பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் சுருக்கம்
பண்டிதமணி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்ப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். தயாரின் தனங்கிளப்பு ஊரிலுள்ள காரைத்தூவிநாயகர் குலதெய்வமான படியால் இவருக்கு கணபதிப்பிள்ளை என்று பெயர் சூட்டப்பெற்றது.
மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர், 13வது வயதில் தந்தையாருடன்தனங்களப்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை,சுவாமி விபுலாநந்தர் போன்ற பேரறிஞர்களிடம் கல்வி கற்றார்.
1926 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்விற் சித்தி பெற்றுப் பண்டிதர் பட்டம் பெற்றார். லோச் செல்லப்பாவின் தூண்டுதலால் மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் காவிய வகுப்புகளைப் பண்டிதமணி நடத்த ஆரம்பித்தார்.
கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற பண்டிதமணியை 1929 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.
பண்டிதமணி பட்டம்
1951-இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் பண்டிதமணி தமிழ் என்ற பொருளில் ஆற்றிய உரை தமிழக அறிஞர்கள் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்டது. அந்த உரையே அவருக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது.
நல்லூர் ஆறுமுக நாவலர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் பண்டிதமணி. அவரது எழுத்துக்களைக் கற்று நாவலரோடு சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவற்றை எழுதினார். அத்துடன் சிதம்பரம் கும்பாபிசேக மலரில் சுவாமி ஞானப்பிரகாசர் குறித்தும் கலைமகள் மலரில் பஞ்ச கன்னிகைகள் குறித்தும் பண்டிதமணி எழுதிய ஆக்கங்கள் அவருக்கு மிகுந்த புகழைக் கொடுத்தன.
நாவலர் மாணவர் பரம்பரையினரிடம் கல்வி கற்றதால் நாவலர் தருமத்துக்கும், தமிழ் கல்வியின் வளர்ச்சிக்கும் பணியாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு பிரமச்சாரிய விரதத்தைக் கடைப்பிடித்தார்.
பல்கலைக்கழகக் கௌரவப் பட்டங்கள்
பண்டிதமணியின் தமிழ்த் தொண்டிற்காக இலங்கைப் பல்கலைக்கழகம் 1978, மே 31 ஆம் நாள் இலக்கியக் கலாநிதி என்ற கௌரவப்பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1978 ஆகத்து 14 ஆம் நாள் அன்றைய துணைவேந்தர் சு. வித்தியானந்தன் இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கௌரவித்தார்.
இவர் பற்றி சில துளிகள்
அக்காலத்தில் பண்டிதரின் சொற்பொழிவுகள் வாதப்பிரதி வாதங்களைத் தோற்றுவிக்கும். அவற்றை அவரிடமிருந்து மறுதலித்துப் பேசுவது மிகக் கடினமான காரியம்.
நூல்கள் எழுதுவதில் நாட்டமில்லாத இவர் பல இலக்கியங்களை கட்டுரைகளாக எழுதி வெளியிட்டுள்ளார். பண்டிதமணி டால்ஸ்டாயின் கதைகள் இரண்டைத் தழுவி. இருவர் யாத்திரிகள், செருப்புக்கட்டியின் கதை என்ற இரண்டு சிறுகதைகளையும் சொந்தமாக சில கதைகளையும் எழுதியுள்ளார். நளன் தூது, வால்மீகிதானோ என்ற இலக்கிய நாடகங்களையும் இரு சகோதரர்கள் என்ற முற்றுப் பெறாத நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
பணிவும் அடக்கமும் மிகுந்த பண்டிதமணி அவர்கள் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது படைப்புகள், மாணவர்களின் உயர்தர வகுப்பு பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. 'கம்பன் ஒரு வம்பன்' 'அவையடக்கம்' போன்றவை க.பொ.த சாதாரண தரம் மாணவர்களுக்கென பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவர் எழுதிய கந்தபுராண தக்ஷண காண்ட உரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் யானைமேல் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்ற சிறப்பும் பெற்றது.
எழுதிய நூல்கள்
- கண்ணகி தோத்திரம்
- கதிர்காம வேலவன் பவனி வருகிறான்
- இலக்கிய வழி
- சைவ நற்சிந்தனைகள்
- பாரத நவமணிகள்
- கந்த புராண கலாசாரம்
- கந்த புராண போதனை
- சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவைகள்
- இருவர் யாத்திரிகர்
- சமயக் கட்டுரைகள்
- இலக்கிய வழி
- கம்பராமாயணக் காட்சிகள்
- கந்தபுராணம் தட்சகாண்டம் உரை
- நாவலர்
- சிந்தனைச் செல்வம்
- நாவலரும் கோயிலும்
- சிந்தனைக் களஞ்சியம்
- கோயில்
- ஆறுமுக நாவலர்
- அன்பினைந்திணை
- அத்வைத சிந்தனை
- செந்தமிழ்க் களஞ்சியம்
- ஒளவை குறள் (மூலமும் தெளிவுரையும்)
- பத்தினி வழிபாடு
நினைவுகள்

மட்டுவில் கிராமத்தில் கணபதிப்பிள்ளை நினைவாகப் பண்டிதமணி மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 1999 இல் மட்டுவில் இந்து இளைஞர் மன்றத்தினர் நூற்றாண்டு விழா எடுத்துக் கௌரவித்தனர்.
மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் பண்டிதமணி அவர்களுக்கு உருவச்சிலை ஒன்றைப் பாடசாலை வளவில் நிறுவியுள்ளனர்.
1999 ஆம் ஆண்டில் இலங்கை அரசு பண்டிதமணிக்கு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது.
நன்றி இணையம்
அன்புடன் sanjay தமிழ் நிலா
பண்டிதமணி உண்மையில் மட்டுவில் மண்ணின் மைந்தன் என்பது எமக்கு பெருமையான விடையம் தான்.
ReplyDeleteஅமாம் முத்திரை வழங்கி கௌரவித்துள்ளது. நன்றி உங்கள் கருத்துக்கு..
ReplyDelete