துளிர்களிங்கு கருகிட பிறப்பதில்லை
வேர்களில் இருந்து வலிகளை கடந்து
துளிர் ஒன்று வருகையில் அவை
கருகிட நினைப்பதில்லை...
விடிந்திடும் பொழுதுகள்
விடியலை தேடி அலைவதில்லை...
பூமியின் மேலே பூக்கின்ற பூக்கள்
சாவதை நினைத்து பூப்பதில்லை...
விதைகள் துளிர்விட நினைத்தாலும்
விருட்சங்கள் அதை ஏழ விடுவதில்லை
கைகளை கவிழ்த்து பிடித்தாலும்
தீ என்றும் கவிழ்ந்து எரிவதில்லை...
இருட்டுக்குள் உறங்கிடும் பௌர்ணமியும்
வெளிச்சத்தை தர நினைப்பதுண்டு..
காற்றில் அசையும் புல்வெளியும்
நிமிர்ந்து தான் நிக்க நினைப்பதுண்டு...
புன்னகையை என் திருடவிட்டாய்...
இறைவனின் கோபத்தை திருடிக்கொண்டாய்...
பூக்களின் மென்மையை அடக்கிவிட்டாய்,
ஈக்களின் நிலையினை அடைந்துவிட்டாய்..
தொலையாத ஹைகூக்கள்
தொகையாக கவியாகும்
தொலைதூர நிலவுகள்
உன் வீட்டில் ஒளியாகும்...
உனக்கான ஓர் உலகம்
ஒரு நாளில் உருவாகும்.
போராடு உன் தலை எழுத்தை நீ மாற்ற..
போராடு உன் உலகை நீ மாற்று...

எங்களுக்குள்
எள்ளவும் விதியாசம் இல்லை,
மரம் தாவுவது போலே நான்
மனம் தாவிக்கொ(ல்)ள்கிறேன்..
மார்தட்டிக்கொள்கிறதா
நானும் தான், நான் என்று
மார்தட்டிக்கொள்கிறேன்..
அறிவுகள் பற்றி பேசுகிறாயா..
ஐந்தில் இருந்து ஆறா..
வளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்
கதைத்தே வளர்ந்துவிட்ட
இனம் தானே நாம்..
மண்டையோட்டில் மாற்றம் இல்லை
முதுகுத்தண்டில் மாற்றம் இல்லை
சேட்டைகளிலும் மாற்றம் இல்லை
ஆடை போட கற்றோம்,
தலை சீவ கற்றோம்...
வாலைச்சுருட்டி வைக்க பழகி,
வால்பிடிக்க கற்றோம்...
மரபணுவை மாற்றிப்
பின்னிக்கொண்டோம்
இருந்தும்...
மந்திக்கும் என் மரபணுவுக்கும்
மயிரளவும் மாறுதல் இல்லை...
நேற்றும் ஒரு கனவு
மரத்தில் இருந்து கிளை தாவுகையில்
திடீரென விழுந்துவிட்டேன்...
தமிழ்நிலா

காணாமல் போன ஒன்று
யாரும் காணாமல்
கிடக்கிறது
அடித்து, தூக்கி வீசி
நான்குமுறை நான்குசக்கரங்கள்
ஏறிச்சென்றபின்னும்
எதிர்பார்ப்புகளுடன்
மறுபடியும் துடிக்கிறது இதயம்..
ஒரு நண்பகலில்
இரத்தம் சிந்தி,
காய்ந்து, வறண்டு,
தாரோடு தாராய் போய்
தூசி கிளம்பியும்
இன்னும் துடிக்கவில்லை
சிலரது இதயம்..
மாடுகளின் சாணத்தை
சில்லுகள் வாரி அள்ளிச்
செல்வதுபோல்
சிதறிய மிச்சத் சதைகளை
மிதித்து செல்லுகின்றன
வண்டிகள்..
தெருநாய்களும்
கூடிவிட்டன
இன்னும் சில நிமிடங்களில்
மனிதம் செத்துவிடும்..
தூக்கி கரையிலாவது
போட்டுவிட்டு போங்கள்..
காகங்கள்
காவல் இருக்கின்றன..
தமிழ்நிலா

என்றுமே நிரப்பப் படமுடியாத
சில வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..
இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை
சில நேரத்தால் வந்தவை
நேரங்களை
அடுக்கி வைத்து பார்த்தேன்.
நிரம்பவில்லை..
சில காலங்களால் ஏற்பட்டவை
காலங்களை
உடைத்து அடுக்கி பார்த்தேன்.
நிறையவில்லை...
சில தொலைந்தவையால் வந்தவை
தொலைந்தவற்றை
தேடியும் பார்த்தேன்
காணவில்லை...
சில உறவுகளால் நடந்தவை
உறவுகளை
புதுப்பித்தும் பார்த்தேன்
மேலும் ஒரு வெற்றிடம்..
நேரத்தை அடுக்கி எதுவும்
நடக்கவில்லை...
காலத்தை துண்டு துண்டாய்
உடைத்து அடுக்கியும்
ஏதும் நிரம்பவில்லை..
தேடியும் பார்த்தேன்..
புதுப்பித்தோ
பழமையை விரும்பியோ
எதுவும் நிறையவில்லை..
இது என்னில் இருப்பது
ஒரு வேளை என்னாலும்
ஏற்பட்டிருக்கலாம்..
இல்லை நான்
ஏற்படுத்திக்கொண்டதாகவும்
இருக்கலாம்...
நிரப்பிவிடவும் முயல்கிறேன்..
இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை
சிலவேளைகளில்
நாளையும் இருக்கலாம்..
என்றுமே நிரப்பப் படமுடியாத
அழகிய வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..
தமிழ்நிலா










