Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

முடி உதிர்தல்

1 comment

டாக்டர் எல். மகாதேவன்
நன்றி மருத்துவம் 

முடி உதிர்தல் (Hair loss)

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும்.
ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.

பிருங்காமல தைலம்
நல்லெண்ணெய் 1 லிட்டர்
கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்
நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்
பசுவின்பால் 4 லிட்டர்
அதிமதுரத்தூள் 60 கிராம்

கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.

பேன் (Tics)

சில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும். எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.

பொடுகு (Dandruff)

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது. எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம். அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.

தேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)

பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது.
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா