Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

தட்டிவான்கள்

4 comments

சாவகச்சேரி யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று. அங்கு உள்ள ஒரு பிரபல்யம் மிக்க இடம் கொடிகாமம், அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந் தோட்டங்களும் இக் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்.
புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் வீதி முக்கியமான ஒரு வீதி ஆக அன்று இருந்ததாம். வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு இருக்குமாம். கரைகள் மழையில் அரித்துச் செல்லப்பட்டும் காணப்படும்..

இப்படிப்பட்ட பருத்தித்துறை-கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது கொண்ட இவைகள் இரும்பினாலான துருத்தி (ரேடியேட்டர்) கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச் சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 , 4 1/2 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க முடியாத தாழ்ந்த கூரை,

     எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், பின்புறமாக இருக்கும் மேலதிக இருக்கைகள். காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி (horn), அதனுடைய தனித்துவமான "பாம் பாம்" ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள்.

சில தசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். அவர்களும் புது வாகனங்களை நவீன வசதிகளுடன் வாங்கினார்கள்.

இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். தற்போது அந்த பாதையும் அரசு மற்றும் தனியார் துறைகளிடம் கைமறியுள்ளன..

அரிதான,பல காலங்களிலும் இயங்காத, அரசுப் பேருந்து சேவையைத் தவிர, பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.

இளைஞர்கள் தட்டிவானில் செல்வதை அதிகம் விரும்புவர்கள். கரணங்கள் பல. ஒன்று காசு கேக்கும் போது இரங்கி ஓடுவதற்கு. மற்றையது தட்டிவானின் மேல் இருந்து பயணிப்பதற்கு. எத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான, மகிழ்ச்சியான, உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.

அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

  1. Anonymous7:31:00 am

    நிறைய அனுபவம் உள்ளது,....

    ReplyDelete
  2. இருக்காதா????

    ReplyDelete
  3. Anonymous7:33:00 am

    நீங்களா எழுதினீர்கள்? அழகிய புகைப்படங்களும் கட்டுரையும் அருமை.

    ReplyDelete
  4. Anonymous5:42:00 am

    இந்த வாகனம் இப்பொழுதும் ஓடுகின்றதா?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா