Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


மிருகங்கள் பேசச்செய்தேன்
பறவைகள் சிரிக்கச்செய்தேன்
பச்சைகள் கொண்டு பூமியை மூடி..
செங்கறைகளை கரைத்து
நீரினை பாச்சி மீண்டும்
உலகத்தை செளிக்கச்செய்தேன்..

மொழியில்லா  பாசை பேசும்
முகமில்லா மனிதர் வாழும்
மதமில்லா கடவுள் கொண்டு
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்

உருவம் கொடுத்தேன்
உணர்வை கொடுத்தேன்..
உயிரைக் கொடுத்தேன்...
எல்லாம் கொடுத்தேன்
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்
ஒன்றை மறந்தேன்
மனிதம் மட்டும் வைக்க மறந்தேன்..

மனிதம் தேடி  கடவுளிடம்  போனேன்
அங்கும் இல்லை.. எங்கும் இல்லை..
பூமியில் எங்கோ இருப்பதாய் சொன்னார்..

கண்டால் சொல்லுங்கள்
தொலைந்து போனதை...
புதிய உலகம் இருப்பதாய் சொல்லுங்கள்..
மனிதம் சிறிது உங்களுக்கும் தருகிறேன்....

தமிழ்நிலா

01

ஆரம்பத்தில் எல்லாமே
ஒளியாக தான்..
மங்க தொடங்கியது
மனங்களை போல்..

கொஞ்சம் கொஞ்சம் தின்றது..
பிடித்துபோக..
கொஞ்சம் கூட தின்றது..
இப்போ எல்லாமே..

அத்தனையும்   ஸ்தம்பிதம்
இருளானபோது..

எச்சங்கள் மட்டும் மிச்சம்..
அப்பப்போ மின்னிக்கொள்ளும்..
சில மனிதங்கள் போல..

ஆன்மா தின்று செரித்து சிரித்து
அண்டம் தின்ன தொடங்கிற்று..
எமக்குள் இருந்து
எம்மை கௌவும்
ஒவ்வொன்றும்  எல்லாமும்..

------

02

இது இருள்யுகத்தின்
எதிர்காலம்...
கலியுக இறுதியின் பின்னான
முதல் நாள்...

மின்மினிகளிடம்
கடன் வாங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
இருள் தின்னத்தொடங்கியது ஒளி..

மீண்டும் துளிர்கள்
மீண்டும் இலைகள்
மனிதம் தழைத்திருந்தது..
மனங்களில் தெரிந்தது..

அண்டம் சிரித்தது..
ஆணவம் அழிந்திருந்தது
இருள் ஊழிக்காலத்தில் நீந்தியது...

ஆக்கிரமித்து ஓளி..
எமக்குள் இருந்து
எம்மை தின்னும்
ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும்...

தமிழ்நிலா

காற்றுவெளி October 2013

என் தேநீர்ப்பொழுதுகள்

அம்மாவுடனும் தேநீருடனுமே
தொடங்குகின்றன என்
காலைகள் எல்லாமே..
என் காலைகளில் என்றுமே
தேநீர் இல்லாமலும் இல்லை..

வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் கொண்டு
குவளை நிறைக்கவில்லை 
என் தேனீர்ப் பொழுதுகள்...

அன்பும், காதலும் 
அறிவும் அக்கறையும் கொண்டு 
நிரம்பியிருக்கும்..
என் தேநீர்க்கோப்பை
சிலநேரங்களில்
குளிர்தேசத்து மதுக்குவளைபோல்
இருக்கும்
இன்னும் சிலநேரங்களில்
குருதி நிறைந்த கிண்ணம் போல்
இருக்கும்...

சூடான என் தனிமைகளை
இளம் சூடான தேநீர் அதிகமாக
எப்படியோ சரி செய்துவிடுகிறது..

அதிக யன்னலோர 
தென்றல் பொழுதுகளை...
தேடிப்பெற்ற மழைநேர 
சாரல் பொழுதுகளை...
என்றுமே விரும்பாத வெயிலின்
வியர்வைப் பொழுதுகளை...
தவமிருக்கும் பனியின்
குளிர்ப் பொழுதுகளை...
எப்படியும் கிடைக்கும் இரவின்
நிலவுப் பொழுதுகளை...
என்னுடன் பங்கிட்டிருக்கிறது
என் தேநீர்ப்பொழுதுகள்..

ஆரம்பிப்பது போலவே
அம்மாவுடனும் தேநீருடனுமே
முடிந்துவிடுகின்றன..
என்னை எனக்கே காட்டிக்கொள்ளும்..
என் எல்லா தேநீர்ப்பொழுதுகளும்...

தமிழ்நிலா

எனக்கானவை எல்லாம்
உன்னிடம் இருந்து
கிடைக்கப்பெற்றவை..
என்னிடம் இருந்தும் சிலவற்றை
நீ எடுத்திருக்கிறாய்..
வேண்டியதை எடுத்து
தேவையற்றதை
தந்தும் இருக்கிறாய்..

எடுக்கப்பட்டவை...
கிடைத்தவை இரண்டும்
நீ இருப்பதும்,
இல்லாது இருப்பதும் போலத்தான்..
தேவையின் போது இல்லாமலும்,
இல்லாதபோது தேவையாகவும்..
எப்போதும்...
எப்படியாயினும்...

ஒரு விசை
இயக்கம்...
ஓய்வு...
நூறின் ஒற்றை விளக்கம்...
அத்தனையும் ஒன்றில் அடக்கம்..
அந்த ஒன்று...??
தெளிவான குழப்பம்...

ஆச்சரியமான பூமியில்
கேள்விக்குறியுடன்
நானாக நான்
நீயாக நீ..
சில விளங்க முடியாத உண்மைகள்..
நீயாக முயலும் சில நான்களுடன் காலம்

தமிழ்நிலா 
யாழ். சாவகச்சேரியை சேர்ந்தவருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயரிய விருது!

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான Champion of Change விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

துளிர்களிங்கு கருகிட பிறப்பதில்லை
வேர்களில் இருந்து வலிகளை கடந்து
துளிர் ஒன்று வருகையில் அவை
கருகிட நினைப்பதில்லை...

விடிந்திடும் பொழுதுகள்
விடியலை தேடி அலைவதில்லை...
பூமியின் மேலே பூக்கின்ற பூக்கள்
சாவதை  நினைத்து பூப்பதில்லை...
விதைகள் துளிர்விட நினைத்தாலும்
விருட்சங்கள் அதை ஏழ விடுவதில்லை
கைகளை கவிழ்த்து பிடித்தாலும்
தீ என்றும் கவிழ்ந்து எரிவதில்லை...

இருட்டுக்குள் உறங்கிடும் பௌர்ணமியும்
வெளிச்சத்தை தர நினைப்பதுண்டு..
காற்றில் அசையும் புல்வெளியும்
நிமிர்ந்து தான்  நிக்க நினைப்பதுண்டு...

புன்னகையை என் திருடவிட்டாய்...
இறைவனின் கோபத்தை திருடிக்கொண்டாய்...
பூக்களின் மென்மையை அடக்கிவிட்டாய்,
ஈக்களின் நிலையினை  அடைந்துவிட்டாய்..

தொலையாத ஹைகூக்கள்
தொகையாக கவியாகும்
தொலைதூர நிலவுகள்
உன் வீட்டில் ஒளியாகும்...
உனக்கான ஓர் உலகம்
ஒரு நாளில் உருவாகும்.

போராடு உன் தலை எழுத்தை நீ மாற்ற..
போராடு உன் உலகை நீ மாற்று...

தமிழ்நிலா


எங்களுக்குள்
எள்ளவும் விதியாசம் இல்லை,
மரம் தாவுவது போலே நான்
மனம் தாவிக்கொ(ல்)ள்கிறேன்..

மார்தட்டிக்கொள்கிறதா
நானும் தான், நான் என்று
மார்தட்டிக்கொள்கிறேன்..
அறிவுகள் பற்றி பேசுகிறாயா..
ஐந்தில் இருந்து ஆறா..
வளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்
கதைத்தே வளர்ந்துவிட்ட
இனம் தானே நாம்..

மண்டையோட்டில் மாற்றம் இல்லை
முதுகுத்தண்டில் மாற்றம் இல்லை
சேட்டைகளிலும் மாற்றம் இல்லை
ஆடை போட கற்றோம்,
தலை சீவ கற்றோம்...
வாலைச்சுருட்டி வைக்க பழகி,
வால்பிடிக்க கற்றோம்...

மரபணுவை மாற்றிப்
பின்னிக்கொண்டோம்
இருந்தும்...

மந்திக்கும் என் மரபணுவுக்கும்
மயிரளவும் மாறுதல் இல்லை...

நேற்றும் ஒரு கனவு
மரத்தில் இருந்து கிளை தாவுகையில்
திடீரென விழுந்துவிட்டேன்...


தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home