யாழ்ப்பாணம் ஒரு வறண்ட அல்லது அரை வறண்ட காலநிலையை உடைய பகுதி ஆகும், இங்கு நிரந்தரமான ஆறுகள் அல்லது பெரிய நீர்நிலைகள் இல்லை. இதனால், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை திறம்பட சேமித்து பயன்படுத்துவது இப்பகுதியின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமாகிறது. எம் முன்னோர் நீர் முகாமைத்துவத்தில் சிறந்தவர்களாக காணப்பட்டார்கள். இப்போது அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது இந்தச் சூழலில் வெளிகள் இயற்கையான நீர்த்தேக்க அமைப்புகளாகச் செயல்பட்டு, மழைநீரை சேகரித்து, மெதுவாக நிலத்திற்குள் ஊடுருவச் செய்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகின்றன.
தென்மராட்சிப் பகுதியில் உதாரணமாக நாவற்குழி வெளி, அறுகுவெளி, தனங்களப்பு, கைதடி வெளி, சரசாலை குருவிக்காடு, ஒட்டுவெளி மிருசுவில், எருவன் வயல்வெளி, மட்டுவில் ஊடாக புத்தூர் செல்லும் வீதியின் இரு பகுதிகளும், மற்றும் செம்மணிவெளி போன்றவையும், வடமராட்சிப் பகுதியில் உள்ள தொண்டமனாறு பகுதிகள், கப்பூதுவெளி, முள்ளிவெளி, யாக்கரு, வல்லைவெளியும், அத்தோடு வல்லிபுரம், நாகர்கோவில், குடத்தனை வெளி மற்றும் மருதங்கேணி சுற்றுவட்ட வெளிகள், இதேபோன்று வலிகாமப் பகுதியில் உள்ள வட்டுக்கோட்டை நவாலி, அராலி பகுதிகள், மற்றும் வலிகாமம் பகுதிகளில் செறிந்துள்ள பல வயல் வெளிகள் மற்றும் மண்டதீவு, அல்லைப்பிட்டி போன்ற கண்டல் தாவரங்கள் செறிந்து வாழும் வெளிகளாகவும் காணப்படுகின்றன.
இவை மழைக்காலங்களில் பெரிய அளவில் நீர் தேங்கும் பகுதிகளாக மாறுகின்றன. இவை சுற்றுப்புற உயர்ந்த நிலங்களிலிருந்து வரும் மழைநீரை சேகரித்து, அந்த நீரை தற்காலிகமாகக் சேமிக்கின்றன. வெளிகள் இல்லாத சூழலில், இந்த நீர் குடியிருப்பு பகுதிகள், வீதிகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வெளிகளில் தேங்கியுள்ள நீர் உடனடியாக வெளியேறாமல், மெதுவாக மண்ணுக்குள் ஊடுருவுகிறது. இந்த ஊடுருவல் செயல்முறை நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், நீரை இயற்கையாக வடிகட்டி சுத்தப்படுத்துவதற்கும் உதவுகிறது. இதனால் கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர்நிலைகள் நீண்டகாலம் நீர் நிறைந்ததாக இருக்கும்.
நாம் இப்போது நகரமயமாக்கலின் தாக்கத்திற்குள்ளாகியுள்ள போதிலும், அவை இன்றும் முக்கியமான நீரியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன என்பது இன்னமும் கண்கூடே. இவ்வாறு யாழ்ப்பாணம் முழுவதும் வெளிகள் பரவலாகக் காணப்படுவதால், அவை ஒரு இணைந்த நீரியல் வலையமைப்பாகச் செயல்படுகின்றன.
கடலருகே அமைந்துள்ளதனாலும், களப்புகளுடன் தொடர்பில் இருப்பதனாலும் உப்பு நீர் மற்றும் நன்னீர் கலந்த தனித்துவமான ஈரநிலச் சூழலை சில வெளிகள் உருவாக்குகின்றன.
இங்கு வயல்வெளிகளுக்கு அப்பால் பல இடங்களில் ஈரநிலங்களாகவும் (wetlands) சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன. ஈரநிலங்கள் என்பது நீர் நிரம்பிய அல்லது மண் தொடர்ந்து ஈரமாக இருக்கும் சூழலைக் குறிக்கும். இவ்வகையான நிலப்பகுதிகள் உயர் உயிரியல் பல்வகைமையை உடையவை. குடிவரவு பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், தவளைகள், மீன்கள், நுண் உயிரிகள் மற்றும் பல்வேறு தாவர இனங்கள் இவ்விடங்களில் வாழ்கின்றன. இதமான வெப்பம், மற்றும் உவப்பான உப்பின் அளவு காணப்படுவதால், இவை இரால், நண்டு, மீன்களின் இனம்பெருகும் பகுதிகளாக உள்ளன. ஆழ்கடல் பெருமீன்களின் உண்வுச்சங்கிலி ஆரம்பிக்கிம் இடங்களாக இவ் ஈர நிலங்கள் காணப்படுகின்றன. இவை ஒருங்கிணைந்த ஒரு நுண்ணிய “blue carbon ecosystem” ஆகும். இந்த இயற்கை அமைப்புகள் அதிக அளவில் கார்பனை சேமித்து, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், கண்டல் காடுகள் கடற்கரை பகுதிகளை புயல், அலை மற்றும் கடலரிப்பு போன்ற இயற்கை அபாயங்களிலிருந்து பாதுகாக்கின்றன.
வெளிகளாகக் காணப்படும் ஈரநிலங்கள் மூன்று முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. Fresh Water ஈரநிலங்கள், நன்நீர்வகையில் நதிகள் மற்றும் ஓடைகள், வெள்ளப்பரப்புகள், நன்நீர் நிலைகள் (freshwater marshes) அடங்கும். இரண்டாவதாக, உப்புநீர் (Coastal and marine wetlands) வகையில் கடல் புல்வெளிகள் (sea grass beds), கண்டல் காடுகள் (mangroves), உப்பு ஈரநிலைகள் (salt marshes), மற்றும் வாய்க்கால்கள் (estuaries) இடம்பெறுகின்றன. மூன்றாவதாக, மனிதனால் உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் (Man-made wetlands) வகையில் நீர்சக்தி நீர்த்தேக்கங்கள் (hydropower reservoirs), நீர்ப்பாசன குளங்கள் (irrigation tanks) போன்றன அடங்குகின்றன.
| குருவிக்காடு, படம் : Sanjay Nanthakumar |
| நாவற்குழி ஈரநிலங்கள், படம் : Sanjay Nanthakumar |
மழைக்காலங்களில் வயல் வெளிகளில் சேமிக்கப்பட்ட நீர் விவசாயத்திற்கு உதவுகிறது. சில வெளிகளில் தற்காலிகமாக மீன்பிடி நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. வறண்ட காலங்களில் இவை புல்வெளிகளாக மாறி, மாட்டு மேய்ச்சலுக்குப் பயன்படுகின்றன. மேலும் பறவைகள் வருகை தரும் இடங்களாக இருப்பதால், சுற்றுலா வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இவ்வாறு வெளிகள் பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையை ஆதரிக்கின்றன.
எனினும், சமீபகாலங்களில் வெளிகள் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. நகரமயமாக்கல் மற்றும் திட்டமிடாத அபிவிருத்தி காரணமாக வெளிகள் நிலம் நிரப்பப்படுதல் மூலம் வீடமைப்பு நிலங்களாக மாற்றப்படுகின்றன. பல இடங்களில் சட்டவிரோதமாக மண் மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொண்டு வெளிகள் நிரப்பப்படுகின்றன. இதனால் அவற்றின் இயற்கை நீர்த்தேக்க திறன் குறைகிறது. மேலும் வீதிகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுவதால் இயற்கை நீரேற்ற பாதைகள் மறைக்கப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் நீர் சீராகப் பாய முடியாமல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
| சாவகச்சேரி ஈரநிலப்பகுதிகள், படம் : Sanjay Nanthakumar |
ஈரநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். இவ்வாறு ஒருமுறை அழிக்கப்பட்ட ஈரநிலங்களை மீண்டும் இயற்கை நிலைக்கு கொண்டுவருவது மிகவும் கடினமாகிறது.
பல்லுயிர்களின் மீளமுடியாத இழப்பு, கடலோரச் சூழல் அமைப்புகளின் சீர்குலைவு மற்றும் சுற்றுச்சூழல் சட்ட மீறல் ஆகியவற்றை உள்கட்டமைப்பு அல்லது அபிவிருத்தி என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.
நாவற்குழி/செம்மணி வெளி, வல்லைவெளி போன்ற பகுதிகள் இவ்வாறான மாற்றங்களின் உதாரணங்களாகும். இவை முக்கியமான வெளிகளாக, ஒரு முக்கிய ஈரநிலங்களாக இருந்த போதிலும், தற்போது நில ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளால் அதன் பரப்பளவு குறைந்து வருகிறது. மண்டைதீவு வெளி உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், மனித செயல்பாடுகள் அதிகரிப்பால் அதன் இயற்கை அமைப்பு பாதிக்கப்படுகிறது.
| முன்மொழியப்பட்ட தலம் படம் : Sanjay Nanthakumar |
இந்த எளிதில் பாதிப்படையக்கூடிய ஈரநிலங்கள், வெளிகள், சட்டப்படி பாதுகாக்கப்பட்ட, அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, மகத்தான சூழலியல் மதிப்புள்ள ஒரு வாழ்விடமாகும். வெளிகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் தீவிரமானவை. வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு, நிலத்தடி நீர்மட்ட குறைவு, உப்பு நீர் நுழைவு, உயிரியல் பல்வகைமை இழப்பு மற்றும் உள்ளூர் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. இதனால் மனித வாழ்க்கையும், பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, வெளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஈரநிலங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சமூக மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, உள்ளூர் மக்களை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். அறிவியல் ஆய்வுகள் மூலம் வெளிகளின் நிலை கண்காணிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சேதமடைந்த வெளிகளை மீளமைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நில பயன்பாட்டு திட்டமிடலில் வெளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் ஒரு அளவேனும் மீட்கப்படலாம்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா