Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கொரோனா - ஒரு பொது எதிரி

Leave a Comment
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை வழங்கியுள்ளது. அந்த பணத்திலும் மக்கள் எவ்வளவு பொருட்களை வாங்கிச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பொருட்களை வாங்கிச் சேர்த்து விட்டார்கள்.

இதன்பின்னர் அன்றாட கூலிகள் பலருக்கும் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அன்றாட சம்பளத்தை, அன்றைய செலவு போக அவர்களால் சேமிக்க முடியாமல் அல்லது போதாமல் இருந்த காரணத்தினால் அவர்களிடத்தில் பொருட்களை வாங்கி சேர்ப்பதற்கு பணம் போதியதாக இருக்கவில்லை. மேலும் அந்த பொருட்கள் மிகவும் சொற்பமாக இருக்கின்றது, விலையும் அதிகமாக விற்கப்படுகிறது.

20ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இரண்டு நாட்களின் பின் தற்காலிகமாக தளர்ந்தபோது பலரும் முண்டியடித்து பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அரசின் சுகாதார நடைமுறைகளையோ சமூக இடைவெளிகளையோ பின்பற்றியிராத காரணத்தினாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு நோயாளி இனங்காணப்பட்டதன் பின்னர் நோயானது மேலும் பரவாதிருக்க ஊரடங்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.


ஊரடங்கு தொடர்ச்சியாக இருந்த இக்காலப்பகுதியில் கிராமங்களில் இருக்கும் சிறு கடைகள் திறந்திருந்தன. ஆங்காங்கே பொருட்கள் வீதிகளில் விற்கப்பட்டன. ஊரடங்கு மேலும் இறுக்கப்பட அரச உத்தரவின் அடிப்படையில் அந்த சிறு கடைகளும் மூடப்பட்டன. கிராமங்களில் நடமாடியோரும் தண்டிக்கப்பட்டனர். பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் நடமாட்டங்களை கூர்ந்து கண்காணித்தனர்.

சில நாட்களில் மக்களின் உணவுப் பிரச்சனை பொதுவெளிக்கு வந்தது. அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பின்னர் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தரும் பொறிமுறைகள் உருவாக்கப்பட்டது. மருந்துப் பொருட்கள், பலசரக்குப் பொருட்கள், மரக்கறி வகைகள் போன்றன இவற்றில் அடங்கும். ஆனால் இந்த நடவடிக்கையையும் சாதாரண மக்களிடையே வெற்றிகரமாக அமையவில்லை. பெரிய, சிறு கடைக்காரர்கள் ஒரு லாபகரமான தொழில்முறையாக இதனை மாற்றி வருகிறார்கள். குறித்த இந்த காலப்பகுதியில் தாம் உழைத்து விட முயல்கிறார்கள். அரசாங்கம் பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை நிறைவாக இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இங்கு பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்கப்படுகிறது. அதற்கான பதில் பொருட்கள் இல்லை என்பதே.

ஊரடங்கிற்கு முன்னர் பிடி 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரையானது, இரண்டு நாட்களில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று அது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 350 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தேங்காய் எண்ணெய் இப்பொழுது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 380 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் மாவின் விலை இப்பொழுது 450 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. 

இதுவரை நூறு ரூபாய் மீன் ரின்னையோ, அல்லது பத்து ரூபாய்க்கு முட்டையையோ, அல்லது அறுபத்தைந்து ரூபாவிற்கு விற்குமாறு பணிக்கப்பட்ட பருப்பயோ எந்த கடைகளிலும் காணக்கிடைக்கவில்லை. மாறாக அவை விற்கப்பட்ட விலைகளிலிருந்து அதிகமாகவே கைகளுக்கு கிடைக்கிறது.


உள்ளூர் விவசாயிகளின் பொருட்கள் தேங்கியுள்ளது என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில் வீடு வீடாக அல்லது வாகனங்களில் மரக்கறிகளை கொண்டு சென்று விற்போர் அவற்றை அதிகமான விலைகளில் விற்கிறார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. வீடுகளில் சிறுவர்கள் கர்ப்பிணிகள் முதியோர்கள் போன்றவர்களின் உணவு தேவைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதே நிலைமைகள்தான் மருந்து பொருட்களிலும் இருக்கிறது. ஒவ்வொரு பொருட்களிலும் பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டு அவை விற்கப்படுகின்றன. தற்பொழுது அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்கிறது. அவ்வாறு பொருட்களைப் பெற்றுக் கொள்வோர் அவற்றின் விலை சற்று அதிகம் என்கிறார்கள். இவற்றை விட கொண்டு வந்து தருவதற்குரிய சேவைக் கட்டணமும் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.

இது இப்படியாக இருக்க அரசு சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10,000 ரூபா வழங்குவதாக கூறியது. பின்னர் முதற்கட்டமாக 5000 ரூபா வழங்குவதாக அறிவித்திருந்தது ஆனால் பலருக்கு இன்னும் அந்த பணமும் போய்ச்சேரவில்லை. சில பிரிவுகளில், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மாத்திரமே அவை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அவற்றிலும் சில பிரிவுகளில் பழுதடைந்த உணவுப்பொருட்களை வழங்குவதாக செய்திகளும் வருகின்றன. இருப்பினும் மக்கள் தமது சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இவற்றைவிட சமுர்த்தி அல்லாத ஆட்டோ சாரதிகள், கட்டடதொழிலாளர்கள் , தோட்டதொழிலாளர்கள் போன்ற ஏனையோரின் வாழ்வாதாரங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு நோயின் பிடியில் இருக்கும் நாம் இன்னொரு நோய்க்கு ஆளாகாமல் இருப்பதற்கு நாம் உணவு வழங்குவது நம்மைப் போன்ற ஒரு சக மனிதர்களுக்கு என நினைத்து நல்ல உணவுகளை வழங்க வேண்டும். தற்போது அரசு அரசஉத்தியோகத்தர்களை விமர்சித்தல் குற்றம் என சட்டமியற்றியுள்ளது. இது இப்படி இருக்க இந்த தவறுகளை எப்படி சுட்டிக்காட்ட முடியும்?

அரசு மீன்பிடிக்க அனுமதி என சொல்கிறது. ஆனால் விற்பதற்கு அனுமதி கிடைப்பதில்லை. பிடித்து விற்க கொண்டுவந்த மீனை நிலத்தில் கொட்டி விடுகிறார்கள் பொலீஸார். அரசு தோட்டங்களுக்கு செல்லலாம் என்ன கூறுகிறது. தோட்டங்களுக்கு செல்வோர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டங்கள் யாருக்கு, யார் அதை பின்பற்ற வேண்டும் என்று சிந்தனை அற்று கடக்கிறது நாட்கள்.

தற்பொழுது அன்றாட கூலித் தொழிலாளர்கள் மட்டுமன்றி அனைவருமே சவாலான ஒரு நிலமைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அரசாங்க, தனியார் துறைகளில் வேலை செய்வோரிடமும் பணம் குறைந்து வருகின்றது. இந்த ஊரடங்கு இப்படியே நீளுமானால் தனியார் துறைகளும் தமது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்திவிடலாம். காரணம் அவர்களும் வருமானமின்றி இருப்பதாகும். அதன் பின்னர் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பசியை எதிர்கொள்ள வேண்டிய நிலமைக்குத் தள்ளப்படுவார்கள்.

அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை வீடுகள்தோறும் விநியோகிக்க அனுமதித்தாலும் அவற்றை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் அளவிற்கு கைகளில் பணம் இல்லை. பணத்தை வங்கிகளில் வைத்திருந்தாலும் மீள எடுப்பதற்கு வங்கிகளும் தொடர்ச்சியாக திறந்திருப்பதில்லை. யாழ் மாவட்டத்தில் தொடர் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருப்பதால் மக்கள் செல்ல முடியாமலும் இருக்கிறது. வெளியே செல்லும் பொழுதும் மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கத் தவறுவதாலும்,புதிதாக மூவர் இனங்காணப்பட்டு இருப்பதாலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களிலும் இப்பொழுது கடைகளில் பெருமளவில் மக்கள் கூடுவதில்லை என கூறுகிறார்கள். மக்களிடத்தில் பணம் குறைந்திருப்பதை அது உணர்த்தி நிற்கிறது.

இச்சூழலில் தன்னார்வலர்கள் தாங்கள் சுயமாக சேர்த்த பணத்தை, சில புலம்பெயர் நண்பர்களின் உதவியுடன் அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இவ் உதவிகள் எல்லாத்தரப்பினருக்கும் சென்றடைகின்றதா என்பது கேள்வியே?. வேறு இடர்களின் பொழுது எமது உறவுகள் பணங்களை அதிகமாக வழங்கினார்கள். இக்காலத்தில் உதவிகளை தொடர்ச்சியாக செய்வதற்கு முடியாதுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள உறவுகளும் அவர்களின் நாடுகளும் இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வருமானம் மிகவும் இந்நிலையில் உள்ளதால் அவர்களால் எதுவும் செய்யமுடியாது உள்ளது. எனவே வழங்கப்படும் உதவிகளும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளது. 

அரசு செய்ய வேண்டிய வேலைகளை சமூக ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கும்போதும், தங்களது குடும்பம் அவர்களது பாதுகாப்பு என்பவற்றைக் கடந்து உணவுக்காக கஷ்டப்படுவோரது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் அவர்களை கொடிகாமத்தில் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோதே பொலிஸார் கைது செய்தார்கள். இதன்பின் பலர் அதிலிருந்து ஒதுங்கி இருக்க முயல்கிறார்கள்.

பணம் இல்லாததாலும், பொருட்கள் வாங்க முடியாததனாலும் மக்கள் அயல் தோட்டங்களில் உள்ள மரக்கறிகளையும் தேங்காய்களையும் திருடுவதாக செய்திகளும் பகிர்வுகளும் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை வெறுமனே செய்திகளாக பார்க்க முடியாது. இவ்வாறு தொடர்ந்தால் கிராமங்களில் இருக்கும் சிறு கடைகள், கூட்டுறவுச் சங்கங்கள் இரவு நேரங்களில் உடைத்து திருடப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகலாம். 


உலக சுகாதார நிறுவனம் சமூக இடைவெளிகளைப் பின்பற்றுமாறு கூறுகிறது. அரசு மக்களை சுயதனிமைக்குட்படுமாறு கூறுகிறது. நாம் ஏற்கனவே மனித நேயம் கருணையின்றி சமூகத்திலிருந்து விலகி நடக்க ஆரம்பித்திருக்கிறோம். எங்களிடையே தீண்டத்தகாதவர்கள், மேல், கீழ் என பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. கோவில்களும் புறம்தள்ளி நடந்தன. இப்பொழுது அருகில் இருக்கும் உறவினர் கூட தீண்டத்தகாதவராக இருக்கிறார். கோவில் திருவிழாக்கள் கூட தடைப்பட்டுப்போயின.

எந்த ஒரு இடர்காலங்களிலும் சமூக ஒருமைப்பாடு அல்லது சமூகங்கள் ஒன்றிணைதல் தான் அந்த இடரிலிருந்து மீள வருவதற்குரிய வழியாக இருக்கிறது. ஆனால் இந்த சூழல் அதற்கும் எங்களுக்கு சந்தர்ப்பத்தை வைக்கவில்லை. ஊரடங்கு இடையிடையே தளர்த்துவதாலும் தொற்றுநோய்க்குரிய அபாயம் அதிகமாகவே இருக்கிறது. இது இப்படியே நீளப் போகிறது. அது முப்பது அல்லது நாற்பது நாட்களுக்கு நீடிக்கலாம். ஊரடங்கு தொடர்ந்தால் குறுகிய காலத்தில் நோயிலிருந்து மீண்டுவிடலாம். ஆனால் இப்படியே நீண்டால், மக்கள் பசியில் இறக்கவும்நேரிடலாம்.

- தமிழ்நிலா -

படங்கள் : Kumanan
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா