Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சாவகச்சேரி நகரப் பூங்கா - அரசியலும் மக்கள் வரிப்பணமும்

1 comment

சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது எதிர்ப்போரின் நோக்கமல்ல, அதற்காக வெவ்வேறு காணிகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் உரியதரப்பினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை, மாறாக நகர சபையின் புதிய திட்டங்கள் அமையவுள்ள அல்லது உரிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காணிகளை பறித்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள் அதற்கு அரச நிர்வாக, அரசியல் தலையீடுகளும் பிரதான காரணங்கள் ஆகும். 

 

சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது நோக்கமல்ல - அது அமைய வேண்டிய இடம் இதுவல்ல என்பதே எமது வாதம்.

தென்மராட்சி 60 கிராம சேவகர் பிரிவினைக்கொண்ட பாரிய பிரதேசம் ஆகும், அதற்கு மேலாக சாவகச்சேரியை மையமாகக் கொண்டு பயன் பெறுவோர் மருதங்கேணி, புதுக்காடு, பளை, பூனகரி பிரதேசங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். தென்மராட்சி அபிவிருத்தி என்பது வெறுமனே சமுர்த்தி வங்கி அமைப்பது மட்டுமல்ல, தீயணைப்பு, டிஜிற்றல் நூலகம், நகர சபை கட்டட விரிவாக்கம், சிறுவர் மற்றும் நகரப்பூங்கா அமைப்பு, வர்த்தகத் தொகுதிகள் அமைப்பு என்பன சம்பந்தப்பட்டது.  

சிறுவர் பூங்கா / நகரப்பூங்கா ஒன்றின் அவசியம் கருதி பலரின் தீவிர முயற்சியின் பயனால் காணி ஒன்றை நகரசபை கொள்வனவு செய்திருந்தது. எமது பிரதேசத்திற்கு அல்லது ஒரு ஊருக்கு ஏன் சிறுவர் பூங்கா அவசியமானது என்பதனை விளக்கவேண்டிய அவசியம் பற்றி ஒவ்வொருவரும் அறியாமலும் இல்லை. எமது பிரதேசத்தில் இதுவரை சிறுவர்கள், இளையவயதினருக்கான பொழுதுபோக்கிற்கோ அல்லது அவர்களது உடல் வலிமைகளை மெருகூட்டுவதற்கான எந்தவொரு மார்க்கங்களுமோ எம்மிடத்தே இல்லை. அத்துடன் தற்போதைய நிலமையில் பல குழந்தைகள் வாழ்க்கையின் பாதைமாறி பல்வேறுபட்ட தீய செயற்பாடுகளில் ஈடுபட்டும், தொலைபேசி விளையாட்டுக்கள் மூலம் மனநலம் பாதிப்படைந்து வருகின்றமையையும் பற்றி நன்கு அறிவீர்கள். இப்படியான பல்வேறுபட்ட காரணங்களை அடிப்படையாக வைத்துதான் எமது நகர சபை மக்களின் வரிப்பணத்தில் இக்காணியைக் கொள்வனவு செய்திருந்தது.


அதற்கான ஒரு ஆலோசனைச்சபை பத்திரிகைவாயிலாக அழைக்கப்பட்டு தெரியப்பட்டது. அதுமட்டுமல்ல சுமார் 55 லட்சம் பெறுமதியிலான மிகப்பெரிய விளையாட்டு உபகரணமும் கொள்வனவு செய்து பொருத்தப்பட்டதுடன், சபையின் வருமானத்தில், LDSP உலக வங்கி திட்டங்கள் மூலம் எல்லைச் சுவர்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. ஆனாலும் நாட்டில் சடுதியாக ஏற்பட்ட பொருளாதார நிலமைகளைக் கருத்திற்கொண்டு மேலதிக வேலைகள் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்தன. அத்துடன் சபையுடன் இணைந்து செயற்பட பல உள்ளுர், மற்றும் புலம்பெயர் ஆர்வலர்களும் எம்மோடு கைகோர்த்து செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தினர் 600,000.00 ரூபா பெறுமதியில் மேலதிக உபகரணங்களை கொள்வனவு செய்து பொருத்தியுளதுடன், மக்கள் பாவனைக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்க முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க,சாவகச்சேரி நகரப் பூங்காவிற்காக கொள்வனவு செய்யப்பட்ட காணியில் ஆரம்பம் முதல் சமுர்த்தி வங்கிக்கான காணி ஒன்றினை இதில் வழங்குமாறு பல்வேறுபட்ட மட்டங்களில் இருந்து கோரிக்கைகளும் பின்னர் அழுத்தங்களும், வந்தவண்ணமிருந்தன. காரணம் நகர சபையுடன் இணைந்து அரச காணி ஒன்று நீண்டகாலமாக நகரசபையின் பாவனையில் இருந்து வருகின்றது. அது தீயணைப்பு பிரிவு ஒன்றினை உருவாக்கவும், அருகில் உள்ள நூலகத்தை நவீனமயப்படுத்தவும் பயன்படும். கடந்த சபைகளின் காலத்தில் அக்காணி தொடர்பாக பிரதேச செயலகத்திடம் சுவீகரிப்புக் கோரிக்கை வழங்கப்பட்டும் அது பரிசீலிக்கப்படவில்லை அல்லது நிறுத்தப்பட்டுள்ளது. 

ஆனாலும் பத்து வருடங்களுக்கு மேலாக நீளும் அவர்களின் சமுர்த்தி வங்கிக்கான தேவையை உணர்ந்து,  சாதகமாக பரிசீலித்து நகர சபைக்குச் சொந்தமான பல இடங்களை வழங்க சிபாரிசு செய்து வந்தபோதும் அவற்றை ஏற்க பல்வேறுபட்ட காரணங்களையும் கூறி சமுர்த்திசார் குழுவினர் மறுத்துவந்தனர். அதில் குறிப்பாக இடம், அமைந்துள்ள பிரதேசம், போக்குவரத்து பிரச்சினையையே காரணம்காட்டி வந்தபோதும் அதற்குச் சாதகமாக நகரில் மிக அண்மையாக உள்ள காணித்துண்டுகளை வழங்க முன்வந்த போதும் அவற்றையும் மறுத்தனர்.

நகர சபையினர் பின்வரும் காணிகளினை வழங்க இணங்கியிருந்தனர்.

சபையின்‌ 12/09.07.2019 ஆம்‌ இலக்க தீர்மானத்திற்கமைவாகவும், மேலும்

நகராட்சி மன்றத்தினால்‌ சிறுவர்‌ பூங்கா அமைத்தல்‌ மற்றும்‌ சமுர்த்தி திணைக்களத்திற்கு காணி வழங்குவதற்காக கிராமசேவகர்‌ பிரிவு J/307 நுணாவில்‌ மத்தியில்‌ காணப்படுவதும்‌ கீழ்க்‌குறிப்பிடப்படும்‌ அட்டவணையில்‌ விபரிக்கப்படுவதுமான காணித்துண்டுகளை கொள்வனவு செய்வதெனவும்‌ கொள்வனவு செய்யப்படும் இக்‌ காணியில்‌ மேற்குப்பக்கமாக உள்ளதூமான 2 பரப்பு நிலப்பகுதியினை சமுர்த்தி திணைக்களத்திற்கு நகராட்சி மன்றத்திற்கு அருகில்‌ உள்ள அரச காணிக்கு மாற்றீடாக வழங்குவதெனவும்‌ தீர்மானிக்கப்பட்டது.  தீர்மானம்‌ 5/14.10.2019

மேற்படி 02 பரப்பு காணியானது கொள்வனவு செய்யப்படாமையால் (காணி உரிமையாளர் விற்கவில்லை) நகர சபையானது பின்வரும் தீர்மானத்தை எடுத்திருந்தது.

சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைப்பதற்கு கீழ்‌ குறிப்பிடப்படும்‌ காணிகளில்‌ ஒன்றினை வழங்குவதென சபையின்‌ பிரசன்னமான உறுப்பினர்களால்‌ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1. கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ தனங்களப்பு வீதியில்‌ அமைந்துள்ள மின்சார சபைக்கென ஒதுக்கப்பட்ட காணிக்கு கிழக்கு பக்கமாக 3 பரப்பு காணி.

2. கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ உதயசூரியன்‌ சனசமூக நிலையத்திற்கு அருகில்‌ 3 பரப்பு காணி . தீர்மானம் : 14/24.03.2022

ஆனால் அவர்கள் நகரப்பூங்கா அமையவுள்ள காணியில் தான் தமக்கு இரண்டு பரப்பை வழங்குமாறு கோரிக்கையினையும் விடுத்திருந்தனர். அதன் போது

/நுணாவில்‌ மத்தி பகுதியில்‌ சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியில்‌ மேற்கு புறமாக A9 வீதியில்‌ இருந்து 12 அடி பாதையுடன்‌ 2பரப்பு காணி/ தீர்மான இல 01/31.03.2022 வழங்கலாம் என முன்மொழியப்பட்டாலும்.

 

அதிகளவான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சபையினால் உடனடியாகவே அது மறுக்கப்பட்டு இக்காணி சிறுவர் பூங்காவிற்கு மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டதையும், எமது தூர நோக்குடன் கூடிய இறுதி திட்ட வரைபிற்கே (Master Plan) இந்த இடப்பரப்பு காணாது எனவும், எமது பிரதேசத்திற்கு ஏன் இவ்வாறானதொரு பூங்கா தேவை என்பதையும் அறியப்படுத்தியும், இது சிறுவர்/நகரப்பூங்காவிற்கு மாத்திரமே தவிர வேறு தேவைக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்தியும் சபையினால் ஏகமானதாக தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது சபை இல்லாத காலப்பகுதியில் மீண்டும் மீண்டும் சபையின் தீர்மானங்களையும் மீறி சமுர்த்தி அலுவலகத்திற்கு காணியை வழங்க பலர் முயற்சி எடுப்பது கவலையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் இவை தொடர்பாக நாம் கெளரவ ஆளுனர், மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர், கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா போன்றோருக்கு தெரியப்படுத்தியதைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பு குழு கூட்டதில் அதற்கான குழு ஒன்றை அமைப்பதாகவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உரிய முடிவு தருவதாகவும் கூறப்பட்டிருந்தது மக்கள் சாதகமான பதிலை எதிர்பார்த்திருந்த வேளை. மாகாண உயர் மட்டத்தினருடன் சேர்ந்து வேறு இரு காணியும் குறிப்பிட்டு, மூன்றில் ஒன்றைத்தருமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அவையாவன

  1. பழைய மீன் சந்தை அமைந்திருந்த காணி.
  2. நகரசபையுடன் இணைந்துள்ள காணி
  3. நகரப்பூங்காவில் கண்டிவீதியை முகப்பாகக் கொண்ட இரண்டு பரப்பு.
இவற்றில் பழைய மீன் சந்தை அமைந்திருந்த காணியில் வர்த்தக கட்டடம் அமைக்கவென LDSP திட்டத்தில், உலக வங்கி நிதி அனுசரனையில் திட்டம் முன்மொழியப்படு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

நகரசபையுடன் இணைந்துள்ள காணி தீயணைப்பு, டிஜிற்றல் நூலகம், நகர சபை கட்டட விரிவாக்கம், போன்றவற்றுக்கு தேவையானதாகவும் தற்போது வாகனங்களின் தரிப்பிடமாகவும் உள்ளன.

நகரப்பூங்காவில் கண்டிவீதியை முகப்பாகக் கொண்ட இரண்டு பரப்பு. இக்காணி நகரப்பூங்கா அபிவிருத்திக்கு கட்டாயமாக தேவையானது. நகரப்பூங்கா என திட்டமிடப்பட்டது வெறுமனே ஊஞ்சல் வைத்து ஆடுவதல்ல, மின் ராட்டினம், நீர் விளையாட்டுக்கள், புகைவண்டி ஒட்டம் போன்ற உள்ளக வெளிப்புற விடையங்கள் பலவற்றைக் கொண்ட Leisure World, Pearl Bay, Excel World Entertainment Park, போன்ற ஒரு தீம் பாக் ஆகும்.  இதை பின்நாட்களில் விரிவுபடுத்தவே இடம் போதாது. இவைதொடர்பாக நன்கு யோசிக்கவேண்டும். நகரசபையின் வருமானத்தில் தான் நகரமே இயங்கவேண்டும், எனவே வர்த்தக நோக்கத்திக்கு உரிய காணிகள் அவ் நோக்கத்திற்கே பயன்படவேண்டும் என எதிர்த்தபோது அம்முயற்சிகள் கைவிடப்பட்டன.

நாம் ஏற்கனவே வழங்குவதாக கூறிய கால்நடை அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் அருகில் அமைத்தல் சரியானது எனவும் அதில் கட்டடம் கட்டலாம் எனவும் கூறப்பட்டது. பின்னர் அருகில் இந்து மயானம் இருப்பதாக கூறி மறுக்கப்பட்டது. (500மீற்றர் இடைவெளி) 

இப்போது ஒரு கதை, பிரதேச செயலகத்துக்கு அருகில் இயங்கிய கால்நடை அலுவலகத்தை தமக்கு இடப்பற்றாக்குறை இருப்பதாக கூறி அவர்களை இடம்மாற்றியது இதே பிரதேச செயலகம் தான். அப்போது அருகே மயானம் இல்லையா என்பது வேடிக்கை தான்.



விரைவில் ஒருங்கிணைப்பு குழு இதனை நிவர்த்திசெய்யும் என நம்ம்பும் வேளையில், அண்மையில் (14.06.2024) ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வருகைதந்து நகரப்பூங்காவில் முன்பக்கமாக காணி வழங்குவதென முடிவாகியதாக அவரது பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அது எமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றது. 



இதுஒரு பாரிய பிரச்சனை, உண்மையான அபிவிருத்தி என்ன என்பது இன்னும் விளக்கமின்றியே உள்ளது.

எனவே, ஏற்கனவே எம்மால் கூறப்பட்ட காணிகளில் ஒன்றை பெற்று சமுர்த்தி வங்கி அமைத்தலே சாலப்பொருத்தமானது. அக் காணிகள் நகரின் மத்தியிலும் அதனுடன் பிரதான பேருந்து நிலையம், புகையிரத நிலையம், சந்தை என்பனவும் அதன் அருகேயே அமைந்துள்ளது. சமுர்த்திப் பயனாளிகள் வயோதிபர்கள் மற்றும் பெண்களாகவும் உள்ளமையால் அவர்கள் தூர இடம் பயணிப்பது கடினமானதும் ஆகும். அண்ணளவாக பிரதேச சபையிலிருந்து  இருந்து அக் காணி 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. அது வறிய மக்களின் பயணச்செலவை அதிகரிக்கும்.

தேவை நிமிர்த்தம் வரும் பயனாளிகள் நகருக்குள்ளே தமது வேலைகள் முடித்து இலகுவாக வீடு செல்ல தனங்களப்பு வீதியில் உள்ள காணியில் அமைதலே பொருத்தமானது.

குறித்த சில தென்மராட்சியைச் சேர்ந்த மக்கள் அதனைப் பெற்றுக் கொடுப்பதில்/ பெற்றுக்கொள்வதில் தமது கௌரவம் உள்ளதாக நினைத்து, நகரின் ஒட்டு மொத்த அபிவிருத்தியையும் குழப்ப முயல்கிறறார்கள். அதற்கு சில அரசியல்வாதிகளும் தங்களது வாக்குகளைத் தக்க வைக்கவும், சில அரச உத்தியோகத்தர்கள் அவர்களை குளிர்வித்து  தமது ஆசனங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இதனைப்பயன்படுத்துகின்றார்கள்.

ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டபின்னர் கூட எதும் நிகழவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. இதற்காக தென்மராட்சி அபிவிருத்திகழகம், தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையம், பசும்தேசம், மற்றும் ஆர்வலர்களும் இதில் தம் முழு நேரத்தையும் ஈடுபடுத்திவருகின்றார்கள். ஆனால் இது தொற்றுப்போகாது மக்கள் மயப்படவேண்டும். ஆர்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு, தேவை ஏற்படின் சட்டத்தின் முன் செல்லவும் இவ் அமைப்புக்கள் தயார் நிலைக்கு வந்துவிட்டன.

சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது எதிர்க்கும் மக்களின் நோக்கமல்ல, அதற்காக வெவ்வேறு காணிகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் உரியதரப்பினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை, மாறாக நகர சபையின் புதிய திட்டங்கள் அமையவுள்ள, அங்கீகரிக்கப்பட்ட அல்லது உரிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காணிகளை பறித்துக் கொள்வதில் மிகுந்த பிரியத்தனம் செய்கிறார்கள். அதற்கு அரச நிர்வாக, அரசியல் தலையீடுகளும் பிரதான காரணங்கள் ஆகும். 


இவை தொடர்பான சபை இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இதன் கீழ் பட்டியலிடப்படுகின்றது.

தீர்மானம்‌ 12/09.07.2019

தீர்மானம்‌ 5/14.10.2019

சபையின்‌ 12/09.07.2019 ஆம்‌ இலக்க தீர்மானத்திற்கமைவாக நகராட்சி மன்றத்தினால்‌ சிறுவர்‌ பூங்கா அமைத்தல்‌ மற்றும்‌ சமுர்த்தி திணைக்களத்திற்கு காணி வழங்குவதற்காக கிராமசேவகர்‌ பிரிவு J/307 நுணாவில்‌ மத்தியில்‌ காணப்படுவதும்‌ கீழ்க்‌குறிப்பிடப்படும்‌ அட்டவணையில்‌ விபரிக்கப்படுவதுமான காணித்துண்டுகளை கொள்வனவு செய்வதெனவும்‌ கொள்வனவு செய்யப்படும் இக்‌ காணியில்‌ மேற்குப்பக்கமாக உண்ளதூமான 02 பரப்பு நிலப்பகுதியினை சமுர்த்தி திணைக்களத்திற்கு நகராட்சி மன்றத்திற்கு அருகில்‌ உள்ள அரச காணிக்கு மாற்றீடாக வழங்குவதெனவும்‌ தீர்மானிக்கப்பாட்டது.

இதற்கமைவாக இக்காணி கொள்வனவிற்காக நிலையான வைப்ரினை மீனப்பறுவதற்கும்‌ சமூர்த்தி திணைக்களத்திற்கு காணி வழங்குவதற்கும்‌ கெளரவ ஆளுநர்‌ அவர்களின்‌ அனுமதிக்காக கடிதம்‌ அனுப்பிவைக்கப்பட்ட நிலையில்‌ குறித்த கரணியை பெற்றுக்காள்வதற்கு சமூர்த்தி வங்கிக்‌ கட்டுப்பாட்டுச்சபை சம்மதிக்கவில்லை என தென்மராட்சி பிரதேச செயலரால்‌ தெரியப்படுத்தப்பட்ட விடயம்‌ சபையில்‌ ஆராயப்பட்டு கொள்வனவு செய்யப்படும்‌ குறித்த காணி முழுவதனையும்‌ சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்கு பயன்படுத்துவதென சபையின்‌ பிரசன்னாமான உறுப்பினர்களால்‌ எகமனதாக தீர்மானிக்கப்பட்டது.



முன்‌ மொழிந்தவர்‌ : கெளரவ தவிசாளர்‌

வழிமொளிந்தவர்‌ - கொளரவ உறுப்பினர்‌ திரு ம. நடனதேவன்‌



தீர்மானம்‌ : 21/17.08.2021

சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட J/307 நுணாவில்‌ மத்தி, கண்டி வீதி, சாவகச்சேரி என்னும்‌ முகவரியில்‌ அமைந்துள்ள ஆதனத்திற்கு அருகிலுள்ள 195 ஆம்‌ இலக்க ஆதனமானது எதிர்காலத்தில்‌ சிறுவர்‌ பூங்கா விஸ்தரிப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக கட்டகலைஞரால்‌ குறிப்பிடப்பட்டதற்கமைவாகவும்‌ தரமானதொரு சிறுவர் பூங்காவினை வடிவமைக்கும்‌ நோக்கில்‌ 2022 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்திட்டத்திட்டத்தில்‌ குறித்த காணியினை கொள்வளவுசெய்வதற்கான ஏற்காடுகளுக்கு நிதி ஒதுக்குவதென சபையின்‌ உறுப்பினர்களால்‌ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முன்மொழிந்தவர்‌ : கெளரவ தவிசாளர்‌

வழிமொழிந்தவர்‌ : கெளரவ உப தவிசாளா்‌ அ.பாலமயூரன்‌.




தீர்மான இல: 11/23.09.2021

சபையின்‌ 05/02.04.2019 ஆம்‌ இலக்க தீரமானத்திற்கமைய ரூபா 30 மில்லியன்‌ நிலையான வைப்பினை மீளப்பெற்று வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக கெளரவ ஆளுனரின்‌ அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும்‌ கெளரவ ஆளுநரினால்‌ ரூபா 24 மில்லியனுக்கான வேலைத்திட்டங்களை நிலையான வைப்பு மீளலில்‌ மூலம்‌ மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 13/09.07.2019 ஆம்‌ இலக்க தீர்மானத்திற்கமைய வேலைத்திட்டங்கள்‌ முன்‌ மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தன. தொடர்ந்து கெளரவ ஆளுநரின்‌ அனுமதியினைப்‌ பெற்று எஞ்சிய 6 மில்லியன்‌ நிலையான வைப்பு மீளல்‌ மற்றும்‌ அபிவிருத்தி ஒதுக்கத்திலிருந்து பெறப்படும்‌ நிதி மூலம்‌ நுணாவில்‌ J/307 பகுதியில்‌ சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்காகக்‌ கொள்வனவு செய்யப்பட்ட காணியில்‌ இரண்டு சிறிய வாயில்கள்‌ மற்றும்‌ அதன்‌ நடுவே பெரிய வாயில்‌ மற்றும்‌ நகர வரவேற்பு வளைவு அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள்‌ மற்றும்‌ கொள்வனவு செய்யப்பட்ட காணியினை எல்லைப்‌ படூத்ததுவதற்கான வேலைத்திட்டங்கள்‌ மேற்கொள்ள அனுமதி வழங்குவதென சபையில்‌ பிரசன்னமான உறுப்பினர்களால்‌ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

முன்மொழிந்தவர்‌:- கெளரவ உறுப்பினர்‌ திரு.க.கஜிதன்‌

வழிமொழிந்தவர்‌ :- கெளரவ உறுப்பினர்‌ திரு.வ.பிரகாஸ்‌



தீர்மான இல: 16/30.12.2021

2022 ஆண்டினை சிறுவர்‌ பூங்காவிற்கான ஆண்டாக பிரகடனப்படூத்துவதற்கு அனுமதி வழங்குவதென சபையின்‌ பிரசன்னமான உறுப்பினர்களால்‌ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு ஏற்றுக்‌கொள்ளப்பட்டது.

முன்மொழிந்தவர்‌:கெளரவஉறுப்பினர் வீ.விஜயேந்திரன்‌

வழிமொழிந்தவர்‌ : கெளரவ உறுப்பினர்‌ க.கஜீதன்‌.



தீர்மானம் : 14/24.03.2022

சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைப்பதற்கு கீழ்‌ குறிப்பிடப்படும்‌ காணிகளில்‌ ஒன்றினை வழங்குவதென சபையின்‌ பிரசன்னமான உறுப்பினர்களால்‌ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1. கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ தனங்களப்பு வீதியில்‌ அமைந்துள்ள மின்சார சபைக்கென ஒதுக்கப்பட்ட காணிக்கு கிழக்கு பக்கமாக 3 பரப்பு காணி.

2. கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ உதயசூரியன்‌ சனசமூக நிலையத்திற்கு அருகில்‌ 3 பரப்பு காணி

முன்மொழிந்தவர்‌ : கெளரவ தவிசாளர்‌

வழிமொழிந்தவர்‌ : கெளரவ உறுப்பினர்‌ திரு.க.கஜிதன்‌



விசேட கூட்டம் 31.03.2022

தொடர்ந்தும்‌ கெளரவ தவிசாளர்‌ அவர்கள்‌ உரையாற்றுகையில்‌ சாவகச்சேரி சமுர்த்தி வங்கி கட்டடம் அமைப்பதற்கு காணி வழங்குதல்‌ தொடர்பாக முன்மொழிவு வழிமொழிவுடன்‌ கூடிய தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்பட வேண்டும்‌ என தெரிவித்தார்‌.

இவ்விடயம்‌ தொடர்பாக பொதுக்கூட்டத்தில்‌ தீர்க்கமான முடிவு எட்டப்படாமையினால்‌ இவ்‌ விசேட கூட்டம்‌ ஒழுங்கு செய்ய வேண்டி ஏற்பட்டது எனவும்‌ இதற்கான மாற்று காணியாக பின்வருவனவற்றை வழங்குவதற்கு சபை அனுமதியினை வழங்கவெண்டும்‌ என கோரிக்கை விடுத்தார்‌

1. கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ தனங்களப்பு வீதியில்‌ அமைந்துள்ள மின்சார சபைக்கென ஒதுக்கப்பட்ட காணிக்கு கிழக்கு பக்கமாக 3பரப்பு காணி

2. கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ உதயசூரியன்‌ சனசமூக நிலையத்திற்கு அருகில்‌ 3 பரப்பு காணி

3. நுணாவில்‌ மத்தி பகுதியில்‌ சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியில்‌ மேற்கு புறமாக A9 வீதியில்‌ இருந்து 12 அடி பாதையுடன்‌ 2 பரப்பு காணியினை

கெளரவ உறுப்பினர்‌ திரு.கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ சபையில்‌ முன்மொழிவு இருந்தால்‌ வழிமொழிவு இருக்கவேண்டும்‌. வழிமொழிவு இருந்தாலும்‌ கூட ஆட்சேபனை இருந்தது. ஆட்சேபனை இருந்தால்‌ பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமே தவிர ஏகமனதான தீர்மானம்‌ என ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்‌ நுணாவில்‌ மத்தி பகுதியில்‌ சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்கான காணி முற்றாக கொள்வனவு செய்யப்பட முன்னர்‌ எப்படி தரப்படும்‌ என உறுதிமொழி வழங்குவீர்‌ என வினா எழுப்பினார்‌

கெளரவ உறுப்பினர்‌ திரு.க.தர்சன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ சம்மதக்கடிதம்‌ வழங்கப்பட்டது தான்‌ எனினும்‌ 02 பரப்பு காணி கொள்வனவு செய்ய முடியாததால்‌ தான்‌ கொடுக்கமுடியவில்லை எனவும்‌ நாங்கள்‌ தற்போதும்‌ காணி கொள்வனவு செய்வதற்கு தயாராக இருக்கிறோம்‌, காணி முற்றாக கொள்வனவு செய்யப்படும்‌ பட்சத்தில்‌ சமுர்த்தி கட்டடம்‌ அமைப்பதற்கு காணி வழங்க முடியும்‌ எனவும்‌ தெரிவித்தார்‌.

கெளரவ உறுப்பினர்‌ திரு.க.கஜிதன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன்‌ கூட்டத்தை ஒழுங்குபடுத்துங்கள்‌ அப்போது எமது கருத்தை அவர்களுக்கு தெரிவிக்கிக்க முடியும்‌ என தெரிவித்தார்‌.

தொடர்ந்து கெளரவ உறுப்பினர்‌ திரு.க.கஜிதன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ காணி நகராட்சி மன்றத்திற்குதான்‌ சொந்தம்‌. காணி வழங்கும்‌ அதிகாரம்‌ மாகாண காணி ஆணையாளருக்குதான்‌ உண்டு. சபை எடுக்கின்ற முடிவிற்கு நான்‌ ஆமோதிக்கின்றேன்‌ என தெரிவித்தார்‌.

கெளரவ உறுப்பினர்‌ க தர்சன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ நாங்கள்‌ 2 பரப்பு காணி விட்டுத்தான் வாங்கினோம்‌. இப்பொழுது பாதையுடன்‌ சேர்த்து உள்ள காணி 12 அடி பாதையை விட்டு பாதையுடன்‌ சேர்த்து 3பரப்புக்காணி வழங்க முடியும்‌ என தெரிவித்தார்‌.

தொடர்ந்து கெளரவ உறுப்பினர்‌ திரு.க.கஜிதன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ அரச காணி இற்கு அரச காணி இனையே வழங்க முடியும்‌ என தெரிவித்தார்‌. அதற்கு கெளரவ உறுப்பினர்‌ திரு.சுப்பிரமணியம்‌ நிதிகேசன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ அடுத்த பொதுக்கூட்டத்தில்‌ இதற்கான தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும்‌ எனவும்‌ விசேட கூட்டத்தில்‌ இதற்கான முடிவு மேற்கொள்ள முடியாது என தனது எதிர்ப்பினை தெரிவித்தார்‌.

தொடர்ந்து கெளரவ உறுப்பினர்‌ திரு.க.கஜிதன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌ சாவகச்சேரி நகரத்தை அண்டிய அபிவிருத்தியை விடுத்து கிராமத்தின்‌ அபிவிருத்தி நோக்கி நாம்‌ அனைவரும்‌ பயணிக்க வேண்டும்‌ எனவும்‌ தனது எதிர்ப்பினை தெரிவித்தார்‌.

கெளரவ உறுப்பினர்‌ திரு.க.தர்சன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌

1. கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ தனங்களப்பு வீதியில்‌ அமைந்துள்ள மின்சார சபைக்கென ஒதுக்கப்பட்ட காணிக்கு கிழக்கு பக்கமாக 3பரப்பு காணி

2, கோவிற்குடியிருப்பு பகுதியில்‌ உதயசூரியன்‌ சனசமூக நிலையத்திற்கு அருகில்‌ 3 பரப்பு காணி

3. நுணாவில்‌ மத்தி பகுதியில்‌ சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியில்‌ மேற்கு புறமாக A9 வீதியில்‌ இருந்து 12 அடி பாதையுடன்‌ 2 பரப்பு காணி இவ்வாறு எங்களால்‌ தெரிவு செய்யப்பட்ட 03 காணியிலும்‌ 01காணியினை தெரிவு செய்து பெற்றுக்‌கொள்ளட்டும்‌ எனவும்‌ சிறுவர்‌ பூங்கா காணியில்‌ முன்பக்கத்தில்‌ சமுர்த்திக்கு காணி வழங்கப்படுமாயின்‌ நாங்கள்‌ முழுக்காணியையும்‌ வழங்கி விட்டு சிறுவர்‌ பூங்காக்கிற்கு வேறுகாணியை கொள்வனவு செய்வோம்‌ என தெரிவித்தார்‌.

கெளரவ உறுப்பினர்‌ திரு.குமாரு சர்வானந்தன்‌ அவர்கள்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌

பொதுத்தீரமானங்களை மேற்கொள்ளும்‌ அதிகாரம்‌ கெளரவ சபைக்கே காணப்படுகின்றது எனவும்‌ இது தொடர்பான இறுதி தீர்மானத்தினை கெளரவ சபையே மேற்கொள்ள முடியும்‌ எனவும்‌ தெரிவித்தார்‌. சமுர்த்தி பயனாளிகளாக கர்ப்பிணி பெண்கள்‌ மற்றும்‌ வயோதிபர்களே அதிகளவான எண்ணிக்கையில்‌ வருகை தருவதனால்‌ பழைய மீன்‌ சந்தையை கொடுப்பது பொருத்தமானது எனவும்‌ இவ்‌ விடயம்‌ தொடர்பாக பகிரங்க வாக்கெடுப்பு வைக்கலாம்‌ எனவும்‌ தெரிவித்தார்‌.

சாவகச்சேரி சமுர்த்தி வங்கி கட்டடம்‌ அமைப்பதற்கு நுணாவில்‌ மத்தி பகுதியில்‌ சிறுவர்‌ பூங்கா அமைப்பதற்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியினை வழங்குவதற்கு கெளரவ உறுப்பினர்களான திரு.க.கஜிதன்‌ திரு.சு.நிதிகேசன்‌ மற்றும்‌ திரு.பா.உதயசந்தர்‌ ஆகியோர்‌ தமது எதிர்ப்பினை பதிவு செய்தனர்‌.











- தமிழ்நிலா -
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

  1. Anonymous2:58:00 pm

    நல்ல விடயம் அபிவிருத்தி என்பது தனியாக கட்டடங்கள் கட்டுவது இல்லை இயற்கை சமநிலை பாதிக்காது பெய்யும் மழையை சேமித்து பொதுஇடங்கள் மற்றும் வயல்களின் வரம்புகளில் உயிர்க்காற்றையும் வெப்பநிலையை 6 பாகை சீ இற்கு குறைக்கக்கூடிய மரங்களை வளர்த்து மரங்களால் மூடாக்கு போன்ற தேற்றத்தை உடைய பூமியாக தாய்மண்ணை மாற்றவும் திலத்தடி நீரைபாதுகாக்கவேண்டிய நடைமுறைகளை உருவாக்கவும் கட்டடங்கள் கட்டும்போது ஒவ்ஒரு கட்டங்கள் கட்டும் போதும் எத்தனை மரங்கள் இருக்கவேண்டும் எவ்வளவு கட்டடங்கள் கட்டலாம் என்ற சூழலியல் ஆய்வின் பின்னர்தான் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற நடைமுறை மேலும் வீதிகள் அமைக்கும் போது வாகனங்களின் புகையால் எழும் co2 இனை கட்டுப்படுத்த இருமருகிலும் மரங்களை நாட்டவேண்டும் இதை மேற்குலகநாடுகள் செய்கின்றன் எங்எங்கு இடம் உள்ளதோ அங்கெல்லாம் செயற்கைவனங்களை உருவாக்கிகொண்டே இருப்பார்கள் நகராட்சி என்றாலும் மானகராட்சி என்றாலும் அதைத்தான் செய்வார்கள்
    மேலும் குட்பைகளை பிரித்து தனித்தனிவீடுகளிலும் தனுத்தனி கொள்லகலங்கள் அல்லது குப்பை வாழிகள் இருக்கும் அவை மானகராட்சியால் சேமித்து மீழ் பாவனைசெய்யக்கூடியவை தனியாகவும் மக்கக்கூடிய இயற்கை உரமாக்கப்படும்
    இப்படியாக கழிவுகளை அகற்றவும் மீழ் சுளற்சி மையத்தை உருவாக்குவது பிகவும் அவசியமானதும் அவசரமானதுமாகும் மேலும் அரசபணிகளில் உள்ளவர்களும் மற்றைய மக்கள் பணிகளில் ஈடுபடுபவர்களும் அறநெறிறியுடன் செயல்படவேண்டும் காரணம் இந்த பூமிப்பந்து பல உயிர்களின் அடைக்கலபூமி இதில் நாங்கள் வாடகைக்கு வாழ்பவர்கள் என்ற உண்மையையும் நாம் வாழ்வின் முடிவில் எதையும் எமக்கானதாக்க முடியாது எனவே இந்த பூமித்தாயை அடுத்த சந்ததிக்கு கையளித்து வழமான நலமான எதிர்கால சந்ததிக்கு உறுதிசெய்வதை அரச நிறுவனங்களும் அதன் கட்டுமனங்களும் அடிப்படை கொள்கையாக வகுத்து செயல்படவேண்டும் என்பதுடன் ஒவ்ஒரு தனிமனிதனும் தன்தாய்க்கும்மேலான தாய்மண்ணை பாதுகாத்து நஞ்ணில்லா மண்ணையும் சமுதாயத்தையும் உருவாக்குவதே கடவுளிற்கு செய்யும் நேத்திக்கடனிலும் மேலானது என்ற கொள்கையுடன் அறநெறிவாழ்ந்தாலே அனைத்து உயிர்களையும் சம மாக நேசிக்கும் வழமான சமுதாயத்தையும் நாட்டையும் கட்டிஅமைக்க முடியும்
    நன்றி
    யாழ்பாணத்தில் Green layer என்ற அமைப்பை பலப்படுத்தவேண்டியது ஒவ்ஒருவருடைய தலையாய கடமையாகும்
    மேலும் மண்சாந்த சமூகம் சார்ந்த நாட்டுநலன் சார்ந்த செயல்பாடுகள் அல்லது அது சம்பத்தமாக பயணிக்கும் உறவுகள் தொடர்பு கொள்ளவும்
    00447388318578

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா