Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை - அரசும் - TDAயும் பகுதி-1

2 comments

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2024.06.03 வரை கடமையாற்றிய வைத்திய அத்தியட்சகர் Dr. சி.குமரவேள் நிரந்தர பிரதி மருத்துவ நிர்வாகத்தர நியமனம் பெற்று ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற போது அவரது இடத்துக்கு இதே நியமன பட்டியலில் நியமனம் பெற்ற Dr. த. காண்டீபன் நியமிக்கப்பட்டார்.
அவர் அந்நேரத்தில் இங்கிலாந்தில் தனது உயர்கல்விக்காக சென்றிருந்தமையால் 06.06.2024 அன்றே நாடு திரும்பி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதவியேற்றார்.

Dr. காண்டீபன் தனது உயர் கல்வியை முடிப்பதற்கு மேலும் 10 மாதங்களுக்கு இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்ததால் அடுத்த நாளே 07.06.2024 தனது கடமைகளை Dr திருமதி ரிசானி சேரலாதன் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு செல்வதற்கான விடுமுறையில் சென்றார்.

Dr ரிசானியின் பதில் நியமனம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் முறையாக நிரல் அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசியல் யாப்பின்படி சுகாதாரத்துறைக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டவை. அதற்கான ஆளணியை தரும் அதிகாரம் மட்டுமே நியமனங்கள் தொடர்பாக நிரல் சுகாதார அமைச்சுக்கு உரியது. ஆனால் இவ்வதிகாரம் தொடர்ச்சியாக நிரல் சுகாதார அமைச்சால் மாகாணங்களுக்கு மறுக்கப்பட்டே வருகின்றது. ஆனால் பல மாகாண சபைகள் இவ்வதிகாரத்தில் ஆகக் குறைந்தது மருத்துவ நிர்வாகிகளின் நியமனத்தையும் குறிப்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரது நியமனம் மற்றும் அவர்களது இடமாற்றத்துக்கான அதிகாரத்தையும் தக்கவைத்துள்ளன. 

இப்பதவிகளுக்கு நிரல் அமைச்சினால் வழங்கப்படும் தான்தோன்றித்தனமான நியமனங்களை அவை ஏற்பதில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக வடமாகாணம் துளியேனும் இவ்வதிகாரத்தை பயன்படுத்துவதுமில்லை, போராடுவதுமில்லை. 

ஆரம்பத்தில் புல்மாட்டைக்கு நியமனம் வழங்கப்பட்டு பின்னர் உயர் அழுத்தங்களால் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு நியமனம் மாற்றப்படுகிறது, அங்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையாற்றிய Dr  குமாரவேல் நிரந்தர பதவியில் பணிஅமர்த்தப்பட்டமையில், அங்கு வெற்றிடம் இல்லை என்பதை அறிந்து பின் நியமனம் நீக்கப்படுகிறது. 

திடீரென Dr அருச்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான பதில் வைத்திய அத்தியட்சகராக நிரல் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட கடிதத்துடன் மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் 14.06.2024 அன்று அறிக்கையிட்டார். இவரது நியமனத்திற்கு முன்னதாக நிரல் சுகாதார அமைச்சிலிருந்து எவரும் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துடனோ அல்லது யாழ்ப்பாண சுகாதாரத் திணைக்களத்துடனோ தொடர்பு கொண்டு இப்பதவி வெற்றிடமாக உள்ளதா எனக் கேட்டறியவில்லை.

தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தாத வடக்கு மாகாணம் அல்லது வட மாகாண சுகாதார அமைச்சு, Dr அருச்சுனாவை சாவகச்சேரியில் பதவியேற்க அனுமதித்தனர். முரண்பட விரும்பாத Dr ரிசானி சாவகச்சேரியை விட்டு வெளியேறினார்.

அவர், தான் பதவியேற்ற சில நாள்களுக்குள்ளேயே நீண்டகாலமாக செய்யப்படாமலிருந்து வந்த பல அபிவிருத்திகளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் செய்துள்ளதாக தனது முகநூலில் பதிவிட ஆரம்பித்தார். அதனால் அவர் பதவியேற்றபோது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சில நிலைகளைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். இது ஒன்றே அவை தவறானவை, பொய்யானவை என்பதை தெளிவாக்கும்.
 
பொது மருத்துவ பிரிவும் குழந்தை மருத்து பிரிவும் வைத்திய நிபுணர்களுடன் முழுமையாக இயங்கிவந்தன. 2023ல் அப்பிரிவுகளிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நோயாளிகளின் வீதம் மொத்த அனுமதியில் 6% இலும் குறைவு.

தற்போது உள்ள மகப் பேற்று விடுதி புனரமைக்க வேண்டிய நிலையிலுள்ளது. அதற்கான நிதி கடந்த வருடம் கோரப்பட்டபோதும் அப்போது கிடைக்கவில்லை. ஆனாலும் இவ்விடுதி 18 கட்டில்களுடன் தனக்கு அனுமதிக்கப்பட்ட சேவைகளை 03 வைத்தியர்கள் 03 தாதிய உத்தியோகத்தர்களுடன் முழுமையாகச் செய்து வந்தது.

கடந்த வருடத்தில் 24 சுகப்பிரசவங்களும் இவ்வருடம் அவர் இங்கு வரும் வரையும் 10 சுகப் பிரசவங்களும் இடம் பெற்றன. ஒரு தசாப்தத்துக்கு முன்னர் நூற்றுக்கணக்கான பிரசவங்கள் இடம் பெற்ற இவ்வைத்தியசாலையில் இன்று இவ்வளவு குறைவான பிரசவங்கள் இடம் பெறுவதற்கான காரணம் நிர்வாக வினைத்திறனின்மை அல்ல.
 
தற்போது இலங்கையின் சுகாதாரக் கொள்கைகளின்படி மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவராவது நிரந்தரமான பதவியில் இல்லாத இடத்தில் உறுதி செய்யப்பட்ட அல்லது முன்னரே மகப்பேற்று வைத்திய நிபுணரால் தீர்மானிக்கப்பட்ட சுகப்பிரசவங்கள் தவிர ஏனைய பிரசவங்களை அனுமதிக்கும் வழமை இல்லை. ஆனால் ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணர் நியமிக்கப்படுவதாயின் சத்திர சிகிச்சை செய்வதற்கான வசதிகள் அவ் வைத்தியசாலையில் இருக்க வேண்டும். இதனாலேயே சத்திர சிகிச்சைக் கூடத்துடன் கூடிய புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் 2015 இறுதியில் இடப்பட்டது.

அத்துடன் அவசர சிகிச்சைப் பிரிவு நாடளாவிய வழமைக்கமைய வெளி நோயாளர் பிரிவில் மூன்று கட்டில்களுடன் இயங்குகின்றது. அண்மைக்காலத்திலேயே ஆதார வைத்தியசாலைகளில் தனியான முழு வசதிகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை அமைத்து இயக்கும் வழக்கம் நாட்டில் விரிவாகி வருகின்றது. இதுவரை வெளி நோயாளர் விடுதியில் இயங்கி வந்த அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு வருடத்துக்குள் மட்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் செயற்கைச் சுவாசம் வழங்குவதற்கான கட்டிலைப் பெற முடியாத நிலையில் 03 நோயாளிகள் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். ஆளணிப் பற்றாக் குறைவால் வெளி நோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே அவசர சிகிச்சைப்பிரிவிலும் (இரவிலும் பெரும்பாலும் பகலிலும்) வைத்திய நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் கடமையாற்றுகின்றனர்.

சத்திர சிகிச்சை பிரிவானது 03 வைத்திய அதிகாரிகளுடன் மட்டும் இயங்கி வருகின்றது. 24மணி நேரம் தொடர்ந்து இயங்க ஆகக் குறைந்தது 4 வைத்திய அதிகாரிகள் தேவை. ஆனாலும் 2023ல் இம்மூன்று வைத்திய அதிகாரிகளால் 1500க்கும் அதிகமான மயக்க மருந்து வழங்கத் தேவையில்லாத சிறு சத்திர சிகிச்சைகள் ஆண்கள் சத்திர சிகிச்சை விடுதியிலுள்ள சிறு சத்திர சிகிச்சைக் கூடத்தில் செய்யப்பட்டுள்ளன. இவ்வருடம் முதல் ஒருவர் மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக இடமாற்றத்தில் சென்றமையால் இரண்டு வைத்திய அதிகாரிகள் மட்டுமே பணியிலிருந்தனர். இவர்களுள் ஒருவர் அன்றைய பதில் வைத்திய அத்தியட்சகர் அவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக 04.07.2024 அன்று இடமாற்ற உத்தரவின் கீழ் பதிலாள் இன்றி உடனமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இப்போது சத்திரசிகிச்சைக் கூடம் உள்ள கட்டட விடயத்துக்கு வருவோம்.

கடந்த வருடத்தில் மட்டும் வைத்தியசாலையில் ரூபா 60 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியான மிக அவசரமான அபிவிருத்தி வேலைகள் மற்றும் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுக் கட்டடத்தின் ஐந்தாவதும் இறுதிக்கட்டுமானமுமான கட்டுமானமுட்பட செய்யப்பட்டன. இறுதிக் கட்ட கட்டுமானம் (ஐந்தாம் கட்டம்) ஓகஸ்ற் 2023ல் தான் முழுமையடைந்தது.

இடையில் கோவிட் தொற்றுக்காலமும் பொருளாதார அவசர நிலைக் காலமும் கட்டுமானத்துக்கான வேலைகளைத் தடைசெய்திருந்தன. 

2017ல் Dr குமரவேள் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்ற வந்த போது கட்டடத்தின் மின் மற்றும் நீர் விநியோக வேலைகளும் தரை மற்றும் சுவர் ஓடுகள் பதிக்கும் வேலையுமே மீதமிருந்தன. ஆனால் சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் கைகழுவுவதற்கான நீர் விநியோகத்தை ஏற்படுத்துவதற்கான வசதி கட்டுமானத்தில் உள்ளடக்கப்பட்டிராதது உட்பட பல வடிவமைப்பு தவறுகளையும் தவற விடப்பட்ட அத்தியாவசியமான வசதிகள் ஓரளவுக்கு சீர் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அப்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் அவசர மருத்துவ பிரிவுக் கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது, என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி 200மில்லியன் ஊழல் செய்யப்பட்டது/வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பான உண்மையான நிலையை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் விளக்கம் கோரியிருந்தோம். அதற்கான பதிலாக அவர்களால் கூறப்பட்டது.

1. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவு கட்டிடம் அமைக்க SHDP (இரண்டாவது) என்கின்ற 5ஆண்டு திட்டத்தில் தான் கட்டுமான வேலைகள் நடைபெற்றது. அதனால் இதற்கு என்று தனி திட்டம் (Master Plan) போடப்படவில்லை. இதற்கான கட்டுமான வேலைகள் யாவும் கட்டிடங்கள் திணைக்களம் ஊடாகவே விலைமனுக்கள் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் அக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.

3. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவசர மருத்துவப் பிரிவு கட்டிடம் அமைக்க கீழ்வரும் முறையில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு - 15 மில்லியன்
2016ஆம் ஆண்டு - 41.49 மில்லியன்
2017ஆம் ஆண்டு - 35.38 மில்லியன்
2018ஆம் ஆண்டு - 26.00 மில்லியன்
2020ஆம் ஆண்டு - 2.00 மில்லியன்
2021ஆம் ஆண்டு - 2.56 மில்லியன்
2021ஆம் ஆண்டு - 4.93 மில்லியன்
2022ஆம் ஆண்டு - 3.96 மில்லியன்
2022ஆம் ஆண்டு - 0.43 மில்லியன்
2023ஆம் ஆண்டு - 3.56 மில்லியன்
2023ஆம் ஆண்டு - 16.91 மில்லியன்
2023ஆம் ஆண்டு - 2.654 மில்லியன்
2023ஆம் ஆண்டு - 6.69 மில்லியன்
2024ஆம் ஆண்டு - 12.00 மில்லியன்
2024ஆம் ஆண்டு - 25.20 மில்லியன்
2024ஆம் ஆண்டு - 3.59 மில்லியன்

இக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் முதல் மாடியில் சத்திர சிகிச்சைக் கூடமும் இரண்டாவது தளத்தில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இக்கட்டிடத்துக்கான வரரைபடங்கள் முன்னைய அத்தியட்சகர் Dr. குகதாசனின் வழிகாட்டலில் கட்டடங்கள் திணைக்களத்தால் செய்யப்பட்டது.

2015 அடிக்கல் நாட்டி ஆரம்பிக்கப்பட்ட கட்டடம் 10.10.2022 அன்று திறந்துவைக்கப்பட்டது. கட்ட ஆரம்பிக்கப்பட்டு 10 வருடம் கூட முடிவடையாத நிலையில், 15 வருடங்களாக இயங்கவில்லை எனக் கூறப்படுவது எவ்வகையில் உண்மை ஆகும்.

மேற்படி பிழையான பிரச்சாரம் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பாரிய ஊழல் ஒன்று இடம்பெற்றதாக திரிபுபடுத்தப்பட்டு இன்று வரை அது அவ்வாறே உள்ளது. 

வடமாகாண பிரதம செயலாளர் திரு S.எம் சமன் பந்துலசேன பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில். ஐக்கிய இராச்சியத்தின் தென்மராட்சி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் Dr. A புவிநாதன் மற்றும் கொழும்பு தெற்கு ரோட்டரி கழகத்தின் சேவைத் திட்டங்களின் தலைவர் திரு V ரமணா ஆகியோர் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டனர்.
 
வடமாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவை அமைச்சின் செயலாளர் திருமதி S. மோகநாதன், மாவட்ட செயலாளர் திரு K. மகேசன், தென்மராட்சி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் போசகர் பேராசிரியர் K.கந்தசாமி, Dr திலீப் எச் லியனகே , வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr A கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr T. சத்தியமூர்த்தி, யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட அதிதிகளாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
இதன் ஆரம்ப நிகழ்வின்போது தான் தென்மராட்சி அபிவிருத்திக் கழகம், சத்திரசிகிச்சை கூடத்திற்கான மருத்துவ உபகரணங்களை  கொழும்பு தெற்கு ரோட்டரி கழகத்துடன் இணைந்து வழங்கியது.

படம் 2023.11.05 
ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நோர்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகளின் தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் (TDA) உலகளாவிய கிளைகளால் சத்திரசிகிச்சைக் கூட திட்டம் தொடங்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள தென்மராட்சி புலம்பெயர்ந்தோர் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக அந்தந்த TDA கிளைகள் மூலம் தாராளமான பங்களிப்புகளை வழங்கினர்.

தாம் சேகரித்த பணத்தில் ஒருபகுதியைக் கொண்டு, ரோடரிக் கழகத்துடன் இணைந்து,15,892,900.00 பெறுமதியான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

  1. Theatre Lamp,
  2. Operating Table,
  3. Blood/Fluid Warmer,
  4. Infant Radiant Warmer,
  5. Patient Warmer
  6. Anesthetic Machine with ventilator & Patient Monitor,
  7. Electro Surgery Machine
  8. Vertical Automatic Autoclave,
  9. CPAP Bi Level Ventilator
மேற்படி வழங்கப்பட்ட உபகரணங்களைத்தான் TDA ஊழல் செய்ததாக பதில் வைத்திய அத்தியட்சகர் நேரலையில் பகிர்ந்தார். இதன் மூலம் மக்கள் TDA ஐ திட்டித்தீர்த்தார்கள். அவரை பிந்தொடர்ந்தோர் அதிகரித்தனர்.

உண்மையில் பணம் சேகரிக்கப்பட்டு அது ரோட்டரி கழகத்துக்கு வழங்கப்பட்டு ரோட்டரி கழகத்தினர் மேற்படி உபகரணங்களை வருவித்து இணைந்து வழங்கி இருந்தனர். எனவே கொள்வனவில் கூட TDA பங்கெடுத்திருக்கவில்லை. எனவே கொள்வனவில் ஊழல் தொடர்பான எந்த குற்றச்சாட்டையும் கூற முடியாது. ஆனால் பின்னர் தான் கூறியவை தவறானவை என அவராகவே கூறியிருந்தார். 


விபத்து மட்டும் சத்திர சிகிச்சை கூடத்தை இயங்க வைப்பதற்கு புதிதாக வீதி அரசு நிதியில் போடப்பட்டது. மழை மற்றும் வெயில் நனையாமல் செல்வதற்காக வளைவு கொட்டகைகள், நிலக்கல் பதித்தல் என்பன TDAயினால் மேற்கொள்ளப்பட்டன.

இப்புதிய கட்டிடத்தில் அமையவிருந்த பிரதானமான பிரிவான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு பொருத்தமான, இலகுவாக அவசர நோயாளர்களால் விரைவாக அணுகக் கூடிய இடத்தில் இக்கட்டடம் அமையவில்லை.

வைத்தியசாலை வளாகத்தின் மையத்திலேயே இக் கட்டடம் கட்டப்பட்டுள்ளமை ஒரு பெரிய பிரச்சனையாக இன்றும் உள்ளது. இதற்குப் பதிலாக கண்டி வீதிக்கு அருகாமையில் புதிதாகவோ அல்லது இது வரை வெளி நோயாளர் பிரிவு இயங்கி வந்த கட்டத்தை விரிவாக்கியோ விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை அமைத்திருப்பதே பொருத்தமானதாக இருந்திருக்கும். அந்நேரத்து வைத்தியசாலை நிர்வாகம் இவ்விடயத்தில் அசமந்தமாக செயற்பட்டமையே இந்நிலைக்கு காரணம்.

இப்புதிய கட்டிடத்தில் உள்ளடக்கப்ட்டுள்ள அலகுகள் எல்லாமே வைத்தியசாலையில் புதிதாகத் திறக்கப்படவுள்ளவை. ஏலவே இயங்கி புதிய இடத்திற்கு இடம் மாறுபவை அல்ல. அதனால் இவ்வலகுகளுக்கு தனித் தனியாக புதிய ஆளணி தேவையாக இருந்தது.

இந்நிலையில் மின்பிறப்பாக்கி கிடைத்தவுடன் விபத்து மற்றும் அவசர சிக்சைப் பிரிவை இயக்குவதாயின் வெளி நோயாளர் பிரிவையும் அதே இடத்துக்கு கொண்டு செல்வதைத்தவிர வேறு வழியில்லாத நிலை இருந்தது. ஆனால் அது நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுத்துவதற்கு அப்பால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை அலகினுள் இட நெருக்கடியையும் ஏற்படுத்தும். ஆனால் இதன் மூலம் ஒரே ஒரு அவசர சிகிச்சைக் கட்டிலை மட்டுமே (மூன்றிலிருந்து நான்காக) அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.

இது நோயாளர் நலன்புரி சங்கம் மற்றும் தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் ஆகியவற்றுக்கு விளக்கப்பட்ட போது அவர்கள் இரண்டு அலகுகளையும் ஒரே இடத்துக்கு இடம்மாற்ற வேண்டாம் எனவும் மின்பிறப்பாக்கி வந்தவுடன் சத்திர சிகிச்சை கூடத்தை ஆரம்பிப்பதே உண்மையில் சேவை விரிவாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஏற்றுக் கொண்டனர். 

அதே வேளை சிறு செலவுடன் தற்போதைய பழைய வெளிநோயாளர் விடுதியிலுள்ள அவசர சிகிச்சைப் பிரவை விரவாக்கினால் இங்கு 05 கட்டில்களுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை இதே ஆளணியுடன் இயக்க முடியும் என்பதுவும் உண்மையாகும். அதனை விரிவுபடுத்தும் முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. 
 
சத்திரசிகிச்சைக் கூடம் திறக்க தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்றவண்ணம் தான் இருந்தது. தேவைகள் அனைத்தும் பூரணப்படுத்தப்படாமல் சத்திரசிகிச்சைக் கூடம் அவசரமாக திறக்கமுடியாத நிலை இருந்தது.

ஆனால் பதில் வைத்திய அத்தியட்சகர் தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் கேட்டமையால் தான் வெளிநோயர் பிரிவை இடம் மாற்றுவதற்காக நேரலையில் அறிவித்தார், அதற்கே தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் மூலம் அவருக்கு நேரடியாகவும், மக்களுக்கு பேஸ்புக்கிலும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தோம். கடிதத்தலைப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை “மொட்டைக்கடிதம்” என பாவித்து பதிவுகளை இட்டார். அவருக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் எதுவிதமாகவும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறே தொடர்ச்சியாக நாளுக்கு நாள் சேறுபூசும் நடவடிக்கைகளை திட்டமிட்டு செய்து வந்தார். இதனால் தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தின் மேல்  அதிருப்தி அடைந்து மக்கள் மிக மோசமான வார்த்தைகளால் அதன் தற்போதைய நிர்வாக தலைவர், செயலாளார் ஆகியோரைத் திட்டித்தீர்த்தனர்.

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை இயக்கவும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்கவும் புதிய ஆளணியை தருமாறு கடந்த 2016 முதல் பல தடவைகள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கும் நிரல் சுகாதார அமைச்சுக்கும் முறையான கோரிக்கைகள் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தால் முன் வைக்கப்பட்டன. இறுதியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான குறைந்தபட்ச ஆளணி அதிகரிப்புக் கோரிக்கை 02.04.2024ல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான கோரிக்கைகளை தென்மராட்சி அபிவிருத்திக்கழகமும் முன்வைத்தது, ஆனால் ஆளணியை அதிகரிக்க நிரல் சுகாதார அமைச்சு தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இது இங்குமட்டுமல்ல மந்திகை தெல்லிப்பழை உட்பட எல்லா இடங்களிலும் உள்ளது. சுகாதார சேவைகளில் ஆளணி பற்றாக்குறை என்பது சாதாரணமாக கடந்து போகும் விடையமல்ல. இருப்பவர்களை வைத்து அத்தனை பிரிவுகளையும் இயக்குவதென்பது இயலாத விடையமாகும்.
 
இக்கட்டடத்திற்கு வைத்தியசாலையிலிருந்த அவசரகால நிலைக்கான மின்பிறப்பாக்கிகளின் கொள்ளளவு போதாது என்பது கண்டறியப்பட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது. கட்டடத்திற்கான வடிவமைப்பில் ஈடுபட்டவர்களோ அல்லது மாவட்ட நிர்வாகத்திலிருந்தவர்களோ அதைப்பற்றி அறிந்திருக்கவுமில்லை, யாருக்கும் அறிவித்திருக்கவுமில்லை. திட்டத்திலும் உள்ளடக்கியிருக்கவில்லை. ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படாமல் அப்போதைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது.

கட்டிடத்துக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான மின்கொள்ளவு எவ்வளவு என்று இறுதியாக இலங்கை மின்சார சபைக்கு 15.03.2023 அன்று எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியிள்ளார் தலைமையிலான குழுவினர் கட்டிடத்தை முழுமையாக ஆய்வுசெய்து 04.04.2023 திகதி கடிதம் ஊடாக இலங்கை மின்சாரசபையானது 400கிலோவாட்ஸ் மின்சாரம் தேவை என்று உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தி இருந்தனர்.

 ஈற்றில் பல்வேறு கடும் முயற்சிகளுக்குப் பின் பல மாத காலதாமதத்ததுடன் அனுமதி கிடைத்தது. தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள 400kWA வலுக்கொண்ட புதிய மின்பிறப்பாக்கி கொழும்புத் துறைமுகத்தில் ஏலவே இவ்வருடம் மே மாத இறுதியில் தரை இறக்கப்பட்டுள்ளது.


இலங்கை மின்சார சபையின் இந்த தரவை அடிப்படையாகக் கொண்டு மின்பிறப்பாக்கிக்கான நிதி PSDG மூலம் பெறப்ப்ட்டது. அந்த மின்பிறப்பாக்கி சீனாவில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

PSDG - 25.20 Million.

திட்ட அனுமதி: 19-02-2023

விலைமனுகோரல் : 10-Oct-2023
ஒப்பந்ததாரர்: Hayles Aventura (Private) ltd
ஒப்பந்தம் வழங்கியது: 8-Nov-2023
 
எனவே பதில் வைத்திய அத்தியட்சகரால் தான் இவை நடந்தது என்று கூறுவது தவறானதாகும். 

சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்தியசாலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு 100kv, 40kv என இரு மின்பிறப்பாக்கிகள் ஏற்கனவே உள்ளன. புதிதாக இயக்கப்படவேண்டியிருந்த சத்திரசிகிச்சைக்கூடம் உள்ள விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம் முழுவதுமாக தடையின்றி இயங்க தற்போதுள்ள மின்பிறப்பாக்கியின் வலு போதுமானதாக இருந்திருக்கவில்லை. 

இதுவரை மின்பிறப்பாக்கிகள் இல்லை எனபதும், அவை பழுதடைந்துள்ளது என்பதும், அக்கட்டடத்துக்கு 100 KVA போதும் என்பதும் தவறானதாகும்.

மேலும் மின்பிறப்பாக்கிக்கான கட்டத்திற்குரிய நிதி PSSP மூலம் பெறப்பட்டது.

PSSP - 3.59 Million
திட்ட அனுமதி: 15-Mar-2024
விலைமனுகோரல் : 8-May-2024
ஒப்பந்ததாரர்: SJR Construction
ஒப்பந்தம் வழங்கியது: 30-May-2024

படம் 10-Jul-2024




மீண்டும் இறுதி நாட்களில் அவரின் அழைப்பின்பேரில் தென்மராட்சி அபிவிருத்திக்கழக நிர்வாகம் அவரைச்சந்தித்து அவதூறுகளுக்கான காரணங்களைக் கேட்டது. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் மேல் தேவையற்றவிதத்தில் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு நேரடியாக மன்னிப்புக்கோருவதாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அதனைத்தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.  இறுதியில் தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் அவரது கோரிக்கைகளைத்தரும்படியும் தாம் அவற்றை உடனடியாக செய்வதாகவும் உறுதியளித்திருந்தது. இருப்பினும் மாற்றலாகிப்போனார்.

பின்னரும் தென்மராட்சி அபிவிருத்திக்கழக செயலாளர் நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக பதில் சொல்லவேண்டும் என பதிவு ஒன்றை இட்டார். இரண்டும் வெவ்வேறு அமைப்புக்கள். மேலும் எந்தவித அடிப்படை தொடர்பும் இல்லாமல் பகிர்ந்த விடயம் தொடர்ந்தும்  சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இதுவரை அதற்கான ஆதாரங்களையோ, தவறாக பகிர்ந்தமைக்காக குறைந்தபட்சம் மன்னிப்பையோ கோரவில்லை. இது இவ்வாறு இருக்க,

22.06.2024 முதல் சத்திர சிகிச்சை நிபுணர் கிளினிக்கை ஆரம்பிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்காததால் இது நடைபெறவில்லை. 


இனி சத்திரசிகிச்சைக் கூடத்தை இயங்கவைக்க தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் என்ன செய்தது என பார்ப்போம்.

அன்புடன் தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. Anonymous6:47:00 am

    நீங்கள் சாவகச்சேரி வைத்தியசாலையின் நிலைமையை (வரலாற்றுடன்) எழுதியிருந்தமை நன்று. இவ்வளவு பெரிய பொது முதலீட்டிற்கு ஏற்றவகையில் இவ்வைத்தியசாலையின் சேவைகள் போதுமானதாக இல்லை என்பது மறுப்பதற்கு இல்லை. மற்றய பிரதேச செயலக எல்லைகளுடன் ஒப்பிடுகையில் சாவகச்சேரி பிரதேசம் நில அளவில் பெரிய பிரதேசம் போக்குவரத்தில் பல்வேறு இன்னல்கள் உண்டு சாவகச்சேரி நகரம் தற்போது உள்ள நிலைமையிலும் அதிகமக்களின் பிரசன்னத்துடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் களைகட்டியிருந்தது. தற்போது இது எழிலுருப்பெற்றிருந்தாலும் அப்போது (50 ஆண்டுகளுக்கு முன்பே) இது மிகவும் சுறுசுறுப்பான நகரமாகக் காணப்பட்டிருந்தது. வரலாற்றுச்சிறப்புமிக்கது, உன்னத மனிதர்கள் வாழ்ந்துவந்த பூமியாக இருந்தது. எனவே தங்களின் ஆதாரபூர்வமான பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  2. அந்த வைத்தியர் எதைச் சொன்னால் எடுபடுமோ, அதை மக்கள் ஆதாரம் இல்லாமலே நம்புவார்களோ அதை சொல்லி தனக்கு தேவையானதை செய்து கொள்கிறார். அவருக்கு உண்மையாகவே சாவகச்சேரி வைத்தியசாலை மீது அக்கறை இல்லை. அதேநேரம் வைத்தியர்கள் மட்டத்தில் உள்ள குறைபாடுகளும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா