Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பிரம்மாவின் மண்விளையாட்டு

1 comment

எங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, தண்ணீர் நிரப்பும் பாத்திரம், சிட்டிகள், அடுப்புகள் போன்ற பொருட்களை நேர்த்தியாகவும் அழகுறவும் செய்து வந்தனர். அவை தரத்தில் மிகச் சிறந்ததாகவும், உறுதியாகவும் விளங்குவதுடன் அதிக இலாபமும் சம்பாதித்திருக்கின்றனர். பல இடங்களில் அவை அப்படியே இன்றும் பாவனையில் இருக்கின்றன.
மட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது. வரலாற்றின் பெரும்பகுதி, தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற மட்பாண்ட கலைப்படைப்புகளின் வாயிலாகவே அறியப்பட்டுள்ளது. மட்பாண்டத்தின் ஆயுள் மிகவும் நீடித்தது என்பதால், மட்பாண்டங்கள், அவற்றின் ஓட்டுச்சில்லிகள் ஆகியவை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்தும் மக்காது தொல்லியல் ஆராய்ச்சி நடைபெறும் தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றின் மூலமே பண்டைய நாகரீகங்கள், பண்பாடுகள் என்பன கண்டறியப்படுகின்றன.

இத் தொழில் தமிழில் குயத்தொழில் என்றும், மட்பாண்டம் செய்பவர்கள் "குயவர்" என்றும் அழைக்கப்படுகின்றனர். இம்மக்களின் வாழ்வாதாரத்துக்கு கை கொடுக்கும் மட்பாண்ட தொழிலுக்குப் பின்னாளில் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சி சவாலாக அமைந்துவிட்டது, அது சாதி அடிப்படையிலும் பல பிரிவினைகளை ஏற்படுத்தத்தவறவில்லலை.

இன்றைய காலத்தில் மின்சாரத்தை, திரவ பெற்றோலிய வாயுவினை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும், இலகுவாகவும் விரைவாகவம் வேலைகளைச் செய்து கொள்வதற்குமென வித விதமான அலுமினியப் பாத்திரங்களில் உணவுகளை அவசர அவசரமாகச் சமைத்து உண்டு வருகின்றோம், அலுமினிய பாத்திரங்களில் சமைத்துச் சாப்பிடும் போது அதிலுள்ள நச்சுத் தன்மைகள் உணவிலும் கலந்து கொள்கின்றது. அந்த நஞ்சு உடலில் சேர்ந்து பின்னர் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கின்றது. இது எம்மில் பலருக்குத் தெரியாது என்பதே உண்மை
மண் சட்டியில் சோறு, கறி சமைத்துச் சாப்பிடும் சுவையை இங்கு பலரும் உணர்ந்ததில்லை, விரைவில் உணவுகள் பழுதடைந்து விடாது. மண் சட்டிகளில் சமைத்து உண்டு பின் மண்பானைகளில் நீர் ஊற்றிப்பாவித்து வந்தோம். மண் பானைகள் எமது சுற்றுப்புற வெப்பநிலைக்குத் தன்னை குளிர்மைப்படுத்தி நீரினை குளிர்மையாக வைத்துக்கொள்ளும்.

இன்று களி மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களின் தேவைகள் குறைந்து விட்டது. இந்த நிலையில் இதனை நம்பிவாழும், இன்றும் பரம்பரையாகத் தொழில் செய்யும் குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளனர். பலர் இத் தொழிலை கை விட்டுள்ளனர். சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் இத்தொழிலைச் செய்பவர்களின் மனநிலையிலும் ஏற்பட்டதினால் பலர் இத்தொழிலைக் கைவிட்டுள்ளனர். சிலர் பிள்ளைகள் வளர்ந்து வேலைகளுக்குச் செல்லத்தொடங்கியபின் இதனை விட்டுவிட்டார்கள், சிலர் சமூக அந்தஸ்து காரணமாகவும் தங்கள் சுயங்களை இழந்துவிட்டார்கள். சாதிப் பிரிப்புகளும் இந்த தொழில் அருகிவிடக் காரணமாக அமைகின்றது.




"எனக்கு முந்தி இந்த வேலை பிடிக்காது, அப்பா தான் செய்துவந்தவர். படிப்பு முடிய லைசன்ஸ் எடுத்து டிரைவிவ் செய்தன், பட்டாவில சாமானுகள் கொண்டே போட்டன், அந்த வருமானம் போதும் என்று நினைத்தேன். எனது அடையாளத்தையும் மாற்ற முயற்சித்தேன்"

இப்ப எப்படி அல்லது ஏன் இந்த தொழிலுக்கு வந்தனீங்கள் என்ற கேள்வி எழுந்தது, "ஒரு நாள் வாகனம் சம்பந்தமான பிரச்சினை வந்தது, பெயர், ஊரை சொன்னன் தெரியேல யாருக்கும், ஆனால் அப்பாவின்ர பேரையும் தொழிலையும் சொன்னன் அவைக்கு விளங்கிட்டுது, அப்பதான் நினைச்சன் இது தான் என்ர அடையாளம் எண்டு, இப்ப புதுசு புதுசா செய்து வெளில அனுப்புறன். இப்ப என்ர பேர சொன்னால் கொழும்பிலை இருக்கிறவைக்கும் தெரியும்" என்று சந்தோசத்தில் சொல்கிறார், தென்மராட்சி சாவகச்சேரியில் மட்பாண்ட வேலைகளை செய்யும் திசான்.

வெளிநாடுகளுக்கு இப்போது ஏற்றுமதி ஆவதாலும், உள்நாட்டுச் சந்தைகளில் அவற்றின் தேவை மற்றும் உற்பத்தி இப்போது அதிகரித்துள்ளது. சித்த மருத்துவத் துறையினரின் அறிவுரைகள், நோய்கள் வந்தபின் ஏற்படும் தெளிவு என்பன இதற்குக் காரணம் எனலாம். கால ஓட்டத்தில் அலுமினியம், சில்வர், நொன்ஸ்டிக், பிளாஸ்டிக் என்று மாறிய இனத்தின் சாட்சிகளில் நானும் ஒருவன். அந்த வகையில் இந்த கதைக்கு வருகின்றேன்.

மட்பாண்டங்கள் இலகுவாக உற்பத்தி செய்ய முடியாது, அவற்றிற்குத் தேர்ந்த கைப்பக்குவம் வேண்டும். அது பரம்பரை பரம்பரையாகவோ சிறந்த பயிற்சியினால் வரவேண்டும். மண் கை சொல்லுவதைக் கேட்கும் கலையை வனைதல் என்று சொல்லுவோம்.
யாழ்ப்பாணம் அல்லது வடக்கினை பொறுத்தவரையில், ஒட்டிசுட்டான், நெடுங்கேணி போன்ற இடங்களிலிருந்து பெறப்படும் மண் தொழில் செய்யும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டுக் கழிவுகள் நீக்கப்படும். நீக்கப்பட்ட மண் காயவிடப்பட்டு பின் நீரில் கரைத்து வடிக்கப்படும். இதன் போதும் சிறு சிறு கழிவுகள் முற்றாக இல்லது போகும். பின்னர் அந்த மண் அடையவிடப்படும். அடையவிடப்படும் மண் தனியே எடுக்கப்பட்டு சிறிது அதற்குரிய மணல் சேர்த்து மிதித்துப் பதப்படுத்தப்படும். மணல் சேர்ப்பதின் நோக்கமாக இருப்பது தனிக் கழியில் பொருட்கள் செய்யமுடியாது என்பதாகும். கால்களால் மிதிப்பதன் நோக்கம் மண் பதமாகி வனைவதற்கு ஏற்றாற்போல் இதமாக வரும்.

அவ்வாறு பதப்படுத்திப் பெறப்பட்ட மண், கைகளினால் சுற்றி இயக்கப்படும் சக்கரத்தில் இடப்பட்டுச் சுற்றி கைகளால் உருவங்கள் பெறப்படும். இன்று சக்கரங்கள் இல்லை. மின் மோட்டர் கொண்டு இயங்கும் சக்கரங்கள் தான் காணப்படுகின்றது. சக்கரங்களில் சுற்றும்போது கை நெஞ்சு பகுதிகளில் நோ ஏற்படுவதாலும். உற்பத்தியின் அளவை அதிகரிக்கவும் சங்கரங்களிலிருந்து மின் சுழலிகளுக்கு மாறிவிட்டார்கள். அந்த வேகத்திற்கு ஏற்றாற்போல் குவித்த மண்ணிலிருந்து பானை வருதல் என்பது எனக்கு அதிசயமாகவே இன்னமும் இருக்கிறது.
களிமண்ணானது ஒரு சுழல் சக்கரத்தின் நடுவில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும். பானை செய்பவர் இச்சக்கரத்தை ஒரு குச்சியின் மூலம் தனது கால்களில் உள்ள விசையைப் பயன்படுத்தியோ அல்லது மின் மோட்டரைப் பயன்படுத்தியோ தேவைப்படும் வேகத்தில் சுழற்றுவார். இந்தச் செயல்முறையின் போது, சக்கரம் சுழலச் சுழல, மெல்லிய களிமண்ணின் குவியல் அழுத்தப்பட்டு, பிதுக்கப்பட்டு, மென்மையாக மேல் நோக்கியும், வெளி நோக்கியும் இழுக்கப்பட்டு ஒரு வெற்றிடக்கலனாக வடிவமைக்கப்படுகிறது.

வடிவமைக்கப்பட்ட கலன், நூலினால் அல்லது கூரிய தகட்டினால் வெட்டி வேறாக்கப்பட்டு அடுக்கி சிறிது உலர அனுமதிக்கப்படும். அதிகமாக உலர்ந்தால் வெடிப்புக்கள் வரக்கூடுமன்பதால் அவை பெரும்பாலும் மூடிய கட்டங்களில் தான் வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் குறித்த சட்டியோ அல்லது பானையோ அதனுடைய பிற்பகுதி தட்டப்பட்டு ஒரு ஒழுங்கான அமைப்பிற்கு கொண்டுவரப்படும். அதன் பிறகு அதனை மினுக்கி, தேவைக்கு ஏற்றால் போல் நிறங்கள் பூசி மீண்டும் சிறிய வெயிலில் உலர அனுமதிக்கப்படும். நிறங்கள் எனப்படுவது செம்மண் தரவைகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு அவை நன்கு கரைத்து, கழிவுகள் வேறக்கப்பட்டு பெறப்படும் கலவை நிறக்கலவை ஆகும். அதனை துணியால் பூசி அவை உலர்ந்தபின் சூளையில் அடுக்கப்படும்.

தனி ஒரு பெண்ணாக அங்கு வேலை செய்து கொண்டிந்தார் ஒரு அக்கா, அவரிடம் சவால்கள் தொடர்பாக விசாரித்தேன் ”நான் இதை ஆரம்பிக்கும் போது என்ர சொந்தக்காரர் கனபேர் நீ பொம்புளை, உனக்கு ஏன் இந்த வேலை என்று சொலிச்சினம், பொம்புளையா இதுல வெற்றிபெற ஏலாது என்றும் சொலிச்சினம், என்ர சமூகம் கூட எதிர்மறையான கருத்துக்களைத் தான் சொல்லிச்சு, ஆனால் நான் சோர்ந்து போகேல்ல”

அவரின் கதைளிலே நம்பிக்கை தெரிந்தது. தொடர்ந்தார் ”என்ர சகோதரர்கள் கூட இந்த தொழில் செய்யுறேல, ஆனால் நான் என்ர கணவரின்ர உதவியோட தொடங்கினான். அவர் விற்பனை சம்பந்தமான வேலைகளைப் பார்ப்பார், நான் உற்பத்தி வேலைகளைப் பார்ப்பன், எங்களிட்ட நல்ல அனுபவமான ஆக்கள் இருக்கினம், ஆக்கள் இல்லை என்றால் நானும் வேலைசெய்வன்,” பெரும்பாலும் எல்லா வேலைகளும் செயக்கூடியவர். அவரிடம் கேட்பதற்கு இன்னுமொரு கேள்வி இருந்தது. விற்பனைகள் என்னமாதிரி அக்கா?

”இப்ப எங்கட பொருளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு தம்பி, அதனால நாங்களே விலையளை வைக்கிறம், வழமையை விட அதிகமா உற்பத்தி செய்யுறம். சந்தோசமா வேலைசெய்யுறம்” என்று சூளையில் அடுக்குவதற்காக எழுந்து சென்றார் திருமதி இரத்தினவள்ளி.

சூளையில் அடுக்கி உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி உறுதியான மட்பாண்டங்கள் உருவாக்கப் படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. கறுப்புச்சட்டி பெறுவதற்காக அந்தச்சட்டிகளை நிலத்தில் மீண்டும் மீண்டும் வைக்கல், பொச்சுக்களுடன் மாறிமாறி அடுக்கி மண்ணினால் மூடி சுடுவார்கள். மற்றைய சட்டிகளைவிட கறுப்புச்சட்டிகள் உறுதியானது என்று சொல்கிறார்கள்.

பொம்மைகள், ஒரு விளையாட்டுப் பொருள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பொதுவாகப் பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புப்படுத்திப் பார்க்கப்பட்டாலும், இப் பொம்மைகள் உலகை அறிந்து கொள்ளவும் பண்பாட்டின் வளர்ச்சியை அளவிடவும் உதவுகின்றன. பொம்மைகள் களிமண், பிளாஸ்டிக், மரம், உலோகம் முதலானவற்றால் செய்யப்படுகின்றன. இருந்தாலும் களிமண் பொம்மைகள், முன் வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டிலிருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன.
பொம்மைகள் அல்லது சிலைகள் சிறார்களின் விளையாட்டு சாதனமாகவோ அல்லது கடவுள்களின் உருவங்களாகவோ மட்டுமின்றி, ஒரு நாட்டின் பண்பாடு அல்லது கலையின் பிரதி பிம்பமாகவும் விளங்குகிறது. பொம்மைகளைக் கொண்டு சமயம், காலம், சமூகம், பழக்க வழக்கம் போன்றவற்றைக் கணிக்க இயலும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். முன்பு களிமண் சிலைகள், சமய விழாக்களில் கடவுள் சிலைகளாக உள்ளது. வீடுகளில் அலங்கார பொருட்களாகவும், விளையாட்டுப் பொருட்களாகவும் அலங்கரித்துள்ளன.
களிமண் பெறப்பட்டு நன்கு கரைத்துக் கழிவுகள் நீக்கப்பட்டு, அதனோடு வடித்துக் களி பெறப்படும் அவ்வாறு பெறப்படும் களி நன்கு பதப்படுத்தப்பட்டு அச்சுக்களில் இடப்பட்டு உருவங்கள் பெறப்படும். அவை சிறிது உலர அனுமதிக்கப்பட்டு சூளைகளில் சுட்டு உறுதியான உருவங்களாகப் பெறப்படும்.

''சிலைகளை சட்டி பானைகள் போல் செய்துவிடமுடியாது. களிமண்சிலைகள் இரண்டுவிதமாக செய்யலாம். ஒன்று அச்சுக்களை செய்து அதனுள் களியை ஊற்றி உலரவிட்டு செய்வார்கள். மற்றைய முறை கைகளினால் களியினை குழைத்து ஒவ்வொரு பகுதியாக செய்து ஒட்டி உலரவிட்டு பின் சுட்டு பெறப்படும். ஆனால் இப்போது பிளாஸ்டிக் சிலைகளும் பொசோலின் சிலைகளும் வந்து இவற்றின் உற்பத்தியை நிறுத்திவிடும் அளவில் இருக்கின்றது,” யோகன்
இப்போது பிளாஸ்டிக் ஆக்கிரமித்துவிட்ட உலகத்தில் மண்பொம்மைகள் எங்கும் அலங்கரிப்பதில்லை. எங்கள் வீட்டில் முன்பு யானைப் பொம்மைகள், குதிரைப்பொம்மைகள் இருந்துள்ளன, எங்கள் கோவங்களை அதன் மேல் காட்டினால் உடைந்துவிடலாம். ஆனாலும் உடைந்தபின் அந்த கோவம் போய்விடும். அந்த குழந்தைப்பருவ வக்கிரங்களை எல்லாம் பொம்மைகள் இல்லாமல் செய்திருக்கின்றன, அதனால் தான் என்னவோ இப்போது வக்கிர எண்ணங்களுடன் சிறுவர்கள் வளர்ந்து, வாள்களுடன் இளைஞர்கள் உள்ளார்களோ என்னவோ?
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

  1. நல்லதொரு ஆக்கம்
    நன்றி சஞ்சேய்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா