Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சோறு வந்த கதை | தமிழ்நிலா

Leave a Comment
அன்று போயா, அம்மா கேட்டா "பச்சை அரிசி போடட்டோ இல்ல சம்பாவோ" என்று. பெரும்பாலும் வேலை நாட்களில் கடைகளில் சாப்பிடுவதால் அதிகமாகச் சம்பாதான், அதனால் வீட்டில் நிற்கும் நாட்களில் பச்சையரிசி அல்லது குத்தரிசிச் சோறுதான் சமைக்கிறது வழமை. ஆனால் இப்ப இருக்கின்ற இரண்டாயிரத்துக்குப் பிற்பட்ட பல குழந்தைகளுக்கு இவற்றிற்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று தெரிய வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கின்றது.

வீதிகளில் வைக்கோல் கொண்டு செல்லும்போது "இது என்ன" என்று தன் அப்பாவைக் கேட்கும் ஒரு பிள்ளையைக் காண நேர்ந்தது, காரணம் நாங்கள் பைகளில் வாங்குகின்ற அரிசிக்கு அடிமையாகி பலவருடம் ஆகிவிட்டது. ஆனால் எங்கள் பூர்வீகம் விவசாயம் என்பது நம்மில் பலர் மறந்துபோனதொன்றாகவே உள்ளது. இப்போதும் விவசாயம் செய்யும் இளைஞர் பலருக்கும் பண்டைய வழக்கங்கள் தெரியாத நிலைமைதான் நீடிக்கின்றது. வெள்ளாண்மை, கமம் என்னும் சொற்பிரயோகமே இன்று பாவனையில் இல்லை என்பதும் கவலையான விடையம்.

இப்போது பச்சை வயல் எல்லாம் முற்றி மஞ்சள் போர்வை போர்த்தது போல இருக்கும். அருவி வெட்டிச் சூடடிக்கின்ற காலம் இது, ஆனால் ஒரு நேரத்தோடே வயல்வேலைகள் முடிந்துவிடும். காலையில் செல்வோர் மதியத்துடனே வீட்டுக்கு நெல்லைக்கட்டிக் கொண்டுவந்துவிடுவார்கள், அல்லது மதியத்துடன் போய் மாலையில் திரும்பி விடுவார்கள், ஆனால் முன்பு அப்படி இல்லை, சிறிய வயல் என்றால் கூட நாட்களும் நேரமும் அதிகமாகத் தேவைப்படும்.

ஆவணியில் பெய்கின்ற மழையினைத் தொடர்ந்து வயல்களை எல்லாம் பண்படுத்தத் தொடங்கிவிடுவார்கள், உழுது செய்கைகளைப் போட்டு வயல் நிலமானது பண்படுத்தப்பட்டிருக்கும், வரம்புகளைக் கட்டி வயலானது விதைப்பதற்குத் தயாரா இருக்கும். செய்கை என்பது, ஆட்டெரு, மாட்டெரு, கூட்டெரு, போன்றவற்றைக் கொண்டு உருவாக்குவது. அதிகமான வீடுகளில் காணியின் ஒரு மூலையில் குப்பைகளைச் சேர்த்து உக்க வைத்து உருவாக்குவார்கள், அதனைக் கொண்டு தான் ஆரம்பத்தில் நிலம் பண்படுத்தப்படும்,

அதனைத் தொடர்ந்து புழுதியில் விதைப்போர் புரட்டாதி மாதமளவில் விதைப்பார்கள், ஏனையோர் ஐப்பசி வரை மழையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஐப்பசியில் மழை பெய்யத்தொடங்கியதும் இரவோடு இரவா தயார் நிலையில் வைத்திருக்கும் விதை நெல்லை சாக்கில் கட்டி, காலையிலேயே மூடலையும் (பனை ஓலையில் பின்னிய பெட்டி) சைக்கிளில் கொண்டு புறப்பட்டுவிடுவார்கள்.

விதை நெல் என்பது வேறு வேறு நெல்லை வீட்டில் எங்காவது போட்டு முளைக்க வைத்து, முளைக்கும் ஆற்றலை வைத்து நல்ல இன நெற்களை விதைப்பதற்காக எடுத்துவைப்பதைக் குறிக்கும். அதனை முளைகட்டிப்பார்ப்பது என்றும் சொல்லுவார்கள். மொருங்கன், மொட்டக் கறுப்பன், பூ வெள்ளை, சிவப்பு, ஆட்டக்காரி என்பவை எங்களின் பழைய நெல்லினங்கள் ஆகும். பெரும்பாலும் நான்கு நான்கரை மாதங்கள் செல்லும் அவை அறுவடைக்காகத் தயாராக.

வயலுக்குப் போகும்போது தூர இடங்களிற்கு உணவுகளைக் கொண்டுசெல்வார்கள் அண்மையான இடம் எனில் உணவானது வீடுகளிலிருந்து வயலுக்கு வரும். மூடல் பெட்டியினுள் நெல்லைக் கொட்டி அதை விசிறி விதைப்பார்கள். விசிறுவதும் ஒரு கலை தான். செறிவாகவோ அல்லது ஐதாகவோ விழக்கூடாது அதக்கு ஏற்றாற்போல் தான் விசிறுதல்வேண்டும். அப்போதுதான் நெற்பயிர் கெட்டடிக்கும் என்று கூறுவார்கள். அதன் பிறகு மறுத்து உழவேண்டும், சிலபேர் அதனை உழுது மறுக்கிறது என்றும் சொல்லுவார்கள். சிறிது நாட்களில் நெல்லானது முளை விடத்தொடங்கும். முளைக்கும் நெல் அப்படி ஐதாகிப்போனால் செறிவான இடத்தில் இருக்கின்ற நாற்றுகளைப் பிடுங்கி நடுவார்கள்.

முளை வந்ததின் பிறகு மழை, நீரின் அளவுகளைப்பார்த்து, களை பிடுங்கவேண்டும். வயல்களில் அந்நேரங்களில் உரிமையாளர்களோடு கூலியாட்களும் சேர்ந்து வேலைசெய்யும் கலாசாரம் இருந்தது. இப்போது புல்லுமருந்து, அதற்குப் பிறகு பசளை, இந்த நேரம் போடுவதற்காகவே பசளை வீடுகளில் தாயாரா இருக்கும். நாளாக நாளாக நாங்கள் பைகளில் உரத்தை வாங்கி அளவுக்கதிகமாக விசிறுகின்றோம், நாசினிகளால் நீரும், யுரியாவும், அமோனியாவும் நிலத்தையும், சோற்றையும் நஞ்சாக மாற்றி நோய்களை உருவாக்கிவிடுகிறது.

வளர வளர அதைச் சரியா பராமரிக்க வேண்டும். விரும்பாவிட்டாலும் நேரத்திற்கு நேரம் களைநாசினி, பூச்சி நாசினி போன்றனவும், பசளையும் பாவித்தே ஆகத்தான் வேண்டும். அதைவிடப் பன்றி, குரங்கு மற்றும் பறவைகளிலிருந்தும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். பழைய வீடியோ கசட் ரேப்பை தடி நட்டுக் கட்டி வைப்பார்கள், சொப்பிங் பாக், நிறத்துணிகள் போன்றனவும் கட்டுவார்கள். மண்பானை, பழைய ஆடைகளையும் போட்டு வெருளிகளைப்போல் செய்து ஆங்காங்கே வைத்து பறவைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள். கதிர் வந்த காலங்களில் சிலர் தங்கிநின்று தகர டப்பாக்களைக் கட்டி, பறவைகள் வரும்போது அடித்து விரட்டுவதும் நடைபெறும்.

இப்படி இரண்டு மாதம் கழிந்ததன் பின்னர் கதிரும் வரும். கதிர் வந்த நெல்லின் மணிகளைப் பிடுங்கி வாயில் போட்டால் பாலாக இருக்கும். அந்த பால் தான் பின்னர் அரிசியாக மாறும். இப்படியே நூறோ நூற்று இருபது நாட்களோ கடந்தால் நெல் முற்றியிருக்கும். அந்த நேரத்தில் வரும் தைப்பூச நாளன்று, கற்பூரம் கொளுத்தி, தேங்காய் அடித்து புதிரை வெட்டி எடுத்து வீடுகளில் கட்டுவோம். இன்னொரு பகுதி புதுப்பொங்கல், புதிர்க்கஞ்சி என்று வயல் சார்ந்த கோவில்களில் பூசை வைத்து பின் தருவார்கள். அதனுடைய சுவைக்கு அளவு என்பது இருக்காது. அப்படித்தான் உங்களில் பலருக்கு இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

அறுவடைக்குத் தயாரான பின்னர் தான் எங்களுக்கு வயல் போவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். அவையும் பெரும்பாலும் பின்னேரங்களில் தான். பள்ளிக்கூடம் என்பது காரணம் ஒன்று, மற்றையது வெய்யில். அரிவு வெட்ட இப்ப வெட்டுமிசின் வந்துவிட்டது. ஆனால் நாங்கள் வெட்டிக்கொண்டிருந்தது மனித இயந்திரத்தை வைத்துத்தான். பத்துப்பேர்வரையில் வளைந்த கூரான அரிவாள் கொண்டு, குனிந்து நின்று ஒவ்வொரு நெல்லா கையில் பிடித்துக்கொண்டு அடியில் அரிந்து வெட்டவேண்டும். வெட்டிய நெல்லை ஒருகைப்பிடி சேர்த்துப் பின்னால் அப்படியே அடுக்கி வைக்க வேண்டும். அவற்றைச் சேர்த்துக் கட்டியதை உப்பட்டி என்று சொல்லுவார்கள், சின்ன வெய்யில் காய அவற்றை விடவேண்டும்.

மத்தியானம் நெருங்கும் போது, வீட்டிலிருந்து கடகத்தில் சோறு, அதன் மேல் கறிகளைக் கிண்ணத்தில் அடுக்கி துணியால் சுற்றிக்கட்டிச் சமைத்த உணவுகள் வரும். ஊறுகாய், மோர் சேர்த்து எல்லோரும் சேர்ந்து உண்ணும் இடத்தில் சுவை என்பது வேறு, நினைக்க முடியாதபடி இருக்கும். உணவு முடிந்ததும் தொடர்ந்து அருவி வெட்டு ஆரம்பிக்கும். வெட்டி அடுக்கிய உப்பட்டிகளைப் போர் போல அடுக்கிவைப்போம். மழை, பனி காரணமாகப் பாதிப்படையாமல் இருக்கப் பாதுகாப்புக்குக் கையாளும் முறை, அதைச் சூடுவைத்தல் என்று சொல்வார்கள். அனேகமாக மூன்று நாள்முதல் ஒருகிழமை வரை வெய்யில் காயவிடவேண்டும், அப்போது தான் நெல் உதிரும்.

எங்கள் வீட்டிலே நீண்ட பாய் ஒன்று இருந்தது, தொடர்ச்சியாக ஒத்தாப்பின் உள்ளேதான் தொங்கிக்கொண்டிருக்கும். அப்போது எனக்கு ஏன் என்று தெரியாது. அன்று தான் தெரியும். அந்த பாய் வயலுக்கு வந்து சேர்ந்தது. டிராக்டரில இருந்து அதை இறக்கி வைத்து அடுத்த கட்டவேலைக்கு தாயாராகிக் கொண்டார்கள். இப்போதுவெட்டு மிசன் புரட்சிபோலே அந்தநேரம் நடந்தது TAFE 45 புரட்சி, மாடுகளை வெளியே விட்டு டிராக்டர் மெல்ல மெல்ல உள்ளே வரத்தொடங்கியிருந்தது.எல்லா ஊருகளிலேயும் குறைந்தது ஒன்றோ இரண்டு டிராக்டர்காரர்கள் இருப்பார்கள். அந்த ஊரிலே உழுவது முதல் சூடடித்து ஏற்றி இறக்குவது வரை அவர் தான்.

விரித்திருந்தபாயில் அடுக்கிச் சூடுவைத்திருந்த வைத்திருந்த உப்பட்டிகளை கைகளினால் வீசி நிலத்தில் அடிப்பார்கள், இதன் போது பெருமளவான நெல் உதிரும். அதைக் கையடி அல்லது தலை அடி என்று சொல்லுவோம். "பொலி பொலி” என்று சொல்லி அடிக்கும் போது நெல் குவியலாக வருமாம். இன்று கேட்கும் போது அம்மா சொன்னார் தனக்கு அது ஆச்சரியமாகவே இருக்குமாம். எஞ்சிய கற்றைகளை நிலத்தில் விரித்துவைத்திருக்கும் சாக்கினால் செய்த படங்கில் போட்டு டிராக்டரால் மேலே சுற்றியோடி சூடடிப்பு நடக்கும். முன்னும்பின்னுமாக மாறிமாறி ஓடும்போது நெற்கள் மேலும் உதிரும். இதற்கும் முன்னர் ஒன்றிற்கு மேற்பட்ட சோடி மாடுகளைக் கட்டி அதைச் சுற்றவிட்டு சூடு மிதிப்பு நடந்து கொண்டிருந்ததாம். மாட்டின் கால் பட்டு நெல் உதிருமாம். சூடடிப்பின்போது வயலுக்கு வருவோர் வெளியே செல்லக்கூடாது என்று சொல்வார்கள். யாராவது போனால் நெல் பொலி அடிக்காது என்ற ஐதீகமும் நடைமுறையில் இருக்கின்றது.

இவை முடிய அனேகமாக மாலை அண்மித்திருக்கும். இனி தூசு, நெற்சப்பி, வைக்கோல் தூள் என்பனவற்றை வேறு பிரித்தாகவேண்டும். காற்று அடித்துக்கொண்டிருந்தால் அன்று அல்லது காற்றுக்காக இன்னொருநாள் தெரிவுசெய்யவேண்டி இருக்கும். காற்றினை பயன்படுத்தி தூற்றுதல், எங்கள் வாழ்க்கைமுறையின் இன்னொரு இயற்கையின் பயன்பாடு ஆகும். தடியினால் கட்டிய மேடை ஒன்றின்மேல் ஏறிநின்றோ அல்லது உயர்த்திப்பிடித்தோ குல்லத்தினால் அள்ளி கீழே ஆட்டி ஆட்டி கொட்டும் போது நெல்லானது கீழே விழும். கழிவுகள் பறந்து விடும்.

இப்போது இவை அனைத்தையும் அந்த ஒற்றை ராஜா பார்த்துக்கொள்வார். வெறும் மணிக்கணக்கில் வெட்டி, நெல்லாகத் தருவார் ஆனாலும் வைக்கோல் வேண்டுமென்றாலோ அல்லது நெல்லு படுத்தாலோ கைவெட்டுதான். எங்கள் நெல் இனங்கள் உயர்ந்து வளரக்கூடியது. அதனால் கதிர்ப்பாரம், காற்றின் வேகம் காரணமாக நெல் படுத்துவிடும். எனவே மனிதர் வெட்டுவதுதான் சாத்தியமானது. அதனால் மக்கள் இப்போது மரபுரிமை மாற்றிப்பெறப்பட்ட நம்பர் நெல்லுக்கு மாறிவிட்டார்கள். அவை கட்டை இனங்களாகவும், விளைச்சல் கூடியனவாகவும், மூன்று மாதங்களில் அறுவடை செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.

பின்னர்சேகரிக்கப்பட்டநெல்லானது வயலில் வேலை செய்தவர்களுக்குச் சம்பளத்துடன் கொடுப்பார்கள், சூடுவைக்கும் இடத்திற்கு வரும் விதவைகள், அனாதரவானவர்கள், வற்றியோருக்கு குல்லக்கணக்கிலும், கடகக்கணக்கிலும் வயலில் வைத்தே கொடுப்பார்கள்.

சூடடிப்பின் பின் எஞ்சிய வைக்கோலைக் கூட்டி அள்ளிக் குவியலாகக் குவித்துவைப்பார்கள். அதற்குப் பயன்படுத்தும் தடிக்கு வேலைக்காரன் கம்பு என்று பெயர். குவித்த வைக்கோல் மிக மிக அழகாக வயல்கள் எங்கும் தங்க மலைகள்போலே மின்னிக்கொள்ளும் இந்த குவியல். சூடடிப்பு முடிந்த பின்னர் குவிந்து கிடக்கும் வைக்கோலில் ஏறி விளையாடுவதும், அதன் உள்ளே ஒளித்திருந்து விளையாடுவதுமாக எங்கள் பொழுது கழியும். கிராமங்களில் சூடடிப்பு காலத்தில் வீட்டில் வளர்க்கும் நாய்கள் முதற்கொண்டு அனைவரும் வயலில் தான் இருப்பார்கள். அந்த அளவிற்கு எங்கள் கலாச்சாரத்துடன் ஒன்றி இருந்தது.

இறுதியில் ராக்டரில் ஏற்றப்பட்டு வீடு வந்து சேரும். அந்த வைக்கோல். வைக்கல் போர்போலே வீட்டின் ஓர் முலையில் வட்டமாக அழகாக அடுக்கி வைக்கோலில் திரித்த கயிறு கொண்டு நான்கு புறமும் சுற்றிக் கட்டி வைப்போம். அதேபோல் தூற்றிப் பெறப்பட்ட நெல்லை சாக்குகளில் நிரப்பிக்கட்டி வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். வந்த நெல் மூட்டைகள் முற்றத்தில் வைக்கப்படும். வெய்யிலில் மீண்டும் காய வைக்க வேண்டும்.

அந்த நெல் மீண்டும் பாயில் பரவி வெய்யிலில் காயவைப்பார்கள். இரண்டு மூன்று வெய்யில் பட்ட பின்னர், நெல் பெட்டிகளில் இட்டுப் பாதுகாக்கப்படும். சில இடங்களில் கள்ளிப்பெட்டி என்றும் அல்லது நெல் பெட்டகம் என்றும் சொல்வார்கள். அனேகரின் வீடுகளில் சாக்குகளில் அடுக்கியும் வைப்பார்கள். நொச்சி இலை, வேப்பம் இலைபோட்டு நெல்லானது சேமித்து வைக்கப்படும். தேவைகளுக்கு ஏற்றாற்போல் அந்த நெல் எடுக்கப்படும்.

இனி எங்களுக்கு சோறு கிடைக்கும்...
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா