குடபுலவியனார்,
புறநானூறு 18
நிலம் குழிந்த இடங்கள் தோறும் மழைநீர் தங்கி நிற்பதற்கான நீர்நிலைகளைப் (குளம், ஏரி போன்றவற்றை) பெருகுமாறு அமைத்தவர்கள், இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்தியவர்கள் ஆவர்; அவ்வாறு செய்யாதவர்கள் தம் புகழை நிலைநிறுத்தாமல் மறைந்தவர்கள் ஆவர். போரின் வெற்றியினை விட இது புகழினை தரும் என்கிறார் குடபுலவியனார்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கடலால் சூழப்பட்ட உலகத்தையே தன் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, புகழ் நிறுவிய வலிமையானவன் என்று அவனின் பேராற்றலைக் குடபுலவியனார் வியந்து பாடியுள்ளார், அதேநேரம் மன்னா அதைவிடப் பெருமையானது, நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை அடைய விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதி நீர்நிலைகளை அமைப்பதே என்கிறார்.
பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்கத் தமிழன் எழுதிய இந்த வரிகளை இன்று வாசிக்கும்போது, அது ஒரு பழந்தமிழ்ப் பாடலின் வரிகளாக மட்டும் தெரியவில்லை. நீர் முகாமைத்துவம், அக்காலத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பது புலனாகின்றது. ஆனால்
இப்போது அவை நம்மிடம் கேட்கப்படும் ஒரு கேள்வியாகத் தெரிகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வாழ்க்கை, அதன் கிணறுகளோடும் நீர்நிலைகளோடும் எவ்வளவு ஆழமாக இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம். இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடத் தொடங்கி பலர் சரியான பாதையை வந்தடைந்துள்ளார்கள் எனலாம்.
நீர் என்பது வெறும் H₂O அல்ல. அது ஒரு ஊரின் நினைவு. ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம். ஒரு விவசாயியின் நம்பிக்கை.ஒரு குழந்தையின் எதிர்காலம். ஒரு சமூகத்தின் உயிர்நாடி. என்பது என் நம்பிக்கை. நிலத்தடி நீரின் மீதான நமது சார்பு எவ்வளவு அதிகம் என்பதை இந்த தலைமுறை விஞ்ஞான ரீதியாக, புள்ளிவிபரங்ளாக புரிந்துகொண்டோமானால் ஒரு முக்கியமான உண்மை புரியவரும்.
ஒரு கிணற்றில் இருந்து நாம் தண்ணீரை எடுக்கும் போது, அந்தக் கிணறு தனியாக இல்லை. அது ஒரு பெரிய நிலத்தடி நீர் அமைப்பின் ஒரு பகுதி. இன்று அதிகமாக உறிஞ்சினால், நாளை அதன் விளைவு தெரியலாம். இன்று கழிவை நிலத்தில் விட்டால், நாளை அது நமது கிணற்றில் தோன்றலாம். இன்று மழைநீரை வீணாக்கினால் நாளை நிலத்தடி நீர் மீள்நிரப்பப்படாமல் போகலாம்.
பல குடும்பங்களின் கிணறுகள் உவர்நீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகச் சந்திக்கத்தொடங்கியுள்ளன, சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக வேறு ஆதாரங்களைச் சார்ந்திருக்கின்றனர். சில இடங்களில் நீர் விநியோகம், RO வடிகட்டல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்றவை சார்ந்திருக்கின்றது. ஒரு வீட்டின் குடிநீர் பிரச்சினை என்பது அந்த வீட்டின் பிரச்சினை மட்டும் அல்ல. அது ஒரு பிரதேசத்தின் நீர்வள முகாமைத்துவத்தின் பிரதிபலிப்பு எனவும் சொல்லலாம்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடிநீர் தேவைக்காக RO தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதையும் அதன் தேவையையும் அதிகம் எழுந்துள்ளன, நிலத்தடி நீர் தொடர்பான அச்சமும் நம்பிக்கையீனமும் அதன் காரணங்களாக உள்ளன. நிலத்தடி மாசடைந்து விட்டது,. E-Coli அதிகரித்துவிட்டது, எண்ணெய்க்கசிவு ஏற்பட்டுள்ளது, கல்சியம் அதிகம் என பல காரணிகள் அச்சமூட்டுகின்றன.
RO ஒரு குறிப்பிட்ட சூழலில் பயனுள்ள தொழில்நுட்பமாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் உள்ளன:
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மட்டும் போதாது. தொழில்நுட்பத்தோடு நீர்வள அறிவும், கனிய விஞ்ஞான அறிவும் இணைந்திருக்க வேண்டும். வெறுமனே எண்களில் நீரினை அளவிடுதல் நீரின் மீது சந்தேகத்தைத் தோற்றுவிக்கும்.
நமது வீடுகளின் கூரைகளில் விழும் மழைத்துளிகள், பல நேரங்களில் கழிவுநீராக வெளியேறுகின்றன. ஆனால் அதே துளிகள் முறையாகச் சேகரிக்கப்பட்டால், ஒரு வீட்டின் நீர்த் தேவையை குறைக்கலாம், நிலத்தடி நீர் மீதான அழுத்தத்தை குறைக்கலாம். கிணறுகளின் மீள்நிரப்பலாம்; அதன் தரத்தையும் மேம்படுத்தலாம். அந்த மீள்நிரப்பும் புள்ளிகளாக (Recharge points) கிணறுகளும், கேணிகளும், குளங்களும் காணப்படுகின்றன. எனவே மழை நீர் சேகரிப்பு (Rainwater Harvesting) என்பது ஒரு கட்டிடத்தின் கூடுதல் வசதி அல்ல. ஏலவே நாம் பல வழிகளில் அவற்றை செய்தவண்ணம் தான் உள்ளோம். அது வீடுகளில் கிணறாக, தோட்டங்களில் துரவாக, மடுவாக, குட்டையாக, ஆலயங்களில் கேணியாக, குளமாக உள்ளது.
நீரைப் பாதுகாப்பது கிணற்றின் வாயிலில் தொடங்கி அங்கேயே முடிவதில்லை. ஒரு நீர்நிலையைச் சுத்தப்படுத்துவது என்பது அது எதிர்கால நீர்வளப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நீர்நிலைகளுக்குள் சேரும் கழிவுகள், நீரின் தரம், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள மனிதச் செயற்பாடுகள் போன்றவற்றை நேரடியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நீர்நிலையைச் சுத்தம் செய்வது என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல. ஒரு அரசதிட்டம் மட்டுமல்ல, ஒரு வருட முயற்சியல்ல. அது இவற்றின் கூட்டு, இவையெல்லாம் சேரும்போதுதான் அது உண்மையான நீர்வளப் பாதுகாப்பாகிறது.
தனி மனிதனிடமிருந்து சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் அதே சமூகத்தில் இருந்து வரவேண்டும். நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நீர்வளப் பாதுகாவலராக மாற வேண்டும்.
கிணறுகளை ஆவணப்படுத்துவோம். ஆவணப்படுத்துவது என்பது நாளைய தலைமுறைக்காக இன்றைய நிலத்தடி நீரின் நிலையைப் பதிவு செய்வதாகும்.
அந்தக் கிணற்றின் நீர்மட்டம், நீரின் தன்மை, உவர்த்தன்மை, பயன்பாடு, அருகிலுள்ள நிலப்பயன்பாடு, மழைநீர் ஊடுருவல், காலநிலை மாற்றங்கள் போன்ற பல விடயங்கள் அதன் கதையைச் சொல்கின்றன. கிணற்றின் அமைப்புமுறை, மூலப்பொருட்கள் அந்தக் குடும்பத்தின் கதைகளைச் சொல்லத் தவறுவதில்லை.
“நாம் காப்பாற்ற வேண்டிய நீரை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.”
ஒரு கிணற்றின் நீர் வற்றிவிடலாம். துலா அசையாமல் போகலாம். கிணற்றடி வெறிச்சோடிப் போகலாம். ஆனால் அந்தக் கிணற்றைச் சுற்றி வாழ்ந்த மக்களின் கதைகள், அவர்கள் தண்ணீருக்காக நடந்த பாதைகள், காத்திருந்த நேரங்கள், பகிர்ந்த துயரங்கள், மீண்டும் கட்டியெழுப்பிய வாழ்க்கைகள் அவற்றை நினைவில் வைத்திருக்கும் வரை, அந்தக் கிணறு ஒரு உயிருள்ள வரலாறாகவே இருக்கும்.
அதனால் எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துங்கள்.
.png)
.png)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா