Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம்: சாத்தியமா..? கண்துடைப்பா..?

2 comments

தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவை, 'தென்மராட்சி மேற்கு' மற்றும் 'தென்மராட்சி கிழக்கு' என இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதற்கான பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. நீண்டகாலமாக நிலவிவரும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்கவும், அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமெனக் கருதப்படுகிறது. இருப்பினும் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகின்றது.
தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவானது யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலப்பரப்பு ரீதியாக மிகப்பெரிய பிரிவாகும். தென்மராட்சிப் பிரதேசம் 232.19 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டு யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதேச செயலகமாகக் காணப்படுகிறது. அதாவது மாவட்டத்தின் 22.5% நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டதாக உள்ளது.. இதன் எல்லைகளாக வடக்கே தொண்டைமானாறு கடல் நீரேரியும் கரவெட்டி பிரதேச செயலகமும், கிழக்கே பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், தெற்கே யாழ்குடா கடல் நீரேரியும் பூநகரி பிரதேச செயலகமும், மேற்கே நாவற்குழி- செம்மணிப் பாலமும் உப்பாறு கடல் நீரேரியும் காணப்படுகிறது.யாழ் மாவட்டத்தில் பரந்ததொரு நிலப்பரப்பை உள்ளடக்கியும், தனித்துவமான பல பண்புகளைக் கொண்டதுமாக தென்மராட்சிப் பிரதேசம் உள்ளது.

இங்கு 60 கிராம அலுவலர் பிரிவுகளையும் அவற்றில் 138 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசம் சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேச சபை என்ற இரு உள்ளூராட்சி அலகுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் சாவகச்சேரி நகரசபை 11 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி 31.29 சதுர கிலோ மீற்றர் பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகுதி 49 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்ட 200.90சதுர கிலோ மீற்றர் பரப்பு சாவகச்சேரி பிரதேச சபைக்குள் அடங்குகிறது. இங்கு மக்கள் தொகையானது (2024 தரவுப்படி): 72805 ஆகவும் உள்ளது.

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் 7 பிரதேச செயலகங்களையும், தீவகம் 4 பிரதேச செயலகங்களையும், வடமராட்சி 3 பிரதேச செயலகங்களையும் கொண்டுள்ள அதேவேளை தென்மராட்சி தனியானதாகவே உள்ளது.

யாழ் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினை வழங்குவதாக இப்பிரதேசம் உள்ளது. நெல், பழவகை, தென்னை என்பன அதிகளவில் இங்கு செய்கை பண்ணப்படுகிறது. வானுயர்ந்த மரங்களும், வளமுடைய நிலங்களும், நீர் நிலைகளும், வயல் வெளி, சிறுதானியப்பயிர்களும் என பேரெழில் பெற்று விளங்குகின்றது.

இப் பிரதேசம். பரப்பிலும் கிராம சேவகர் பிரிவு, நிறுவன அமைப்புகாரணாமாக பிரதேச செயலாளரின் பணிச்சுமை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு மிகப்பெரிய பரப்பளவையும், அதிக மக்கள் தொகையையும் கொண்ட ஒரு பிரிவை ஒரே ஒரு பிரதேச செயலாளர் மட்டும் நிர்வகிப்பது நடைமுறை ரீதியாகச் சிரமமாக உள்ளது. இதனால், மக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அபிவிருத்தித் திட்டங்களை முழுமையான பிரிவிலும் சமமாகச் செயல்படுத்துவதில் சவால்கள் உள்ளன. கிழக்கு தென்மராட்சி மக்கள் தமது தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

மக்கள் விருப்பமும் வரலாற்றுப் பின்னணியும்.

தென்மராட்சி கிழக்குப் பகுதி மக்களுக்காகத் தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 1980-களின் பிற்பகுதியிலிருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. சமூக அமைப்புகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இதனை வலியுறுத்தி வந்துள்ளனர்.

இவ் முயற்சியில் தென்மராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி ஒன்றியமானது முனைப்புடன் செயற்பட்டது. அதன் தலைவராக காலஞ்சென்ற சந்திரசேகரா அவர்கள் (ஓய்வு பெற்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர்) பதவியிலிருந்தார். இப்போதைய மன்னார் மாவட்ட அரசதிபர்  திரு க கனகேஸ்வரன் அவர்களும் நிர்வாகத்திலிருந்தார். 2005. 06ம் மாதத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்குக்கும், அரச அதிபரிடமும் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.

அவர்களின் முன்மொழியப்பட்ட தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் தேவை, மைய நகரமாக கொடிகாமத்தின் முக்கியத்துவம் என்பன விளக்கப்பட்டு அக்கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

சாவகச்சேரி நகரின் மத்தியில் உள்ள பிரதேச செயலகத்தை அணுகுவதற்கு, கொடிகாமம், உசன், மிருசுவில், பாலாவி, எழுதுமட்டுவாள், வரணி மந்துவில் போன்ற பகுதி மக்கள் சிரமப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்குப் பதில் வழங்கிய அப்போதைய அரச அதிபர் கே கணேஸ் அவர்கள், தனியான பிரதேச செயலாளர் பிரிவை அமைப்பதற்கான முழுமையான முன்மொழிவு, தேவையான அனைத்து தகவல்களுடனும் 23.03.2003 அன்று உள்துறை அமைச்சிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இம்முன்மொழிவு தற்போது அமைச்சின் பரிசீலனையில் உள்ளது எனவும்  தனியான பிரிவின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இந்த முன்மொழிவு அரசாங்க அதிபர்களின் (GA) மாநாட்டின் விவாத அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற GA மாநாட்டிலும் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு, தென்மராட்சி கிழக்கிற்கான தனிப் பிரிவு அமைப்பதின் அவசியம் குறித்து தான் விளக்கமாக எடுத்துரைத்தேன் எனவும், அமைச்சால் எடுக்கப்படும் அடுத்த நடவடிக்கைகள் அல்லது தீர்மானங்கள் தமக்கு அறிவிக்கப்பட்டவுடன், அதற்கான தகவல்கள் உங்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இக்காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா இரவிராஜ், இதனை நேரடியாக அமைச்சுகளுக்குச் சென்று இக்கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இதன் அவசிய தேவை உணர்ந்து உப பணிமனை ஒன்றை கொடிகாமம் A9 வீதியில் அமைந்துள்ள MPCSகட்டத்தில் இயக்கியிருந்தார்கள். இதனை அப்போதைய அரசாங்க அதிபர் செ . பத்மநாதன் ஆகியோர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் அனுமதி பெற்று செய்திருந்தார்கள்.

ஆனாலும் யுத்தம் தீவிரமடைந்தபின் இவை தொடராமல் போனது, மீண்டும் 2009 இன் பின் இவ் பேச்சு தீவிரமடைந்தது. அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைக்கடிதங்கள் அனுப்பப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, 04.10.2011 அன்று தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் தனது உரையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலிருந்து உயர்மட்டக் குழுவானது வருகை தந்து 11.10.2011 ந் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்றை அவர்கள் நடாத்தவுள்ளார்கள் என்றும், அதனால் இன்று இப்பிரதேச செயலகத்தில் இக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தென்மராட்சி பிரதேசத்தின் பொதுமக்களின் கருத்துக்களுக்கமைவாக தென்மராட்சி பிரதேச செயலகத்தின் 60 கிராம சேவையாளர் பிரிவுகளில் J/288 தொடக்கம் J/319 வரையான 32 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவாகவும் J/320 இலிருந்து J/347 வரையான 28 கிராம சேவையாளர் பிரிவு தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவாகவும் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தபோது சபையில் இருந்த அனைவரும் எந்த வித மாற்றுக் கருத்துமில்லாமல் ஏற்றுக்கொண்டனர். இக்காலப்பகுதியில் பிரதேசசெயலாளராக திருமதி அ.சாந்தசீலன் அவர்கள் செயற்பட்டிருந்தார்.

இக்கூட்டத்தில்:

புதிய பிரிவை உருவாக்குவதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதிய பிரிவு அமைந்தால், வளங்கள் தனியாக ஒதுக்கப்படும் என்றும், மக்கள் தமது வீடுகளுக்கு அருகிலேயே அரச சேவைகளைப் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அக்காலத்தில் கோப்பாய் பிரதேசசெயலகமும் இரண்டாகப் பிரிக்கப்பட முன்மொழியப்பட்டிருந்தன.

ஆனாலும் அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை. மீண்டும் இப்பேச்சு நல்லாட்சி காலத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டமொன்றில் இப்பேச்சுகள் மீண்டும் எழுந்தன.

இராஜாங்க அமைச்சராக திருமதி. விஜயகலா மகேஸ்வரன் உட்பட அரச, பின்னர்  அரசுடன் கூட்டுச் சேர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பலருடனும் சந்தித்து முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டுமே. தொடர்ந்து. அக்காலத்தில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில்  அன்றைய 2016 ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. திரு க.அருந்தவபாலன்  இதனைக் கேள்வியாகவும் எழுப்பியிருந்தார். அப்போதைய பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களால் கூறப்பட்டது. “எல்லாம் சரி இனி கடிதம்தான்” என்பது போல. இப்போது பத்தாண்டுகள் கடந்துவிட்டன. 

2018 இல சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுற்கு 32 கிராம சேவகர் பிரிவும் புதிதாக உருவாக்கும் கொடிகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 28 கிராம சேவகர் பிரிவும் உள்ளடங்கும் வகையில் வர்த்தகமானி அறிவித்தலுக்கான பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாக பிரதமருடனான சந்திப்பின் பின் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்திருந்தார்.

பின்னர் 2020 தேர்தல் காலத்தின் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்/ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் ராமநாதனிடம் மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, 2021 இல இவை தொடர்பான திட்டவரைவுகளை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு அமைச்சின் செயலாளரினால் அரச அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது. இப்போது மீளவும் ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. எதுவும் இல்லை. 




தனியான பிரதேச செயலகம் அமைக்கப்படலாமா?

பிரிவு செய்ய வேண்டிய தேவையை நிரூபிக்க வேண்டும்: மக்கள் தொகை அதிகமாக இருப்பது, பரப்பளவு மிகப் பெரியதாக இருப்பது, நிர்வாக சேவைகள் பெற பொதுமக்களுக்கு சிரமம், அபிவிருத்தி, மீள்குடியேற்றம், பாதுகாப்பு காரணங்கள், மொழி / சமூக அடிப்படையிலான சேவைத் தேவைகள் காணப்படின் பிரிக்கப்படலாம்.

ஆரம்ப முன்மொழிவு தயாரித்தல்:  தற்போதைய பிரதேச செயலகத்தின் பெயர், பிரிக்க முன்மொழியப்படும் புதிய பிரிவின் பெயர், கிராம சேவகர் பிரிவுகள் (GN Divisions) பட்டியல், மக்கள் தொகை விவரம், நிலப்பரப்பு (Km²), நிர்வாகத் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் / மனுக்கள், வரைபடம் (Map) – பழைய & புதிய எல்லைகள், நிர்வாக வசதிகள் (கட்டிடம், அலுவலகம், மனிதவளம்)

கோரிக்கைகள்: பிரதேச செயலாளர் மூலம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு, மாவட்ட செயலாளர் ஆய்வு செய்து, அதற்கான தகுதி மற்றும்  அவசியம் காணப்படின், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் / G.A. மாநாடு போன்றவற்றின் அனுமதியுடன் அமச்சரவைத்தீர்மானத்துக்கு அனுப்பப்படவேண்டும்.

இவை அனைத்தும் தென்மராட்சியைப் பொறுத்தவரையில் பத்து வருடங்களுக்கு முன்னரே முடிந்த கதை, ஆனாலும் இன்னும் அமைச்சரவை அனுமதி கிடைக்கவில்லை.

புதிய பிரிவொன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி அவசியம், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின் மனிதவளம் பகிரப்பட்டு, பாதீட்டில் ஒதுக்கப்பட்டு வர்த்தமானி (Gazette) வெளியிடப்படும், வர்த்தமானியில் புதிய பிரதேச செயலகத்தின் பெயர், எல்லைகள், அமுலுக்கு வரும் திகதி வெளியிடப்படும்.  அதன் பின்னர் காணி, கட்டடங்கள் என்பன பற்றி பேச்சுக்கள் எழும்.

தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் எங்கு அமைக்கப்படலாம்?

கொடிகாமம் ஆனது மீசாலை, மந்துவில் வரணி, கெற்பேலி, உசன் எழுதுமட்டுவாள், போன்ற பகுதிகளுக்கு பொதுவான மத்திய நிலயமாக இருக்கின்றது.

கொடிகாமம், A9 பிரதான வீதியையும் யாழ்ப்பாண மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மைய நகரமாக உள்ளது. மேலும் இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம், நெல்லியடி, பருத்தித்துறை மற்றும் சுன்னாகம் ஆகியவற்றை இணைக்கும் போக்குவரத்து வலையமைப்பைக் கொண்ட முக்கிய நகரமாகச் செயல்படுகிறது.

தென்மராட்சி கிழக்குப் பகுதிக்காகத் தனியான பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், கொடிகாமத்தை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.

தென்மராட்சி கிழக்கிற்கான தனியான வங்கிக்கிளைகள் இங்கு இயங்குகிறது. வரணி, கொடிகாமம் பகுதிகளில் அரசாங்க பிரதேச வைத்தியசாலைகள், ஆயுள்வேத வைத்தியசாலைகள் என்பன உள்ளன. மேலும் தென்மராட்சி கிழக்கின் வெவ்வேறு பிரிவுகளில் தாய்-சேய் நல நிலையங்கள் செயற்படுகின்றன.

இப்பகுதியில் 25 க்கு மேற்பட்ட பாடசாலைகள் உள்ளன. கமநல சேவை நிலையம் (Agrarian Service Centre) மற்றும் பிரதேச சபை (Pradeshiya Sabha) இங்கு செயல்படுகின்றன. ஒரு பொலிஸ் நிலையம் (Police Station) இங்கு உள்ளது. ஒரு பிரதான அஞ்சல் அலுவலகமும், துணை அஞ்சல் அலுவலகங்களும் உள்ளன.

3 பொது நூலகங்கள் செயல்படுகின்றன. ஒரு மதுபான ஆலை (P.D.B – Palmyrah Development Board) இப்பகுதியில் உள்ளது. கொடிகாமம் சந்தை நாடளாவிய ரீதியில் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது. தனியான பேருந்து நிலையம், புகையிரத நிலையம் என்பனவும் உண்டு. இதன் அடிப்படையில்  தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் அமைக்கப்பட பொருத்தமான இடமாக கொடிகாகம் காணப்படுகின்றது.

ஆனால் நகரிலிருந்து சிறிது தூரத்துக்கு அப்பால் அமைக்கப்படுதல் பொருத்தமானதாக இருக்கும்.

அண்மையில் பிரதேச சபையில் நடைபெற்றது என்ன?


அண்மையில் தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிறுவுவதற்குக் காணி பெறுவதற்கான கூட்டத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. க.இளங்குமரன் பிரதேச செயலர் மூலம்  பிரதேசசபை சாவகச்சேரி மண்டபத்தில் கூட்டியிருந்தார். இது தொடர்பாக எந்தவொரு அரசாங்கத் தீர்மானமும் இல்லாமல், நாம் கடந்த காலத்தில் இவை தொடர்பாக ஜனாதிபதியிடம் முன்வைத்தபோது, அரச செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற எந்த முன்னெடுப்பும் குறிப்பிட்ட காலத்துக்கு இல்லை என்பதும், தாம்/தமது அரசாங்கம் அனைத்தும் டிஜிட்டல் வழி சேவையை விரிவுபடுத்துவதனால் ஆட்சேர்ப்பு இல்லை, மேலும் அபிவிருத்திகள் கிராமசேவகர்பிரிவுகளினூடாக செய்வதால் பிரிக்கப்படவேண்டிய தேவையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதனால் நாம் முன்னெடுத்த முயற்சிகளைச் சற்று தாமதப்படுத்தியிருந்தோம். 

காணியினை மக்கள் தான் தெரிவு செய்யவேண்டும் என்றநிலைப்பாடு இல்லை காணியானது அரசாங்கம் மூலம் பெற்றுக்கொள்ளப்படலாம், யாராவது காணிகளை நன்கொடை வழங்கலாம், அல்லது தெரிவு செய்யப்பட்ட காணியை உரிய விலைகொடுத்து வாங்கலாம் அல்லது கட்டாய சுவீகரிப்புக்கு உள்ளாக்கப்படலாம். எது எப்படியாயினும் காணி முறைப்படி சுவீகரிக்கப்பட்டாலே அரசகாணியாகும்

ஆனால் எல்லா முடிவுகளும் எடுத்தாகிவிட்டது, இப்போது  கட்டிடம் கட்டுவதற்குக் காணிதான் தேவை என்ற போர்வையில் இக்கூட்டத்தை அவர்கள் கூட்டியிருந்தார். ஆனால் இவ் முயற்சியை எடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய காணிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இனங்கண்டிருந்தார்கள். 

அண்மைய கூட்டத்திலும் பிரதேச சபைக்கு அண்மையாக, திரு க.திருநாவுக்கரசு என்பவர் தனது 15 பரப்பு காணியை தர சம்மத்தித்திருந்தார். மேலும் வரணி வடக்கு, சுட்டிவேரம் கோவிலுக்கு அருகில் இன்னொரு 20 பரப்பு காணியை தும்புருவில் பிள்ளையார் ஆலைய நிர்வாகம் இலவசமாக தர சம்மதித்துள்ளது. மேலும் நாவலடி பாடசாலைக்கு அருகில் ஒரு 15 பரப்பு காணி ஒன்றை ஒருவர் இனங்காட்டியிருந்தார். மேலும் புகையிரத பாதைக்கு அருகில் கனகசபாபதி என்பவரின் 10 பரப்பு காணி பெறப்படலாம் என்று இன்னொருவர் கூறியிருந்தார். 

இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் புத்திஜீவிகள் என்றே அழைக்கப்பட்டிருந்தார்கள். பலவிடயங்களில், பல இடங்களில் அவர்கள் மெளனம்காத்தனர். ஆனால் சட்டத்தரணி கேசவன் சயந்தன் மட்டுமே அங்கு கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக கொள்கைத்தீர்மானம் எடுக்கப்பட்டதா? அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி விட்டதா? அல்லது அமைவிடம் எங்கு எனத்தீர்மானிக்கப்பட்டதா? காணி வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? எந்த அடிப்படையில் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது? போன்ற வினாக்களை முன்வைத்திருந்தார். இக்கேள்விகளுக்குக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதேச செயலர் பொறுப்பான பதிலை வழங்கியிருக்க வேண்டும். அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஆக்கபூர்வமான பதில்களைக் கூறியிருக்கவேண்டும். அது அவ்வாறு இல்லாமல் அவர்களின் கருத்து வேறுமாதிரி இருந்தது. 

இலங்கை அரசியலில் நீண்டகாலமாகத் தொடரும் சில விவகாரங்கள், தீர்க்கப்படாத புதிர்களாகவே நீடிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நகர்வுகள், மக்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை அவநம்பிக்கையையே விதைத்துள்ளன. உண்மையில் அங்கே கூறப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் தவிர்க்கப்பட்டு, மக்கள் எதிர்பார்ப்பிற்கு மாறான கருத்துக்களே முன்வைக்கப்பட்டன.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தேர்தல் காலங்களிலும் அரசியல் நெருக்கடி நேரங்களிலும் சில குறிப்பிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படாமல் வெறும் அரசியலுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருவது வேதனைக்குரியது. காலங்காலமாகத் தொடரும் இந்த அரசியல் விளையாட்டில், இறுதியாக எஞ்சுவது சாதாரண மக்களின் ஏமாற்றம் மட்டுமே.

எந்தவொரு நிர்வாக அலகுகளை இரண்டாக பிரிப்பது தொடர்பிலான நகர்வுகளும் சாத்தியப்பட வேண்டுமானால், அவை முதலில் கொள்கை அளவில் (Policy level) அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். சட்டரீதியான மற்றும் கொள்கை ரீதியான அடித்தளம் இல்லாமல் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றியைத் தராது.

தற்போது அரங்கேறி வரும் நிகழ்வுகள், மக்களின் நலனுக்கானவை என்பதை விட, அரசாங்கம் நடத்தும் ஒரு திட்டமிட்ட 'அரசியல் நாடகம்' போலவே காட்சியளிக்கின்றன. ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கம் இருந்தால், அதில் சம்பந்தப்பட்ட அமைச்சின் முறையான கோரிக்கைகள் அல்லது வழிகாட்டல்கள் இருக்க வேண்டும்.
  • அந்த அமைச்சின் கோரிக்கை இதற்காக முன்னெடுக்கப்பட்டதா?

  • அதன் பிரகாரம் தான் இந்த நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டதா?

இவை யாவும் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளன. முறையான நிர்வாக நடைமுறைகள் இன்றி நடத்தப்படும் இத்தகைய கூட்டங்கள் வெறும் கண்துடைப்பு மாத்திரமே.

சிலர் பொதுவான கருத்துக்களைப் பேசினாலும், பெரும்பாலானோர் தத்தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காகவும், மக்களின் கைதட்டல்களைப் பெறுவதற்காகவுமே இதனைப் பயன்படுத்தினர். ஒரு தீர்வை நோக்கி நகராமல், உணர்ச்சிகரமான பேச்சுகளுடன் அந்த நிகழ்வு நிறைவுற்றது. இத்தகைய மேடைப் பேச்சுகள் கைதட்டல்களைத் தரலாம், ஆனால் அவை 40 ஆண்டுகால வலிகளுக்கு மருந்தாகாது.

அன்புடன் நான். SaNa
Previous PostOlder Post Home

2 comments:

  1. Anonymous3:40:00 pm

    தம்பி Sanjay Nanthakumar பட்டவர்தனமாக பல வரலாறுகளை சொல்லியுள்ளீர்கள் .
    சில வரலாறுகளை மேலும் தெரியப்படுத்த விரும்புகிறேன் .
    2005/2006 காலப்பகுதியில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தவர் அமரஶ்ரீ தொடங்கொட .
    அவருடைய ஆலோசனையின் பெயரில் தான் சிவில் சமூக குழுவாக , தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிப்பை , கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என ஆலோசனை சொல்லப்பட்டது .
    அதன் அடிப்படையிலேயே தென்மராட்சி கிழக்கின் கிராம அலுவலர்கள் பிரிவுகளை முன்னிலைப்படுத்தி இலங்கையின் பல்வேறு சேவைகளைச் சேர்நதோரை ஒன்றிணைந்து , ஒரு அறிவார்ந்த சமூகத்தைக் கொண்டு தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது .
    இந்த அங்குரார்பணத்திற்க்கு அழைக்கப்பட்ட அழைப்பிதழில் எனது கையொப்பம் இருக்கும் 😀.
    பின் கௌரவ இரவிராஜ் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அப்போது வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த , அமைச்சரின் தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த மறைந்த அமைச்சர் குணரட்ன வீரக்கோண் அவர்களின் ஒத்துழைப்போடு , அப்போது அமைச்சரவை பத்திரம் தாயாரிக்கப்பட்டது .
    இதற்கான பிரதிக்கடிதமும் , தென்மராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றிய அப்போதைய செயலாருக்கு கையளிக்கப்பட்டது .
    அதன் பின் கௌரவ இரவிராஜ் அவர்களின் படுகொலையின் பின் நிர்வாக ரீதியாக எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை .
    இது தான் விடயம் பின்னனி தம்பி .
    அருமை தங்களின் ஆவணப்படுத்தலுக்கு .

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா