வைத்தியசாலை உட்கட்டுமானமும் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் ஆளணி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. வெளிவாரி சுகாதாரத்தொழிலாளர் இருவரே இருந்தார்கள். பலத்த முயற்சியின் பின்னர் மேலும் இருவர் கிடைத்தார்கள்.
https://www.sancheyan.com/2024/08/tda-1.html பகுதி 1
ஆனால் Dr.அர்ச்சுனா விடையத்தில் கொழும்புக்கு மாறி மாறி தொலைபேசி எடுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளரோ, கொழும்புக்கு கடிதம் வாங்கச் சென்ற மாகாணப் பணிப்பாளரோ. இவர்களும் சரி இவர்களுக்கு முன் இருந்தவர்களும் சரி. அடிக்கடி சென்றிருந்தால், தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தால் இதுமாதிரியான பிரச்சனை ஓரளவேனும் தீர்த்திருக்கலாம்.
சேவை விரிவாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது?
இதே வேளை இங்கு இதுவரை இல்லாத இரத்த வங்கிக்குரிய இடமும் குருதிச் சுத்திகரிப்புப் பிரிவை விரிவாக்குவதற்காகவும் புதிய கட்டடத்தில் இரண்டு பகுதிகள் IMHO உதவியுடன் Dr குமரவேள், பசுந்தேசம் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்டன. சத்திரசிகிச்சைகளை நடத்துவதற்கு இரத்த வங்கி இன்றியமையாத ஒன்றாகும். இவ் இரத்தவங்கிக்கான தளபாடங்கள் அமைப்பிற்கு 0.5 மில்லியன் அளவிலான நிதியினை தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் செலவு செய்திருந்தது.
புதிய மின் பிறப்பாக்கி இயங்கத் தொடங்கியதும் இரத்த வங்கியை ஆரம்பிக்கவும் குருதிச் சுத்திகரிப்பு பிரிவை இடம் மாற்றவும் முடிவு செய்யப்பட்டதுடன் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் அன்பளிப்பில் மேலும் இரண்டு குருதிச் சுத்திகரிப்பு இயந்திரங்களும் கடந்த 07.06.2024 பெற்றுக் கொள்ளப்பட்டதுடன். தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் புதிய கட்டில்கள், மொனிட்டர் போன்ற உபகரணங்களை வழங்கத் தயாராகி வந்தன, அதற்கான விலைமனுக்களும் கோரப்பட்டிருந்தன.
புதிய இடத்திற்குக் குருதிச் சுத்திகரிப்பு பிரிவை மாற்றுவதற்கான முன்னாயத்தங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டிருந்தன. இவை தற்போது உள்ள ஆளணியுடன் இயங்கச் செய்யக் கூடியவை என்பதாலேயே இவற்றுக்கான நிர்மாணப்பணிகள் செய்யப்பட்டன.
இதே வேளை FairMed என்ற அமைப்பின் உதவியுடன் கைவிடப்பட்டிருந்த 10ம் விடுதி சீரமைக்கப்பட்டு physiotherapy மற்றும் பாரிசவாத நோயாளிகள் குடும்பத்துடன் தங்கி புனர்வாழ்வுச் சிகிச்சை பெறுவதற்கான அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கான மருத்துவ உபகரணங்களும் பெறப்பட்டுள்ளதுடன் ஊழியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது. பயிற்சி முடிவடைந்ததும் இவ்வலகுகள்
தற்போது உள்ள ஆளணியுடனேயே ஆரம்பிக்கப்படவிருந்தன.
TDA என்ன செய்தது?
அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி சாள்ஸ் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை உடனடியாக இயங்க வைத்தல், மனித மற்றும் பௌதிக வளங்களின் தேவைகள் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இவ்விடையங்கள் தொடர்பாகத் தான் சாதகமான முடிவுகளைத் தருவதாகவும், உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியவற்றை நடைமுறைப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அவை பயனளிக்கவில்லை. இருப்பினும் மேலதிக சுகாதாரத்தொழிலாளர் மேலும் இருவர் கிடைத்தார்கள்.
அதன்பின்னர் 01.11.2023 இல் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் S.குமாரவேள் அவர்களைச் சந்தித்து அவசர சிகிச்சைப் பிரிவை ஆரம்பிக்கத் தேவையான விடையங்கள் ஆராயப்பட்டன. அந்த வகையில் கட்டடம், உபகரணங்கள் தயார்நிலையில் இருப்பதுடன் மின்வசதி ஏற்படுத்தப்பட்டதும் ஆரம்பிக்கலாம் எனவும், மின்பிறப்பாக்கி 2024 மார்ச் மாதமளவில் கிடைக்கும் எனவும், வெளி நோயாளர் பிரிவினை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாகச் சிலரால் கேட்கப்பட்டதாகவும் கூறினார்.
அந்த வகையில் வெளி நோயாளர் பிரிவினை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சில உந்துதலால் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினர் அதனை நிராகரித்துள்ளதாகவும், அவர்களின் நோக்கமானது வழங்கப்பட்ட உபகரணங்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள சத்திர சிகிச்சைக் கூடம் இயங்குவதற்கு மட்டுமேயன்றி ஏற்கனவே ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் வெளி நோயாளர் பிரிவையோ அவசர சிகிச்சைப் பிரிவையோ புதிய கட்டடத்திற்கு மாற்றி அக் கட்டடத்தை இயங்கு நிலைக்கு கொண்டுவருவது போல் போலியாகக் காட்டுவது என்பது நோக்கமாக இருகாது எனவும் தெரிவித்தனர். தாம் ஒருபோதும் மக்களை ஏமாற்ற எவருக்கும் இடமளியோம் எனவும் தெரிவித்தனர்.

மேற்படி கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர், உடனடியாக வைத்தியசாலை சத்திர சிகிச்சைக் கூடத்தினை ஆரம்பிக்கும்படியும் அதற்கு தேவையான வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களை தை மாதம் தருவதாகவும், செயலாளர் அவசரமாகத் தேவையாக இருக்கும் மின் பிறப்பாக்கியை பெற்றுத்தருவதாகவும். அத்துடன் தேவையான ஊழியர்களின் அளவை வரும் காலங்களில் அதிகரிப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.
மேலும் ஒருவருடத்திற்கு முன்னரே சத்திர சிகிச்சைக் கூட்டத்துக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளை தென்மராட்சி அபிவிருத்திக் கழகமும் ரோட்டரி கழகமும் இணைந்து வழங்கியிருந்தமை தொடர்பில் குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவினை செயற்படுத்தல், ஆளனி அதிகரிப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இவை தொடர்பாக ஜானதிபதியின் யாழ்வருகையின் போது TDA சார்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் தருவதாகவும் வந்துகூறுமாறும் கோரியிருந்தார்.
அவ்வாறே ஜனாதிபதி வருகையின் போது தென்மராட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, 06.01.2024 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தென்மாராட்சி அபிவிருத்தி கழகத்தினர் கலந்து கொண்டனர். அதன் போது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தை இயங்கவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் 2026 வரை தமது அரசால் முடியாது என்றும் அதன் பின்னர் செய்து தருகிறேன் என கூறினார்.
தென்மாராட்சி அபிவிருத்தி கழகத்தின் பிரதிநிதிகள் 25.12.2023 அன்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர், அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடும் போது அவருக்கும், அவரூடாக சுகாதார அமைச்சருக்கும் கோரிக்கை வழங்கப்பட்டது. 06.01.2024 அன்று ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவை எவையும் கருத்திற் கொள்ளப்படவில்லை.
ஆனால் அவர்கள் தமது ஏனைய சேவைகள் மிகவும் சிரமத்துடனே செய்வதாகவும், வயதான சுகாதார தொழிலாளர்களே கடமையில் இருப்பதினால் அவர்களால் சர்க்கரை நாற்காலிகளில் கூட முதலாம் தளத்துக்கு கொண்டு செல்வது மிகுந்த கடினமாக உள்ளது எனவும். பிறந்த உடல்களைக் கூட பெண்களே மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் செல்ல வேண்டி இருப்பதாகவும், அதேபோல் சத்திர சிகிச்சை பிரிவுக்கு தனியான தாதியர்களைத் தந்தால் அப்பிரிவு தனியே இயங்கும் எனவும், யாழிலிருந்து இங்கு வரவேண்டிய வைத்தியசாலை இவ்வாறு ஆரம்பத்தில் சொன்னது போல் யாழ் வைத்தியசாலையில் இருந்து விடுவித்தால் அவர்கள் சத்திரசிகிச்சை பிரிவில் கடமையாற்றி சத்திர சிகிச்சைகளை திறம்பட மேற்கொள்வார்கள் எனவும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தான் விமர்சனங்கள் வெளிவராதெனவும். அதற்குரிய ஏற்பாடுகளை வைத்தியசாலைக்கு மேல் அதிகமாக TDAயினரை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
அம் முயற்சி இன்னமும் நடைமுறைப்படுத்தாததனால், வேறு வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களை கிழமையில் ஒரு நாளிலோ அல்லது மாதங்களில் இரண்டு தடவையோ இங்கு வந்து சத்ர சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு கேட்பதற்காக வைத்திய நிபுணர் பிரேமகிருஷ்ணா அவர்களையும் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜெயந்தன் அவர்களையும் நள்ளிரவு தாண்டியும் அவர்களின் வீட்டில் சந்தித்து அதற்குரிய அனுமதியைப் பெற்று, அவர்களின் வேண்டுகோளின் படி வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கிளினிக்கை ஆரம்பிக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. அது ஜூன் 22 அன்று ஆரம்பிப்பதாக அப்போதைய வைத்திய அத்தி அச்சகர் வைத்தியர் எஸ் குமாரவேல் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அக்காலத்தில் திடீரென ஏற்பட்ட சில அசம்பாவிதங்களால் அவை மேற்கொண்டு தொடரப்படவில்லை.
சத்திர சிகிச்சைக் கிளினிக்கை நடத்தி அதன் மூலம் நோயாளர்களை தெரிவு செய்து கிழமையில் ஒரு நாள் சத்திர சிகிச்சைகளை செய்வதற்காகச் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எஸ் ரவிராஜ், மற்றும் ஜெயந்தன் ஆகியோர் தயாராக இருந்தனர்.
எனவே இப் போராட்டத்தின் பின்னர்தான் சத்ர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது மிகவும் தவறானது. உண்மையில் இப்போ போராட்டங்களால் இரண்டு மாதங்கள் தாமதமாக ஆரம்பித்தது என்பதே உண்மையாகும்.
அக்காலத்தில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோ ரஜீவ் நியமிக்கப்பட்டார்.
பின்னர் என்ன நடந்தது...?
இத்தை சர்ச்சைகளின் பின்னும் 21/07/2024 ஞாயிற்றுக்கிழமை Dr Lal Panapitiya (The Deputy Director General of Sri Lanka Health Service) அவர்களிற்கும், ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழகத் தலைவர் Dr ஆ.புவிநாதன் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, சேவைகளின் தாமதத்தால் தென்மராட்சி மக்கள் அடையும் இன்னல்கள், சுகாதார சேவைகள் மீது தென்மராட்சி மக்கள் கொண்டுள்ள அதிருப்தி, இந்த சேவையின் அவசியம் அவசரம் மீளவும் தெளிவுபடுத்தப்பட்டு சத்திரசிகிச்சை நிலையத்தை இயங்க வைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அங்கஜன் இராமனாதன் அவர்களினால் மின்பிறப்பாக்கி இரண்டு வருடங்களாகத் திருத்தப்படவில்லை. தான் நேரில் சென்று கூறியும் அசமந்தமாக உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அவை இயங்கியவண்ணமே இருந்தது. பின்னர் அவருக்கு இது வேறு பிரிவுக்குரிய மின்பிறப்பாக்கியின் தேவை என விவரிக்கப்பட்டது .
அதன் பின்னர் வைத்தியசாலையின் தற்காலிகத் தேவைக்காகப் பாராளுமன்ற உறுப்பினரால் மின்பிறப்பாக்கி ஒன்று தருவிக்கப்பட்டது. அதற்கான எரிபொருளை வைத்தியசாலையும், நாளுக்கான வாடகையைப் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் செலுத்துவதாக உடன்பட்டிருந்தனர்.
வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் அவர்களினால் 13.11.2023 வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தின் பிரகாரம், 1955/06ம் இலக்க 2016.02.23 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிவிசேட வர்த்தகமானிப் பத்திரிக்கை மூலம் வெளியிடப்பட்ட வடக்கு மாகாண சுகாதார நியதிச் சட்டத்தின் 12ம் பிரிவுக்கு அமைவாக ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவானது 18.03.2024 தொடக்கம் இரண்டு வருட காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டது. (நோயாளர் நலன்புரிச் சங்கம் வேறு நிர்வாக அலகைக் கொண்டது)
இவ்வாறான நியமனம் சுகாதார அமைச்சின் செயலாளரால் செய்யப்பட்டு உறுப்பினர்களுக்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கூட்டம் கூட்டப்படவில்லை அத்துடன் இப்பொழுது புதிதாக ஒரு அபிவிருத்திக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு அரசியல்கட்சி இருந்ததாகப் பேசப்பட்டாலும் பின்னர், தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் வர்த்தகமானி , நியமனங்கள் தொடர்பாக விவரிக்கப்பட்டு , அரச நியமனத்தின்படி அதன் உறுப்பினர்களை மாற்றியமைக்கக் கோரியிருந்தார்கள். அதன் அடிப்படையில் அதனை வழிநடத்திய கெளரவ அமைச்சர் மாற்றி அமைக்க உடன்பட்டிருந்தனர்.
இது இவ்வாறு நகர்கையில் மீண்டும் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கிளினிக் 11.09.2024 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் Dr.ரவிராஜ் அவர்களின் பங்கேற்புடன் மேற்படி சத்திரசிகிச்சை கிளினிக் பிரதி திங்கட் கிழமை தோறும் நடைபெறும்.
புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடம் 27.09.2024 முதல் இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரவிராஜ் அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவும், புதிதாகப் பொறுப்பேற்ற மகப்பேற்று நிபுணர் சிறீசுபாஸ்கரன் அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர். 2 கேர்னியாவிற்கான சத்திர சிகிச்சை, 2 சீசேரியன் சத்திரசிகிச்சை மற்றும் 4 சிறு சத்திர சிகிச்சைகள் அன்றையதினம் நடைபெற்றன.
சத்திரசிகிச்சைக்கூடத்திற்கு சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டபின் வழங்குவதாக உறுதியளித்தபடி வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க சத்திரசிகிச்சைக்கூட தளபாடங்கள் வழங்கப்பட்டன. இதன் மொத்தப்பெறுமது 1.99 மில்லியன் ரூபாய்கள் ஆகும். அதேபோன்று சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் S.ரவிராஜ் அவர்களின் வேண்டுகைக்கு அமைவாக, தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் ஊடாக CHAVA’99 அமைப்பினரால் சத்திர சிகிச்சை உபகரணங்கள் 18.11.2024 அன்று சம்பிரதாய பூர்வமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இதன் பெறுமதி 0.4 மில்லியன்கள் ஆகும்.
மேலும் தற்போது சத்திரசிகிச்சை நிபுணர், மகப்பேற்று வைத்திய நிபுணர் மற்றும் மயக்க மருந்து வைத்தியர் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளனர். இது எமது முயற்சிக்கு பெரும் வெற்றியாகும். 01.11.2024 முதல் 24.11.2024 வரை 22 மகப்பேறுகள் இடம்பெற்றுள்ளன. இது எதிர்காலத்தில் இன்னும் சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. தற்போது யாழ் வைத்தியசாலைக்கு மாற்றும் வீதம் குறைவடைந்துள்ளது.
https://www.sancheyan.com/2024/08/tda-1.html பகுதி 1
அன்புடன் தமிழ்நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா