Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


எங்களுக்குள்
எள்ளவும் விதியாசம் இல்லை,
மரம் தாவுவது போலே நான்
மனம் தாவிக்கொ(ல்)ள்கிறேன்..

மார்தட்டிக்கொள்கிறதா
நானும் தான், நான் என்று
மார்தட்டிக்கொள்கிறேன்..
அறிவுகள் பற்றி பேசுகிறாயா..
ஐந்தில் இருந்து ஆறா..
வளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்
கதைத்தே வளர்ந்துவிட்ட
இனம் தானே நாம்..

மண்டையோட்டில் மாற்றம் இல்லை
முதுகுத்தண்டில் மாற்றம் இல்லை
சேட்டைகளிலும் மாற்றம் இல்லை
ஆடை போட கற்றோம்,
தலை சீவ கற்றோம்...
வாலைச்சுருட்டி வைக்க பழகி,
வால்பிடிக்க கற்றோம்...

மரபணுவை மாற்றிப்
பின்னிக்கொண்டோம்
இருந்தும்...

மந்திக்கும் என் மரபணுவுக்கும்
மயிரளவும் மாறுதல் இல்லை...

நேற்றும் ஒரு கனவு
மரத்தில் இருந்து கிளை தாவுகையில்
திடீரென விழுந்துவிட்டேன்...


தமிழ்நிலா
குழந்தை Vs வறுமை 
(சென்ரியூ)


எப்படி அடித்தும் உடையவில்லை 
எப்படி அழுதும் கரையவில்லை
வறுமை 



படிகள் ஏறிக்கொண்டிருந்தாலும் 
ஒவ்வொரு படியாய் இறக்கி விடுகிறது 
வறுமை...



சிக்குண்டு இருப்பதும்...
சிக்கியிருப்பதும் ஒன்றில் தான்...
வறுமை..


உண்மை, பொய் இரண்டையும் 
ஏனோ பங்குபோடுகிறது 
வறுமை..



புன்னகையை விற்றாலும் 
மனதை புண்ணாக்கி விடுகிறது 
வறுமை...

தமிழ்நிலா

காணாமல் போன ஒன்று
யாரும் காணாமல்
கிடக்கிறது
அடித்து, தூக்கி வீசி
நான்குமுறை நான்குசக்கரங்கள்
ஏறிச்சென்றபின்னும்
எதிர்பார்ப்புகளுடன்
மறுபடியும் துடிக்கிறது இதயம்..

ஒரு நண்பகலில்
இரத்தம் சிந்தி,
காய்ந்து, வறண்டு,
தாரோடு தாராய் போய்
தூசி கிளம்பியும்
இன்னும் துடிக்கவில்லை
சிலரது இதயம்..

மாடுகளின் சாணத்தை
சில்லுகள் வாரி அள்ளிச்
செல்வதுபோல்
சிதறிய மிச்சத் சதைகளை
மிதித்து செல்லுகின்றன
வண்டிகள்..

தெருநாய்களும்
கூடிவிட்டன
இன்னும் சில நிமிடங்களில்
மனிதம் செத்துவிடும்..
தூக்கி கரையிலாவது
போட்டுவிட்டு போங்கள்..
காகங்கள்
காவல் இருக்கின்றன..

தமிழ்நிலா


என்றுமே நிரப்பப் படமுடியாத
சில வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..
இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை

சில நேரத்தால் வந்தவை
நேரங்களை
அடுக்கி வைத்து பார்த்தேன்.
நிரம்பவில்லை..
சில காலங்களால் ஏற்பட்டவை
காலங்களை
உடைத்து அடுக்கி பார்த்தேன்.
நிறையவில்லை...
சில தொலைந்தவையால் வந்தவை
தொலைந்தவற்றை
தேடியும் பார்த்தேன்
காணவில்லை...
சில உறவுகளால் நடந்தவை
உறவுகளை
புதுப்பித்தும் பார்த்தேன்
மேலும் ஒரு வெற்றிடம்..

நேரத்தை அடுக்கி எதுவும்
நடக்கவில்லை...
காலத்தை துண்டு துண்டாய்
உடைத்து அடுக்கியும்
ஏதும் நிரம்பவில்லை..
தேடியும் பார்த்தேன்..
புதுப்பித்தோ
பழமையை விரும்பியோ
எதுவும் நிறையவில்லை..

இது என்னில் இருப்பது
ஒரு வேளை என்னாலும்
ஏற்பட்டிருக்கலாம்..
இல்லை நான்
ஏற்படுத்திக்கொண்டதாகவும்
இருக்கலாம்...
நிரப்பிவிடவும் முயல்கிறேன்..

இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை
சிலவேளைகளில்
நாளையும் இருக்கலாம்..

என்றுமே நிரப்பப் படமுடியாத
அழகிய வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..

தமிழ்நிலா
குழந்தை Vs கடவுள்
(சென்ரியூ)


உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை 
திருவோட்டுடன் கடவுள்.


தேவலோகத்திலும் ஊழல் 
கஜானாவும் காலி 
கைநீட்டும் கடவுள்.



அரக்கர்களின் பூமி
கோவில் கட்ட இடமும் இல்லை 
தெருவோரத்தில் கடவுள்.. 


கருவறையில் தங்கச்செருப்பு 
வாசலில் பலவகைச் செருப்பு 
வெறும் காலுடன் கடவுள்.. 


கொடுத்துக் களைத்த கடவுள்
வாங்க மறந்த இனம் 
குழந்தை 

தமிழ்நிலா


கடவுளின் இலவச திட்டம்
கடல்நீ்ர் குடிநீராய்
மழை
* * *



எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்
மனங்களை தவிர்த்து...
இருண்மை
* * *



இரவுகளிலும் அடித்துக்கொள்கிறது..
இமைகளை போல
வெள்ளைப்பிரம்பு
* * *

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home