Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


ஸ்பாட்டா எனும்
வீரத்தின் பேரரசு
மீண்டும் உருவாகியிருந்தது...
ஸ்பாட்டகஸ்
என் ஸ்பாட்டாவின்
மன்னராகி விட்டான்..

சிக்குண்டு சிதறியிருக்கும்
சுருண்ட கூந்தல்
முடித்திருப்பான்...
கண்களுக்குள் 
சாம்பல் கொட்டி 
விழித்திருப்பான்...
நாக்கில் தேன் பூசி
உதடுகளில் விஷம் 
தடவியிருப்பான்...
வழமையான
கற்பனையில் இருந்து
முற்றிலும் மாறி இருந்தான்...

புயங்களில் வீரம்
புலன்களில் ஏக்கம்..
கொண்ட ஸ்பாட்டகஸ்
என் ஸ்பாட்டாவின்
மன்னராகி விட்டான்..

இந்த ஸ்பாட்டா 
மனித இனத்தொன்மங்களின் 
தொடக்கம் அல்ல 
அடிமைத்தனத்தின் முடிவிடம்...

தமிழ்நிலா

ஸ்பாட்டகஸ் என்பவர் உரோமைக் குடியரசுக்கு எதிரான ஓர் பாரிய அடிமைகளின் எழுச்சியின் போரில் உரோமினால் அடிமைகளாக்கப் பட்டவர்களின் தலைவராக இருந்தவர். ஸ்பாட்டகஸின் போராட்டம் என்பது அது அடிமை ஆட்சிக்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது.


இரவு வானம் உடைந்து
விழுந்திருந்தது..
சிதைவுகளுக்கு இடையே
மங்கிய ஒளியில்
மின்னிக்கொண்டிருந்தன
சில நட்சத்திரங்கள்...
நிலவு நீருக்குள் விழுந்து
அணைந்திருந்தது....
மேகங்கள் திட்டுத் திட்டாக
குவிந்து கிடந்தன...
சூரியத் துகள்களின்
வெக்கையில் காடுகள்
எரிந்து கொண்டிருந்தன....

கோரப் பற்கள்
இரத்தம் சுவைத்த நீண்ட நாக்கு...
கண்களில் நெருப்பு
பாம்புத் தலைமயிர்கள்..
பருத்த உடல், நீண்ட கழுத்து
குட்டைக் கால்....
கைகளில் கொடிய ஆயுதம்..
நீண்ட நகங்கள்..
உடல்களில் சிதல் கொண்ட உருவம்
திடீரென தோன்றி மறைகிறது...

மெல்ல என்னருகில் வந்து
அமர்ந்து கொண்டது..
திடுக்கிட்டு எழுந்தேன்..
திரும்பிப் படுத்துக்கொண்டேன்..
இல்லாத கடவுளை
இரண்டு முறை வேண்டிக்கொண்டேன்..
மீண்டும் உறங்கிவிட்டேன்..
மீண்டும் மீண்டும் அதே உருவம்..

திடுக்கிட்டு எழுந்தேன்..
திரும்பிப் படுத்துக்கொண்டேன்..
நித்திரை வருவதாய் இல்லை..
கோரம் நிறைந்த அது மட்டும்
மீண்டும் மீண்டும்...

ஏன் இந்த கனவு
ஏதோ நடக்கபோகிறது...
அல்லது..
ஏதோ நடந்திருக்கவேண்டும்..

தமிழ்நிலா


மேகம் உருகி
சொட்டு சொட்டாய்
சிந்திக்கொண்டிருக்கிறது...
இலைகளிலும்
புல்லின் நுனிகளிலும்
சிம்மசனமிட்டிருகின்றன
உருகிய துளிகள்..
வானம் வெளிச்சத்தை உண்டு
தன்னை மறைத்திருந்தது...
நிலவும் உறங்கிவிட்ட இரவு..

இருப்பினும்
கைகளில் கேள்விகள்...
அவர்கள் எங்கே  போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...

கால்களை கூளாம்கற்கள்
கிழித்துக் கொண்டிருந்தன..
இன்னமும் ஆறிப்போகாத
சூடு மண்ணில் தெரிந்தது..
நாய்கள் எதையோ
இழுத்துக்கொண்டிருந்தன..
சருகளில் பாம்புகள்
சரசரத்துக் கொண்டிருந்தன..
எங்கோ கழுகுகள்
சிறகடிக்கும் சத்தம்..

ஒரு பெரிய மயான வெளியில்
மூங்கில்கள் தாமாகவே
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
ஆனால் அத்தனையும்
நிசப்தமாய் இருந்தது...
எதுவுமே நடக்காதது போல்....

தமிழ்நிலா

கடல்
பூமியின் அழகு...
அழிந்து போகாத
தண்ணீர்க் காடு..
நிலம் அங்கம் மறைக்க
போர்த்தியிருக்கும் நீல ஆடை..
சூரியனையே உண்ணும்
அழகு இராட்சதன்..
நிலவு முகம் பார்க்கும்
திரவ கண்ணாடி...

அலையும் காற்றும் உறங்கும்
முதலிரவு மெத்தை...
நேற்று பிறந்த குழந்தை கடல்
அழுது கொண்டே இருக்கிறது....

கடல் எனக்கானது..
என் மூதாதையரின் தாய்...
நாங்கள் நடந்து வந்த
ஒற்றையடிப் பாதை...

வரலாறுகளை தின்று
முடித்திருந்த கடலின்
கரையின் மணலில்
நண்டுகள் கிறுக்கிய கவிதைகளை
ரசித்துக்கொண்டு நின்றேன்...

என்ன ஆச்சரியம்...
நீர் மூழ்கி கப்பல்களை
கொள்ளையடிப்பதர்ற்கு
தயாராக நின்றது வள்ளங்கள்...

வள்ளங்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தன
அலைகள்...
அலைகளின் ஊடு
வலைகள் கடந்திருந்தது..

மீனவர்கள் கொள்ளைக்கார்களாம்...
முதல் முறை அலை வந்து
வருடி போயிற்று..
வருந்திக்கொண்டேன்...

கடல் கொலைகாரன் என்றான் மனிதன்..
கடிந்து கொண்டேன் அலையை...
பாய்ந்து என் கால்களுக்கு அடியில்
மண்ணைக் கரைத்து
விழ வைக்க முயன்று
தோற்று போகிறது அலை...

தமிழ்நிலா


எனக்கும் என் தோழி உனக்கும்
இடையில் ஒரு காதலிருந்தது..
காதல் என்றால்..??

யுகங்கள் தவமிருக்கும் ஞானிக்கு
காட்சி தரும் தேவதையாய் நீ 
பிறவிக் குருடனுக்கு கிடைத்த
ஒரு நிமிட பார்வை போல
எப்படியோ நீ ..

பாலைவன மணல் மீது விழும்
சிறு தூறல் போல உன் அன்பு
தெரியாமலே வீசியிருந்தது...
தொடர் தோல்விக்குப் பின் பெறும்
முதல் வெற்றி உன் பாசம்
தெரியாமலே கிடைத்திருந்தது...

கனவுகளை 
திருடிக்கொண்டிருந்த தனிமையின்
கற்பனைகளை
திருடிக்கொண்டிருந்தது கவிதை....

வார்த்தைகள் உரசிக்கொள்ளும் இரவின்
கவிதைகளில் இருந்து பிறக்கிறது
உனக்கும் எனக்குமான நட்பு...

இருட்டை உடைத்து
உனக்கும் எனக்கும்
ஒரு நட்பினை செய்தேன்..

நானும் நீயும் நட்பு செய்தோம்...
நட்பும் நட்பும் காதல் செய்தது....

காதல் போன தெருவில்
நீயும் நானும் கைவீசி நடந்தோம்...
தெருவில்போகும் யாரையும் கண்டு
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..
ஏனெனில்

உன் நட்பை
என் நட்பு காதல் செய்தது
அது தான் உண்மை....
அது மட்டும் தான் உண்மை...

பார்வைகள் கூட தொட்டுவிடாத
தூரத்தில் தான் நீ...
காதல் திரையினை விலக்கியே
தோழி உன்னை பார்த்தேன்...
என் வாழ்வின் இறந்தகாலத்தின்
வசந்த காலம் நீ...

உன் நினைவுகளைத் தின்று
பசியாறுகிறது என் கவிதைகள்..
என் கண்நீரைக்குடித்து 
தாகம் தீர்க்கிறது காலம்...

அதே புன்னகையுடனும்,
நலமா? என்ற கேள்வியுடனும்
நேற்றும் தோன்றி மறைந்தது
உனக்கும்
எனக்குமிடையில் இருந்து
தொலைந்து போன எம் நட்பு...

தமிழ்நிலா

கடலும், வெளியும்
எல்லைகளாய் கொண்ட
பறவையுடன் நட்பு கிடைத்தது..

இறக்கைகள் அழகு என்றார்கள்
ஆனால் கம்பீரமாக இருந்தது..
இரவு பகல் பறந்தும்
களைக்கவில்லை..
புயல்களில் அடிபட்டும்
வீழவில்லை...

மனதினை ஒருநிலைப்படுத்த
கற்றுத்தந்ததே இது தான்...

கால்கள் மென்மை என்றார்கள்
ஆனால் உறுதியாக இருந்தது...
மலைகளிலும் மரங்களிலும்
எப்படி லாபகமாக பற்றிகொள்ளும்..

என் கால்களை உறுதியாக்க
இதனிடம் இருந்து தான்
கற்றுக்கொண்டேன்...

சுள்ளிகளால் சின்ன தாஜ்மஹால்கள்
அலகினால் கட்டிக்கொள்ளும்...
உதடுகளால்
எம்மால் என்ன செய்ய முடியும்
அது தானே...

ஒரு சிறகு முளைத்த பறவை
என் செல்லப்பிராணி ஆனது..
பெயர் தெரியாத அப்பறவையின்
ஒவ்வொரு செயலும் பிடித்திருந்தது..

தனது வட்டங்களை பெரிதாத கொண்டது..
அதனால் பிடித்திருந்தது..
இயற்கையின் வேறுபட்ட ஓவியம்..
அதனால் பிடித்திருந்தது..
மேல் எழும் திடீர் என்று
மடிமீது அமரும்..
அதனால் பிடித்திருந்தது..
வெற்று வானை
எப்படியோ நிரப்பி விடுகிறது...
அதனால் பிடித்திருந்தது..

கூட்டில் இருந்த பறவையை
வீட்டில் வைத்த மகிழ்ச்சி.. எனக்கு
வீட்டில் இருந்த தன்னை
கூட்டில் வைத்ததாக மகளிடம்
புலம்பிக்கொண்டிருந்தது பறவை...

தமிழ்நிலா

மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்துகொண்டிருக்கிறது...

பறப்பவை ஊர்ந்தும்
ஊர்வவை நடந்தும்...
நடப்பவை பாய்ந்தும்
பாய்பவை  நீந்தியும்
நீந்துபவை பறந்தும்
இயங்கிக் கொண்டிருந்தன....

அத்தனையும் பூச்சியம்
ஆகும் முதல்
இரண்டாம் உலகம் நோக்கி...

புற்கள்
கிளை விட்டுக்கொண்டிருந்தன...
மரங்கள்
படர்ந்துகொண்டிருந்தன...
கொடிகள்
புணர்ந்துகொண்டிருந்தன...

மரண வாசம் மட்டும் நிரம்பிய
காற்றை சுவாசித்தவாறு

மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்திருந்தது...


தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home