Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

வௌவால் பட்டம்

2 comments

"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்"

"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது"

"சூலவைரவா சுழட்டி குத்தடா"

"இராக்கொடிக்கு விடோணும், விண் கட்டணும்"


இப்படி தான் நிரம்பி இருக்கும் ஊரில் இந்த நேரத்துக் கதைகள்.

மார்கழி மாதம் வந்தாலே வடமராட்சில பல இடங்களில பட்டக்கடைகள் முளைச்சிருக்கும். சந்திகளிலும், கடைகளிலுமாக பட்டங்கள் அங்கங்கு இருக்கும். ஒன்று தைப்பொங்கல் இன்னொன்று பட்டத்திருவிழா. பொதுவாக தைப்பொங்கல் என்றாலே சிறுவருக்கு பட்டத்திருவிழா தான். ஒன்று இரண்டாக ஏற ஆரம்பித்து தைப்பொங்கலுக்கு வானத்தை மூடி ஈசல் நின்றது போல பறக்கும் பட்டங்கள்.

2000 ஆண்டு காலங்களில கடைகளில பட்டம் வித்தாலும் ஊரில சந்திரன் அண்ணாவும் கட்டி வீட்டில விக்கிறவர், அவற்ற வீடு சின்னாக்களோட ஒரு மாதத்துக்கு பிசி தான். கலர் கலரான விதம் விதமான படலம், மணிக்கூடு, எட்டுமூலை என்று பட்டங்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வௌவால் பட்டம் தான். ஈர்க்கில்ல கட்டி ரிசு ஒட்டி, குஞ்சம் கட்டி கலராக இருக்கும் அந்த பட்டம்.

"தம்பிக்கு எது வேணும்" 

அவர் கேக்க, நான் கையக்காட்ட அதை எடுத்து தருவார். விலை பெருசா இல்லை ஐந்து ரூபா. அதை கொண்டு வந்து, முச்சையும் போட்டு சணல் நூல்ல அல்லது பழைய துணிய கிழிச்சு வாலாவையும் கட்டி, அம்மாக்கு தெரியாமல் எடுத்த தையல் நூலை முச்சைல கட்டி பிடிச்சுக்கொண்டு ஓட பறக்க தொடங்கும். அப்ப நூல் இளக்க இளக்க தான் பட்டம் மேல போகும் எண்டு தெரியாது. நூலை குலைச்சு விட்டுட்டு இழுத்துக்கொண்டு ஓடுறது தான். தெரிஞ்சதெல்லாம் ஓடினால் பட்டம் பறக்கும். அது கம்பிகளில அலம்பல் வேலிகளில பட்டு கிழிஞ்சும் போம். பிறகு கைக்கொடிலயே ஏத்த பழகியாச்சு அது வேற கதை.

"தெருவில ஓடாத, இடிச்சுப்போடுவாங்கள்"

அம்மம்மா கத்துவா, அது காதில வந்து சேருறதுக்கு இடைல அடுத்த சந்திக்கு போயிருப்பன். தோட்டங்களில இருக்கிற கிணறுகளுக்கு பெரும்பாலும் கட்டு இருக்காது. அதால ஓடிப்போற சின்னாக்கள் விழுந்து போவினம். வருசம் வருசம் பேப்பரில நியூசுகள் வரும். ஆனால் அந்த பயம் பட்டம் ஏத்தும்போது ஒருத்தருக்கும் வாறதில்லை. தோட்டத்துக்கை இருக்கிற வெட்டின மரவள்ளி கட்டையும், பயித்தங்கண்டுக்கு நட்டு உக்கிப்போன கிழுவம் கட்டையும் இருக்கும். அதுவும் எங்களுக்கு எதிரி தான்.  கனபேரின்ர கால கிழிச்சிருக்கும். ஆனால் பட்டம் ஏத்துற சந்தோசத்தை இதுகள் ஒன்றும் செய்யாது.

நெடுக பட்டத்துக்கு காசு கிடைப்பதில்லை, அதனால எங்களுக்கு சில பட்டங்கள் பரீட்சயமாகி இருந்தது. அதை பட்ஜெட் பட்டங்கள் என்றும் சொல்லலாம். கொப்பி பேப்பரை கிழிச்சு அதை வளைச்சு நூலும் வாலும் கட்டி ஏத்திறது, லஞ்ச் சீட் பையின்ர நாலு மூலையையும் கட்டி அதை பட்டம் என்று ஏத்தி இருக்கிறம். உதயன் பேப்பர்க்கு ஈர்க்கு குற்றி பட்டம் என்று சொல்லியிருக்கிறோம். அது தான் எங்கட பரிணாம வளர்ச்சி. 

அதை பார்த்து பரிதாபப்பட்டோ என்னவோ இருபது ரூபா தருவினம். தந்தால் அதுவும் சந்திரன் அண்ணைட்ட குடுத்து வௌவாலும் நூலும் வாங்கி முடிஞ்சுடும். திருப்ப ஈர்க்குபிடில இருந்து ஈர்க்கை எடுத்து நூலால கட்டி, லஞ்ச் சீட்டோ பேப்பரோ ஒட்டி ஏத்துவம். ஆனால் ஏத்தாம விடுறதில்லை. ஏறின பட்டத்தை ஆன்ரெனா பைப்பில் கட்டி விட்டால்  அது ஒரு மன நிறைவு.

பட்டம் கட்டுவது என்பது ஒரு கலை. அந்த கலை எங்களுக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேணும், அதனை பல வடிவங்களில் கட்டி ஏற்றுவது என்பது வியக்கத்தக்க விசயமாகும். வெறுமனே படலமோ அல்லது எட்டு மூலையோ பட்டத்துக்கான வகை இல்லை. கொக்கு, பிராந்து, பெட்டி என்று அறுபது வகைக்கு மேல பட்டங்கள் வானத்திலே பறக்கும். பட்டத்திருவிழாவில தாஜ்மகால் முதல் கொண்டு வானத்திலே தான் நிக்கும்.

எங்கட ஊரில இருக்கிற பெடியள் எல்லாம் பட்டம் கட்டுறதில ஸ்பெசலிஸ்ட். ஈர்க்கு, மூங்கில், கமுகம் சிலாகையில சின்ன சைஸ் பட்டத்தில ஆரம்பிச்சு, ஆளுயர பட்டம் என்று தொடர்ந்து அரைப்பனை அளவு வரை இப்ப கட்டி தொடுத்து ஏத்துறவை எண்டா பாருங்கோவன். 

தொடுவைல இருக்கிற பட்டத்தை சின்ன பட்டங்கள் கொண்டு அறுக்கிறது எண்டுறது இன்னும் ஒரு விளையாட்டு.  சில இடங்களில சண்டையிலயும் முடிஞ்சிருக்கு. பெரிய பட்டங்கள் ஏத்துற இடத்தில எங்கட பட்டங்களுக்கு அனுமதியும் இல்ல. ஏன் என்றா பெரிய பட்டங்கள் நல்ல இழுவையில நிக்கேக்க சின்ன பட்ட கயிறு சிக்கி அறுத்துப்போடும். ஆனால் அதுக்கு நாங்கள் செய்யுற வேலை என்ன என்றால் சூனியம் வைக்கிறது. 

"சூலவைரவா சுழட்டி குத்தடா" என்றால் அந்த நேரம் ஏதாச்சும் ஒரு பட்டம் தற்செயலா அறுந்து போய்க்கொண்டிருக்கும். அன்றைல இருந்து அவர் தான் எங்கட மந்திரம் போடுறவர்.

சில நேரம் எங்கட பட்டமும் அறுந்து போய்விடும், அறுந்து போய்விட்டால்  வேகமாக கிளுவம் கட்டையை முறிச்சு நூலை சுற்ற வேண்டும். இல்லயென்றால் எதிராளிகள் எங்கட நூலைக் கைப்பற்றக்கூடும். ஏன் என்றால் நாங்களும் அறுந்து வாற பட்டத்தை கலைச்சுக் கொண்டு போய் நூல் எடுத்திருக்கிறம், அதால வேகமாக நூல் சுத்துறதுக்கு ஒரு கைப்பிள்ளை வேணும். நூல் சுற்றுறது தான் பட்டம் ஏத்துற டிப்புளோமாவின் முதல் பாடம்.

முச்சை போடுறது அடுத்த பாடம் என்று தான் சொல்லவேணும். ஏன் என்றால் கொஞ்சம் பிசகினாலும் ஒரு பக்கமா சரிக்கும், அந்த பக்கமாக எங்கயும் மரங்களில மாட்டிக்கொள்ளும். படலம் வௌவால் போன்ற வற்றுக்கு கவிண்ட முக்கோணம் போல முச்சை போடவேணும். பிராந்து பட்டங்களுக்கு ஆங்கில எழுத்து Y போலவும். சில பட்டத்துக்கு கீழும் மேலுமாக இரண்டு முச்சையுமாக இருக்கும். முச்சை  கொஞ்சமா பிளைச்சால் நூல் வண்டி வைக்கும். பிறகு இறக்கித்தான் ஏத்தவேணும். முச்சைக்கு அடுத்தது வால். 

வால் இல்லாட்டா சுத்தும். பட்டம் ஏறேல்ல எண்டால் பிற்பாரம் கூடிப்போச்சு என்று வாலாவை குறைத்தும், இல்லை என்றால் பாரத்துக்கு புல்லு புடுங்கி கட்டி ஏத்துறதுமாக இருக்கும். ஆனால் வால் இல்லாத பட்டங்களும் இருக்கு. அதுக்கு வெவ்வேறு அளவுகளில குஞ்சம் கட்ட வேணும். வால் இல்லாத  பட்டங்களை ஏத்தும் போது மற்றவையின்ர இடத்தில இருந்து விலத்தி நிக்கவேணும். அது மேல எழும்பி மேல் காத்தில போகும் வரை அங்கால இஞ்சாலை எண்டு அலையும். 

அடுத்தது விண். யூரியா உரப்பையின்ர நாரை எடுத்து கமுகம் சிலாகை அல்லது மூங்கில வளைச்சு கட்டி இரண்டு பக்கமும் நல்லெண்ணைப்போத்தல் தக்கையை குத்தி அதில நாரைக்கட்டினால்  "ஙொய்ங்" எண்ட சத்தம் வரும். சத்தம் காணாது என்றால் கண்ணாடி போத்தல் துண்டால தேச்சு வலமும் இடமுமா ஆட்டி சரியான ரியூன் வரப்பண்ணி அதை பட்டத்திலை கட்டவேணும்.

இது எல்லாம் தெரிஞ்சிருந்தா தான் களத்தில இறங்கலாம்.  களத்தில இறங்கினால் முதல் தாறவேலை பட்டம் பிடிச்சு விடுற, நூலை ஒராளும் பட்டத்தை ஒராளும் பிடிச்சுக்கொண்டு நிக்கவேணும். 

"ரெடியா"  "ரெடி"  "விடு விடு"

காற்றைப் பார்த்து பட்டத்தை விட நூற்பக்கம் நிக்கிறவர் வேகமா வலிச்சு வலிச்சு நூலை விட்டுக் குடுத்து ஏற்றுவார். விண் கூவிக்கொண்டு பட்டம் மேல ஏறும். பொதுவாக நைலோன் நூல் தான் பாவிக்கிறது. பட்டத்துக்கு ஏற்றால் போல் நூலின்ர தடிப்பும் மாறும்.  

பட்டம் ஏறினால் பிறகு இழுவை பாக்கிறதுக்கு என்று வருவினம் கூட ஏத்துறவை,

"இந்தா நூலை வைச்சுக்கொண்டு நில்"

என்று தந்துபோட்டு இன்னொரு பட்டத்தை தொடுக்கிற வேலைல நிப்பினம். இழுவை எப்படி இருக்கும் எண்டு பாத்தா ஆளை தூக்கிறமாரி இருக்கும். எனக்கு  பயம், ஏன் என்றால் ஒன்று என்னை தூக்கிப்போடும் என்று. இன்னொன்று  எரிச்சலில சுண்ணாம்பை கையில கொண்டந்து நூலில பிரட்டினா அறுத்து போடும் என்று பெரியம்மாவின் மகன் சொல்லுறவன். 

இப்ப எல்லா பட்டமும் தொடுத்தாப்பிறகு லைட் கட்டின பெரிய பட்டம் கடைசியா நைலோன் கயிறிலை ஏத்துவினம். பிறகு இராக்கொடிக்கு  விட்டு பனை மரத்தில கட்டுவம்.

அந்த இரவு சந்தோசமாக இருக்கும். பார்க்க அழகாக எரியும் வெளிச்ச பல்புகள். நட்சத்திரம், நிலா இதோட பனை ஓலை அசையும் சத்தமும் விண் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்கும். இருந்தாலும் ஒரு பயம் அறுத்துக்கொண்டு போட்டால் என்ன செய்றது? ஆனால் முத்தத்தில பாய போட்டுட்டு வானத்தை பார்த்துக்கொண்டிருக்க வாற சந்தோசத்துக்கு அளவு எண்டதே இல்லை.

இப்ப ஊரில சந்திரண்ணை இல்லை, சின்ன பெடியளுக்கு விஐய் அஜித்தின்ர பட்டம் போட்ட பட்டம் இருபத்தைந்து ரூபாவுக்கு கடையில விக்குது. ஆனால் ஏத்துறதுக்கும் இந்த சுகத்தை அனுபவிக்கவும் தான் பிள்ளையளுக்கு நேரம் இல்லை. டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் எண்டு அவையள் வீடுகளில நிக்கிறேலை, வெய்யிலுக்க போனால் வருத்தம் வரும் எண்டு வெளில விடுறதும் இல்லை.

”பட்டத்தின் நினைவுகள் இப்போதும் எனக்குள் பறந்து கொண்டுதான் இருக்கிறது.”


-தமிழ்நிலா-




*கைக்கொடி - காற்றடிட்கும் போது எதிர் காற்றில் கையில் இருந்து நூலை விட்டு கொடுத்து ஏற்றுவது.

*இராக்கொடி - ஏத்தின பட்டத்தை இரவுக்கு இறக்காமல் அப்படியே எங்காவது (மரங்கள்,ஆன்ரெனா)  கட்டி விடுதல்.

Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. இ்ப்பஎங்கட ஏரியால சுத்தமாாா இல்லாம போச்சூ ஆனால் வடமராட்சில இருக்கு தானே

    ReplyDelete
  2. Kumaran7:09:00 am

    @Thushanthan Thirunavukkarasu,
    நீங்கள் எந்த இடம் ?

    நான் 1990 க்கு பிறகு ஊருக்கு போகேலை
    வடமராட்சில 90 இல் கூட பட்டம் ஏத்துறது குறைஞ்சு போச்சு
    1987 க்கு முதல் வடமராட்சில அட்டகாசமாக இருக்கும்
    87 ஒப்பரேஷன் லிபேரேசனுக்கு பிறகு செத்தது போக கன பேர் வெளிநாட்டுக்கு போயிட்டாங்க

    நான் 4 முழ படலம் ஏத்தியிருக்கின்றேன் . கடைசியாக 1990 வெளியேற முன் ஒரு பிலாந்து (பருந்து ) பட்டம் வாங்கி இருந்தேன் . ஏத்த முடியவில்லை

    இப்போ கூட கொஞ்ச பேராவது பட்டம் ஏத்துறாங்க என்பதை கேட்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா