நூலகம் என்பது வெறுமனே புத்தகங்களை வாசிக்கும் அல்லது பெற்றுக்கொள்ளும் இடமல்ல; அது அறிவைத் தேடிச் செல்லும் பாதை, அனுபவங்களை விரிவுபடுத்தும் களம், வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் ஓர் அறிவுலகம்.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொது நூலகத்துடனான எனது தொடர்பு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது.
நான் முன்னரும் நீண்டகாலமாக நூலகத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், புத்தகங்களை இரவல் பெற்று வீட்டிற்குக் கொண்டுசென்று பயன்படுத்த வேண்டும் என்ற தேவையினால், 2006 ஆம் ஆண்டு நூலகத்தில் அங்கத்தவராக இணைந்துகொண்டேன். அப்போது சாதாரண தரப் பரீட்சையை அண்மித்திருந்த காலம். கல்வித் தேவைகளும், வாசிப்பார்வமும் என்னை நூலகத்துடன் மேலும் நெருக்கமாக்கின.
அப்போது நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு ஒருவர் பிணை நிற்க வேண்டும். அவர் சோலைவரி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும். எனக்கு அத்தகைய வேறு நபர்களுடன் பழக்கம் இல்லாததால், எனது அங்கத்துவ விண்ணப்பத்தில் எனக்காகப் பிணையாளராகக் கையெழுத்திட்டவர் மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்கள். அப்போது நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார்.
அவர் சாவகச்சேரிக்கு வந்திருந்தபோது அவரிடம் அந்தக் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டேன். அந்த வருடத்தின் பின்னர் அவரை மீண்டும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது நினைவாக, விண்ணப்பப் படிவத்தின் பிரதி இன்றும் என்னிடம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இறுதி சில பத்து நாட்களுக்குள் அவர் கொழும்பில் தனது அலுவலகத்திலிருந்து எனக்குச் சில புத்தகங்களையும் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புத்தகங்களும் அவருடனான எனது நினைவுகளை இன்றும் சுமந்து நிற்கின்றன.
தொடர்ந்து பல ஆண்டுகளாக நூலகத்திலிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு வாசித்து வந்தேன். ஆனால், பின்னர் வேலை, பொறுப்புகள், நேரமின்மை என வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தபோது, நூலகப் பயன்பாடும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. விடுமுறை நாட்களிலும் பிற தேவைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டியிருந்ததால், முன்புபோல் நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைத் தெரிவுசெய்து வாசிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன. அதேவேளை, கணினியிலும் தொலைபேசியிலும் பல்வேறு தகவல்களை வாசிக்கத் தொடங்கியதால், அச்சுப் புத்தகங்களை வாசிப்பதற்காக ஒதுக்கிய நேரமும் குறைந்துவிட்டது. ஆனால் வீட்டில் சிறிய நூலகம் ஒன்று உருவாக ஆரம்பித்தது.
காலம் இப்படியே நகர்ந்தது.
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் நூலகத்தை நோக்கி பயணம் ஆரம்பித்தது. எனது மனைவி புதுப்பித்தும், மகன் நூலகத்தில் புதிய அங்கத்தவராகவும் இணைந்துகொண்டார்கள். அவர்களுடைய இந்த முயற்சி என்னுள்ளும் ஒரு புதிய ஆர்வத்தைத் (பொறாமை) தூண்டியது. நானும் எனது நூலக அங்கத்துவத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் நூலகத்தை நாடினேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மாணவனாக நூலகத்தில் இணைந்த நான், மீண்டும் அங்கு வந்திருக்கிறேன். இன்று எனது மகனை மாணவனாக இணைந்து தொடர்கிறேன். அவரை மாதம் ஒருதரம் கூட்டிச்செல்லவேண்டும் என வீட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறை என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்த விடயம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தலைமுறையினர் ஒரே மாதத்தில் அங்கத்தவர்களாக இணைந்திருப்பதுதான்.
நான் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி 2006 இல் அங்கத்துவம் பெற்றுக்கொண்டேன். அகரன் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி 2026 இல் இணைந்துகொண்டார்.
வாழ்க்கையின் வேகத்தில் நாம் பல நல்ல பழக்கங்களைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறோம். ஆனால், அவற்றை மீண்டும் தொடங்குவதற்கு ஒருபோதும் காலம் கடந்துவிடுவதில்லை என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. இது வாசிப்பை நோக்கி ஒன்றாக முன்னேறுவதற்கான ஒரு சிறிய தொடக்கம்.
கைப்பேசியும் தகவல்களை நம் விரல் நுனிக்குக் கொண்டுவந்துள்ள இந்தக் காலத்திலும், ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் பக்கங்களைப் புரட்டி, அமைதியாக வாசிக்கும் அனுபவத்திற்கென தனித்துவமான மதிப்பு இருக்கிறது.
வாசிப்பு சிந்தனையைச் செம்மைப்படுத்துகிறது; பார்வையை விரிவுபடுத்துகிறது; மனிதர்களையும் சமூகத்தையும் உலகத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.
வாசிப்போம்; அறிவைப் பெருக்குவோம்; அடுத்த தலைமுறைக்கும் வாசிப்பின் அவசியத்தை கடத்துவோம்! இப்போது அங்கத்தவராக இணைய பிணையாளர் கூட தேவையில்லை. வாசிக்கும் ஆர்வம் இருக்கட்டும்.
ஒரு நூலகம், இரண்டு தலைமுறைகள்!
.png)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா