Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கனவை தேடி
அலைந்து கொண்டிருந்தாள்
ஒரு தேவதை...

தெருவின் ஓரத்தில்..
பருவத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது..

ஒற்றை மர நிழலில்..
பாசத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

மணல் திட்டுக்களில்...
பாதியில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...
எதுவுமே அளவுடையது இல்லை...

கடல் தாண்டும் கனவு
துளிர்த்திருந்தது....
ஆனால்
கனவுடன் கடல்
விளையாடிக்கொண்டிருந்தது...

கடலின் அலைகளுக்கிடையில்
கனவுகள்
தத்தளித்துகொண்டிருப்பது தெரிந்தும்,
அவளது கனவு
நீந்தி போக நினைத்திருக்ககூடும்..

கடலின் கரையில்...
பயணத்தில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

இதுவாக இருக்கலாம்..
உதவி கேக்கவும்
இந்த பாதையில் ஒருவரும் இல்லை...

கனவினை அழைத்துப்பார்த்தாள்
எழுந்து வருவதாய் இல்லை...
கனவினை அழைத்துப்பார்த்தாள்
திரும்பி வருவதாய் இல்லை..

கலைந்து போன(அவ)வளின் கனவு
காணாமல் போயிருந்தது...

தமிழ்நிலா

கடல் தாண்டிய பயணத்தில் உயிரை பிரிந்தவர்களுக்காக.
கடல் தாண்டி வாழ்வை இழந்தவர்களுக்காக 
தூக்கம் விற்று சம்பாதிப்பவர்களுக்காக...
இதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...



கோவில் வாசலில்
சிந்தி கிடக்கும் பூக்களை போல
கல்லூரி வாசலில் நட்புகள்

ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் பச்சைப் புற்கள்
எப்படி முளைத்திருக்கும்...

புல் நுனியில்
அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பனித்துளிதான்
எம் நட்பு...

உன்னை நானும்
என்னை நீயும்
முதல் முறை
பார்த்துக் கொண்டோம்..
அப்போது தான்
பூத்திருக்கவேண்டும்
இந்த நட்பு....

மழையும் வெயிலும்
சந்தித்தால் வானவில்...
நானும் நீயும்
சந்தித்ததால் நட்பு..

பாலர்வகுப்பில்
ஒற்றை ஊஞ்சலுக்காய்
அடிபட்டுக்கொண்டோம்,
திடீரென விலகினாய் அப்போதே
முழுமை அடைந்துவிட்டது
எம்  நட்பு

அற்ப விசயங்களுக்கும்
சண்டை பிடித்தோம்...
நட்பு பலமடைந்தது...

அதிக விசயங்களுக்கு
சண்டை பிடிக்காதிருந்தோம்
நட்பு இன்னும் பலமடைந்தது...

போட்டி போட்டு
பொய் சொல்லியிருக்கிறோம்
உன்னை நானும்
என்னை நீயும்
காப்பாற்றிக்கொள்ள...

பொய்களை காப்பாற்ற
எத்தனை கதைகள்
நீ சொல்லியிருக்கிறாய்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..
என் கற்பனைகளின் நாயகன் நீ...

அப்பாவின் திட்டுக்களை விட
உனது மௌனம் அர்த்தமானது...

அம்மாபோல் என்மேல்
அதிக அக்கறை கொண்டவன் நீ ...

நட்பை தவிர  அத்தனையும்
கடனாய் பெற்றது தான்
உன்னிடமிருந்து...

உன்னிடம் நான் மறைத்தது
என் அந்தரங்கங்கள் மட்டும் தான்..

என்னோடு
பேசுவது மட்டும் இல்லை
எனக்காக
பேசுவதும் நீ தான்...

பெயர்கள் சேகரித்துக்கொண்டு
திரிந்த அந்த முதல் நாள்...

உன்னை நானும்
என்னை நீயும்..
புகைப்படம் எடுத்த
அந்த முழு நாள்..

கையில்
நினைவுக் குறிப்பேட்டுடன்
அலைந்த இறுதிநாள்...
உனக்கான  இறுதிக் கவிதை..
இப்போதும் இசைக்கின்றது...

ஏதோ அனுபிக்கொண்டிருந்தோம்
கடதாசியிலாவது ராக்கெட்கள்..

ஏதோ கட்டிகொண்டிருந்தோம்
மட்டையிலாவது கப்பல்கள்...

வகுப்பில் படித்ததை விட
உன்னிடம் படித்தது அதிகம்...
இருளிலும் மின்னியவன் நீ...

நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்...
மதங்கள் நட்பானது...
ஜாதிகள் நட்பானது...

உனது காதலுக்காய்
துது போன அந்த நாட்கள்...
என் காதலியிடம் உனக்காய்
துது போன அந்த நாட்கள்...
அத்தனையும் அழகு தான்...

கல்லுரி சுவர்க்கம்
சந்தோசத்தின் மறு வடிவம்...

ஒற்றை குழாயில்
குளித்திருக்கிறோம்...
எம்மோடு குளித்தது நட்பு...

ஒரே தட்டில்
உண்டிருப் போம்...
எம்மோடு உண்டது நட்பு...

ஒரே அறையில்
உறங்கியிருக்கிறோம்...
எம்மோடு உறங்கிது நட்பு...

ஆடை மாற்றி
உடுத்தியிருக்கிறோம்...
எம்மை சுற்றியிருப்பது
இப்போதும் நட்பு....

வானம் அழகாக இருப்பது
வெளிச்சத்தில் மட்டும் அல்ல
இரவுகளில் நிலாவினால்...
பகலில் சூரியனால்...

வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்திலும் உன்னால்....

தோல்வியே உனக்கில்லை
நீ இருக்கிறேன் என்றாய்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் பிறந்தேன்..

தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...

இன்று
விழாக்களில் உன்னைக்காண்கிறேன்...
தெருக்களில் உன்னைக்காண்கிறேன்...
முற்றிலுமாய் மாறி இருந்தாய்..

நட்புக்கு மரணம் இல்லை
நட்பு என் சுவாசமாகிவிட்டதால்...

இருந்தும் 

காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம்...


தமிழ்நிலா


உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், 
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, 
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், 
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.

இன்னொரு கருச்சிதைவுதான்
புளுட்டோணியம் கரு
சிதைக்கப்படுகின்றது....

யுரேனியம் பிளக்கப்படுகிறது,
வளிமண்டலத்தில்,
நிலத்தடியில்,
வான்வெளியில்,
நீரடியில்...
எல்லாமே வெற்றி...
விஞ்ஞானிகள்
சிரித்துக்கொள்கிறார்கள்...

யாருக்கும் தெரியவில்லை..
அத்தனையும் தோல்வி...
கடவுள் சிரித்துக் கொள்கிறார்...

அணுமின் நிலையம்
மின்சாரம் உற்பத்தி செய்யவா...??
இல்லை... இல்லை...
மக்களை அடக்கம் செய்ய..
இலவசமாக சூரியன் இருக்கிறதே...
சூரியனும் அணு உலைதான்
அங்கே இருந்து மின்
எடுத்துக்கொள்ளுங்கள்...

இராவணனை  அடக்கி 
இராமன் ஆக்கமுடியுமா...
இராட்சசன் அடங்கிவிட மாட்டான்...

அணு உலைக்கு 
இத்தனை பாதுகாப்பென்றால் 
அது எத்தகைய கொடியது தெரியுமா...??

விஞ்ஞானிகளே 

கழிவுகளை என்ன செய்வது...
ஆழக்கடல் தாண்டிச் சென்று
சமுத்திரத்திற்குக் கீழே புதைத்து விடுவோமா..?
பூமியில் பள்ளம் தோண்டி
பாறைக்குழம்பில் கரைத்து விடுவோமா...?

இருப்பினும் 
சாம்பலில் கதிரியக்கம் 
நடந்து கொண்டேதான் இருக்கும்...

உங்களுக்காக ஒரு அவசர திட்டம்
அமுல் படுத்தப்படுகிறது..
உங்கள் சேவைக்காய்...

இலவசமாக உங்களுக்கு வீடுகள்..
அணு உலைக்கு அருகில்
இருகிறீர்களா...??

இரோசிமா, நாகசாகி மீது 
நடந்தவர்கள்
"குண்டு மனிதன் "
"சின்ன பையன்..."

நடந்த தடங்களே அழியவில்லை...
எப்படி எத்தனை... எத்தனை....

இதோ மீண்டும் தயாராகிறது
புதிய ஆயுதம்..
பெயரும் இட்டகிவிட்டது
"கடவுளுக்காக"

அணுகுண்டு ஒன்று
இலவசமாக வெடிக்கபோகிறது...

தமிழ்நிலா

புன்னகை..
கனவு தேசத்து
பளிங்கு மாளிகையின்
கண்ணாடி மேசை...

ஏழைகளின்
ஒரு வரி முகவரி
வாய் பேசாதவர்களின்
ஒற்றை வார்த்தை..

உதட்டில் பூக்கும்
வெள்ளை மலர்...
இதழ்கள் வாசிக்கும்
இன்னிசை...

புன்னகை என்பது
கதை அல்ல கவிதை..
புன்னகை என்பது
ஒலி அல்ல ஓவியம்..

இப்போதெல்லாம்
கவிதைகளில் கெட்டவார்த்தைகள்..
ஓவியத்தில் தப்பான அடையாளங்கள்...

பொய்க்கு முன்னால்
பொய்யான புன்னகை...

கேலி பேசுகையில்
கபட புன்னகை...

காட்டிகொடுக்கையில்
மாய புன்னகை...

மற்றவரின் தோல்வியில்
சந்தோஷ புன்னகை...

கவர்ச்சி காட்டுகையில்
மந்திரப்புன்னகை...

புன்னகைப்பூக்கள்
எப்படி கருகி பூக்கின்றன...??

புன்னகை என்பவள் அகதி...
நேற்று இங்கு
நாளை அங்கு...

புன்னகை என்பவள் விபச்சாரி..
நேற்று என்னோடு
நாளை அவனோடு...

புன்னகை இப்போது...
நந்தவனமாய் இல்லை
பாலைவனமாய்...

சமாதானம் பேசவில்லை..
சண்டை போடுகிறது...

தேவாலயத்தில் வருவதில்லை..
மயானத்தில் வருகிறது...

காதலை  செய்யவில்லை
கடமையை செய்கிறது,,

உதடுகளையே காட்டுகிறது..
உள்ளத்தை கட்டுவதில்லை...

இப்போதெல்லாம் எம்மால்
புன்னகைக்க முடிவதே இல்லை...

கடல் போல் சத்தமாக...
இல்லை
தென்றல் போல் அமைதியாக...
ம்ம்
இரண்டுமே முடிவதில்லை...

புன்னகை என்பது..
காணாமல் போய்விட்டது...
உதடுகளில் இருந்து....

தமிழ்நிலா

என் நிழல்
என்னை போலவே இருக்கும்....
என் நிழல்
என் கூடவே நடக்கும்...

இப்போதெல்லாம் நிழல்
என் கூட நடப்பதே இல்லை..
நிழல் நிஜத்தில் இருந்து
விலகியே நடக்கிறது...

என் நிழலை எவரும்,
பின்தொடர்ந்தால்
பிடிப்பதில்லை..!

இப்போதெல்லாம் 
எனக்கு  நிழலையே 
பிடிப்பதில்லை...!

முன்பெல்லாம் எனக்கு முன்னால் 
கால்களுக்கு அடியில் சிறிதாய் இருக்கும்..
சில நாட்களாய் எனக்கு பின்னல் 
நீண்டு பெரிதாய் தான் இருக்கிறது...

நிஜத்தை புரிந்து கொள்ளவில்லை...
நிழல் நிழலையே விரும்புகிறது....

நிழல்களுக்கு இடையில் நிஜம்
மாட்டிக் கொண்டுவிட்டது...

நகர்ந்து கொண்டிருக்கிறது
அடர்த்தியான நிழல்களுக்கு இடையில் 
மென்மையான நிஜம்...

இதுவரை நிழலை பார்த்து
குரைத்த நாய்கள்..
நேற்றிலிருந்து நிஜத்தை பார்த்து
குரைக்க தொடங்கியிருக்கின்றன...

தமிழ்நிலா



அப்பாவுக்கும் எனக்குமான
ஆரம்பகால ஊடகம்
கண்கள் மட்டுமே..
பார்வையாலே எல்லாம்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

அப்பாவின் முதுகில் இருந்து
உலகத்தைச் சுற்றினேன்..
அப்பாவின் தோளில் ஏறி
உலகத்தை அளந்தேன்.....
அப்பாவின் கை பிடித்து
நடந்த போதுதான் உலகத்தை படித்தேன்..

நடந்துகொண்டிருக்கையில்
எதிர்த்திசையில் போய்க்கொண்டிருந்தது
அப்பாவின் கடந்தகாலம்...
அப்பா இன்னொரு தாய் தான்..
தன் உழைப்பால் எனை செதுக்கியவர்...

அப்பாவிடம் இருந்து
வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்...
இல்லை
வாழக் கற்றுக்கொண்டேன்..

எப்படி வாழவேண்டும் என்று அல்ல
இப்படித்தான் வாழவேண்டும் என்று
கற்றுத்தந்தவர் அப்பா...

வறுமையிலும் எளிமையாய்..
எளிமையிலும் கொள்கையுடன்..
கொள்கையுடன் செழிமையாய்...

அம்மா தினம் தினம்
திட்டினாலும் உறைத்ததில்லை,
அப்பாவின் ஒரு வார்த்தை
உடனேயே உறைத்திருக்கிறது...

"அப்பா ஒரே புராணம்டா "
என நண்பர்களிடம் புலம்பையில்
உனது தந்தை போல் எங்களுக்கு
இல்லையே என்று
நண்பர்கள் சொல்லும்போது
தான் தெரிந்தது,
என் தந்தை எனக்கு மட்டும்
கிடைத்தவர் என்று..

கடவுள் கேட்டாலும்
கொடுப்பதில்லை...
அப்பா
கேட்ட உடனே கொடுக்கும்
கடவுள்....

என் கரம் பிடித்து
நடந்த போது
என்னென்ன கனவுகள் கண்டிருப்பார்..?
அப்பாவின் கனவுகள் ஏராளம்..

அதிகமானவரின் கனவுகள்
நிஜமாவதில்லை தானே..

உழைத்து களைத்துவிட்டன
அப்பாவின் கால்களும்
அப்பாவின் சைக்கிளும்....
வியர்வை பட்டதால்
சைக்கிள் துருப்பிடித்து விட்டது..
அன்பு இன்னமும் பளபளக்கிறது...

என் முன்னால்
என்றுமே சொன்னதில்லை,
அம்மா சொல்லித்தான்
கேள்விப்பட்டிருக்கிறேன்,
என்னைப்பற்றி பெருமையாக
பேசிக்கொள்வதை...

எனது வாழ்க்கையில்
வெற்றிடம் அப்பாவால் இல்லை..
என்னால் தான் அவரிடம் சில
வெற்றிடங்கள்....
அப்பாவைப் போல் யார்
எனக்கென்று இருக்க முடியும்..

வெளிப்படையாக
நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் காதலை..

அப்பா எந்நாளும் என் முகவரிதான்..

அப்பாவுக்கும் எனக்குமான
ஊடகம் பார்வை மட்டுமே..
பார்வையாலே எல்லாம்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...
இன்றுவரை....


தமிழ்நிலா


தாய்மை..
விசித்திரமானது, 
விபரிக்க முடியாதது...
விநோதமானது,
விளங்கிக்கொள்ள முடியாதது...

தாய்மை..
விரும்பாமல் சிலருக்கும்,
விரும்பி பலருக்கும் வாய்த்துவிடுகிறது...
காமத்தின் சிணுங்கலில் தொடங்கி,
காதலின் சிணுங்கலில் முடிகிறது..

பெண் தாய்மை அடைந்தாள்...
காமம் குழந்தையானது..
குழந்தை காதலானது...

குழந்தை சிறுமியாய்...
குமரி மனைவியாய் வந்தபிறகும்...
தாய்மையை தான் தேடுகிறாள் ...
தாய்மை இனிமையானது...

தாய்மை..
இரவுகளில் தூக்கம் பறிபோகும் என்று
நினைப்பதில்லை..
நீ வந்த பின் சுதந்திரம் பறந்தோடும் என்று
வருந்துவதில்லை...
பத்து மாதம் சுமந்தும் வெறுக்கவில்லை...
புறம் தள்ளுகையிலும் வலிப்பதில்லை....
தாய்மை தனிறைவானது...

தமிழ்நிலா


பூத்த உடனே
கொய்யப்படுகின்றன
இந்த பூக்கள்...

வண்டுகள் தேன் குடிக்க
அமர்ந்த போதுதானே
வந்தன இந்த மொட்டுக்கள்...

பூக்காமல் தடுக்க வேண்டும்

என்ன செய்தாய்...
மருந்தடித்து கொன்றாய்...

மொட்டுக்கள் பூத்துவிட்டால்,
என்ன செய்வது...

கொய்யத்தானே வேண்டும்...

சூடு ஆறும் முன்னே
சேத்துக்குள் புதைத்தாய் ...
தண்டுடன் முறித்து
குப்பைக்குள் போட்டாய்..
இதழ்களை பித்து
பற்றைக்குள் வீசினாய்..

சபாஷ் மனிதா...

நீ யார்
உன்னால் எது முடியாது..
செடி வைத்தது நீ..
நீருற்றி வளத்தது நீ...
வண்டுகளும் நீ,,,
மொட்டுகளும் நீ...

பூக்களை பறிக்கவா
யோசிக்க போகிறாய்...

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home