"கிபீர் குத்தப்போது, பொம்மர் அடிக்கப்போது, ஹெலி சுத்துது, சுப்பசொனிக் இரையுது... உள்ளுக்க ஓடுங்க... ஓடுங்க..." - இந்தச் சத்தம் கேட்டால் போதும், கையில் வைத்திருக்கும் சோற்றுத் தட்டோ அல்லது பாடப் புத்தகமோ அங்கேயே விழும். அடுத்த சில நொடிகளில் நாங்கள் இருப்பது வீட்டுக்குள்ளோ அல்லது முத்தத்திலோ அல்ல; மண்ணுக்கு அடியில் இருக்கும் அந்த இருட்டு அறைக்குள்ள. அதுதான் எங்கள் பங்கர்.
இன்றைய தலைமுறைக்கு 'பங்கர்' என்பது என்னவென்று தெரிய வாய்ப்பில்லை. ஒரு இராணுவச் சொல்லாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது ஒரு பாதுகாப்பான கருவறை. 80,90களில் பிறந்த யாழ்ப்பாணத்து பிள்ளைகளுக்கு அல்லது வன்னிப் பிரதேசத்து அத்தனை பேருக்கும் தெரியும். விளையாடி வளர்ந்த இடங்களை விட, குனிந்து பதுங்கியிருந்த பங்கர்களுடன் தான் பிணைப்பு அதிகம்.
வீடு கட்ட அத்திவாரம் போடுகிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டு வளவிலும் ஒரு நல்ல பங்கர் இருப்பது அன்றைய கட்டாயம். அப்பா அண்ணாக்கள் மண்வெட்டியால் குழியைத் தோண்ட, அந்த மண்ணை வெளியில் பிள்ளைகள் தள்ளி பங்கர்களை ஆக்குவார்கள். பங்கர் வெட்டுதல்: அந்நேரம் ஒரு குடும்ப வைபவம். உறவுகள் சேர்ந்து அமைக்கும் அரண்மனையும் தான். ஆனால் பங்கர் வெட்டுவது லேசுப்பட்ட வேலையில்லை. அதுக்கு தோதான இடம் பார்க்கவேண்டும். வீட்டுக்கு தொலைவிலையும் இருக்க கூடாது, கிட்டவும் இருக்கக்கூடாது. மரங்களுக்கு இடையில இருந்தா செல் அதிலபடும் என்று அவடங்களில தான் வெட்டுவார்கள். அது பெரிய வேப்பமரம், எங்கட பங்கர் அதில தான் இருந்ததாம். மேலால பொம்மரில இருந்து பார்த்தாக்கூட்ட கண்டு பிடிக்கேலாது என்று நினைச்சிருப்பினம் போல. பங்கர் வெட்டியாச்சு.
சுற்றிலும் பனை அல்லது தென்னங்குற்றிகளை, அல்லது தேக்கு மரங்களை, கமுகு மரத் தடிகளையும் குறுக்காக அடுக்கி, அதன் மேல் தகரத்தைப் போட்டு, பிறகு மீண்டும் மண்ணை ஏற்றி... மண்மூடைகளை அடுக்கி... அது ஒரு பெரிய பொறியியல் வேலை. கடைசியாக, மழை நீர் உள்ளே வராமல் இருக்க பொலுத்தீன் தாள்களை அல்லது உரப்பையைப் போட்டு இறுக்கிவிடுவார்கள். உள்ளே இறங்க சின்னதாக ஒரு பாதை இருக்கும்.
தென்மராட்சி பக்கம் எல்லா நிலமும் மண்கண்டம் இல்ல, கன இடம் கல்லுப்பூமி, கல்வயல் பக்கம் மேலயே கல்லுத்தான் இருக்கும், அங்கை எப்படி ஆழமா வெட்டுறது. எங்கட பக்கம் மண் தான் சிக்கல் குறைவு. ஆள் அளவு பங்கர் வெட்டினால் தான் நிக்கலாம், மூச்சும் போய்வரும். பெரும்பாலும் பங்கர் ’ட’ வடிவமாகவும், ’ப’ வடிவமாகவும் பெரும்பாலும் இருக்கும் ’|’ ,’I’ ’T’ வடிவங்களிலும் இருக்கும்.
இது சில வீடுகளில் பெரிதாக கட்டப்பட்டிருக்கும். அவாறான நில அறை வீடு ஒன்று எங்கள் உறவினர் வீட்டில் இருந்தது. அது பல குடும்பங்களை காப்பாற்றும் ஒரு வீடாகத்தான் காணப்பட்டது.
சத்தம் கேட்கத் தொடங்கியதும், அம்மா பிள்ளைகளை அணைத்தபடியும், அப்பா கையைப் பிடித்துக்கொண்டும் உள்ளே பாயும் போது உயிர் மிச்சம் இருப்பதை உணரலாம். தொண்ணூறுகளில் அந்த இருட்டு உலகத்தின் வாழ்க்கை ஒவ்வொரு வீட்டிலும் கிடைத்திருக்கும். எனக்கும் அப்போதைய கதைகளினை பின்னாளில் நினைவுபடுத்தும்போது இன்னமும் சிலிர்க்கிறது.
உள்ளே சாமி அறை கட்டாயம் இருக்கும், இரவு இரவாக வானில இரையும் பொம்மறுக்கு பயந்து சாமி கும்பிட்டபடிதான் இருக்கும், பிள்ளையாரும் ஜேசுவும் பலபேரை காப்பாற்றியிருப்பார்கள். உள்ளே இருக்கும்போது மலசலம் கழிக்க வெளியே போக முடியாது. உள்ளே வாளியோ மூடியோ அது தான். இரவுகளில பங்கர் வாசலை மூட வேணும். வெளிச்சம் வெளியில தெரிஞ்சால் ஹெலி வெடிவைக்கும். லைட் போட்ட பங்கர்களும் ஊரில இருந்திருக்கு. ஆனால் என்ன குண்டு போடேக்க கரண்ட வெட்டிப்போடுவாங்கள்.
பெரும்பாலும் உள்ளே ஒரு சிறிய அரிக்கன் லாம்பு அல்லது குப்பி விளக்கு எரியும். மண்ணெண்னை இல்லாட்டி மெழுகுதிரிதான், அந்த நேரம் மெழுகுதிரியும், நெருப்புப்பெட்டியும் போதிய அளவு இருக்கும். அந்த அறைகளில சாதாரண தரம், உயர்தர புத்தகங்கள் புரட்டப்பட்டன, அந்தச் சிறிய வெளிச்சத்தில் படித்து பலகலைக்கழகம் சென்று பெரும் பதவிகளில் இருக்கும் பலரின் நினைவுகளாக இன்றும் பங்கர் இருக்கும்.
சேர்ந்து வெட்டிய பக்கத்து வீட்டுக்காரர்களும் சேர்ந்து ஒரே பங்கருக்குள் பத்து பேர் வரை முட்டி மோதி அமர்ந்திருப்பார்கள். அப்போது பேசப்படும் கதைகள், ஆறுதல்கள் அந்தப் பயங்கரமான சூழலிலும் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. வீட்டில் மட்டுமன்றி, பள்ளிக்கூடங்களிலும் வரிசையாக பங்கர்கள் இருக்கும்.
ஒருமுறை எனக்கு மூன்று வயதிருக்கும்போது போது அப்பப்பா உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தாராம், சாவகச்சேரியில ஹெலி அடிக்கத்தொடங்கீட்டுதாம். அங்க இருந்த பங்கருக்க வைச்சிருந்தாராம் பிறகு தான் தேடுவன் என்று வீட்ட ஒருமாதிரி கொண்டந்ததாக அம்மா அடிக்கடி சொல்லுவா. சங்கத்தானையில் உள்ள உதயன் மரக்காலையில் 1993 செப்டம்பர் 28ஆம் திகதி இடம்பெற்ற வான் தாக்குதல் காரணமாக பாதுகாப்புப் பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் உயிரிழந்திருந்தார்கள். சில இரவுகளில் பங்கருக்குள் இறப்புக்களும் பதிவாகியிருக்கின்றன பங்கர்களுக்கு கனதியும் அதிகம்.
மழைக்காலம் வந்துவிட்டால் பங்கருக்குள் தண்ணீர் புகுந்துவிடும். தவளைகளும், பூச்சிகளும் அங்கே குடியேறும். அதையெல்லாம் சுத்தம் செய்து, வைக்கோல் அல்லது சாக்குகளைப் போட்டு மீண்டும் தயார் செய்யவேண்டும். குண்டு வீச்சுக்கு பயப்படுவதா அல்லது உள்ளே இருக்கும் பூச்சிகளுக்கு பயப்படுவதா என்று தெரியாத தருணங்கள் அவை.
யுத்தம் முடிந்த பிறகு, பல வீடுகளில் அந்தப் பங்கர்கள் மூடப்பட்டுவிட்டன. சில இடங்களில் அவை குப்பை குழிகளாக மாறிவிட்டன. ஆனால், இன்றும் சில பழைய வீடுகளின் பின்னால் சிதைந்த நிலையில் இருக்கும் அந்த மண் மேடுகள், ஒரு காலத்தில் எங்கள் உயிரைக் காத்த 'புனிதத் தலங்கள்'.
.png)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா