Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகள் : பாரம்பரிய கட்டிடக்கலை

Leave a Comment

பண்டைய யாழ்ப்பாணம் என நினைத்தவுடன் பசுமையான வயல்கள், தென்னை மரங்கள், மழை, நீர்நிலைகள் மட்டுமல்லாமல், மழையையும் வெப்பத்தையும் இயற்கையாக எதிர்கொள்ளும் அழகிய பாரம்பரிய வீடுகளும் நினைவுக்கு வருகின்றன. முன்னர் சமூகத்தில் பெரிய குடும்பங்கள் ஒரே வீட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்தன. அவர்களுக்கான அறைகள் அதிகம் தேவைப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அறைகள் இருந்தாலும், வீட்டின் மையப்பகுதிகள் அனைவருக்கும் பொதுவானவையாக இருந்தன.

தற்போது புதிய கட்டுமானங்கள் நவீனமயமாக வந்தாலும், யாழ்ப்பாணத்தின் பாரம்பரியக் கட்டிடக்கலை என்பது வேறும் சுவர்களையும் கூரையையும் கொண்டு அமைந்த்தல்ல. குடும்பம், இயற்கை, காலநிலை, கைவினை, சமூக வாழ்க்கை மற்றும் பாரம்பரியம் ஆகிய அனைத்தையும் ஒரே கட்டிடத்தில் இணைத்த ஒரு வாழ்வியல் முறையாகும். 

அந்த மரபில் தனித்துவமான இடத்தைப் பெறுவது “நாற்சார் வீடு” (Natsar / Courtyard House) ஆகும். கட்டிடவியல் ஆய்வுகளில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வீடுகள் பொதுவாக கிராமிய வீடுகள் மற்றும் மைய முற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய courtyard அல்லது Natsar வீடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு “நாற்சார்” என்பதை மைய முற்றத்தைச் சுற்றி பல கட்டிடப் பகுதிகள் அல்லது அறைத் தொகுதிகள் அமைந்த வீட்டு வடிவம் என்று புரிந்துகொள்வது பொருத்தமானது. நான்கு பக்கங்களிலும் அமைந்த நான்கு கட்டிடப் பகுதிகளை மையத்தில் உள்ள திறந்த முற்றத்தைச் சுற்றி இணைத்த அமைப்பைக் குறிக்கிறது. அதன் மையத்தில் இருக்கும் நடுமுற்றம் (Nadumuttam) தான் இந்த வீட்டின் உயிராகக் கருதப்படுகிறது. கேரளத்தில் ”நாலுக்கெட்டு” என்ற பெயர் பாவனையில் உள்ளது.


ஒரு வழக்கமான பாரம்பரிய நாற்சார் வீட்டை எளிமைப்படுத்தி பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்:இது ஒரு கருத்தியல் வரைபடம் மட்டுமே; 

பாரம்பரிய நாற்சார் வீடு பொதுவாக நீள்சதுர வடிவில் அமைந்திருக்கும். அதன் நான்கு பக்கங்களிலும் தனித்தனி பகுதிகள் அமைக்கப்பட்டு, அவை மைய முற்றத்தைச் சுற்றி ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த நான்கு பகுதிகளுக்கும் பாரம்பரியமாக திசைகளை அடிப்படையாகக் கொண்டு உள்நோக்கி சரிந்திருக்கும். இந்த நான்கு பகுதிகளுக்கு நடுவில் அமைந்திருப்பதே நடுமுற்றம். வீட்டு அளவு, அறைகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு குடும்பத்தின் சமூக, பொருளாதார நிலை மற்றும் காலகட்டத்தைப் பொறுத்து மாறுபட்டன. தாத்தா, பாட்டி, பெற்றோர், அவர்களுடைய பிள்ளைகள், திருமணமான பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என பல தலைமுறைகள் ஒரே வளாகத்துக்குள் வாழக்கூடிய வகையில் இந்த வீடுகள் உருவாக்கப்பட்டன

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பாரம்பரிய வீடுகள் பல நூற்றாண்டுகளாக உருவாகிய உள்ளூர் கட்டிட அறிவின் விளைவாகும். அவை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கட்டிடப் பாணியாக மட்டும் உருவாகவில்லை. தமிழர் குடும்ப அமைப்பு, தென்னிந்தியா, கேரளத்துடனான வர்த்தக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள், யாழ்ப்பாணத்தின் வறண்ட வெப்பமண்டல காலநிலை, உள்ளூர் சுண்ணாம்புக்கல் வளம் மற்றும் பின்னர் வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற காலனித்துவ தாக்கங்கள் ஆகியவை வீட்டின் வடிவமைப்பை வெவ்வேறு காலங்களில் மாற்றியமைத்தன.

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வீட்டு வடிவங்களில் “நடை” (Nadai), “திண்ணை” (Thinnai), “முற்றம்” (Muttam),  கூரை வடிவங்கள் போன்றவை முக்கிய அடையாளங்களாக ஆய்வுகளில் குறிப்பிடப்படுகின்றன. 
இதன் அடிப்படை வடிவம் மிகவும் எளிமையான ஒரு குடியிருப்பிலிருந்து வளர்ந்திருக்கவேண்டும். ஒரு அறை கொண்ட வீடு, அதனைச் சுற்றிய பயன்பாட்டு இடங்கள், பின்னர் கூடுதல் அறைகள், முற்றம், சமையலறை மற்றும் பிற துணை அமைப்புகள் சேர்க்கப்பட்டு பெரிய குடும்ப வீடுகளாக வளர்ந்திருக்கலாம். 


நாற்சார் வீடுகள் அனைத்தும் இதே திட்டத்தில் இருந்தன என்று கருதக்கூடாது. வீடுகளின் அளவு, குடும்பத் தேவைகள் மற்றும் காலகட்டத்தைப் பொறுத்து அமைப்பு மாறுபட்டது.

முன்வாசல்

பாரம்பரிய யாழ்ப்பாண வீட்டில் தெருவிலிருந்து வீட்டிற்குள் நேரடியாகச் செல்லாமல், ஒரு தொடர்ச்சியான இடைநிலை அமைப்பு காணப்பட்டது.தெருவிலிருந்து வீட்டிற்குச் செல்லும் பாதை, வாசல், முன்திண்ணை, நடை மற்றும் பின்னர் உள் முற்றம் என ஒரு அமைப்பு காணப்பட்டது. இது கட்டிட ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் முக்கியமானது.

வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் குடும்பத்தின் தனிப்பட்ட உள் பகுதிக்குள் உடனடியாக நுழைய வேண்டியதில்லை. விருந்தினர்களை முன்திண்ணை அல்லது முன்வராந்தாவில் அமர வைத்து உரையாடும் நடைமுறை இருந்தது. வர்க்க வேறுபாடுகள் காணப்பட்ட அந்தக்காலத்தில் திண்ணை முறை மிகவும் அதிகமாக இருந்தது. 

திண்ணை என்பது யாழ்ப்பாண பாரம்பரிய வீட்டு கட்டிடக்கலையின் முக்கியமான அடையாளம் எனலாம். முன் சுவரின் இருபுறங்களிலும் உயர்த்தப்பட்ட தளங்களாக திண்ணைகள் அமைந்திருக்கும். அவற்றுக்கிடையே வீட்டின் நுழைவாயிலை நோக்கிச் செல்லும் வாசல் இருக்கும் அது “நடை” எனப்பட்டது. 


திண்ணை விருந்தினர்களை வரவேற்க, அயலவர்களுடன் உரையாட, ஓய்வெடுக்க, சில சமயங்களில் உறங்க, வீட்டுப் பணிகளுக்கான இடமாக பயன்பட்டிருக்கலாம். அதனால் இன்றைய “front porch” அல்லது “verandah” என்ற கருத்துக்கு திண்ணை ஒரு முன்னோடியாகக் கருதப்படலாம்.


“நடை” (Nadai) என்பது வெறும் நடைபாதை அல்ல. பாரம்பரிய வீட்டு வடிவத்தில், முன் திண்ணைகளுக்கு நடுவில் அமைந்த பாதை வீட்டின் பிரதான நுழைவாயிலைக் கடந்து உள் முற்றத்தை நோக்கிச் செல்லும். 


சில வீடுகளில் தெருவிலிருந்து நுழையும் நடை, வீட்டுக்குள் தொடர்ச்சியாகச் சென்று மைய முற்றத்தை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முற்றத்திலிருந்து பிரதான அறைக்கும் பின்புறத்திற்கும் தனித்தனி நடைப்பாதைகள் இருந்தது. இதனால் நடை என்பதை வீட்டின் வாசல்  எனலாம்.


நாற்சார் வீட்டின் மையத்தில் அமைந்துள்ள முற்றம் (Muttam) தான் அதன் கட்டிடவியல் அடையாளத்தின் மையப்புள்ளி. நாற்சார் வீட்டின் இதயம் எனலாம். குடும்பத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வீட்டின் ஒரு பகுதி. 

மேலே கூரை இல்லாத திறந்த பகுதி என்பதால் வானம் வீட்டுக்குள் ஒரு பகுதியாகிறது. முற்றம் வீட்டுக்கு இயற்கை வெளிச்சத்தை வழங்கியது, காற்றோட்டத்திற்கு உதவியது, மழைநீரை ஏற்றுக்கொண்டது, குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பு இடமாக இருந்தது, சடங்கு மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்குப் பயன்பட்டது, வீட்டின் பல பகுதிகளுக்கான பரிமாறும் இடமாக இருந்தது.  வீடுகளில் கூரையின் அமைப்பு நடுமுற்றத்தை நோக்கி மழைநீர் விழும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மழைநீர் முற்றத்தில் விழுந்த பின்னர், திட்டமிட்ட வடிகால் வழியாக வெளியேறியது. முற்றம் திறந்த வானத்துடன் இருப்பதால், சூடான காற்று மேல்நோக்கி வெளியேறவும்,  காற்று வீட்டுக்குள் சுழலவும் வாய்ப்பு கிடைத்தது.


முற்றத்தைச் சுற்றி சில வீடுகளில் திறந்த அல்லது அரைமூடிய நடைப்பகுதிகள் மற்றும் வராண்டாக்கள் அமைந்திருக்கும். மரத்தூண்கள் இந்த வராண்டாக்களைத் தாங்கும். இந்த இடம் அறைகளுக்கும் முற்றத்துக்குமான  இடைநிலைப் பகுதிகள் ஆகும்.

கடுமையான வெயிலிலிருந்து பாதுகாப்பு, மழைக்காலத்தில் நடமாட்டம், குடும்ப உரையாடல் மற்றும் ஓய்வு ஆகியவற்றுக்கு இது உதவியது.நவீன இலங்கை வீடுகளிலும் வராண்டா தொடர்ந்து காணப்படுவதற்கு அதன் காலநிலை மற்றும் சமூகப் பயன்பாடு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன


நாற்சார் வீடுகளில் அறைகள் எல்லா வீடுகளிலும் ஒரே மாதிரியாக இருந்ததாகக் கருத முடியாது. குடும்பம், காலம், சமூகப் பின்னணி மற்றும் வீட்டு அளவைப் பொறுத்து பயன்பாடுகள் மாறின. குடும்பத்தின் முக்கிய உள் வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்ட அறைகள். உறக்கம், ஓய்வு மற்றும் தனிப்பட்ட பயன்பாடுகளுக்கான அறைகள். சில குடும்ப வீடுகளில் குடும்ப வழிபாட்டுக்கான தனி இடம் இருந்தது. சமையலறை பல பாரம்பரிய வீடுகளில் பிரதான குடும்ப உறைவிடத்திலிருந்து ஓரளவு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. சமையல், பொருட்கள் சுத்தம் செய்தல், அம்மி உரல், ஆட்டுக்கல் போன்றன பயன்படுத்தும் இடமாகவும், வீட்டுப் பணிகள் மற்றும் பின்புறத் தோட்டத்துடன் தொடர்பு கொள்ளும் இடமாக இருந்தது.


தோட்டம், கிணறு, மலசல கூட அல்லது பிற பயன்பாட்டு பகுதிகளுக்குச் செல்லும் வழியாக பின் புற வாசல் காணப்பட்டது. மலசசலகூடங்கள் வீட்டின் கொல்லைப்புறங்களில் காணப்பட்டது. 


நாற்சார் வீடுகளில் சமையலறையின் அமைப்பு மிகவும் சுவாரஸ்யமானது. சில பாரம்பரிய அமைப்புகளில் சமையலறை பிரதான வீட்டில் இருந்து சற்றுத் தனியாக அமைந்திருந்தது. இத்தகைய அமைப்பு புகை, வெப்பம் மற்றும் சமையல் நடவடிக்கைகளை பிரதான குடும்ப வாழ்விடத்திலிருந்து பிரிக்க உதவியது. சில வேளைகளில் மாமிச சமயலை வேறுபிரிக்க உதவியது.


மேலும் பொருட்களை கொண்டு வரும் வியாபாரிகள் அல்லது வெளிப்புறத் தொழிலாளர்கள் வீட்டின் மிகவும் தனிப்பட்ட பகுதிகளுக்குள் செல்லாமல் /பின்புறப் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளும் வகையிலும் சில வீட்டு அமைப்புகள் இருந்துள்ளன.


யாழ்ப்பாண பாரம்பரிய வீட்டை அதன் கிணற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. தீபகற்பத்தின் வீட்டு நிலப்பரப்புகளில் பங்குக் கிணறு, ஒன்றோடொன்று தொடர்புடைய அமைப்பாக இருந்தன. சில பாரம்பரிய நாற்சார் வீடுகளில் கிணறு தோட்டப் பகுதியில், சமையலறைக்கு அருகிலான பின்புற வெளியில் அமைந்திருந்தது. கிணற்றின் சரியான இடம் நிலத்தின் அளவு, நீரின் தன்மை, வீட்டின் அமைப்பு மற்றும் குடும்பத் தேவையைப் பொறுத்து மாறியிருக்கலாம். ஆனாலும் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் கிணறுகள் மிக முக்கியமான நீராதாரங்களாக இருந்திருக்கின்றன.


நாற்சார் வீடுகளின் மிக முக்கியமான கட்டுமான அம்சங்களில் ஒன்று சுண்ணாம்புக்கல் (limestone rubble) பயன்பாடு. யாழ்ப்பாணப் பகுதியில் இயற்கையாகக் கிடைத்த சுண்ணாம்புக்கல் சிறிய துண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு, lime-sand mortar மூலம் load-bearing walls உருவாக்கப்பட்டதை அவதானிக்கமுடிகின்றது. இதுவே யாழ்ப்பாணத்தின் உள்ளூர் கட்டிடக்கலையை அதன் நிலப்பரப்புடன் நேரடியாக இணைக்கும் அம்சங்களில் ஒன்று.

சில வீடுகளில் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் செங்கல் தயாரிக்கத் தேவையான நல்ல களி குறைவாக இருந்ததாலும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே  உற்பத்தி செய்தவை கொண்டுவர அதிக செலவாவதாலும் செங்கற்கள் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. தென்னிந்தியாவில் இருந்து செங்கற்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக உள்ளூர் வாய்மொழி மூலமாகவும் அறிய முடிகின்றது.


பாரம்பரிய வீடுகளில் மரம் மிக முக்கியமான கட்டுமானப் பொருளாக இருந்தது. குறிப்பாக பனைமரம் / palmyrah மற்றும் பிற தேக்கு, முதிரை, வேம்பு, பாலை போன்ற மரங்கள் பல்வேறு கட்டிடப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டன கூரையில் பனை மரப்பொருட்கள் தூண், கதவு நிலைகள், கதவுகள், உள் அமைப்புகள் மற்றும் அலங்கார வேலைகளில் மரங்கள் பயன்படுத்தப்பட்டன 

மரத்தூண்கள் வெறும் தூணாக மட்டும் அல்லாது, அவற்றின் மேற்பகுதியில் தலைப்பாகங்கள் (capitals) அல்லது அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெற்றிருந்தன. சில வீடுகளின் கதவுகள் தடித்த மரத்தால் செய்யப்பட்டு, நுணுக்கமான தச்சு வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தன.

பாரம்பரிய நாற்சார் வீடுகளின் கூரை பொதுவாக சாய்வானதாக இருந்தது. முற்கால வீடுகளில் பனை ஓலை, தென்னோலை போன்ற போன்ற உள்ளூர் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பின்னர் களி ஓடுகள் (Calicut tiles) பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பாரம்பரிய யாழ்ப்பாண வீடுகளின் கூரைகளில் அரைவட்ட வடிவ களி ஓடுகள் இடையிடையே பயன்படுத்தப்பட்டன அவை வீட்டினுள் குளிர்மையைப்பேணப்  பயன்படுத்தப்பட்டன. 


பாரம்பரிய வீடுகளில் தரையின் அனைத்து பகுதிகளும் ஒரே மட்டத்தில் இருக்கவில்லை திண்ணை உயரமாகவும், நிலம் பதிவாகவும் இருந்துள்ளன. சில இடங்களி வாசல், கூரை குறைந்த மட்டத்திலும் அமைக்கப்பட்டது. திண்ணை மற்றும் நடை ஆகியவற்றின் இந்த உயரவேறுபாடு யாழ்ப்பாண வீட்டு வடிவத்தின் முக்கிய அம்சமாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பழைய காலத்தில் மண்,சுண்ணாம்பு சார் மற்றும் உள்ளூர் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பின்னர் சிமெண்டு நிலம் அறிமுகமாகியிருக்கும். செராமிக் நிலக்கற்கள், டெராசோ terrazzo, granite போன்ற நவீன நில முடிப்புக்கள் பல வீடுகளில் அறிமுகமாகியுள்ன.


பாரம்பரிய யாழ்ப்பாண வீடுகளில் தனியுரிமை (privacy) மிக முக்கியமான கருத்தாக இருந்தது. உயரமான சுற்று வேலிகள், குறைந்த வெளிப்புறத் திறப்புகள் மற்றும் மூடப்பட்ட முகப்புகள், குறைந்த தாவாரங்கள் காணப்பட்டன. பின்னர் காலனித்துவ தாக்கத்துடன் பெரிய ஜன்னல்கள்,  உயரமான கூரைகள் மற்றும் ஆழமான விறாந்தைகள் போன்ற அம்சங்கள் அறிமுகமானது. 


யாழ்ப்பாணத்தின் பண்டைய வீடுகள் முற்றிலும் ஒரே மாதிரியான “தமிழ் பாரம்பரிய வீடுகள்” என்று கூற முடியாது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் காலங்களில் ஏற்பட்ட கட்டிடத் தாக்கங்கள் சில வீடுகளின் முகப்புகள், மற்றும் அழகுபடுத்தலில்  பிரதிபலித்தன.

யாழ்ப்பாணத்தின் மையத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் கால கட்டிடங்கள் இருந்ததற்கான தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. குறிப்பாக Dutch influence காரணமாக gable-ended roof போன்ற அம்சங்கள் யாழ்ப்பாண கட்டிடங்களில் புகுந்ததாக கட்டிட வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் யாழ்ப்பாண பாரம்பரிய வீடு என்பது தமிழ், கேரள, உள்ளூர் மற்றும் காலனித்துவ கட்டிட அறிவுகள் சந்தித்துப் பரிணமித்த ஒரு வடிவமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.


இதனால் ஒரு பாரம்பரிய நாற்சார் வீட்டை ஒரு குறிப்பிட்ட காலத்தின் கட்டிடமாக மட்டும் பார்க்காமல், காலத்தோடு மாறிய கட்டிட வடிவமாகவும் பார்க்க வேண்டும்.


வீட்டின் பல்வேறு செயல்பாடுகள் ஒன்றோடொன்று இணைந்திருந்தன.

விருந்தினர் வந்தால் முன்திண்ணை போதுமானது.

குடும்பம் கூடினால் முற்றம் இருந்தது.

தனியுரிமை தேவைப்பட்டால் உள் அறைகள் இருந்தன.

சமையலுக்கு பின்புறப் பகுதி இருந்தது.

நீருக்கு கிணறு இருந்தது.

வெயிலுக்கு திண்ணை மற்றும் வராண்டா இருந்தது.

மழைக்கு சாய்வான கூரை இருந்தது.

காற்றுக்கு முற்றமும் திறப்புகளும் இருந்தன.

இதுவே பாரம்பரிய கட்டிடக்கலையின் அறிவு.


பெரிய மற்றும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட நாற்சார் வீடுகள் வரலாற்றில் செல்வம், நில உரிமை மற்றும் சமூக முக்கியத்துவம் கொண்ட குடும்பங்களுடன் தொடர்புடையவை. அவற்றின் பரப்பளவு, மர வேலைப்பாடு, தூண்கள், கூரை மற்றும் துணை கட்டிடங்களின் எண்ணிக்கை போன்றவை அந்த குடும்பத்தின் வளத்தையும் சமூக நிலையும் பிரதிபலிக்கக்கூடும். ஆனால் நாற்சார் என்ற கட்டிடக் கருத்து பணக்காரர்களுக்கு மட்டும் கட்டுப்பட்டது என்று கூறமுடியாது.


இன்று பல பழைய வீடுகள் இடிக்கப்பட்டு சீமெந்து உயிரற்ற வீடுகள் உருவாகின்றன. சில வீடுகள் பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. இன்னும் சில வீடுகள் நவீனமயமாக்கப்படும் போது அவற்றின் முக்கிய கட்டிட அம்சங்கள் மறைந்து வருகின்றன.அதன் வாழ்வியல் வரலாறு இழக்கப்படுகின்றன. 


நாற்சார் வீடு கடந்த காலத்தின் நினைவுச் சின்னம் மட்டுமல்ல. இன்றைய காலநிலை மாற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை, நீர்ப்பற்றாக்குறை மற்றும் மின்சாரச் செலவு ஆகியவற்றை எதிர்கொள்ளும் போது அதன் சில கட்டிடக் கொள்கைகள் மீண்டும் பொருத்தமானவையாகின்றன.


இதனால் பாரம்பரிய கட்டிட அறிவை “பழையது” என்று நிராகரிப்பதற்குப் பதிலாக, அதன் பின்னுள்ள கொள்கைகளைப் புரிந்து கொண்டு நவீன வீடுகளில் மீண்டும் பயன்படுத்தலாம். 


Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா