Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்

Leave a Comment

பங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு  பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்கால வலிகாமக்கார் குறைஞ்சது ஒரு திங்களாவது கட்டாயம் வந்து போவினம். ஆனாலும் கடைசி திங்கள் தான் மிக மிகச்சிறப்பு. மணிக்கடைக்கு எண்டு கூட கிறவுட் இருக்கும். பங்குனி திங்கள் முடிந்து ஒரு கிழமை ஆகி விட்டது, இன்று தான் நேரம் கிடைத்தது.

பன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் 

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கண்ணகி கோயிலுகளில் மட்டுவிலில் இருக்கிற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வரலாற்று புகழ் மிக்க  கோவிலாகும்.  1750 ம் ஆண்டில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு இருப்பதாக ஊரில் பேசிக்கொள்வார்கள்.  இந்த  கோவிலின் பெயர்  உருவானதும் காரணமாக தான். பள்ளிக்கூடத்தில சமயபாட ஆசிரியர் சொன்ன கதை இன்னமும் ஞாபகம் இருக்கிறது. பசுத்தலையை புதைத்த இடத்திடில திரும்ப தோண்டியபோது பன்றித்தலை இருந்ததாம். அந்தகாலத்தில பன்றித்தலைச்சிக்கு நடந்து பிறகு மாட்டுவண்டில், கொஞ்சம் போக டான்ட் மாஸ்டர், ரக்டர் இப்ப ஹையஸ் கார்ல எண்டு சனக் கூட்டம் அலைமோதும்.

எங்களுக்கு இஞ்சையும் சரி அம்மாவின் ஊரிலையும் சரி அம்மன் தான் குலதெய்வம். அம்மாவின் ஊர் எது எண்டு கேப்பீங்கள். கரணவாய்ல சோளங்கன். இரண்டு இடத்திலையும் வீட்டுக்கு கிட்டவா அம்மனும் காளியும் இருக்கு. அதால தான் என்னவோ எனக்கும் அம்மன்ல ஒரு ஈடுபாடு. பதினொன்று பன்னிரண்டு வயது இருக்கும். இடம்பெயர்ந்து வடமராட்சில இருந்த காலத்தில கஞ்சிக்கு தூக்கு சட்டியும் கொண்டு போவம். பயப்படவேண்டாம். வேற ஒண்டும் இல்ல கைபிடி போட்ட வாளி. ஊரில தூக்கு சட்டி எண்டு சொன்னாத்தான் விளங்கும். அப்ப உந்த சொப்பிங் பாக் எல்லாம் இல்லை. வாழை  இலை, தேக்கு  அல்லது தாமரை இல்லைதான். 

பன்றித்தலைச்சில ஒரு பெரிய தீர்த்தக்கேணியும் இருக்கு. 100 அடி நீள அகலம் வரும். ஏல் படிக்கிற காலத்தில காலமை 5 மணிக்கு தொடர்ந்து எல்லா திங்களும் போய் குளிச்சு காலம புக்கை அல்லது சோறு சாப்பிட்டு வாற வழக்கமும் இருந்தது. காலம் போக வேலை என்று ஆக பின்னேரம் போறதை வழமையாக்கியாச்சு. கடைசி திங்கள் உட்பட எதாவது ஒன்றோ இரண்டோ திங்கள் தான் தரிசனம்.

கோவில்ல பொங்கல் பொங்கி அவர்களே படைப்பார்கள். படையல் படைக்கவெண்டு முன்னுக்கு மேசை இருக்கு. முடிய பக்தர்களுக்கும் வழங்கப்படும். காலமைல இருந்து இரவு வரை நடக்கும். காவடிகள், கற்பூர சட்டிகள் நேர்த்திகள் என்று எப்போதும் பிஸியாக தான் கோவில் இருக்கும்.

முந்தி அம்மாவோட போற ஆக்களுக்கு அம்மனை பற்றி நினைவிருக்காது. உந்த ரீவி கேம், தண்ணித்துவக்கு, றிமோட் கார், கூலிங்கிளாஸ், ஐஸ்கிறீம், கச்சான் தேன்முறுக்கு இதுகள் தான் நினைவுகளில் இருக்கும். இது எல்லாம் வாங்கி தராவிட்டால் அம்மாவோடு முறுகுப்பாடு. சீலைத் தொங்கல்ல தொங்கினபடி தான் கோயில் சுத்திறது. இப்ப மணிக்கடைல இந்த பொருட்களை பார்த்தால் ஒரு சந்தோசம் தான வரும். எடுத்து பார்க்க தோன்றலாம், வாங்க முயலலாம். இன்னும் எங்களை போலவே சண்டை பிடிக்கும் குழந்தைகளில் காதலும், அம்மக்களின் பரிதாபமும் வரலாம்.

எல்லாம் மாறியாச்சு. கோவில் கால்கழுவிவிட்டு உள்ளேபோய் தரிசிக்க தோன்றும், ஏன் என்றால் தேவைகள் அதிகம். சோளம் அல்லது கருஞ்சுண்டல் வாங்கி சுவைக்க தோன்றும். ஏன் என்றால் கசப்போடு வாழப் பழகி இருந்தோம்.  


தாவணிகளையோ சலவர்களையோ பார்க்க தோன்றலாம், வயசுகளோடு இருக்கலாம், வயசை தண்டியும்  இருக்கலாம். இப்போது எல்லாம் மாறி இருந்தது. நண்பன் ஒருவன் சொல்வான் சமூகத்தில் புரட்சி உருவாக்கியது  உந்த வைட்டினிங் கிரீமும் நைட் கிரீமும் தான் என்று. உண்மை தான். போனவைக்கும் தெரியும் பார்த்தவைக்கும் தெரியும்.  உப்படி போனால் கொள்ளை போகாமல் என்ன செய்யும், மனசும் சரி பொருளும் சரி,

பங்குனித்திங்களும் - மணியம்  சேர்ம்

இது இப்படி இருக்க. தென்மராட்சியில இருக்கிறவைக்கு பங்குனித்திங்கள் என்றால் பன்றித்தலைச்சியும், சோலையம்மனும் தான் உடன ஞாபகம் வரும். அதுகும் சோலை அம்மன் என்றால் மணியம் சேர் வீட்ட படிச்சவைக்கு நல்லாத்தெரியும். அங்க படிச்சா குறஞ்சது அந்த பங்குனித்திங்கள் அனுபவமாவது இருக்கும். எங்கட பச்சுக்கும் அந்த அனுபவம்  வந்து சேர்ந்தது. சேரின்ர பூசை வருது எண்டு முதல் திங்களே அலாட் ஆகிடுவம். சேர் பூசைக்கு முதல் நாள் தான் செல்லுவார். சனம் நாளைக்கு கோயிலுக்கு வரவேணும் எண்டு. உத்தியோகபூர்வ அழைப்பு அது.

ஞாயிறும் வேலை தான். கோயில் பாதைகள் கூட்டி கிளீன் பண்ணுற வேலை. கோவில் கழுவுற வேலை. கிடாரம் வைக்க எரிஞ்ச தென்னங்குத்திய எடுத்து புதுசு வைக்கிற. சேர் வீட்டையும் நிறைய வேலை நடக்கும். வெங்காய் உரிக்கிறவேலையளும் இருக்கும். திங்கள் நாளைக்கு தான் இருந்தாலும் ஒரு வேகம்.


காலமையே போடுவம். மோருக்கு வெங்காயம், மிளகாய் வெட்டுறது. காய்கறி முதல் நாளே ரெடியா இருக்கும். எங்களுக்காக பூசணி, வாழைக்காய் வெயிற்றிங்கில இருக்கும்.  ஒரு பக்கத்தால மகளிரணி  வெட்டுவினம். தேங்காய் திருவுறது இன்னொருபக்கம். மற்றப்பக்கத்தால சோறு அவியும். இப்படி ஆள் ஆளுக்கு ஏற்றமாரி வேலை இருக்கும்.

இப்படி தான் எங்களுக்கு மிளகாய் வெட்டுற வேலை, காம்பை உடைச்சு வெட்டி முடியிற நேரம் எரியதொடங்கீட்டுது கைய தண்ணில கழுவ இன்னும் எரிவு கூடீ எங்கடபாடு கஷ்டமா போச்சு பிறகு தேங்காய்ப்பூவில கைய தேய்க்கச்சொல்லி ரீச்சர் சொல்ல நாங்களும் அப்படி செய்து கொஞ்சம் சரியாகிவிட, பிறகு அடுத்த வேலை.

எங்களுக்கு கெத்து காட்டுற வேலை எண்டா அது சோறு அவிய ஏரியாவில தான். அடுப்புக்கு விறகு வைக்கிற, கிடாரம் மாத்துற, றக்கின கிடாரத்த காவிக்கொண்டு வாசலுக்கு வாறது,  சோபனுக்கு கோவில் வேலையள் நல்லா ஓடும். அதுக்க இதுக்க எண்டு திரிவான். வேட்டி கட்டவும் ஆள் தான் வேணும். வேட்டிய கட்டி அதை தூக்கி மடிச்சு கட்டி அதுக்கு மேல துவாய் ஒண்ட கட்டி, சேட்டும் போடாம பொம்புள ரீமுக்கு முன்னால போய் வாறதுக்கு ஒரு கெத்து வேணும் தான். அப்ப திரிஞ்சத நினைக்க இப்ப வெக்கமாகிடக்கு. வேட்டி இல்லாம வந்தா சேர்வீட்ட இருந்து வந்த வேட்டி பாத்துக்கொண்டிருக்கும். அது ஒரு காலமப்பா.



எல்லாம் முடிய மண்டபத்தில வரிசையா பனையோலைப் பாயவிரிச்சு சோறை மலைமாரி குமிச்சு, கறிய மேல போட்டு கடசியா மோரையும் தயிரையும் விட்டுக் கிண்டும்போது வாற வாசம் இருக்கே. அம்மம்மா. பிறகு பூசை, படையல் முடிய சாப்பிட்டும் அடங்காது அந்த வாசம். நாங்கள் பூசை எல்லாம் பார்க்கிற வகையறா இல்லை எண்டு எல்லாருக்கும் தெரியும். மிஞ்சிப்போன பாவாடை சட்டைகளையும், சுடிதார்களையும் வர்ணித்திருக்கலாம். அல்லது காலமைல இருந்து குடிச்ச மோர் ஏதாவது செய்து கொண்டிருக்கலாம். இல்லாவிடின் முன்னால இருக்கிற சோற்றுப் படையலுக்கு அடிமையாகி இருக்கலாம்.

எங்களுக்கே இப்படி எண்டால் முன்னால சாமிகளுக்கு எப்படி இருக்கும். மேல் சோறின்ர சுவை வேறலெவல்ல இருக்கும். கீழ கறியோ மோரோ போயிருக்காது. சேர் சரி குடுங்கோ எண்டு சொல்லும் வரை கிடாரத்துக்க அள்ளி நிரப்பின சொர்க்கத்தோடை நிப்பம். சரி எண்டதும் அன்னதானம் ஸ்டாட்.

-தமிழ்நிலா-

இக்கட்டுரை ஊறுகாய் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://oorukai.com/?p=1919
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா