Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


பனியில் குளிர்ந்த
சூரியப் பொறிகள்..

பருவப் பெண்ணின்
முகப்பருக்கள்..

வேதனையிலும்
என்னை புறம் தள்ளிய
தேவதை நீ....

முகம் கூசாத
முழு வெண்ணிலா...
வாடாத தங்க ரோஜா..

உள்ளத் தொட்டிலில்
உறங்க வைக்கும் நீ,
என் உடலுக்கு
வெப்பம் தரும் சூரியன்...
வெப்பம் போக்கிடும்
தண்மையும் நீயே...

தோளில் வைத்து
உலகம் காட்டியவள்  நீ..
என்னை சுற்றி
சுழன்றுகொண்டிருக்கும்
மொத்த உலகமும் நீ...

இறைவன் படைப்பில்
நிறைவானவள் நீ...
என்னை பிரதிபலிக்கும் 
நிஜ கண்ணாடி...

பாதி ராத்திரி
துக்கம் மறந்தாய்..
பாவி என்னால்
எல்லாம் இழந்தாய்..

உச்சி முகர்ந்தாய்
உள்ளம் மகிழ்ந்தாய்..

முதல் நொடி
அள்ளி அணைக்கையில்,
நான் என்ன ஆவேன் என்று
நினைத்தாயோ தெரியவில்லை...

கன்னத்தில் குழி விழ
நான் சிரிக்கையில்
என்ன நினைத்தாய் அம்மா...??

இரத்தத்தை பாலாய்
மட்டும் ஊட்டவில்லை...
தமிழ் கொண்டு ஊட்டினாய்..
இதய துடிப்பில்
இசை சொல்லித்தந்தாய்...

உன்னை முதல் முறை
அம்மா என்றழைக்கையில்..
கவிதை சொல்வேன் என்று
நினைத்தாயா....?

நீ சப்பி ஊட்டிய
சோறு என்னும் என்
தொண்டையில் இனிக்கிறது...

நடந்து கால் களைக்கையில்
கை நீட்டினாய்...
உன் கைகள் தான் என்
நடை வண்டி..

உன் முதுகில் தான்
ஊர்வலம் போனேன்...
உப்பு மூட்டை தூக்குவதற்காய்
எத்தனை முறை அடம்பிடித்தேன்..
பொறுமையை எங்கே கற்றுக்கொண்டாய்..

உன் மடி போல பஞ்சனை
இதுவரை  கிடைக்கவில்லை..

இப்போதும் என்னை
கட்டியிருப்பது உன் அன்பு
அணைப்புக்கள் தான்...

எத்தனை தவறுகள்
புரிந்திருக்கிறேன்...
தண்டனையாய்
முத்தம் தருவாய்..

அதற்காய் தப்பு செய்யவே
பழகிவிட்டேன்..

அம்மா
உனக்குள் அடங்கியவையே
அத்தனையும்...
என் முதல்ஆசான் நீ..

நிலாச்சோறு உன்னால்
உண்டிருக்கிறேன்..
என்னை விட பசியாறியது நீதான்..
என் கற்பனைக்கு விதை
நீ சொன்ன
கட்டுக்கதைகள் தான்...

நீ சேமித்து வைத்த
பிரியங்கள் செலவழிந்து விடாது...
உன் அன்பை வீண் விரயம்
செய்யவில்லை...

செதுக்கிய கல்லை
கடவுள் என்பாய் - இல்லை
கருவில் எனை செதுக்கிய
கடவுள் நீ...

நீ யார்
என்னை போல நான்..
நான் யார்..
மறு பாதி நீ...

நீ யார்
என் முதல் எதிரி..
உன்னோடு தான் அதிக சண்டை 
பிடித்திருக்கிறேன்...
உன்னால் தான் பலமானேன்..

என் முதல் நண்பி..
என் தோல்விகளை வெற்றியாய் 
பார்த்தவள் நீ மட்டும் தான்...
உன்னால் தான் உடைந்துபோகவில்லை...

என் முதல் காதலி..
உன் போல் தான்  மனைவி வேண்டும் 
என்று நினைத்திருக்கிறேன்.

உன்  தவம் நான் என்றாய்...
இல்லை
என் வரம் நீ அம்மா....!!


தமிழ்நிலா

மணல்க்காடு 

இயற்கை அழாத காரணத்தால்
கண்ணீர் வற்றிவிட்டது...
நிலம் எல்லாம்
பித்த வெடிப்புக்கள்....

மரங்களுக்கு என்ன நோய்
எலும்பும் தோலுமாக...
இப்படி எரித்தும் மேகம்
கருமையாகவில்லையே...

இயற்கை பயந்திருக்கிறது...
பனிமலை உருகுகிறது,
வேர்த்து வழிகிறது...

என்ன நடந்ததோ
சூரியனுக்கு காச்சல்..
விண்வெளியில்
செய்மதி கண்டிருக்குமோ...

மீன்கள் முச்சு திணறுகின்றன
நுரையீரல் புற்றுநோய்...
கடலுக்குள் கப்பல்
எப்போது கவிழ்ந்தது..

நிலம் எப்படி வெடித்தது..
பூமிக்குள் என்ன சத்தம்
மாரடைப்பு வந்திருக்கும்...

இயற்கை பயந்திருக்கிறது...
விஞ்ஞாத்தினால் இருக்குமோ...
மூச்சு இழுக்கிறது...

 பூமித் தாய் மறைந்து விட்டாள்..
அழகான உலகம் இறந்துவிட்டது..

தமிழ்நிலா

மௌனம்
சம்மதம் மட்டுமா...?

உணர்சிகளின்
வெளிப்பாடு..
எண்ணங்களின்
செயற்பாடு..

ஒலி இல்லாத முதல் மொழி...

புத்திசாலிகளின்
ஆயுதம்..
கோழைகளின்
கேடயம்...

ஆண்களின்
பலம்...
பெண்களின்
பலவீனம்..

சந்தோசத்தில் மௌனம்..
துன்பத்தில் மௌனம்..

மௌனம்
இருளில் வெளிச்சம்,
வெளிச்சத்தில் இருள்...

மௌனம் என்பது 
வாய்பேசா அடிமைத்தனம் அல்ல...

மௌனம் வரம்
நம்மைநோக்கி தவமிருந்து
நாமே பெறுவது..

உடல்மொழி மௌனம்
உயிர்மொழி மௌனம்

மௌனம்
மந்திர ஓசை!
மாயா ஜால வித்தை...

உன்னால் மௌனமாக 
இருக்க முடியுமா...?
மௌனம் செயல் அல்ல...
மௌனம் ஒரு கலை...

உன்னால் மௌனத்தின்
சத்தத்தை உணரமுடிகிறதா...?
மௌனம் நிழல் அல்ல 
மௌனம் நிஜம்...

மௌனம்..
சிக்கலான மொழி, 
சிக்கனமான மொழியும் கூட...

காகிதம் மௌனமாக இருந்தால்
ஓவியம் பேசும்...
பேனா மௌனமாக இருந்தால் 
கவிதைகள் பேசும்...

மௌனம் சம்மதமா
இல்லை.. இல்லை...
சம்மதம் இல்லை என்பதும் கூட...

மௌனம் என்பது கேள்வி
பதிலும் மௌனம் தான்....

தமிழ்நிலா

நிலவு
வான தேவதையின்
தங்க மூக்குத்தி...

இருள் விதவையின்
மஞ்சள் பொட்டு...

ஒப்பனை செய்யாத
உலக அழகி..

சூரியனின் தத்து மகள்..
பூமியின் முதல் காதலி...

ஏழைகள் வீட்டு
மின்குமிழ்...

சின்ன குழந்தைகளின்
சத்துணவு..

விஞ்ஞானிகளின் விந்தை உலகம்..
கவிஞர்களின் ஒரு தலைக்காதலி...

நிலவு அதிஸ்டகாரி தான்
உடலில் ஆங்காங்கே  மச்சங்கள்...
இருப்பினும்
இரண்டாம் முகம் இதை விட
அழகாய் இருக்கும்...!

நிலவு மின்னலின் வேர்வையிலிருந்து
தான் பிறந்திருக்கும்...
ஆனால்
இந்த தண்மையை மழையிடம்
எப்படி பெற்றிருக்கும்...??

பசி அடங்கியிராது
கூனல் பாட்டி
நிலவில் வடை சுட்டிராவிட்டால்..

வாழ்க்கையின் அர்த்தம்
புரிந்திராது - நிலவு
வளர்ந்து தேயாவிட்டால்...

எல்லா நாளும்
அமாவசை தான்
நிலவு வராமல் இருந்தால்...

இருந்தும்..

நிலவே உன்னை,
தூரத்தில் இருந்தே
இரசிக்க விரும்புகிறேன்..

தொடாத தூரத்தில் நீ இருப்பதால் அல்ல..
தொட்டு விட கூடாது என்பதால்...

தமிழ்நிலா 


மனிதாபிமானத்தை
கைப்பற்றுவதற்காய்
மூன்றாம் உலகப்போர்..

தாய்மொழியின்
படுகொலையை கண்டித்து
ஐந்தாவது ஈழப்போர்...

குடி நீர் பெற
படையெடுப்பு..
உணவுக்காய்
மௌன போராட்டம்...

அன்பை தேடி
நடை பயணம்....
வறுமை ஒழிக்க
உண்ணாவிரதம்....

கலாச்சாரம் வாழ
மனித சங்கிலி...
மரங்களை காக்க
பசுமை புரட்சி...

மீண்டும் 
பதற்றமான சூழல் ஆரம்பம்....
தோழர்களே...
வழமைபோல் பதுங்கிவிடுங்கள்..

காணமல் போன பட்டியலில்
ஒற்றுமையும் சேரட்டும்...

-தமிழ்நிலா-



01. இதற்கு தான் ஏற்பாடா...?

சுற்றம் கதறி அழுது 
புலம்பிக் கொண்டிருந்தது..
கனவுகள் சுமக்கும் 
சுமை தாங்கி சரிந்திருந்தது...

நெஞ்சம் கரைந்திருக்க 
வாய்ப்பில்லை - ஆனால் 
முந்தானைகள் நனைந்திருந்தன..

அழாவிட்டால் வேஷம் 
கலைந்து விடும் என்று 
ஒரு கூட்டம் ஒப்பாரி வைத்தது...

பிணம் என்று 
பெயர் மாற்றப்பட்டிருந்தது..

வரவு செலவு அன்று தான் 
பார்க்கப்படுகின்றது..
வக்கீல்கள் வந்திருந்தார்கள்..
சொத்து வழக்கு நடக்கிறது...

செலவு இல்லாத உணவு பரிமாற்றம்...
உண்டபின் தூக்கம்..
உறவுகளின் குறட்டை ஒலிகளையும்
மீறி இரவு அழுகிறது...

அழுகைக்கு பின்னால்
சிரிப்பொலிக‌ளும் கேக்கிறது...

பார்த்து பொறுக்காமல் 
பேழைக்குள் இருந்து எழுந்து விட 
நினைக்குறது உடம்பு...
முடியவில்லை....

கால்கள்
கட்டப்பட்டிருந்தன..
கைகள்
இணைக்கப்படிருந்தன..

மூச்சு முட்டுகிறது
கதைக்க நினைக்கிறது...
முடியவில்லை....

புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
எத்தனை ஏற்பாடா...?
***

02. மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...

உறக்கம் மரணத்தின் ஒத்திகை..
மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...

மரணம் நீண்ட பயணத்தில் 
நிரந்தர ஓய்வு... 
மரணம் கொடிய ஒருவழிப் பாதை..

மரணம் கற்பனைகள்  இல்லாத
முதல் நாள்...

மரணம் எம்பின்னால் தான் 
நடக்கிறது...
சிலருக்கு முன்னாலும் கூட...
மரணம் மனிதர்கள் போல்
முகபாவங்களை மாற்றிக்கொள்ளும்...

பயந்துவிடாதீர்கள்
பயந்தாலும் விடவா போகிறது...??

மரணத்தை நண்பராக
ஏற்றுக்கொள்ள யார் தயார்...?

இருந்தும்...
மரணம் நண்பராக்கி விட தான்
நினைக்கிறது....
***

தமிழ்நிலா
ஆரம்ப பிரிவு தம்பி ஒருவரின் பாடசாலை தேவைக்காக, உடல் உறுப்புகளின் தானத்தின் அவசியம் பற்றி பனையுடன் ஒப்பிட்டு எழுதியது.



பனை நான் பண்புடன்
பாடுகிறேன்... பணிவாய்
பாலரே கேட்டுடுவீர்...

ஒரு விதையால் தான்
நான் பயிரானேன்...
தினம் வளர்ந்து மரமானேன்..
நாளும் உருகி திரியானேன்...
இங்கு பலருக்கு உறவானேன்...

என் தலை எனும் இல்லை ஓலை
கொண்டு ஏழைகளில் வீட்டில்
கூரையானேன்...
என் கண்கள் எனும் நுங்குகள்
தந்து இளசுகள் நெஞ்சில்
நிலையானேன்...

என் இதழ் வழி வழியும் பதநீர்
பழசுகள் உயிராகும்..
என் உடல்களின் சிதைவுகள் எல்லாம்
வீட்டில் விறகாகும்...

என் உடலில் உயிர் உள்ளவரை..
உதவி எல்லாம் செய்கிறேன்..
உயிர் அது போனபின்னும்
பெயருடன் தான் வாழ்கிறேன்...

அது போல் நீங்களும் வாழுங்கள்..
உலகத்தை ஆளுங்கள்...
இருக்கையில் பலருக்கு உதவுங்கள்...
சிறப்புடன் வாழுங்கள்..
உடல் தானம் செய்யுங்கள்...
இறந்தபின்னும் வாழுங்கள்...

தமிழ்நிலா


நிலா நம் முற்றத்தை
தொடுவதில்லை...
வானமோ வானவில்லோ
வந்ததாய் தெரியவில்லை..

மழை மட்டும் அப்போ அப்போ
வந்து போக தவறுவதில்லை...
இடை இடையே தவிக்கவிட
மறப்பதும் இல்லை....

மழை...

வானக்கடலின் முத்து..
மேகத்தாயின் ஆனந்த கண்ணீர்..
மின்னலுக்கும் இடிக்கும்
பிறந்த குழந்தை..
தென்றலின் காதலி..
தூவானத்தின் நண்பி..

பள்ளி நாட்களில்
முதல் மழை...
குடை இல்லாத நாட்களில்..
புது மழை...
மடக்கி வைத்திருந்த குடைகளை
மறைத்து வைத்தவாறு
ஒய்யாரமாய் நடை...

எல்லாம் இழக்கப்பட்டிருந்தது...

அம்மாவின் எதிர்ப்பை தாண்டிய
மழையில் மண் விளையாட்டு...
அப்பாவின் அன்பை விரும்பாத
காகித கப்பல்களில் பயணம்..
காதலியின் அரவணைப்பை
தாண்டிய மழைக்குளியல்...

எல்லாம் காணமல் போயிருந்தன..

மழை நம்மை
நனைக்கவே யோசிக்கின்றது......
இருந்தும் எதோ ஒன்று
தடுக்க துடிக்கிறது... 

மழையே...

நீ தீண்ட வருவாய் என்று
காத்திருகின்றது  மண்...
நீ சுவாசம் தருவாய் என்று
இன்னும் உயிரோடு செடிகள்...
தாகத்தில் நதிகள்
தொண்டை வறண்டு இருக்கின்றன..
காமத்தில் மயில்கள்
தோகை விரிக்க நினைகின்றன...

ஏழைகள் வீடு மேயப்பட்டு விட்டன...
வீதிகளும் போடப்படுகின்றன...
வரப்புகள் உயர்ந்து விட்டன
இன்னும் என்ன தயக்கம்..

தமிழ்நிலா



யாழ் தேவி துயிலுரியப்படுகிறாள்
துச்சாதனன்களால் அல்ல,
பாஞ்சாலிகளால்...

உரக்க கட்டளை இடு துரியோதனா
ஆடைகளை களையாதே என்று..

சபதம் செய்து விடு துச்சாதனா
ஆடை கொண்டு அங்கம் மூடாமல்
போகமாட்டேன் என்று...

கௌரவா்களே ஓடி வாருங்கள்
பாஞ்சாலிகள் துயிலுரிகிரார்கள்...
கண்ணன் சேலை தேடி
ஓடிக்கொண்டிருக்கிறான்...

தமிழ்நிலா


உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..

முதல் தீண்டலிலே
விலை போகின்றது..
அடுத்தகண புன்னகையில்
விலை போகின்றது...

கடிதங்கள் பரிமாறி
கடலையும் போடுகையில்
விலை போகின்றது....
கைபிடித்து நடக்கையில்..
கைபேசி குறும் செய்தியில்
விலை போகின்றது....
கணனி இணையத்தில்
கடல் காற்று வாங்கையில்
விலை போகின்றது....

காதல் என்கையில்...
கட்டி அணைக்கையில்...
விலை போகின்றது...
மணந்தவளை மறந்து,
மற்றவளை நினைக்கையில்...
விலை போகின்றது...

கலாச்சாரம் விலை போகின்றது..
கற்பும் விலை போகின்றது..
குடல் பசிக்கா விலை போகின்றது...???
இல்லை... உடல் பசிக்கே போகின்றது

உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..
புனிதங்கள் புதைக்கப்பட்டு
அசிங்கங்கள் விதைக்கப்பட,
உடலே விலை போகிறது..


தமிழ்நிலா

காற்றுவெளி August 2012
Next PostNewer Posts Previous PostOlder Posts Home