Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

என் தேநீர்ப்பொழுதுகள்

அம்மாவுடனும் தேநீருடனுமே
தொடங்குகின்றன என்
காலைகள் எல்லாமே..
என் காலைகளில் என்றுமே
தேநீர் இல்லாமலும் இல்லை..

வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் கொண்டு
குவளை நிறைக்கவில்லை 
என் தேனீர்ப் பொழுதுகள்...

அன்பும், காதலும் 
அறிவும் அக்கறையும் கொண்டு 
நிரம்பியிருக்கும்..
என் தேநீர்க்கோப்பை
சிலநேரங்களில்
குளிர்தேசத்து மதுக்குவளைபோல்
இருக்கும்
இன்னும் சிலநேரங்களில்
குருதி நிறைந்த கிண்ணம் போல்
இருக்கும்...

சூடான என் தனிமைகளை
இளம் சூடான தேநீர் அதிகமாக
எப்படியோ சரி செய்துவிடுகிறது..

அதிக யன்னலோர 
தென்றல் பொழுதுகளை...
தேடிப்பெற்ற மழைநேர 
சாரல் பொழுதுகளை...
என்றுமே விரும்பாத வெயிலின்
வியர்வைப் பொழுதுகளை...
தவமிருக்கும் பனியின்
குளிர்ப் பொழுதுகளை...
எப்படியும் கிடைக்கும் இரவின்
நிலவுப் பொழுதுகளை...
என்னுடன் பங்கிட்டிருக்கிறது
என் தேநீர்ப்பொழுதுகள்..

ஆரம்பிப்பது போலவே
அம்மாவுடனும் தேநீருடனுமே
முடிந்துவிடுகின்றன..
என்னை எனக்கே காட்டிக்கொள்ளும்..
என் எல்லா தேநீர்ப்பொழுதுகளும்...

தமிழ்நிலா

எனக்கானவை எல்லாம்
உன்னிடம் இருந்து
கிடைக்கப்பெற்றவை..
என்னிடம் இருந்தும் சிலவற்றை
நீ எடுத்திருக்கிறாய்..
வேண்டியதை எடுத்து
தேவையற்றதை
தந்தும் இருக்கிறாய்..

எடுக்கப்பட்டவை...
கிடைத்தவை இரண்டும்
நீ இருப்பதும்,
இல்லாது இருப்பதும் போலத்தான்..
தேவையின் போது இல்லாமலும்,
இல்லாதபோது தேவையாகவும்..
எப்போதும்...
எப்படியாயினும்...

ஒரு விசை
இயக்கம்...
ஓய்வு...
நூறின் ஒற்றை விளக்கம்...
அத்தனையும் ஒன்றில் அடக்கம்..
அந்த ஒன்று...??
தெளிவான குழப்பம்...

ஆச்சரியமான பூமியில்
கேள்விக்குறியுடன்
நானாக நான்
நீயாக நீ..
சில விளங்க முடியாத உண்மைகள்..
நீயாக முயலும் சில நான்களுடன் காலம்

தமிழ்நிலா 
யாழ். சாவகச்சேரியை சேர்ந்தவருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயரிய விருது!

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான Champion of Change விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

துளிர்களிங்கு கருகிட பிறப்பதில்லை
வேர்களில் இருந்து வலிகளை கடந்து
துளிர் ஒன்று வருகையில் அவை
கருகிட நினைப்பதில்லை...

விடிந்திடும் பொழுதுகள்
விடியலை தேடி அலைவதில்லை...
பூமியின் மேலே பூக்கின்ற பூக்கள்
சாவதை  நினைத்து பூப்பதில்லை...
விதைகள் துளிர்விட நினைத்தாலும்
விருட்சங்கள் அதை ஏழ விடுவதில்லை
கைகளை கவிழ்த்து பிடித்தாலும்
தீ என்றும் கவிழ்ந்து எரிவதில்லை...

இருட்டுக்குள் உறங்கிடும் பௌர்ணமியும்
வெளிச்சத்தை தர நினைப்பதுண்டு..
காற்றில் அசையும் புல்வெளியும்
நிமிர்ந்து தான்  நிக்க நினைப்பதுண்டு...

புன்னகையை என் திருடவிட்டாய்...
இறைவனின் கோபத்தை திருடிக்கொண்டாய்...
பூக்களின் மென்மையை அடக்கிவிட்டாய்,
ஈக்களின் நிலையினை  அடைந்துவிட்டாய்..

தொலையாத ஹைகூக்கள்
தொகையாக கவியாகும்
தொலைதூர நிலவுகள்
உன் வீட்டில் ஒளியாகும்...
உனக்கான ஓர் உலகம்
ஒரு நாளில் உருவாகும்.

போராடு உன் தலை எழுத்தை நீ மாற்ற..
போராடு உன் உலகை நீ மாற்று...

தமிழ்நிலா


எங்களுக்குள்
எள்ளவும் விதியாசம் இல்லை,
மரம் தாவுவது போலே நான்
மனம் தாவிக்கொ(ல்)ள்கிறேன்..

மார்தட்டிக்கொள்கிறதா
நானும் தான், நான் என்று
மார்தட்டிக்கொள்கிறேன்..
அறிவுகள் பற்றி பேசுகிறாயா..
ஐந்தில் இருந்து ஆறா..
வளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்
கதைத்தே வளர்ந்துவிட்ட
இனம் தானே நாம்..

மண்டையோட்டில் மாற்றம் இல்லை
முதுகுத்தண்டில் மாற்றம் இல்லை
சேட்டைகளிலும் மாற்றம் இல்லை
ஆடை போட கற்றோம்,
தலை சீவ கற்றோம்...
வாலைச்சுருட்டி வைக்க பழகி,
வால்பிடிக்க கற்றோம்...

மரபணுவை மாற்றிப்
பின்னிக்கொண்டோம்
இருந்தும்...

மந்திக்கும் என் மரபணுவுக்கும்
மயிரளவும் மாறுதல் இல்லை...

நேற்றும் ஒரு கனவு
மரத்தில் இருந்து கிளை தாவுகையில்
திடீரென விழுந்துவிட்டேன்...


தமிழ்நிலா
குழந்தை Vs வறுமை 
(சென்ரியூ)


எப்படி அடித்தும் உடையவில்லை 
எப்படி அழுதும் கரையவில்லை
வறுமை 



படிகள் ஏறிக்கொண்டிருந்தாலும் 
ஒவ்வொரு படியாய் இறக்கி விடுகிறது 
வறுமை...



சிக்குண்டு இருப்பதும்...
சிக்கியிருப்பதும் ஒன்றில் தான்...
வறுமை..


உண்மை, பொய் இரண்டையும் 
ஏனோ பங்குபோடுகிறது 
வறுமை..



புன்னகையை விற்றாலும் 
மனதை புண்ணாக்கி விடுகிறது 
வறுமை...

தமிழ்நிலா

காணாமல் போன ஒன்று
யாரும் காணாமல்
கிடக்கிறது
அடித்து, தூக்கி வீசி
நான்குமுறை நான்குசக்கரங்கள்
ஏறிச்சென்றபின்னும்
எதிர்பார்ப்புகளுடன்
மறுபடியும் துடிக்கிறது இதயம்..

ஒரு நண்பகலில்
இரத்தம் சிந்தி,
காய்ந்து, வறண்டு,
தாரோடு தாராய் போய்
தூசி கிளம்பியும்
இன்னும் துடிக்கவில்லை
சிலரது இதயம்..

மாடுகளின் சாணத்தை
சில்லுகள் வாரி அள்ளிச்
செல்வதுபோல்
சிதறிய மிச்சத் சதைகளை
மிதித்து செல்லுகின்றன
வண்டிகள்..

தெருநாய்களும்
கூடிவிட்டன
இன்னும் சில நிமிடங்களில்
மனிதம் செத்துவிடும்..
தூக்கி கரையிலாவது
போட்டுவிட்டு போங்கள்..
காகங்கள்
காவல் இருக்கின்றன..

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home