Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


மேகம் உருகி
சொட்டு சொட்டாய்
சிந்திக்கொண்டிருக்கிறது...
இலைகளிலும்
புல்லின் நுனிகளிலும்
சிம்மசனமிட்டிருகின்றன
உருகிய துளிகள்..
வானம் வெளிச்சத்தை உண்டு
தன்னை மறைத்திருந்தது...
நிலவும் உறங்கிவிட்ட இரவு..

இருப்பினும்
கைகளில் கேள்விகள்...
அவர்கள் எங்கே  போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...

கால்களை கூளாம்கற்கள்
கிழித்துக் கொண்டிருந்தன..
இன்னமும் ஆறிப்போகாத
சூடு மண்ணில் தெரிந்தது..
நாய்கள் எதையோ
இழுத்துக்கொண்டிருந்தன..
சருகளில் பாம்புகள்
சரசரத்துக் கொண்டிருந்தன..
எங்கோ கழுகுகள்
சிறகடிக்கும் சத்தம்..

ஒரு பெரிய மயான வெளியில்
மூங்கில்கள் தாமாகவே
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
ஆனால் அத்தனையும்
நிசப்தமாய் இருந்தது...
எதுவுமே நடக்காதது போல்....

தமிழ்நிலா

கடல்
பூமியின் அழகு...
அழிந்து போகாத
தண்ணீர்க் காடு..
நிலம் அங்கம் மறைக்க
போர்த்தியிருக்கும் நீல ஆடை..
சூரியனையே உண்ணும்
அழகு இராட்சதன்..
நிலவு முகம் பார்க்கும்
திரவ கண்ணாடி...

அலையும் காற்றும் உறங்கும்
முதலிரவு மெத்தை...
நேற்று பிறந்த குழந்தை கடல்
அழுது கொண்டே இருக்கிறது....

கடல் எனக்கானது..
என் மூதாதையரின் தாய்...
நாங்கள் நடந்து வந்த
ஒற்றையடிப் பாதை...

வரலாறுகளை தின்று
முடித்திருந்த கடலின்
கரையின் மணலில்
நண்டுகள் கிறுக்கிய கவிதைகளை
ரசித்துக்கொண்டு நின்றேன்...

என்ன ஆச்சரியம்...
நீர் மூழ்கி கப்பல்களை
கொள்ளையடிப்பதர்ற்கு
தயாராக நின்றது வள்ளங்கள்...

வள்ளங்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தன
அலைகள்...
அலைகளின் ஊடு
வலைகள் கடந்திருந்தது..

மீனவர்கள் கொள்ளைக்கார்களாம்...
முதல் முறை அலை வந்து
வருடி போயிற்று..
வருந்திக்கொண்டேன்...

கடல் கொலைகாரன் என்றான் மனிதன்..
கடிந்து கொண்டேன் அலையை...
பாய்ந்து என் கால்களுக்கு அடியில்
மண்ணைக் கரைத்து
விழ வைக்க முயன்று
தோற்று போகிறது அலை...

தமிழ்நிலா


எனக்கும் என் தோழி உனக்கும்
இடையில் ஒரு காதலிருந்தது..
காதல் என்றால்..??

யுகங்கள் தவமிருக்கும் ஞானிக்கு
காட்சி தரும் தேவதையாய் நீ 
பிறவிக் குருடனுக்கு கிடைத்த
ஒரு நிமிட பார்வை போல
எப்படியோ நீ ..

பாலைவன மணல் மீது விழும்
சிறு தூறல் போல உன் அன்பு
தெரியாமலே வீசியிருந்தது...
தொடர் தோல்விக்குப் பின் பெறும்
முதல் வெற்றி உன் பாசம்
தெரியாமலே கிடைத்திருந்தது...

கனவுகளை 
திருடிக்கொண்டிருந்த தனிமையின்
கற்பனைகளை
திருடிக்கொண்டிருந்தது கவிதை....

வார்த்தைகள் உரசிக்கொள்ளும் இரவின்
கவிதைகளில் இருந்து பிறக்கிறது
உனக்கும் எனக்குமான நட்பு...

இருட்டை உடைத்து
உனக்கும் எனக்கும்
ஒரு நட்பினை செய்தேன்..

நானும் நீயும் நட்பு செய்தோம்...
நட்பும் நட்பும் காதல் செய்தது....

காதல் போன தெருவில்
நீயும் நானும் கைவீசி நடந்தோம்...
தெருவில்போகும் யாரையும் கண்டு
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..
ஏனெனில்

உன் நட்பை
என் நட்பு காதல் செய்தது
அது தான் உண்மை....
அது மட்டும் தான் உண்மை...

பார்வைகள் கூட தொட்டுவிடாத
தூரத்தில் தான் நீ...
காதல் திரையினை விலக்கியே
தோழி உன்னை பார்த்தேன்...
என் வாழ்வின் இறந்தகாலத்தின்
வசந்த காலம் நீ...

உன் நினைவுகளைத் தின்று
பசியாறுகிறது என் கவிதைகள்..
என் கண்நீரைக்குடித்து 
தாகம் தீர்க்கிறது காலம்...

அதே புன்னகையுடனும்,
நலமா? என்ற கேள்வியுடனும்
நேற்றும் தோன்றி மறைந்தது
உனக்கும்
எனக்குமிடையில் இருந்து
தொலைந்து போன எம் நட்பு...

தமிழ்நிலா

கடலும், வெளியும்
எல்லைகளாய் கொண்ட
பறவையுடன் நட்பு கிடைத்தது..

இறக்கைகள் அழகு என்றார்கள்
ஆனால் கம்பீரமாக இருந்தது..
இரவு பகல் பறந்தும்
களைக்கவில்லை..
புயல்களில் அடிபட்டும்
வீழவில்லை...

மனதினை ஒருநிலைப்படுத்த
கற்றுத்தந்ததே இது தான்...

கால்கள் மென்மை என்றார்கள்
ஆனால் உறுதியாக இருந்தது...
மலைகளிலும் மரங்களிலும்
எப்படி லாபகமாக பற்றிகொள்ளும்..

என் கால்களை உறுதியாக்க
இதனிடம் இருந்து தான்
கற்றுக்கொண்டேன்...

சுள்ளிகளால் சின்ன தாஜ்மஹால்கள்
அலகினால் கட்டிக்கொள்ளும்...
உதடுகளால்
எம்மால் என்ன செய்ய முடியும்
அது தானே...

ஒரு சிறகு முளைத்த பறவை
என் செல்லப்பிராணி ஆனது..
பெயர் தெரியாத அப்பறவையின்
ஒவ்வொரு செயலும் பிடித்திருந்தது..

தனது வட்டங்களை பெரிதாத கொண்டது..
அதனால் பிடித்திருந்தது..
இயற்கையின் வேறுபட்ட ஓவியம்..
அதனால் பிடித்திருந்தது..
மேல் எழும் திடீர் என்று
மடிமீது அமரும்..
அதனால் பிடித்திருந்தது..
வெற்று வானை
எப்படியோ நிரப்பி விடுகிறது...
அதனால் பிடித்திருந்தது..

கூட்டில் இருந்த பறவையை
வீட்டில் வைத்த மகிழ்ச்சி.. எனக்கு
வீட்டில் இருந்த தன்னை
கூட்டில் வைத்ததாக மகளிடம்
புலம்பிக்கொண்டிருந்தது பறவை...

தமிழ்நிலா

மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்துகொண்டிருக்கிறது...

பறப்பவை ஊர்ந்தும்
ஊர்வவை நடந்தும்...
நடப்பவை பாய்ந்தும்
பாய்பவை  நீந்தியும்
நீந்துபவை பறந்தும்
இயங்கிக் கொண்டிருந்தன....

அத்தனையும் பூச்சியம்
ஆகும் முதல்
இரண்டாம் உலகம் நோக்கி...

புற்கள்
கிளை விட்டுக்கொண்டிருந்தன...
மரங்கள்
படர்ந்துகொண்டிருந்தன...
கொடிகள்
புணர்ந்துகொண்டிருந்தன...

மரண வாசம் மட்டும் நிரம்பிய
காற்றை சுவாசித்தவாறு

மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்திருந்தது...


தமிழ்நிலா

கனவை தேடி
அலைந்து கொண்டிருந்தாள்
ஒரு தேவதை...

தெருவின் ஓரத்தில்..
பருவத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது..

ஒற்றை மர நிழலில்..
பாசத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

மணல் திட்டுக்களில்...
பாதியில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...
எதுவுமே அளவுடையது இல்லை...

கடல் தாண்டும் கனவு
துளிர்த்திருந்தது....
ஆனால்
கனவுடன் கடல்
விளையாடிக்கொண்டிருந்தது...

கடலின் அலைகளுக்கிடையில்
கனவுகள்
தத்தளித்துகொண்டிருப்பது தெரிந்தும்,
அவளது கனவு
நீந்தி போக நினைத்திருக்ககூடும்..

கடலின் கரையில்...
பயணத்தில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

இதுவாக இருக்கலாம்..
உதவி கேக்கவும்
இந்த பாதையில் ஒருவரும் இல்லை...

கனவினை அழைத்துப்பார்த்தாள்
எழுந்து வருவதாய் இல்லை...
கனவினை அழைத்துப்பார்த்தாள்
திரும்பி வருவதாய் இல்லை..

கலைந்து போன(அவ)வளின் கனவு
காணாமல் போயிருந்தது...

தமிழ்நிலா

கடல் தாண்டிய பயணத்தில் உயிரை பிரிந்தவர்களுக்காக.
கடல் தாண்டி வாழ்வை இழந்தவர்களுக்காக 
தூக்கம் விற்று சம்பாதிப்பவர்களுக்காக...
இதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...



கோவில் வாசலில்
சிந்தி கிடக்கும் பூக்களை போல
கல்லூரி வாசலில் நட்புகள்

ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் பச்சைப் புற்கள்
எப்படி முளைத்திருக்கும்...

புல் நுனியில்
அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பனித்துளிதான்
எம் நட்பு...

உன்னை நானும்
என்னை நீயும்
முதல் முறை
பார்த்துக் கொண்டோம்..
அப்போது தான்
பூத்திருக்கவேண்டும்
இந்த நட்பு....

மழையும் வெயிலும்
சந்தித்தால் வானவில்...
நானும் நீயும்
சந்தித்ததால் நட்பு..

பாலர்வகுப்பில்
ஒற்றை ஊஞ்சலுக்காய்
அடிபட்டுக்கொண்டோம்,
திடீரென விலகினாய் அப்போதே
முழுமை அடைந்துவிட்டது
எம்  நட்பு

அற்ப விசயங்களுக்கும்
சண்டை பிடித்தோம்...
நட்பு பலமடைந்தது...

அதிக விசயங்களுக்கு
சண்டை பிடிக்காதிருந்தோம்
நட்பு இன்னும் பலமடைந்தது...

போட்டி போட்டு
பொய் சொல்லியிருக்கிறோம்
உன்னை நானும்
என்னை நீயும்
காப்பாற்றிக்கொள்ள...

பொய்களை காப்பாற்ற
எத்தனை கதைகள்
நீ சொல்லியிருக்கிறாய்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..
என் கற்பனைகளின் நாயகன் நீ...

அப்பாவின் திட்டுக்களை விட
உனது மௌனம் அர்த்தமானது...

அம்மாபோல் என்மேல்
அதிக அக்கறை கொண்டவன் நீ ...

நட்பை தவிர  அத்தனையும்
கடனாய் பெற்றது தான்
உன்னிடமிருந்து...

உன்னிடம் நான் மறைத்தது
என் அந்தரங்கங்கள் மட்டும் தான்..

என்னோடு
பேசுவது மட்டும் இல்லை
எனக்காக
பேசுவதும் நீ தான்...

பெயர்கள் சேகரித்துக்கொண்டு
திரிந்த அந்த முதல் நாள்...

உன்னை நானும்
என்னை நீயும்..
புகைப்படம் எடுத்த
அந்த முழு நாள்..

கையில்
நினைவுக் குறிப்பேட்டுடன்
அலைந்த இறுதிநாள்...
உனக்கான  இறுதிக் கவிதை..
இப்போதும் இசைக்கின்றது...

ஏதோ அனுபிக்கொண்டிருந்தோம்
கடதாசியிலாவது ராக்கெட்கள்..

ஏதோ கட்டிகொண்டிருந்தோம்
மட்டையிலாவது கப்பல்கள்...

வகுப்பில் படித்ததை விட
உன்னிடம் படித்தது அதிகம்...
இருளிலும் மின்னியவன் நீ...

நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்...
மதங்கள் நட்பானது...
ஜாதிகள் நட்பானது...

உனது காதலுக்காய்
துது போன அந்த நாட்கள்...
என் காதலியிடம் உனக்காய்
துது போன அந்த நாட்கள்...
அத்தனையும் அழகு தான்...

கல்லுரி சுவர்க்கம்
சந்தோசத்தின் மறு வடிவம்...

ஒற்றை குழாயில்
குளித்திருக்கிறோம்...
எம்மோடு குளித்தது நட்பு...

ஒரே தட்டில்
உண்டிருப் போம்...
எம்மோடு உண்டது நட்பு...

ஒரே அறையில்
உறங்கியிருக்கிறோம்...
எம்மோடு உறங்கிது நட்பு...

ஆடை மாற்றி
உடுத்தியிருக்கிறோம்...
எம்மை சுற்றியிருப்பது
இப்போதும் நட்பு....

வானம் அழகாக இருப்பது
வெளிச்சத்தில் மட்டும் அல்ல
இரவுகளில் நிலாவினால்...
பகலில் சூரியனால்...

வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்திலும் உன்னால்....

தோல்வியே உனக்கில்லை
நீ இருக்கிறேன் என்றாய்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் பிறந்தேன்..

தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...

இன்று
விழாக்களில் உன்னைக்காண்கிறேன்...
தெருக்களில் உன்னைக்காண்கிறேன்...
முற்றிலுமாய் மாறி இருந்தாய்..

நட்புக்கு மரணம் இல்லை
நட்பு என் சுவாசமாகிவிட்டதால்...

இருந்தும் 

காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம்...


தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home