின் நலனையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தகைய கட்டமைப்புகள், நமது முன்னோர்களின் உயிர்நேயச் சிந்தனையையும் சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்வியலையும் வெளிப்படுத்துகின்றன.

வழக்கமாக ஒரு கேணியின் ஆழம் 0.8 முதல் 1.5 மீட்டர் வரை இருக்கும். சுண்ணாம்புக்கல், முருங்கைக்கல், பொழிகல், கருங்கல், சீமெந்து கல் அல்லது செங்கற்களால் சுவர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும். நீரை எளிதாக எடுக்கவும், கால்நடைகள் பாதுகாப்பாக இறங்கி நீர் அருந்தவும் படிக்கட்டுகள் அல்லது சரிவு அமைப்புகள் காணப்படும். இக்கட்டமைப்புகள் எளிமையானதாக இருந்தாலும், பல ஆண்டுகள் நீடித்து பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டன.

மனிதன் மட்டுமன்றி, கால்நடைகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை முன்னோர்கள் உருவாக்கினர். மாடுகள், ஆடுகள், எருமைகள் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளும், காட்டு விலங்குகளும் தண்ணீர் அருந்துவதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும் கேணிகளைப் பயன்படுத்தின. 

நயினாதீவு
கேணிகள் வெறும் நீர் சேமிப்பு அமைப்புகள் மட்டுமல்ல. அவை மழைநீரை உள்வாங்கி நிலத்தடிக்குள் செலுத்தும் சிறந்த நீர் ஊடுருவல் (Recharge) கட்டமைப்புகளாகவும் செயல்படுகின்றன. இதன் மூலம் சுற்றியுள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதற்கும், நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படுவதற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. சிறியதாகத் தோன்றும் ஒரு கேணி, ஒரு முழு கிராமத்தின் நீரியல் சமநிலையைப் பாதுகாக்கும் திறன் கொண்டதாகும்.


இன்றைய தேவை

இன்று உலகம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தீவிரமாக எதிர்கொண்டு வருகிறது. மழைப்பொழிவு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், நீண்ட வறட்சி காலங்கள் மற்றும் அதிகரித்த வெப்பநிலை ஆகியவை நீர்வள முகாமைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக வரும் எல் நினோ காலங்களில் ஆரம்பத்தில் மழைப்பொழிவு குறைவடையும் அபாயம் அதிகமாக உள்ளது. அத்தகைய சூழலில் பெரிய குளங்கள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகள் வற்றிவிடக்கூடும். ஆனால் நிலத்தடி நீரின் கசிவைச் சேமித்து வைத்திருக்கும் கேணிகள், பறவைகள், கால்நடைகள் மற்றும் சிறிய காட்டு விலங்குகளுக்கு தொடர்ந்து நீர் வழங்கும் உயிர்காக்கும் கட்டமைப்புகளாக விளங்கும். 

இலங்கை உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை, விலங்குகளை கடும் வெப்ப அழுத்தத்திற்கு (Heat Stress) உள்ளாக்குகிறது. உடல் வெப்பம் அதிகரிப்பதால் அவற்றின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. விலங்குகளும் நீரைத் தேடி நீண்ட தூரம் அலைவதால் சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உயிரிழப்பு போன்ற அபாயங்களை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், அருகிலுள்ள ஒரு கேணி பல உயிர்களைக் காப்பாற்றக்கூடியதாக அமைகிறது.

சங்கானை
துரதிர்ஷ்டவசமாக, பல பழமையான கேணிகள் இன்று புதர்மண்டி, மண்ணால் நிரம்பி அல்லது குப்பைகள் கொட்டப்படும் இடங்களாக மாறியுள்ளன. நகரமயமாக்கல், பாரம்பரிய அறிவு குறைதல், உள்ளூராட்சி மன்றங்களின் கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு இல்லாமை ஆகிய காரணங்களால் இந்தச் சிறந்த நீர்க் கட்டமைப்புகள் படிப்படியாக மறைந்து வருகின்றன. இதன் விளைவாக, வறட்சி காலங்களில் மனிதர்களும் விலங்குகளும் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உள்ளூராட்சி மன்றங்கள், தற்போதுள்ள கேணிகளை உடனடியாகத் தூர்வாரி சுத்தப்படுத்தி மீளப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். நீரூற்றுகள் காணப்படும் இடங்களில் புதிய கேணிகளை அமைக்க வேண்டும். கிராம மக்கள், விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இளைஞர் குழுக்கள் இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதேவேளை, கேணிகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலைகள் மற்றும் சமூக மட்டத்திலும் ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

நீரைச் சேமிப்பது என்பது எதிர்காலத்தைச் சேமிப்பதாகும். நமது முன்னோர்கள் உருவாக்கிய கேணிகள், பாரம்பரிய அறிவுக்கும் நிலையான நீர்வள முகாமைத்துவத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன. காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் இக்காலத்தில், இந்த பாரம்பரிய நீர்க் கட்டமைப்புகளை மீட்டெடுப்பது வெறும் மரபைப் பாதுகாப்பது மட்டுமல்ல; மனிதர்கள், கால்நடைகள், பறவைகள் மற்றும் அனைத்து உயிரினங்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பொறுப்புமிக்க செயலாகும்.

அன்புடன் ச.ந
Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா