Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
ஆரம்ப பிரிவு தம்பி ஒருவரின் பாடசாலை தேவைக்காக, உடல் உறுப்புகளின் தானத்தின் அவசியம் பற்றி பனையுடன் ஒப்பிட்டு எழுதியது.



பனை நான் பண்புடன்
பாடுகிறேன்... பணிவாய்
பாலரே கேட்டுடுவீர்...

ஒரு விதையால் தான்
நான் பயிரானேன்...
தினம் வளர்ந்து மரமானேன்..
நாளும் உருகி திரியானேன்...
இங்கு பலருக்கு உறவானேன்...

என் தலை எனும் இல்லை ஓலை
கொண்டு ஏழைகளில் வீட்டில்
கூரையானேன்...
என் கண்கள் எனும் நுங்குகள்
தந்து இளசுகள் நெஞ்சில்
நிலையானேன்...

என் இதழ் வழி வழியும் பதநீர்
பழசுகள் உயிராகும்..
என் உடல்களின் சிதைவுகள் எல்லாம்
வீட்டில் விறகாகும்...

என் உடலில் உயிர் உள்ளவரை..
உதவி எல்லாம் செய்கிறேன்..
உயிர் அது போனபின்னும்
பெயருடன் தான் வாழ்கிறேன்...

அது போல் நீங்களும் வாழுங்கள்..
உலகத்தை ஆளுங்கள்...
இருக்கையில் பலருக்கு உதவுங்கள்...
சிறப்புடன் வாழுங்கள்..
உடல் தானம் செய்யுங்கள்...
இறந்தபின்னும் வாழுங்கள்...

தமிழ்நிலா


நிலா நம் முற்றத்தை
தொடுவதில்லை...
வானமோ வானவில்லோ
வந்ததாய் தெரியவில்லை..

மழை மட்டும் அப்போ அப்போ
வந்து போக தவறுவதில்லை...
இடை இடையே தவிக்கவிட
மறப்பதும் இல்லை....

மழை...

வானக்கடலின் முத்து..
மேகத்தாயின் ஆனந்த கண்ணீர்..
மின்னலுக்கும் இடிக்கும்
பிறந்த குழந்தை..
தென்றலின் காதலி..
தூவானத்தின் நண்பி..

பள்ளி நாட்களில்
முதல் மழை...
குடை இல்லாத நாட்களில்..
புது மழை...
மடக்கி வைத்திருந்த குடைகளை
மறைத்து வைத்தவாறு
ஒய்யாரமாய் நடை...

எல்லாம் இழக்கப்பட்டிருந்தது...

அம்மாவின் எதிர்ப்பை தாண்டிய
மழையில் மண் விளையாட்டு...
அப்பாவின் அன்பை விரும்பாத
காகித கப்பல்களில் பயணம்..
காதலியின் அரவணைப்பை
தாண்டிய மழைக்குளியல்...

எல்லாம் காணமல் போயிருந்தன..

மழை நம்மை
நனைக்கவே யோசிக்கின்றது......
இருந்தும் எதோ ஒன்று
தடுக்க துடிக்கிறது... 

மழையே...

நீ தீண்ட வருவாய் என்று
காத்திருகின்றது  மண்...
நீ சுவாசம் தருவாய் என்று
இன்னும் உயிரோடு செடிகள்...
தாகத்தில் நதிகள்
தொண்டை வறண்டு இருக்கின்றன..
காமத்தில் மயில்கள்
தோகை விரிக்க நினைகின்றன...

ஏழைகள் வீடு மேயப்பட்டு விட்டன...
வீதிகளும் போடப்படுகின்றன...
வரப்புகள் உயர்ந்து விட்டன
இன்னும் என்ன தயக்கம்..

தமிழ்நிலா



யாழ் தேவி துயிலுரியப்படுகிறாள்
துச்சாதனன்களால் அல்ல,
பாஞ்சாலிகளால்...

உரக்க கட்டளை இடு துரியோதனா
ஆடைகளை களையாதே என்று..

சபதம் செய்து விடு துச்சாதனா
ஆடை கொண்டு அங்கம் மூடாமல்
போகமாட்டேன் என்று...

கௌரவா்களே ஓடி வாருங்கள்
பாஞ்சாலிகள் துயிலுரிகிரார்கள்...
கண்ணன் சேலை தேடி
ஓடிக்கொண்டிருக்கிறான்...

தமிழ்நிலா


உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..

முதல் தீண்டலிலே
விலை போகின்றது..
அடுத்தகண புன்னகையில்
விலை போகின்றது...

கடிதங்கள் பரிமாறி
கடலையும் போடுகையில்
விலை போகின்றது....
கைபிடித்து நடக்கையில்..
கைபேசி குறும் செய்தியில்
விலை போகின்றது....
கணனி இணையத்தில்
கடல் காற்று வாங்கையில்
விலை போகின்றது....

காதல் என்கையில்...
கட்டி அணைக்கையில்...
விலை போகின்றது...
மணந்தவளை மறந்து,
மற்றவளை நினைக்கையில்...
விலை போகின்றது...

கலாச்சாரம் விலை போகின்றது..
கற்பும் விலை போகின்றது..
குடல் பசிக்கா விலை போகின்றது...???
இல்லை... உடல் பசிக்கே போகின்றது

உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..
புனிதங்கள் புதைக்கப்பட்டு
அசிங்கங்கள் விதைக்கப்பட,
உடலே விலை போகிறது..


தமிழ்நிலா

காற்றுவெளி August 2012

பூவே இத்தனை அழகு..
உனக்கு எப்படி வந்தது...???

உலகத்தின் முதல்
மழைநாளில்
வானவில் கரைந்திருக்குமோ...

வானத்து ஆழகிகளின்
முத்தங்கள் பட்டிருக்குமோ...

தேவதைகளின் வியர்வை
மண்ணில் சிதறி இருக்குமோ...

என்னவாய் இருக்கும்...??


*  *  *  *  *  *  *  *  *  *  *  *  * 

*  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  
காலையில் தானே
பேசிவிட்டு போனேன்..?
ஏன் தரையில் கிடக்கிறாய்..

தலை நானியதால்,
உடல் சோர்ந்ததால்
தூக்கிப் போட்டுவிட்டார்களோ..?

அழகு என்ன நிரந்தரமா...
அழுது விடாதே...

வாழ்வு என்ன நிரந்தரமா...
உன் ஆயுள் சில சில நாள்..
எம் ஆயுள் சில பல நாள்...
அவ்வளவு தான்...

உன் குணம் யாருக்கு வரும்..???

நீ மட்டும் தான் சாதிபார்ப்பதில்லை...
எல்லோர் தலையிலும்
அமர்ந்து கொள்கிறாய்..

நீ மட்டும் தான் மதங்களை
பிரிப்பதில்லை - எல்லா கடவுளின்
பாதங்களிலும் பூஜை செய்கிறாய்...

நீ தான் உண்மையான வள்ளல்..
பூச்சிகளின் பசிபோக்க
தவறியதே இல்லை....

நீ தான் அதிக பொறுமைசாலி..
கொடுமைகள் புரியினும்
சுகந்தம் பரப்புகிறாய்..

உன் தியாகம் எதை மிஞ்சிவிடும்..

வண்டுகள் குத்தி போனாலும்..
தாங்கிக் கொள்கிறாய்...

எலும்பை முறித்து - உன்
தலை கிள்ளி தலையில்
சூடிப்போகையிலும் சிரிக்கிறாய்..

நூல்களில் கட்டி தூக்கும்
இடுகிறார்கள் - சகித்துகொள்கிறாய்..

உன்னில் தான்
ஜேசுவை காண்கிறேன்..
மகாத்மாவை காண்கிறேன்..

மொட்டாய் முடங்கி விட
நினைக்கிறாயா..??
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருக்கிறாயா..???

வேண்டாம், பூவே நீ மலர்...
உன்போல் தான் நானும்..
நாளை மீண்டும் பிறந்து வா...
எனக்கு தோழி வேண்டும்..

தமிழ்நிலா

இன்னமும் இருக்கிறார்கள்...

சில கண்ணகிகள்
சில சீதைகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள் 

இலக்கிய புத்தகங்களில்...
தமிழ் பாடப்பரப்புகளில்..
கவிஞர்களின் கற்பனையில்..
மட்டுமே...  ஆனால்..  அதிகம்...

மாதவியை நாடும் 
கோவலர்களும்...
வீட்டுவாசம்  அனுப்பும் 
ஸ்ரீ இராமர்களும் ...
மனைவியை விற்றுவிடும் 
நள மகாராஜர்களும் ...
காதலியை மறந்துவிடும் 
துஷ்யந்தன்களும்...


இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. 
இங்கேயும் இருக்கிறார்கள்..
நிஜ வாழ்க்கையில்...

தமிழ்நிலா


வீதிகள் எங்கும்
புதைக்கப்படுகின்றன
வேக வெடிகள்..
சந்திகளில் எல்லாம்
அமைக்கப்படுகின்றன
விபத்து நிலையங்கள்...

கனரக ஆயுத அழிவை
கடந்து வந்தால்,
கன(ரக) வாகன அழிவு...

சாரதியின் இருக்கைக்கு
அருகில் தான்
இயமனின் இருக்கை...
பிரயாண சீட்டு இன்றி
சித்திர குப்தர்களின் வருகை..
கண்ட இடத்திலும்
கணிக்கபடுகிறது...
பாவ புண்ணியங்கள்....!!


அரசுக்கும் தனியாருக்கும்
விபத்தில் கூடவா போட்டி..??
போட்டி போட்டு இடித்து
அழிக்கிறார்கள் மக்கள் கனவுகளை...


நீதி மன்றங்களில் இன்னமும்
தேங்கி இருப்பதெல்லாம்..
விபத்து வழக்குகள் தான்...

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home