Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்

2 comments

இலங்கையின் நான்காவது பெண் துணைவேந்தராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதற்பெண் துணைவேந்தராகவும், மாதர் குலம் மாண்புற மகிமை பெற்றுள்ள பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணத்தைப் பாராட்டிக் கௌரவிக்கும் பெருவிழா 12.06.2011 அவரது பிறப்பகமான சாவகச்சரியில்
இடம்பெறுகின்றது. ச.லலீசன்- விரிவுரையாளர் - கோப்பாய் ஆசிரிய கலாசாலை. அவர்களால் தொகுக்கப்பட்ட கட்டுரை...


“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லைக் காண்” என்ற மகாகவி பாரதியின் வாக்கு மெய்ப்பட எம்மண்ணிற் பிறந்தவர்தான் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம். உள்ளத்தாலும் உருவத்தாலும் உயர்ந்த இந்நங்கையின் ஏற்றம் எம்மவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது. வரலாற்றுக்கு முந்திய காலகட்டம் தாய் வழிச் சமூகமாக உயர்வு பெற்றிருப்பினும் உற்பத்திச் செயற்பாட்டின் வடிவ மாற்றங்கள் தந்தைவழிச் சமூகத்தின் உயர்வுக்கு வித்திட்டது. இன்று அறிவியல் பொருளாதாரம் சார்ந்த எழுச்சி ஆண் - பெண் சமத்துவத்திற்கும் பெண்நிலைவாதத்தின் உயர்விற்கும் வழிகோலியுள்ளது. இத்தகைய பின்புலத்திலேயே பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் பெண் துணைவேந்தர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.

பிறப்பும் ஆளுமை உருவாக்கமும்

கொக்குவிலூரைச் சேர்ந்த பொது வேலைப் பரிசோதனை மேலாளர் (P.W.D. Overseer) எஸ்.ஏ.அரசரட்ணம் சாவகச்சேரி சிவன்கோவிலடியைச் சேர்ந்த யோகவதி என்ற பெண்ணிற் பெருந்தக்காளைக் கரம்பற்றி இயற்றிய இல்லற வாழ்வின் நன்கலமாக 1959.06.26 ஆம்நாள் பிறந்ததவரே வசந்தி. குடும்பத்தில் ஒரே பிள்ளையாதலால் இவரே செல்ல(வ)ப் பிள்ளை. சாவகச்சேர் சிவன் கோவிலையும் கண்டி வீதியையும் இணைக்கும் சாலையில் ‘சுந்தர வாசம்’ இன்றும் இவர் தம் பசுமை நினைவுகளைச் சுமந்தவண்ணம் இருக்கிறது. தந்தையாரின் அலுவலகப் பணியிடத்திற்கேற்ப நங்கை வசந்தியின் பாடசாலை வாழ்வும் அமைந்திருந்தது. ஆரம்பக் கல்விக்கான அடித்தள உருவாக்கம் நெடுங்கேணி மகா வித்தியாலயத்திலும், புசல்லாவை பாரி. திருத்துவக் கல்லூரியிலும் இடம்பெற்றது. 


1969 இல் சொந்த ஊருக்குத் திரும்பிய அரசரட்ணம் குடும்பத்தினர் தமது வீட்டிற்கு அருகில் உள்ள சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தரம் நான்கு மாணவியாக நங்கை வசந்தியை இணைத்தனர். அதிபர்களான திருமதி வைத்திலிங்கம், திருமதி சிவசங்கரம் ஆகியோரது ஆளுமைத்திறன், மண் மாண்புற வந்த வசந்தியை அன்றே இனங்கண்டது. 1973 இல் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் நங்கை வசந்தி பெற்ற உயர் பெறுபேற்றிற்கு மதிப்பளிக்கும் விதமாக பரீட்சை முடிவு வெளிவந்த தினத்தை கல்லூரியின் அரைநாள் விடுமுறையாக அறிவித்தனர். இப்பெருமையை இன்றும் ஊரவர்கள் நினைவிற் கொண்டுள்ளனர்.உயிரியல் விஞ்ஞானத்துறையில் கற்பதற்காக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சேர்ந்து கொண்ட நங்கை வசந்தியின் ஆளுமை உருவாக்கத்தில் அதிபர் வெற்றிவேலுவின் முன்மாதிரிகளும் சிறப்பிடம் பெற்றன. இந்துக் கல்லூரியில் கல்வி போதித்த விலங்கியல் ஆசான் திரு.சிவலோகநாதனே உயிர் இரசாயனத்துறை மீதான நாட்டம் தன்னில் உருவாக அத்திவாரமிட்டவர் என்று பேராசியயர் வசந்தி அடிக்கடி கூறுவதுண்டு. இளவயதில் தந்தையை இழந்தாலும் அன்னை யோகவதியினதும் வழிகாட்டல்கள் வசந்தி அம்மையாரின் வாழ்வு வளம்பெறப் பெருவழி நல்கிற்று. சாதாரண கிராமப் பாடசாலையில் கல்விபெற்ற நங்கையைச் சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற உயிர்இரசாயனவியல் அறிஞராக்கிற்று.

பல்கலைக்கழகக் கல்வி


பாடசாலைக் காலத்தில் ஏற்பட்ட உயிர் இரசாயனத்துறை மீதான ஆர்வம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டநெறிக் கற்கைக்கான அனுமதியைப் பெறவைத்தது. அங்கு 1977 - 1981 கல்வியாண்டில் உயிர் இரசாயனம், இரசாயனவியல், பௌதிகவியல் ஆகிய பாடங்களைப் பயின்று முதற்பிரிவில் சித்தியடைந்து இளவிஞ்ஞானமாணிப் பட்டத்தை (Bachelor of Science) நங்கை வசந்தி பெற்றுக் கொண்டார்.கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனத்துறையில் 1982 - 1984 கல்வியாண்டில் பேராசிரியர் கந்தையா பாலசுப்பிரமணியத்தின் வழிகாட்டலில்; “Immobilization and kinetic studies of - amylase and glucoamylase” என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முதுவிஞ்ஞானமாணி (Master of Science) பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 


தனது முனைவர் பட்டக் கற்கையை(Doctor of Philosophy)யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1985 - 1989 கல்வியாண்டிற்குரிய காலப் பகுதியில் மேற்கொண்டார். இக்காலப்பகுதியில் யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் கந்தையா பாலசுப்பிரமணியம், சுவீடன் லுண்ட் பல்கலைக்கழகப் (Lund University) பேராசிரியர் பு. மத்தியாசன் (Prof. B. Mattiasson) ஆகியோரது வழிகாட்டலில் “Bioconversion of starch to glucose as feedstock for the production of ethanol, lactic acid and fructose” என்ற தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். இந்த ஆய்வு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினதும் சுவீடன் லுண்ட் பல்கலைக் கழகத்தினதும் இணைப்பு ஆய்வாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பல்கலைக்கழக ஆசிரியராக ...

உயிர் இரசாயனத் துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்த நிலையில் 1984 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் உயிர் இரசாயனத்துறையில் உதவி விர்வுரையாளராக இணைந்து கொண்டார். தொடர்ந்து விரிவுரையாளராக (1985 - 1990), சிரேஷ்ட விரிவுரையாளராக (1990 - 1995), இணைப் பேராசிரியராக (1996 - 1998), பேராசிரியராக (1998 - 2007), சிரேஷ்ட பேராசிரியராக (2007 முதல்) என உயர்வுகளைக் கண்டார். யாழ். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசிரியர் என்ற தகைமையில் தற்போது உள்ளவர்களில் வயதில் இளையவர் என்ற பெருமையும் வசந்தி அம்மையாருக்கு உண்டு. 

பல்கலைக்கழக நிர்வாகியாக …

பேராசிரியர் வசந்தியின் ஆளுமைத்திறத்தைக் கண்ட பல்கலைக்கழக நிர்வாகம் உயிர் இரசாயனத்துறைத் தலைவராகவும் (1990 - 2000), மருந்தியல்துறைத் தலைவராகவும் (2003 - 2009) பேராசிரியர் வசந்தியைத் தெரிவு செய்தது. மேலும் 2000 - 2003 கல்வியாண்டில் மருத்துவபீடப் பீடாதிபதியாகவும் இவர் சேவையாற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குரிய மருத்துவப் பீடக்கற்கை நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் எட்டு ஆண்டுகள் இடம்பெற்றது. மாணவரதும் அவரால் பயன்பெறப் போகின்ற சமூகத்தவரதும் நன்மை கருதி விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு இக்கற்கை நெறிக் காலத்தை ஆறு ஆண்டுகளாக மாற்றி அமைத்த பெருமையும் பேராசிரியரையே சாரும். துறைசார் எழுச்சிக்குப் பெண் ஆளுமைகளாலும் முடியும் என்பதை இப்பதவிகளில் இருந்தவாறு பேராசிரியர் சாதித்துக் காட்டினார்.

ஆய்வுத்துறைக்கான நிதிபெற வழிவகுத்தமை

ஆய்வுத்துறைகளுக்கான நிதியைப் பெற்றுக் கொள்வது சாதாரணமான விடயமன்று. ஆயினும் பல மில்லியன் ரூபாய்களை அம்மையார் தனது துறைசார் எழுச்சிக்காகப் பெற்றுக்கொடுத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகம், சுவீடன் லுண்ட் பல்கலைக்கழகம் ஆகியன மேற்கொண்ட இணைப்பாய்வின் பயனாக Sida/SAREC வேலைத்திட்டத்தின் கீழ் 8 மில்லியன் சுவிடிஸ் குரோனரை (Swedish kroner) (இலங்கை மதிப்பில் 128 மில்லியன் ரூபா - 2000 - 2010) தான் சார்ந்த துறைக்காகப் பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் இரசாயனவியல் சார்ந்த சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் சுவிடிஸ் குரோனரையும் (இலங்கை மதிப்பில் 32 மில்லியன் ரூபா) பெற்றுக் கொடுத்துள்ளார். இவை தவிர வேறுபல வேலைத்திட்டங்களூடாகவும் மருத்துவபீடம் நிதியீட்டம் பெற வழிவகைகள் மேற்கொண்டார். 

சர்வதேச ஆய்வாளர்

வசந்தி அம்மையாரின் ஆய்வுத் துறை உயிர் இரசாயனம், உயிர் தொழினுட்பம் சார்ந்ததாக விளங்குகின்றது. நீரிழிவு, போதைப்பொருள் பாவனை, புகைத்தல் விளைவுகள், நொதியப் பொறியியல் (Enzyme engineering) முதலிய விடயங்களில் 65 இற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இடம்பெற்ற ஆய்வரங்குகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. ஆய்வுத் துறை சார்ந்த பல மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வெளிவாரி மதிப்பீட்டாளராகவும், சர்வதேச ஆய்வேடுகளுக்கான மதிப்பீட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இற்றை வரையில் இவரது வழிகாட்டலில் உயிர் தொழினுட்பஞ் சார்ந்து எழுவர் முதுவிஞ்ஞானமாணி (M.Sc.) பட்டத்தையும், அறுவர் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் (M.Phil.) நால்வர் முனைவர் (Ph.D.) பட்டத்தையும் பெற்றுள்ளனர். இந்தியா, தாய்லாந்து, சுவீடன் நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் ஆய்வுத் துறை சார்ந்த இணைப்புக்களை அம்மையார் பேணி வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

கலைத்திட்ட வடிவமைப்பாளர்

கற்கைநெறிகளின் வெற்றியின் பெரும்பங்கு கலைத்திட்ட வடிவமைப்பிற் தங்கியுள்ளது. யாழ். பல்கலைக்கழக உயிர் இரசாயனவியல் கலைத்திட்ட வடிவமைப்புக்கு மேலதிகமாக மனைப்பொருளியலில் இளங்கலைமாணி (B.A. in Home Economics) மற்றும் ஆய்வுகூடத் தொழினுட்பவியல் இளமாணி (B.Sc. in MLS) இயன் மருத்துவவியலில் டிப்ளோமா (Diploma in Physiotherapy) முதலிய பட்ட நெறிகளுக்கான கலைத்திட்டங்களையும் (Curriculum) வடிவமைத்து வழங்கியுள்ளார். இவை பயனுறுதித் தன்மை மிக்க கலைத்திட்டங்களாக இன்று அமுற்படுத்தப்படுகின்றன.

யாழ். பல்கலைக்கழத் துணைவேந்தர்

1974 இல் யாழ் மண்ணின் உயர் கல்விச் சின்னமாக உதயமாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல ஆளுமை மிக்க துணைவேந்தர்களின் சீரிய வழிகாட்டலில் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. இந்த வகையில் எட்டாவது துணைவேந்தருக்கான தேர்தலில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றார். இதன் நிமித்தம் 28.03.2011 தொடக்கம் செயற்படும்படியாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றார். 

இதன் மூலம் யாழ். பல்கலைக்கழகத்தின் முதற்பெண் துணைவேந்தர் என்ற பெருமையை எய்தியுள்ளார்.இலங்கையின் கல்வி வரலாற்றில் 1999 இலேயே பெண் ஒருவர் துணைவேந்தராக நியமனம் பெறும் வாய்ப்புக் கைகூடியது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாவித்திரி குணசேகர (Prof. Savitri Goonesekere)இலங்கையின் முதற்பெண் துணைவேந்தர் ஆவார். இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் உமா குமாரசுவாமி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஷானிக்கா சன்னஸ்கல ஹிறிம்புரேகம (Professor. Kshanika Sannasgala Hirimburegama) என்ற வரிசையில் வசந்தி அம்மையா நான்காவது பெண் துணைவேந்தர் என்ற பெருமையையும் பெறுகின்றார்.

கல்வியே பிரதான மூலதனம் 

பொருத்தமான அறிவினையும் தேர்ச்சியையும் கொண்டுள்ள உற்பத்தியாண்மை மிக்க தொழிற்படையினை உருவாக்குவதில் கல்வி முறை முக்கியமான பங்கை ஆற்றுவதாக இலங்கை மத்திய வங்கியின் 2010 இற்கான ஆண்டறிக்கை உறுதி செய்கின்றது. இந்த வகையில் அறிவுப் பொருளாதாரத்தை மூலதனமாகக் கொள்வதன் மூலம் எம் சமூகத்தவர் எழுச்சியடைய முடியும்.உலக வங்கியால் தயாரிக்கப்பட்ட அறிவுப் பொருளாதரச் சுட்டெண் அடிப்படையில் இலங்கை 140 நாடுகளிடையே 82 ஆவது இடத்தில் இருக்கின்றது. அறிவு மூலதனம் என்ற நிலையில் கல்வி அமைந்திருப்பதால் பொதுக் கல்வி நிலையிலும் மூன்றாம் நிலைக் கல்வி நிலையிலும் நவீன மயப்படுத்தல்களும் புதிய போக்குகளும் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகின்றது. இலங்கையின் கல்வித்துறையை நோக்குமிடத்து பதிப்புக்கள், சஞ்சிகை வெளியீடுகள், ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் கீழ் மட்டத்திலேயே இருப்பதாக கல்வியாளர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் புதிய துணைவேந்தர் என்ற நிலையின் எம்மவரின் அறிவுப் பொருளாதாரத்தையும் ஆய்வு வேட்கையையும் கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு வசந்தி அம்மையாருக்குரியதாகின்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஈழத் தமிழரின் தலைமைக் கல்வி நிறுவனமாகச் செயற்படுகின்றது. பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் மாணவர்களுக்கு மாத்திரம் கல்வியை வழங்குதல் என்பதற்கு அப்பால் சமூகம் பற்றிய பிரக்ஞையுடன் எமது பண்பாடு, விழுமியங்கள் மரபுசார் கலை வடிவங்கள் முதலிய அனைத்து அம்சங்களையும் பாதுகாக்கும் நிலையமாகச் செயற்படும் உரிமை பல்கலைக்கழகத்திற்கு உள்ளது. 

பல்கலைக்கழகத்தால் சமூகத்திற்காகத் திறக்கப்பட்ட பாதையின் வடிவங்களாகப் பலவற்றை இனங்காட்டலாம். பல்கலைக்கழக உள்வாரி அனுமதிக்கான வாய்ப்பின்றிய நிலையினால் வெளிவாரிப் பட்டப் படிப்பைப் பெறுதல் இங்கு முக்கியமாகக் குறிப்பிட்டுக் காட்டத்தக்கது. இதே போல தமிழர் தத்துவமாகக் கொள்ளப்படத் தக்க சைவசித்தாந்தத்தை ஆராயும் மையம் நிறுவப்பட்டமையும் காலத்தின் தேவையறிந்த சமூகச் செயற்பாடாகும். இது தவிர எமக்குரிய அருங்கலைகளைப் பேணக் கூடிய வகையில் - மாணவர்கள் ஈடுபாடு கொள்ளக்கூடிய வகையில் பட்டக் கற்கைகள் ஏற்படுத்தப்படுவதும் காலத்தின் தேவையாகவுள்ளது. முப்பது வருடங்களாக இடம்பெற்ற போர்ச் சூழல் ஓய்ந்துள்ள இத்தருணம் அபிவிருத்திக்கு மிகவும் சாதகமானதாகும். பொறியியல் பீடம் போன்ற முக்கிய பீடங்கள் இங்கு நிறுவப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையும் மனமிகழ்விற்குரியவை. இவற்றுடன் எம்மண்ணின் ஏற்றத்திற்கு வாய்ப்பளிக்கக் கூடிய சர்வதேச ஆய்வரங்குகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் ஆரம்பக் கட்டமாகக் கடந்த ஆண்டில் ஓர் ஆய்வு மாநாடு இடம்பெற்றமையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தம். 

நிறைவாக…

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” என்ற பாரதியின் வாக்கு வசந்தி அம்மையாரைப் போன்ற ஆளுமைகளைக் காணும்போதெல்லாம் உள்ளத்தில் உதயமாகிறது.

Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. இது பன்ற பெண்களின் மாணிக்கங்கள் நீடு வாழ்ந்து பல வரலாறு படைக்கட்டும் வாழ்த்துகள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா