Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

உலகம் அழியும் ஆனால்
நாளை என்று யார் சொன்னார்கள்...

மாயன் சொன்னானா..
உன் மாமன் சொன்னானா..
நாளை உலகம் அழியும் என்று..?
மாயன் என்றால் மாயம்
மாயம் என்றால்
கண்கட்டி வித்தை தானே..
உன் கண்களைக் கட்டிவிட்டு
சொல்லவதெல்லாம் உண்மையா
நண்பனே...??

மாத நாற்காட்டியை
வருடம் ஒருமுறை மாற்றிவிடுகிறாய்
மாயன் நாற்காட்டியும் முடிந்துவிட்டது
அவ்வளவுதான். மாற்றிவிடு
உன்னையும் சேர்த்து...

பைபிள் சொல்கிறதாம்..
கீதை சொல்கிறதாம்..
குர்ரான் சொல்கிறதாம்..
யார் இல்லை என்றது..
நாளை என்று சொல்கிறதா...??
மனிதா
அழியத்தான் போகிறது
உன்னால் தான்... ஆனால்
நாளை இல்லை...

அழியப்போகிறது என்று
சொல்கிறாய்..
யாருக்காவது உதவினாயா...?
ஒரு நேர உணவு கொடுத்தாயா..?
இல்லைத் தானே..
உனக்கே தெரியும் அழியாது என்று...
வதந்திகளால் நீ
பிரபல்யம் அடைய நினைக்கிறாய்..
உலகம் உன்னை பார்த்து
சிரிக்கிறது..
அழிவது நீயா நானா என்று..
20-12-2012
11.55-11.59 PM


நாளை இன்றாகிவிட்டது..
இன்று நேற்றாகிவிட்டது...
எல்லாமே அப்படியே தான்...
மனிதா
நீ கூட...!!

21-12-2012
12.02 AM


தமிழ்நிலா

( யாவையும் கற்பனையே...)

இரவு விடிந்துகொண்டிருந்தது, நேரம் மூன்று மணியை தாண்டியும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான், தலையணை மட்டுமே அவனிடம் அடைக்கலமாய் கிடக்க சாமத்து கோழிகளை போல் மனம் கூவிக்கொண்டு இருந்தது.

2012 இல்  இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை  உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவை  எனது "ஒரு மனிதனின் கவிதைகள்"  மற்றும் சில வலைத்தளங்களிலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில உதயன் மற்றும் காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

தமிழ்நிலா

2012 இல்  இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை  உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் அவர்கள் இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் யாழ்ப்பாணம் மட்டுவில் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர். நுணாவில் சரஸ்வதி வித்தியாலயம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.

உலகம் அழியப்போகிறதா...
யார் சொன்னது..
அழிந்துகொண்டிருக்கிறது..
அதுவும் இல்லை
உலகம் எப்போதோ
அழியத்தொடங்கி விட்டது
அது தான் உண்மை...

நெஞ்சில் ஈரம் என்று காய்ந்ததோ...
கொலை என்று கலை ஆனதோ..
வீரம் என்று துரோகமானதோ..
பொய்கள்  என்று உண்மையானதோ..
நேர்மை என்று ஊழல் ஆனதோ...
கற்பு என்று களங்கமானதோ..
இயற்கையை என்று விஞ்ஞானம்
முந்த நினைத்ததோ...
அன்றே அழியத்தொடங்கி விட்டது...

இறக்கப் பயப்படுகிறாயா...
பயப்படாதே
மனிதம் இறந்து நாளாகிவிட்டது..
உடல் வேண்டுமா...
எதுவும் நிரந்தரம் இல்லை
மண்தானே உண்ணபோகின்றது...
வாழ்க்கையும் அது போல் தான்..
வாழப் பழகியவன் தானே நீ...

இருப்பினும் சக்தி ஒன்றே
நிலையானது.... மதங்கள் அல்ல...
மனிதங்களை நேசிக்கும்
அந்த மகத்தனா சக்தி..
உன்னையும் என்னையும்
ஆட்டுவிக்கும் அந்த ஒரே சக்தி..
அதற்க்கு மட்டும் பயப்படு...

நாளை என்பது நிச்சயமில்லை..
புரிந்து கொண்டாய் அல்லவா...
நாளை அழியும் என்பது கூட...

தமிழ்நிலா

மண் கல்லாகி இருந்தது
கிளுவைகள் மதிலாகி இருந்தன..
கிடுகுகள் ஓடாகி
திண்ணையை மறந்து
விண்ணையே தொட்டிருந்தன
நகரத்தின் வீடுகள்...

வரவேற்பறையிலே
கண்ணாடி அலுமாரிகளுடன்
நீண்ட கட்டில்கள்..
எல்லாப்பக்கமும் நோக்கியவாறான
சுவர்களில் சாமிப்படங்கள்..
படங்களுக்கு கீழே
செருப்பு வைக்கும் மேசை..
புகை போக்கி இல்லாத
சமையலறைகள்...
பதப்படுத்தப்பட்ட உணவு..
மின்னை மட்டும் நம்பிய காற்றாடிகள்..
விலை நிர்ணயிக்கப்பட்ட குடிநீர்..
பொம்மைகளை மட்டுமே
நண்பராக கொண்ட குழந்தைகள்..
மண் மறந்த சாடிக்குள்
நிமிர்ந்திருந்த பூ மரங்கள்...

ஒரு கிராமமே அடங்கியிருந்தது
இந்த நகரத்தின்
ஒற்றை வீட்டுக்குள்....
இருப்பினும்
புதையுண்டுபோன கிராமத்தின்
மொத்த வரலாறு மட்டும்
எங்காவது ஒரு வீட்டின்
மூலையிலாவது குனிந்து
சிரித்துக்கொண்டிருக்கும்...
இது போன்ற
கறுப்பு வெள்ளை
புகைப்படங்களாய்...

தமிழ்நிலா


என் யன்னலோரோ இருக்கைகள்..

எல்லோருக்கும் பிடித்துப்போகும்
யன்னலோரோ இருக்கைகள்..
விரும்பியும் விரும்பாமலும்
சிலநேரங்களில்
எப்படியோ பறிபோய் விடும்..
கர்ப்பிணிகள் உரிமையுடன்
பெறுகின்றனர்..
முதியவர்கள் அனுதாபத்தில்
பெறுகின்றனர்....

காதலர்கள், நோயாளிகள்,
வயோதிபர், குழந்தைகள்..
யார் வேண்டும் என்றாலும்
இந்த இருக்கையில் இருந்தால்
உலகத்தையே பார்த்துவிடலாம்...
உலகத்தை மறந்தும் விடலாம்..

மழைக்காலத்தில் சாரலையும்
வெயிற்காலத்தில் தென்றலையும்
சில நாட்களில் செம்மண் துசிகளையும்
அள்ளி தந்துவிடும்...

எப்போதும் யாவர்க்கும்
இரசிக்கும் இடமாகவே
இருந்துவந்துள்ளன....
யன்னலோரோ இருக்கைகள்.
எப்போதும் எனக்கும்..!
உலகம் அழகு என்பதை என் 
யன்னலோரம் அடிக்கடி சொல்லும்..
உலகம் சிறிது என்பதையும் கூட..

சில நேரங்களில் யாவற்றையும்
இழக்கத்தான் வேண்டும்
எதுவும் நிரந்தரம் இல்லை என்பதையும்
என் யன்னலோரோ இருக்கைகள்
அடிக்கடி சொல்லாமல் சொல்லும்...

தமிழ்நிலா

அழுக்குத் துணிகள்
லேசான மழுங்கிய தாடி
கண்களில் புன்னகை
புயங்களில் வலிமை
துப்பாக்கி ஏந்திய
ஒரு இளைஞன்
நினைவுக்கு வருவான்...

யார் அவன்?
புரட்சியின் குறியீடு...
முதலாளித்துவத்தின் எதிரி..
மக்களின் விடுதலை விரும்பி...
புனிதப் புரட்சியாளன்..

சே குவேரா
மற்றவரிடமிருந்து மாறுபட்டவன்
என்னிடத்தில் ஒன்று பட்டவன்...
என் சே குவரா இப்படி இருப்பான்

அழகிய துணிகள்
மழிக்கப்பட்ட தாடி...
கண்களில் மாறாத புன்னகை..
நெஞ்சினில் அதே திடம்..
கைகளில் பேனா
வைத்திருப்பான்...

இளைஞர்கள் கோபடுகிறார்கள்
சே தடுத்துவிடுகிறான்...
அநீதியை கண்டு 
ஆத்திரம் வருகிறதா? 
நீயும் என் தோழன்....
துப்பாக்கிகள் போடப்பட்டு
பேனாக்கள் ஆயுதமாகிறது...

வடுக்கள் பெற்றவர்கள்
விருதுகள் பெறப் பழகிக்கொண்டார்கள்
மறைந்து தாக்கியவர்கள்
நேருக்குநேர் தாக்க பழகினார்கள்..
புரட்சி புது வடிவம் பெற்றது...

சே குவேரா
சிலையாகவில்லை.. - இப்போது 
சரித்திரம் ஆனான்...
புரட்சியின் தந்தையாக அல்ல 
புரட்சியின் குழந்தையாக...

தமிழ்நிலா

சே குவேரா (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

காலத்தின் சாக்கடைக்குள்
காதல் கல் வீழ்கிறது..
விழுகையில் ஏற்படும்
நீர் வளையங்கள்
வேலி போடமுயன்றும்
தெறித்த நீர்த் திவலைகள்
கீழே விழமுன்,
ஆழச் சென்று
அடைந்து விடுகின்றது
கூரான அந்தக் கல்..

உள்ளே சில கொத்திப்பார்த்தன..
சில தட்டிப்பார்த்தன..
அசைவதாய் இல்லை..
நாட்கள் நச்சரித்து நகர்ந்து கொண்டன..
கூரான அந்த கல் மழுங்கியது..
வேலிகளுக்கு வெளியே
வழுக்கத் தொடங்கியது..

மகிழ்ந்து தலைதிருப்பி
உன்னிப்பார்த்தது எழுந்துவர..
முடியவில்லை,
அமிழ்ந்து கொண்டது
அந்த சகதிக்குள்...

தமிழ்நிலா

நண்பன் ஒருவனுடன் கதைக்கும் போது மனதில் பதிவாகிய ஒருவிடயம்.. இதில் தவறுகள் இருக்கிறது, உண்மைக் காதலர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.... 


மரண நதிகள்
சலசலத்துக் கொண்டன..
பிணம் தின்னிக் கழுகுகள்
மரங்களில் வந்தமர்ந்தன..
இருட்டில் கரைந்துவிடுகின்றது
மெழுகுதிரியின் சுவாலை...

எழுத்துக்கள்
தூங்கிக்கொண்டிருந்தன..
எப்படிக் கவிதையாவது என்றும்
தெரியாது அதற்கு..
அடிக்கடி என்னைக்
கேட்டுக்கொள்ளும்...

இரண்டு வரிகளை
இணைத்தா...?

அல்லது

ப்

டி
எழுத்துக்களைப் பிரித்தா..?

ஒரு
முழுவரியை
நான்காக
உடைத்தா...?

அல்லது
அலை போல நாபுரளும்
உவமைகளை அடுக்கியா...?
ஆனால் பொய் சொல்வதற்கு
துளியளவும் சம்மதம் இல்லை
என்றது பேனா.... என்ன செய்வது..??

இணைத்தும், பிரித்தும்
அடுக்கியும், உடைத்தும்..
இப்படி எழுதினேன்..

நன்று என்றார்கள்
எழுத்துக்கள் மார்தட்டிக்கொண்டன
நாம் கவிதையென்று...
பொய்ப்புகழ்ச்சி பிடித்துவிட்டது போலும்
பொய்களையே எழுதிக்கொண்டது...

இது கவிதையே இல்லை
என்றார்கள் கவிஞர்கள்
மீண்டும் தூங்கிவிட்டது...
எனது கவிதை...
எழுந்திரு என்றேன்
புரண்டு படுத்துக்கொண்டது
எழுந்துவர விருப்பமின்றி...

தமிழ்நிலா


ஸ்பாட்டா எனும்
வீரத்தின் பேரரசு
மீண்டும் உருவாகியிருந்தது...
ஸ்பாட்டகஸ்
என் ஸ்பாட்டாவின்
மன்னராகி விட்டான்..

சிக்குண்டு சிதறியிருக்கும்
சுருண்ட கூந்தல்
முடித்திருப்பான்...
கண்களுக்குள் 
சாம்பல் கொட்டி 
விழித்திருப்பான்...
நாக்கில் தேன் பூசி
உதடுகளில் விஷம் 
தடவியிருப்பான்...
வழமையான
கற்பனையில் இருந்து
முற்றிலும் மாறி இருந்தான்...

புயங்களில் வீரம்
புலன்களில் ஏக்கம்..
கொண்ட ஸ்பாட்டகஸ்
என் ஸ்பாட்டாவின்
மன்னராகி விட்டான்..

இந்த ஸ்பாட்டா 
மனித இனத்தொன்மங்களின் 
தொடக்கம் அல்ல 
அடிமைத்தனத்தின் முடிவிடம்...

தமிழ்நிலா

ஸ்பாட்டகஸ் என்பவர் உரோமைக் குடியரசுக்கு எதிரான ஓர் பாரிய அடிமைகளின் எழுச்சியின் போரில் உரோமினால் அடிமைகளாக்கப் பட்டவர்களின் தலைவராக இருந்தவர். ஸ்பாட்டகஸின் போராட்டம் என்பது அது அடிமை ஆட்சிக்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது.


இரவு வானம் உடைந்து
விழுந்திருந்தது..
சிதைவுகளுக்கு இடையே
மங்கிய ஒளியில்
மின்னிக்கொண்டிருந்தன
சில நட்சத்திரங்கள்...
நிலவு நீருக்குள் விழுந்து
அணைந்திருந்தது....
மேகங்கள் திட்டுத் திட்டாக
குவிந்து கிடந்தன...
சூரியத் துகள்களின்
வெக்கையில் காடுகள்
எரிந்து கொண்டிருந்தன....

கோரப் பற்கள்
இரத்தம் சுவைத்த நீண்ட நாக்கு...
கண்களில் நெருப்பு
பாம்புத் தலைமயிர்கள்..
பருத்த உடல், நீண்ட கழுத்து
குட்டைக் கால்....
கைகளில் கொடிய ஆயுதம்..
நீண்ட நகங்கள்..
உடல்களில் சிதல் கொண்ட உருவம்
திடீரென தோன்றி மறைகிறது...

மெல்ல என்னருகில் வந்து
அமர்ந்து கொண்டது..
திடுக்கிட்டு எழுந்தேன்..
திரும்பிப் படுத்துக்கொண்டேன்..
இல்லாத கடவுளை
இரண்டு முறை வேண்டிக்கொண்டேன்..
மீண்டும் உறங்கிவிட்டேன்..
மீண்டும் மீண்டும் அதே உருவம்..

திடுக்கிட்டு எழுந்தேன்..
திரும்பிப் படுத்துக்கொண்டேன்..
நித்திரை வருவதாய் இல்லை..
கோரம் நிறைந்த அது மட்டும்
மீண்டும் மீண்டும்...

ஏன் இந்த கனவு
ஏதோ நடக்கபோகிறது...
அல்லது..
ஏதோ நடந்திருக்கவேண்டும்..

தமிழ்நிலா


மேகம் உருகி
சொட்டு சொட்டாய்
சிந்திக்கொண்டிருக்கிறது...
இலைகளிலும்
புல்லின் நுனிகளிலும்
சிம்மசனமிட்டிருகின்றன
உருகிய துளிகள்..
வானம் வெளிச்சத்தை உண்டு
தன்னை மறைத்திருந்தது...
நிலவும் உறங்கிவிட்ட இரவு..

இருப்பினும்
கைகளில் கேள்விகள்...
அவர்கள் எங்கே  போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...

கால்களை கூளாம்கற்கள்
கிழித்துக் கொண்டிருந்தன..
இன்னமும் ஆறிப்போகாத
சூடு மண்ணில் தெரிந்தது..
நாய்கள் எதையோ
இழுத்துக்கொண்டிருந்தன..
சருகளில் பாம்புகள்
சரசரத்துக் கொண்டிருந்தன..
எங்கோ கழுகுகள்
சிறகடிக்கும் சத்தம்..

ஒரு பெரிய மயான வெளியில்
மூங்கில்கள் தாமாகவே
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
ஆனால் அத்தனையும்
நிசப்தமாய் இருந்தது...
எதுவுமே நடக்காதது போல்....

தமிழ்நிலா

கடல்
பூமியின் அழகு...
அழிந்து போகாத
தண்ணீர்க் காடு..
நிலம் அங்கம் மறைக்க
போர்த்தியிருக்கும் நீல ஆடை..
சூரியனையே உண்ணும்
அழகு இராட்சதன்..
நிலவு முகம் பார்க்கும்
திரவ கண்ணாடி...

அலையும் காற்றும் உறங்கும்
முதலிரவு மெத்தை...
நேற்று பிறந்த குழந்தை கடல்
அழுது கொண்டே இருக்கிறது....

கடல் எனக்கானது..
என் மூதாதையரின் தாய்...
நாங்கள் நடந்து வந்த
ஒற்றையடிப் பாதை...

வரலாறுகளை தின்று
முடித்திருந்த கடலின்
கரையின் மணலில்
நண்டுகள் கிறுக்கிய கவிதைகளை
ரசித்துக்கொண்டு நின்றேன்...

என்ன ஆச்சரியம்...
நீர் மூழ்கி கப்பல்களை
கொள்ளையடிப்பதர்ற்கு
தயாராக நின்றது வள்ளங்கள்...

வள்ளங்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தன
அலைகள்...
அலைகளின் ஊடு
வலைகள் கடந்திருந்தது..

மீனவர்கள் கொள்ளைக்கார்களாம்...
முதல் முறை அலை வந்து
வருடி போயிற்று..
வருந்திக்கொண்டேன்...

கடல் கொலைகாரன் என்றான் மனிதன்..
கடிந்து கொண்டேன் அலையை...
பாய்ந்து என் கால்களுக்கு அடியில்
மண்ணைக் கரைத்து
விழ வைக்க முயன்று
தோற்று போகிறது அலை...

தமிழ்நிலா


எனக்கும் என் தோழி உனக்கும்
இடையில் ஒரு காதலிருந்தது..
காதல் என்றால்..??

யுகங்கள் தவமிருக்கும் ஞானிக்கு
காட்சி தரும் தேவதையாய் நீ 
பிறவிக் குருடனுக்கு கிடைத்த
ஒரு நிமிட பார்வை போல
எப்படியோ நீ ..

பாலைவன மணல் மீது விழும்
சிறு தூறல் போல உன் அன்பு
தெரியாமலே வீசியிருந்தது...
தொடர் தோல்விக்குப் பின் பெறும்
முதல் வெற்றி உன் பாசம்
தெரியாமலே கிடைத்திருந்தது...

கனவுகளை 
திருடிக்கொண்டிருந்த தனிமையின்
கற்பனைகளை
திருடிக்கொண்டிருந்தது கவிதை....

வார்த்தைகள் உரசிக்கொள்ளும் இரவின்
கவிதைகளில் இருந்து பிறக்கிறது
உனக்கும் எனக்குமான நட்பு...

இருட்டை உடைத்து
உனக்கும் எனக்கும்
ஒரு நட்பினை செய்தேன்..

நானும் நீயும் நட்பு செய்தோம்...
நட்பும் நட்பும் காதல் செய்தது....

காதல் போன தெருவில்
நீயும் நானும் கைவீசி நடந்தோம்...
தெருவில்போகும் யாரையும் கண்டு
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..
ஏனெனில்

உன் நட்பை
என் நட்பு காதல் செய்தது
அது தான் உண்மை....
அது மட்டும் தான் உண்மை...

பார்வைகள் கூட தொட்டுவிடாத
தூரத்தில் தான் நீ...
காதல் திரையினை விலக்கியே
தோழி உன்னை பார்த்தேன்...
என் வாழ்வின் இறந்தகாலத்தின்
வசந்த காலம் நீ...

உன் நினைவுகளைத் தின்று
பசியாறுகிறது என் கவிதைகள்..
என் கண்நீரைக்குடித்து 
தாகம் தீர்க்கிறது காலம்...

அதே புன்னகையுடனும்,
நலமா? என்ற கேள்வியுடனும்
நேற்றும் தோன்றி மறைந்தது
உனக்கும்
எனக்குமிடையில் இருந்து
தொலைந்து போன எம் நட்பு...

தமிழ்நிலா

கடலும், வெளியும்
எல்லைகளாய் கொண்ட
பறவையுடன் நட்பு கிடைத்தது..

இறக்கைகள் அழகு என்றார்கள்
ஆனால் கம்பீரமாக இருந்தது..
இரவு பகல் பறந்தும்
களைக்கவில்லை..
புயல்களில் அடிபட்டும்
வீழவில்லை...

மனதினை ஒருநிலைப்படுத்த
கற்றுத்தந்ததே இது தான்...

கால்கள் மென்மை என்றார்கள்
ஆனால் உறுதியாக இருந்தது...
மலைகளிலும் மரங்களிலும்
எப்படி லாபகமாக பற்றிகொள்ளும்..

என் கால்களை உறுதியாக்க
இதனிடம் இருந்து தான்
கற்றுக்கொண்டேன்...

சுள்ளிகளால் சின்ன தாஜ்மஹால்கள்
அலகினால் கட்டிக்கொள்ளும்...
உதடுகளால்
எம்மால் என்ன செய்ய முடியும்
அது தானே...

ஒரு சிறகு முளைத்த பறவை
என் செல்லப்பிராணி ஆனது..
பெயர் தெரியாத அப்பறவையின்
ஒவ்வொரு செயலும் பிடித்திருந்தது..

தனது வட்டங்களை பெரிதாத கொண்டது..
அதனால் பிடித்திருந்தது..
இயற்கையின் வேறுபட்ட ஓவியம்..
அதனால் பிடித்திருந்தது..
மேல் எழும் திடீர் என்று
மடிமீது அமரும்..
அதனால் பிடித்திருந்தது..
வெற்று வானை
எப்படியோ நிரப்பி விடுகிறது...
அதனால் பிடித்திருந்தது..

கூட்டில் இருந்த பறவையை
வீட்டில் வைத்த மகிழ்ச்சி.. எனக்கு
வீட்டில் இருந்த தன்னை
கூட்டில் வைத்ததாக மகளிடம்
புலம்பிக்கொண்டிருந்தது பறவை...

தமிழ்நிலா

மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்துகொண்டிருக்கிறது...

பறப்பவை ஊர்ந்தும்
ஊர்வவை நடந்தும்...
நடப்பவை பாய்ந்தும்
பாய்பவை  நீந்தியும்
நீந்துபவை பறந்தும்
இயங்கிக் கொண்டிருந்தன....

அத்தனையும் பூச்சியம்
ஆகும் முதல்
இரண்டாம் உலகம் நோக்கி...

புற்கள்
கிளை விட்டுக்கொண்டிருந்தன...
மரங்கள்
படர்ந்துகொண்டிருந்தன...
கொடிகள்
புணர்ந்துகொண்டிருந்தன...

மரண வாசம் மட்டும் நிரம்பிய
காற்றை சுவாசித்தவாறு

மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்திருந்தது...


தமிழ்நிலா

கனவை தேடி
அலைந்து கொண்டிருந்தாள்
ஒரு தேவதை...

தெருவின் ஓரத்தில்..
பருவத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது..

ஒற்றை மர நிழலில்..
பாசத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

மணல் திட்டுக்களில்...
பாதியில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...
எதுவுமே அளவுடையது இல்லை...

கடல் தாண்டும் கனவு
துளிர்த்திருந்தது....
ஆனால்
கனவுடன் கடல்
விளையாடிக்கொண்டிருந்தது...

கடலின் அலைகளுக்கிடையில்
கனவுகள்
தத்தளித்துகொண்டிருப்பது தெரிந்தும்,
அவளது கனவு
நீந்தி போக நினைத்திருக்ககூடும்..

கடலின் கரையில்...
பயணத்தில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

இதுவாக இருக்கலாம்..
உதவி கேக்கவும்
இந்த பாதையில் ஒருவரும் இல்லை...

கனவினை அழைத்துப்பார்த்தாள்
எழுந்து வருவதாய் இல்லை...
கனவினை அழைத்துப்பார்த்தாள்
திரும்பி வருவதாய் இல்லை..

கலைந்து போன(அவ)வளின் கனவு
காணாமல் போயிருந்தது...

தமிழ்நிலா

கடல் தாண்டிய பயணத்தில் உயிரை பிரிந்தவர்களுக்காக.
கடல் தாண்டி வாழ்வை இழந்தவர்களுக்காக 
தூக்கம் விற்று சம்பாதிப்பவர்களுக்காக...
இதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...



கோவில் வாசலில்
சிந்தி கிடக்கும் பூக்களை போல
கல்லூரி வாசலில் நட்புகள்

ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் பச்சைப் புற்கள்
எப்படி முளைத்திருக்கும்...

புல் நுனியில்
அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பனித்துளிதான்
எம் நட்பு...

உன்னை நானும்
என்னை நீயும்
முதல் முறை
பார்த்துக் கொண்டோம்..
அப்போது தான்
பூத்திருக்கவேண்டும்
இந்த நட்பு....

மழையும் வெயிலும்
சந்தித்தால் வானவில்...
நானும் நீயும்
சந்தித்ததால் நட்பு..

பாலர்வகுப்பில்
ஒற்றை ஊஞ்சலுக்காய்
அடிபட்டுக்கொண்டோம்,
திடீரென விலகினாய் அப்போதே
முழுமை அடைந்துவிட்டது
எம்  நட்பு

அற்ப விசயங்களுக்கும்
சண்டை பிடித்தோம்...
நட்பு பலமடைந்தது...

அதிக விசயங்களுக்கு
சண்டை பிடிக்காதிருந்தோம்
நட்பு இன்னும் பலமடைந்தது...

போட்டி போட்டு
பொய் சொல்லியிருக்கிறோம்
உன்னை நானும்
என்னை நீயும்
காப்பாற்றிக்கொள்ள...

பொய்களை காப்பாற்ற
எத்தனை கதைகள்
நீ சொல்லியிருக்கிறாய்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..
என் கற்பனைகளின் நாயகன் நீ...

அப்பாவின் திட்டுக்களை விட
உனது மௌனம் அர்த்தமானது...

அம்மாபோல் என்மேல்
அதிக அக்கறை கொண்டவன் நீ ...

நட்பை தவிர  அத்தனையும்
கடனாய் பெற்றது தான்
உன்னிடமிருந்து...

உன்னிடம் நான் மறைத்தது
என் அந்தரங்கங்கள் மட்டும் தான்..

என்னோடு
பேசுவது மட்டும் இல்லை
எனக்காக
பேசுவதும் நீ தான்...

பெயர்கள் சேகரித்துக்கொண்டு
திரிந்த அந்த முதல் நாள்...

உன்னை நானும்
என்னை நீயும்..
புகைப்படம் எடுத்த
அந்த முழு நாள்..

கையில்
நினைவுக் குறிப்பேட்டுடன்
அலைந்த இறுதிநாள்...
உனக்கான  இறுதிக் கவிதை..
இப்போதும் இசைக்கின்றது...

ஏதோ அனுபிக்கொண்டிருந்தோம்
கடதாசியிலாவது ராக்கெட்கள்..

ஏதோ கட்டிகொண்டிருந்தோம்
மட்டையிலாவது கப்பல்கள்...

வகுப்பில் படித்ததை விட
உன்னிடம் படித்தது அதிகம்...
இருளிலும் மின்னியவன் நீ...

நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்...
மதங்கள் நட்பானது...
ஜாதிகள் நட்பானது...

உனது காதலுக்காய்
துது போன அந்த நாட்கள்...
என் காதலியிடம் உனக்காய்
துது போன அந்த நாட்கள்...
அத்தனையும் அழகு தான்...

கல்லுரி சுவர்க்கம்
சந்தோசத்தின் மறு வடிவம்...

ஒற்றை குழாயில்
குளித்திருக்கிறோம்...
எம்மோடு குளித்தது நட்பு...

ஒரே தட்டில்
உண்டிருப் போம்...
எம்மோடு உண்டது நட்பு...

ஒரே அறையில்
உறங்கியிருக்கிறோம்...
எம்மோடு உறங்கிது நட்பு...

ஆடை மாற்றி
உடுத்தியிருக்கிறோம்...
எம்மை சுற்றியிருப்பது
இப்போதும் நட்பு....

வானம் அழகாக இருப்பது
வெளிச்சத்தில் மட்டும் அல்ல
இரவுகளில் நிலாவினால்...
பகலில் சூரியனால்...

வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்திலும் உன்னால்....

தோல்வியே உனக்கில்லை
நீ இருக்கிறேன் என்றாய்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் பிறந்தேன்..

தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...

இன்று
விழாக்களில் உன்னைக்காண்கிறேன்...
தெருக்களில் உன்னைக்காண்கிறேன்...
முற்றிலுமாய் மாறி இருந்தாய்..

நட்புக்கு மரணம் இல்லை
நட்பு என் சுவாசமாகிவிட்டதால்...

இருந்தும் 

காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம்...


தமிழ்நிலா


உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், 
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, 
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், 
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.

இன்னொரு கருச்சிதைவுதான்
புளுட்டோணியம் கரு
சிதைக்கப்படுகின்றது....

யுரேனியம் பிளக்கப்படுகிறது,
வளிமண்டலத்தில்,
நிலத்தடியில்,
வான்வெளியில்,
நீரடியில்...
எல்லாமே வெற்றி...
விஞ்ஞானிகள்
சிரித்துக்கொள்கிறார்கள்...

யாருக்கும் தெரியவில்லை..
அத்தனையும் தோல்வி...
கடவுள் சிரித்துக் கொள்கிறார்...

அணுமின் நிலையம்
மின்சாரம் உற்பத்தி செய்யவா...??
இல்லை... இல்லை...
மக்களை அடக்கம் செய்ய..
இலவசமாக சூரியன் இருக்கிறதே...
சூரியனும் அணு உலைதான்
அங்கே இருந்து மின்
எடுத்துக்கொள்ளுங்கள்...

இராவணனை  அடக்கி 
இராமன் ஆக்கமுடியுமா...
இராட்சசன் அடங்கிவிட மாட்டான்...

அணு உலைக்கு 
இத்தனை பாதுகாப்பென்றால் 
அது எத்தகைய கொடியது தெரியுமா...??

விஞ்ஞானிகளே 

கழிவுகளை என்ன செய்வது...
ஆழக்கடல் தாண்டிச் சென்று
சமுத்திரத்திற்குக் கீழே புதைத்து விடுவோமா..?
பூமியில் பள்ளம் தோண்டி
பாறைக்குழம்பில் கரைத்து விடுவோமா...?

இருப்பினும் 
சாம்பலில் கதிரியக்கம் 
நடந்து கொண்டேதான் இருக்கும்...

உங்களுக்காக ஒரு அவசர திட்டம்
அமுல் படுத்தப்படுகிறது..
உங்கள் சேவைக்காய்...

இலவசமாக உங்களுக்கு வீடுகள்..
அணு உலைக்கு அருகில்
இருகிறீர்களா...??

இரோசிமா, நாகசாகி மீது 
நடந்தவர்கள்
"குண்டு மனிதன் "
"சின்ன பையன்..."

நடந்த தடங்களே அழியவில்லை...
எப்படி எத்தனை... எத்தனை....

இதோ மீண்டும் தயாராகிறது
புதிய ஆயுதம்..
பெயரும் இட்டகிவிட்டது
"கடவுளுக்காக"

அணுகுண்டு ஒன்று
இலவசமாக வெடிக்கபோகிறது...

தமிழ்நிலா

புன்னகை..
கனவு தேசத்து
பளிங்கு மாளிகையின்
கண்ணாடி மேசை...

ஏழைகளின்
ஒரு வரி முகவரி
வாய் பேசாதவர்களின்
ஒற்றை வார்த்தை..

உதட்டில் பூக்கும்
வெள்ளை மலர்...
இதழ்கள் வாசிக்கும்
இன்னிசை...

புன்னகை என்பது
கதை அல்ல கவிதை..
புன்னகை என்பது
ஒலி அல்ல ஓவியம்..

இப்போதெல்லாம்
கவிதைகளில் கெட்டவார்த்தைகள்..
ஓவியத்தில் தப்பான அடையாளங்கள்...

பொய்க்கு முன்னால்
பொய்யான புன்னகை...

கேலி பேசுகையில்
கபட புன்னகை...

காட்டிகொடுக்கையில்
மாய புன்னகை...

மற்றவரின் தோல்வியில்
சந்தோஷ புன்னகை...

கவர்ச்சி காட்டுகையில்
மந்திரப்புன்னகை...

புன்னகைப்பூக்கள்
எப்படி கருகி பூக்கின்றன...??

புன்னகை என்பவள் அகதி...
நேற்று இங்கு
நாளை அங்கு...

புன்னகை என்பவள் விபச்சாரி..
நேற்று என்னோடு
நாளை அவனோடு...

புன்னகை இப்போது...
நந்தவனமாய் இல்லை
பாலைவனமாய்...

சமாதானம் பேசவில்லை..
சண்டை போடுகிறது...

தேவாலயத்தில் வருவதில்லை..
மயானத்தில் வருகிறது...

காதலை  செய்யவில்லை
கடமையை செய்கிறது,,

உதடுகளையே காட்டுகிறது..
உள்ளத்தை கட்டுவதில்லை...

இப்போதெல்லாம் எம்மால்
புன்னகைக்க முடிவதே இல்லை...

கடல் போல் சத்தமாக...
இல்லை
தென்றல் போல் அமைதியாக...
ம்ம்
இரண்டுமே முடிவதில்லை...

புன்னகை என்பது..
காணாமல் போய்விட்டது...
உதடுகளில் இருந்து....

தமிழ்நிலா

என் நிழல்
என்னை போலவே இருக்கும்....
என் நிழல்
என் கூடவே நடக்கும்...

இப்போதெல்லாம் நிழல்
என் கூட நடப்பதே இல்லை..
நிழல் நிஜத்தில் இருந்து
விலகியே நடக்கிறது...

என் நிழலை எவரும்,
பின்தொடர்ந்தால்
பிடிப்பதில்லை..!

இப்போதெல்லாம் 
எனக்கு  நிழலையே 
பிடிப்பதில்லை...!

முன்பெல்லாம் எனக்கு முன்னால் 
கால்களுக்கு அடியில் சிறிதாய் இருக்கும்..
சில நாட்களாய் எனக்கு பின்னல் 
நீண்டு பெரிதாய் தான் இருக்கிறது...

நிஜத்தை புரிந்து கொள்ளவில்லை...
நிழல் நிழலையே விரும்புகிறது....

நிழல்களுக்கு இடையில் நிஜம்
மாட்டிக் கொண்டுவிட்டது...

நகர்ந்து கொண்டிருக்கிறது
அடர்த்தியான நிழல்களுக்கு இடையில் 
மென்மையான நிஜம்...

இதுவரை நிழலை பார்த்து
குரைத்த நாய்கள்..
நேற்றிலிருந்து நிஜத்தை பார்த்து
குரைக்க தொடங்கியிருக்கின்றன...

தமிழ்நிலா



அப்பாவுக்கும் எனக்குமான
ஆரம்பகால ஊடகம்
கண்கள் மட்டுமே..
பார்வையாலே எல்லாம்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

அப்பாவின் முதுகில் இருந்து
உலகத்தைச் சுற்றினேன்..
அப்பாவின் தோளில் ஏறி
உலகத்தை அளந்தேன்.....
அப்பாவின் கை பிடித்து
நடந்த போதுதான் உலகத்தை படித்தேன்..

நடந்துகொண்டிருக்கையில்
எதிர்த்திசையில் போய்க்கொண்டிருந்தது
அப்பாவின் கடந்தகாலம்...
அப்பா இன்னொரு தாய் தான்..
தன் உழைப்பால் எனை செதுக்கியவர்...

அப்பாவிடம் இருந்து
வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்...
இல்லை
வாழக் கற்றுக்கொண்டேன்..

எப்படி வாழவேண்டும் என்று அல்ல
இப்படித்தான் வாழவேண்டும் என்று
கற்றுத்தந்தவர் அப்பா...

வறுமையிலும் எளிமையாய்..
எளிமையிலும் கொள்கையுடன்..
கொள்கையுடன் செழிமையாய்...

அம்மா தினம் தினம்
திட்டினாலும் உறைத்ததில்லை,
அப்பாவின் ஒரு வார்த்தை
உடனேயே உறைத்திருக்கிறது...

"அப்பா ஒரே புராணம்டா "
என நண்பர்களிடம் புலம்பையில்
உனது தந்தை போல் எங்களுக்கு
இல்லையே என்று
நண்பர்கள் சொல்லும்போது
தான் தெரிந்தது,
என் தந்தை எனக்கு மட்டும்
கிடைத்தவர் என்று..

கடவுள் கேட்டாலும்
கொடுப்பதில்லை...
அப்பா
கேட்ட உடனே கொடுக்கும்
கடவுள்....

என் கரம் பிடித்து
நடந்த போது
என்னென்ன கனவுகள் கண்டிருப்பார்..?
அப்பாவின் கனவுகள் ஏராளம்..

அதிகமானவரின் கனவுகள்
நிஜமாவதில்லை தானே..

உழைத்து களைத்துவிட்டன
அப்பாவின் கால்களும்
அப்பாவின் சைக்கிளும்....
வியர்வை பட்டதால்
சைக்கிள் துருப்பிடித்து விட்டது..
அன்பு இன்னமும் பளபளக்கிறது...

என் முன்னால்
என்றுமே சொன்னதில்லை,
அம்மா சொல்லித்தான்
கேள்விப்பட்டிருக்கிறேன்,
என்னைப்பற்றி பெருமையாக
பேசிக்கொள்வதை...

எனது வாழ்க்கையில்
வெற்றிடம் அப்பாவால் இல்லை..
என்னால் தான் அவரிடம் சில
வெற்றிடங்கள்....
அப்பாவைப் போல் யார்
எனக்கென்று இருக்க முடியும்..

வெளிப்படையாக
நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் காதலை..

அப்பா எந்நாளும் என் முகவரிதான்..

அப்பாவுக்கும் எனக்குமான
ஊடகம் பார்வை மட்டுமே..
பார்வையாலே எல்லாம்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...
இன்றுவரை....


தமிழ்நிலா


தாய்மை..
விசித்திரமானது, 
விபரிக்க முடியாதது...
விநோதமானது,
விளங்கிக்கொள்ள முடியாதது...

தாய்மை..
விரும்பாமல் சிலருக்கும்,
விரும்பி பலருக்கும் வாய்த்துவிடுகிறது...
காமத்தின் சிணுங்கலில் தொடங்கி,
காதலின் சிணுங்கலில் முடிகிறது..

பெண் தாய்மை அடைந்தாள்...
காமம் குழந்தையானது..
குழந்தை காதலானது...

குழந்தை சிறுமியாய்...
குமரி மனைவியாய் வந்தபிறகும்...
தாய்மையை தான் தேடுகிறாள் ...
தாய்மை இனிமையானது...

தாய்மை..
இரவுகளில் தூக்கம் பறிபோகும் என்று
நினைப்பதில்லை..
நீ வந்த பின் சுதந்திரம் பறந்தோடும் என்று
வருந்துவதில்லை...
பத்து மாதம் சுமந்தும் வெறுக்கவில்லை...
புறம் தள்ளுகையிலும் வலிப்பதில்லை....
தாய்மை தனிறைவானது...

தமிழ்நிலா


பூத்த உடனே
கொய்யப்படுகின்றன
இந்த பூக்கள்...

வண்டுகள் தேன் குடிக்க
அமர்ந்த போதுதானே
வந்தன இந்த மொட்டுக்கள்...

பூக்காமல் தடுக்க வேண்டும்

என்ன செய்தாய்...
மருந்தடித்து கொன்றாய்...

மொட்டுக்கள் பூத்துவிட்டால்,
என்ன செய்வது...

கொய்யத்தானே வேண்டும்...

சூடு ஆறும் முன்னே
சேத்துக்குள் புதைத்தாய் ...
தண்டுடன் முறித்து
குப்பைக்குள் போட்டாய்..
இதழ்களை பித்து
பற்றைக்குள் வீசினாய்..

சபாஷ் மனிதா...

நீ யார்
உன்னால் எது முடியாது..
செடி வைத்தது நீ..
நீருற்றி வளத்தது நீ...
வண்டுகளும் நீ,,,
மொட்டுகளும் நீ...

பூக்களை பறிக்கவா
யோசிக்க போகிறாய்...

தமிழ்நிலா


பனியில் குளிர்ந்த
சூரியப் பொறிகள்..

பருவப் பெண்ணின்
முகப்பருக்கள்..

வேதனையிலும்
என்னை புறம் தள்ளிய
தேவதை நீ....

முகம் கூசாத
முழு வெண்ணிலா...
வாடாத தங்க ரோஜா..

உள்ளத் தொட்டிலில்
உறங்க வைக்கும் நீ,
என் உடலுக்கு
வெப்பம் தரும் சூரியன்...
வெப்பம் போக்கிடும்
தண்மையும் நீயே...

தோளில் வைத்து
உலகம் காட்டியவள்  நீ..
என்னை சுற்றி
சுழன்றுகொண்டிருக்கும்
மொத்த உலகமும் நீ...

இறைவன் படைப்பில்
நிறைவானவள் நீ...
என்னை பிரதிபலிக்கும் 
நிஜ கண்ணாடி...

பாதி ராத்திரி
துக்கம் மறந்தாய்..
பாவி என்னால்
எல்லாம் இழந்தாய்..

உச்சி முகர்ந்தாய்
உள்ளம் மகிழ்ந்தாய்..

முதல் நொடி
அள்ளி அணைக்கையில்,
நான் என்ன ஆவேன் என்று
நினைத்தாயோ தெரியவில்லை...

கன்னத்தில் குழி விழ
நான் சிரிக்கையில்
என்ன நினைத்தாய் அம்மா...??

இரத்தத்தை பாலாய்
மட்டும் ஊட்டவில்லை...
தமிழ் கொண்டு ஊட்டினாய்..
இதய துடிப்பில்
இசை சொல்லித்தந்தாய்...

உன்னை முதல் முறை
அம்மா என்றழைக்கையில்..
கவிதை சொல்வேன் என்று
நினைத்தாயா....?

நீ சப்பி ஊட்டிய
சோறு என்னும் என்
தொண்டையில் இனிக்கிறது...

நடந்து கால் களைக்கையில்
கை நீட்டினாய்...
உன் கைகள் தான் என்
நடை வண்டி..

உன் முதுகில் தான்
ஊர்வலம் போனேன்...
உப்பு மூட்டை தூக்குவதற்காய்
எத்தனை முறை அடம்பிடித்தேன்..
பொறுமையை எங்கே கற்றுக்கொண்டாய்..

உன் மடி போல பஞ்சனை
இதுவரை  கிடைக்கவில்லை..

இப்போதும் என்னை
கட்டியிருப்பது உன் அன்பு
அணைப்புக்கள் தான்...

எத்தனை தவறுகள்
புரிந்திருக்கிறேன்...
தண்டனையாய்
முத்தம் தருவாய்..

அதற்காய் தப்பு செய்யவே
பழகிவிட்டேன்..

அம்மா
உனக்குள் அடங்கியவையே
அத்தனையும்...
என் முதல்ஆசான் நீ..

நிலாச்சோறு உன்னால்
உண்டிருக்கிறேன்..
என்னை விட பசியாறியது நீதான்..
என் கற்பனைக்கு விதை
நீ சொன்ன
கட்டுக்கதைகள் தான்...

நீ சேமித்து வைத்த
பிரியங்கள் செலவழிந்து விடாது...
உன் அன்பை வீண் விரயம்
செய்யவில்லை...

செதுக்கிய கல்லை
கடவுள் என்பாய் - இல்லை
கருவில் எனை செதுக்கிய
கடவுள் நீ...

நீ யார்
என்னை போல நான்..
நான் யார்..
மறு பாதி நீ...

நீ யார்
என் முதல் எதிரி..
உன்னோடு தான் அதிக சண்டை 
பிடித்திருக்கிறேன்...
உன்னால் தான் பலமானேன்..

என் முதல் நண்பி..
என் தோல்விகளை வெற்றியாய் 
பார்த்தவள் நீ மட்டும் தான்...
உன்னால் தான் உடைந்துபோகவில்லை...

என் முதல் காதலி..
உன் போல் தான்  மனைவி வேண்டும் 
என்று நினைத்திருக்கிறேன்.

உன்  தவம் நான் என்றாய்...
இல்லை
என் வரம் நீ அம்மா....!!


தமிழ்நிலா

மணல்க்காடு 

இயற்கை அழாத காரணத்தால்
கண்ணீர் வற்றிவிட்டது...
நிலம் எல்லாம்
பித்த வெடிப்புக்கள்....

மரங்களுக்கு என்ன நோய்
எலும்பும் தோலுமாக...
இப்படி எரித்தும் மேகம்
கருமையாகவில்லையே...

இயற்கை பயந்திருக்கிறது...
பனிமலை உருகுகிறது,
வேர்த்து வழிகிறது...

என்ன நடந்ததோ
சூரியனுக்கு காச்சல்..
விண்வெளியில்
செய்மதி கண்டிருக்குமோ...

மீன்கள் முச்சு திணறுகின்றன
நுரையீரல் புற்றுநோய்...
கடலுக்குள் கப்பல்
எப்போது கவிழ்ந்தது..

நிலம் எப்படி வெடித்தது..
பூமிக்குள் என்ன சத்தம்
மாரடைப்பு வந்திருக்கும்...

இயற்கை பயந்திருக்கிறது...
விஞ்ஞாத்தினால் இருக்குமோ...
மூச்சு இழுக்கிறது...

 பூமித் தாய் மறைந்து விட்டாள்..
அழகான உலகம் இறந்துவிட்டது..

தமிழ்நிலா

மௌனம்
சம்மதம் மட்டுமா...?

உணர்சிகளின்
வெளிப்பாடு..
எண்ணங்களின்
செயற்பாடு..

ஒலி இல்லாத முதல் மொழி...

புத்திசாலிகளின்
ஆயுதம்..
கோழைகளின்
கேடயம்...

ஆண்களின்
பலம்...
பெண்களின்
பலவீனம்..

சந்தோசத்தில் மௌனம்..
துன்பத்தில் மௌனம்..

மௌனம்
இருளில் வெளிச்சம்,
வெளிச்சத்தில் இருள்...

மௌனம் என்பது 
வாய்பேசா அடிமைத்தனம் அல்ல...

மௌனம் வரம்
நம்மைநோக்கி தவமிருந்து
நாமே பெறுவது..

உடல்மொழி மௌனம்
உயிர்மொழி மௌனம்

மௌனம்
மந்திர ஓசை!
மாயா ஜால வித்தை...

உன்னால் மௌனமாக 
இருக்க முடியுமா...?
மௌனம் செயல் அல்ல...
மௌனம் ஒரு கலை...

உன்னால் மௌனத்தின்
சத்தத்தை உணரமுடிகிறதா...?
மௌனம் நிழல் அல்ல 
மௌனம் நிஜம்...

மௌனம்..
சிக்கலான மொழி, 
சிக்கனமான மொழியும் கூட...

காகிதம் மௌனமாக இருந்தால்
ஓவியம் பேசும்...
பேனா மௌனமாக இருந்தால் 
கவிதைகள் பேசும்...

மௌனம் சம்மதமா
இல்லை.. இல்லை...
சம்மதம் இல்லை என்பதும் கூட...

மௌனம் என்பது கேள்வி
பதிலும் மௌனம் தான்....

தமிழ்நிலா

நிலவு
வான தேவதையின்
தங்க மூக்குத்தி...

இருள் விதவையின்
மஞ்சள் பொட்டு...

ஒப்பனை செய்யாத
உலக அழகி..

சூரியனின் தத்து மகள்..
பூமியின் முதல் காதலி...

ஏழைகள் வீட்டு
மின்குமிழ்...

சின்ன குழந்தைகளின்
சத்துணவு..

விஞ்ஞானிகளின் விந்தை உலகம்..
கவிஞர்களின் ஒரு தலைக்காதலி...

நிலவு அதிஸ்டகாரி தான்
உடலில் ஆங்காங்கே  மச்சங்கள்...
இருப்பினும்
இரண்டாம் முகம் இதை விட
அழகாய் இருக்கும்...!

நிலவு மின்னலின் வேர்வையிலிருந்து
தான் பிறந்திருக்கும்...
ஆனால்
இந்த தண்மையை மழையிடம்
எப்படி பெற்றிருக்கும்...??

பசி அடங்கியிராது
கூனல் பாட்டி
நிலவில் வடை சுட்டிராவிட்டால்..

வாழ்க்கையின் அர்த்தம்
புரிந்திராது - நிலவு
வளர்ந்து தேயாவிட்டால்...

எல்லா நாளும்
அமாவசை தான்
நிலவு வராமல் இருந்தால்...

இருந்தும்..

நிலவே உன்னை,
தூரத்தில் இருந்தே
இரசிக்க விரும்புகிறேன்..

தொடாத தூரத்தில் நீ இருப்பதால் அல்ல..
தொட்டு விட கூடாது என்பதால்...

தமிழ்நிலா 


மனிதாபிமானத்தை
கைப்பற்றுவதற்காய்
மூன்றாம் உலகப்போர்..

தாய்மொழியின்
படுகொலையை கண்டித்து
ஐந்தாவது ஈழப்போர்...

குடி நீர் பெற
படையெடுப்பு..
உணவுக்காய்
மௌன போராட்டம்...

அன்பை தேடி
நடை பயணம்....
வறுமை ஒழிக்க
உண்ணாவிரதம்....

கலாச்சாரம் வாழ
மனித சங்கிலி...
மரங்களை காக்க
பசுமை புரட்சி...

மீண்டும் 
பதற்றமான சூழல் ஆரம்பம்....
தோழர்களே...
வழமைபோல் பதுங்கிவிடுங்கள்..

காணமல் போன பட்டியலில்
ஒற்றுமையும் சேரட்டும்...

-தமிழ்நிலா-



01. இதற்கு தான் ஏற்பாடா...?

சுற்றம் கதறி அழுது 
புலம்பிக் கொண்டிருந்தது..
கனவுகள் சுமக்கும் 
சுமை தாங்கி சரிந்திருந்தது...

நெஞ்சம் கரைந்திருக்க 
வாய்ப்பில்லை - ஆனால் 
முந்தானைகள் நனைந்திருந்தன..

அழாவிட்டால் வேஷம் 
கலைந்து விடும் என்று 
ஒரு கூட்டம் ஒப்பாரி வைத்தது...

பிணம் என்று 
பெயர் மாற்றப்பட்டிருந்தது..

வரவு செலவு அன்று தான் 
பார்க்கப்படுகின்றது..
வக்கீல்கள் வந்திருந்தார்கள்..
சொத்து வழக்கு நடக்கிறது...

செலவு இல்லாத உணவு பரிமாற்றம்...
உண்டபின் தூக்கம்..
உறவுகளின் குறட்டை ஒலிகளையும்
மீறி இரவு அழுகிறது...

அழுகைக்கு பின்னால்
சிரிப்பொலிக‌ளும் கேக்கிறது...

பார்த்து பொறுக்காமல் 
பேழைக்குள் இருந்து எழுந்து விட 
நினைக்குறது உடம்பு...
முடியவில்லை....

கால்கள்
கட்டப்பட்டிருந்தன..
கைகள்
இணைக்கப்படிருந்தன..

மூச்சு முட்டுகிறது
கதைக்க நினைக்கிறது...
முடியவில்லை....

புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
எத்தனை ஏற்பாடா...?
***

02. மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...

உறக்கம் மரணத்தின் ஒத்திகை..
மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...

மரணம் நீண்ட பயணத்தில் 
நிரந்தர ஓய்வு... 
மரணம் கொடிய ஒருவழிப் பாதை..

மரணம் கற்பனைகள்  இல்லாத
முதல் நாள்...

மரணம் எம்பின்னால் தான் 
நடக்கிறது...
சிலருக்கு முன்னாலும் கூட...
மரணம் மனிதர்கள் போல்
முகபாவங்களை மாற்றிக்கொள்ளும்...

பயந்துவிடாதீர்கள்
பயந்தாலும் விடவா போகிறது...??

மரணத்தை நண்பராக
ஏற்றுக்கொள்ள யார் தயார்...?

இருந்தும்...
மரணம் நண்பராக்கி விட தான்
நினைக்கிறது....
***

தமிழ்நிலா
ஆரம்ப பிரிவு தம்பி ஒருவரின் பாடசாலை தேவைக்காக, உடல் உறுப்புகளின் தானத்தின் அவசியம் பற்றி பனையுடன் ஒப்பிட்டு எழுதியது.



பனை நான் பண்புடன்
பாடுகிறேன்... பணிவாய்
பாலரே கேட்டுடுவீர்...

ஒரு விதையால் தான்
நான் பயிரானேன்...
தினம் வளர்ந்து மரமானேன்..
நாளும் உருகி திரியானேன்...
இங்கு பலருக்கு உறவானேன்...

என் தலை எனும் இல்லை ஓலை
கொண்டு ஏழைகளில் வீட்டில்
கூரையானேன்...
என் கண்கள் எனும் நுங்குகள்
தந்து இளசுகள் நெஞ்சில்
நிலையானேன்...

என் இதழ் வழி வழியும் பதநீர்
பழசுகள் உயிராகும்..
என் உடல்களின் சிதைவுகள் எல்லாம்
வீட்டில் விறகாகும்...

என் உடலில் உயிர் உள்ளவரை..
உதவி எல்லாம் செய்கிறேன்..
உயிர் அது போனபின்னும்
பெயருடன் தான் வாழ்கிறேன்...

அது போல் நீங்களும் வாழுங்கள்..
உலகத்தை ஆளுங்கள்...
இருக்கையில் பலருக்கு உதவுங்கள்...
சிறப்புடன் வாழுங்கள்..
உடல் தானம் செய்யுங்கள்...
இறந்தபின்னும் வாழுங்கள்...

தமிழ்நிலா


நிலா நம் முற்றத்தை
தொடுவதில்லை...
வானமோ வானவில்லோ
வந்ததாய் தெரியவில்லை..

மழை மட்டும் அப்போ அப்போ
வந்து போக தவறுவதில்லை...
இடை இடையே தவிக்கவிட
மறப்பதும் இல்லை....

மழை...

வானக்கடலின் முத்து..
மேகத்தாயின் ஆனந்த கண்ணீர்..
மின்னலுக்கும் இடிக்கும்
பிறந்த குழந்தை..
தென்றலின் காதலி..
தூவானத்தின் நண்பி..

பள்ளி நாட்களில்
முதல் மழை...
குடை இல்லாத நாட்களில்..
புது மழை...
மடக்கி வைத்திருந்த குடைகளை
மறைத்து வைத்தவாறு
ஒய்யாரமாய் நடை...

எல்லாம் இழக்கப்பட்டிருந்தது...

அம்மாவின் எதிர்ப்பை தாண்டிய
மழையில் மண் விளையாட்டு...
அப்பாவின் அன்பை விரும்பாத
காகித கப்பல்களில் பயணம்..
காதலியின் அரவணைப்பை
தாண்டிய மழைக்குளியல்...

எல்லாம் காணமல் போயிருந்தன..

மழை நம்மை
நனைக்கவே யோசிக்கின்றது......
இருந்தும் எதோ ஒன்று
தடுக்க துடிக்கிறது... 

மழையே...

நீ தீண்ட வருவாய் என்று
காத்திருகின்றது  மண்...
நீ சுவாசம் தருவாய் என்று
இன்னும் உயிரோடு செடிகள்...
தாகத்தில் நதிகள்
தொண்டை வறண்டு இருக்கின்றன..
காமத்தில் மயில்கள்
தோகை விரிக்க நினைகின்றன...

ஏழைகள் வீடு மேயப்பட்டு விட்டன...
வீதிகளும் போடப்படுகின்றன...
வரப்புகள் உயர்ந்து விட்டன
இன்னும் என்ன தயக்கம்..

தமிழ்நிலா



யாழ் தேவி துயிலுரியப்படுகிறாள்
துச்சாதனன்களால் அல்ல,
பாஞ்சாலிகளால்...

உரக்க கட்டளை இடு துரியோதனா
ஆடைகளை களையாதே என்று..

சபதம் செய்து விடு துச்சாதனா
ஆடை கொண்டு அங்கம் மூடாமல்
போகமாட்டேன் என்று...

கௌரவா்களே ஓடி வாருங்கள்
பாஞ்சாலிகள் துயிலுரிகிரார்கள்...
கண்ணன் சேலை தேடி
ஓடிக்கொண்டிருக்கிறான்...

தமிழ்நிலா


உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..

முதல் தீண்டலிலே
விலை போகின்றது..
அடுத்தகண புன்னகையில்
விலை போகின்றது...

கடிதங்கள் பரிமாறி
கடலையும் போடுகையில்
விலை போகின்றது....
கைபிடித்து நடக்கையில்..
கைபேசி குறும் செய்தியில்
விலை போகின்றது....
கணனி இணையத்தில்
கடல் காற்று வாங்கையில்
விலை போகின்றது....

காதல் என்கையில்...
கட்டி அணைக்கையில்...
விலை போகின்றது...
மணந்தவளை மறந்து,
மற்றவளை நினைக்கையில்...
விலை போகின்றது...

கலாச்சாரம் விலை போகின்றது..
கற்பும் விலை போகின்றது..
குடல் பசிக்கா விலை போகின்றது...???
இல்லை... உடல் பசிக்கே போகின்றது

உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..
புனிதங்கள் புதைக்கப்பட்டு
அசிங்கங்கள் விதைக்கப்பட,
உடலே விலை போகிறது..


தமிழ்நிலா

காற்றுவெளி August 2012

பூவே இத்தனை அழகு..
உனக்கு எப்படி வந்தது...???

உலகத்தின் முதல்
மழைநாளில்
வானவில் கரைந்திருக்குமோ...

வானத்து ஆழகிகளின்
முத்தங்கள் பட்டிருக்குமோ...

தேவதைகளின் வியர்வை
மண்ணில் சிதறி இருக்குமோ...

என்னவாய் இருக்கும்...??


*  *  *  *  *  *  *  *  *  *  *  *  * 

*  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  
காலையில் தானே
பேசிவிட்டு போனேன்..?
ஏன் தரையில் கிடக்கிறாய்..

தலை நானியதால்,
உடல் சோர்ந்ததால்
தூக்கிப் போட்டுவிட்டார்களோ..?

அழகு என்ன நிரந்தரமா...
அழுது விடாதே...

வாழ்வு என்ன நிரந்தரமா...
உன் ஆயுள் சில சில நாள்..
எம் ஆயுள் சில பல நாள்...
அவ்வளவு தான்...

உன் குணம் யாருக்கு வரும்..???

நீ மட்டும் தான் சாதிபார்ப்பதில்லை...
எல்லோர் தலையிலும்
அமர்ந்து கொள்கிறாய்..

நீ மட்டும் தான் மதங்களை
பிரிப்பதில்லை - எல்லா கடவுளின்
பாதங்களிலும் பூஜை செய்கிறாய்...

நீ தான் உண்மையான வள்ளல்..
பூச்சிகளின் பசிபோக்க
தவறியதே இல்லை....

நீ தான் அதிக பொறுமைசாலி..
கொடுமைகள் புரியினும்
சுகந்தம் பரப்புகிறாய்..

உன் தியாகம் எதை மிஞ்சிவிடும்..

வண்டுகள் குத்தி போனாலும்..
தாங்கிக் கொள்கிறாய்...

எலும்பை முறித்து - உன்
தலை கிள்ளி தலையில்
சூடிப்போகையிலும் சிரிக்கிறாய்..

நூல்களில் கட்டி தூக்கும்
இடுகிறார்கள் - சகித்துகொள்கிறாய்..

உன்னில் தான்
ஜேசுவை காண்கிறேன்..
மகாத்மாவை காண்கிறேன்..

மொட்டாய் முடங்கி விட
நினைக்கிறாயா..??
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருக்கிறாயா..???

வேண்டாம், பூவே நீ மலர்...
உன்போல் தான் நானும்..
நாளை மீண்டும் பிறந்து வா...
எனக்கு தோழி வேண்டும்..

தமிழ்நிலா

இன்னமும் இருக்கிறார்கள்...

சில கண்ணகிகள்
சில சீதைகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள் 

இலக்கிய புத்தகங்களில்...
தமிழ் பாடப்பரப்புகளில்..
கவிஞர்களின் கற்பனையில்..
மட்டுமே...  ஆனால்..  அதிகம்...

மாதவியை நாடும் 
கோவலர்களும்...
வீட்டுவாசம்  அனுப்பும் 
ஸ்ரீ இராமர்களும் ...
மனைவியை விற்றுவிடும் 
நள மகாராஜர்களும் ...
காதலியை மறந்துவிடும் 
துஷ்யந்தன்களும்...


இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. 
இங்கேயும் இருக்கிறார்கள்..
நிஜ வாழ்க்கையில்...

தமிழ்நிலா


வீதிகள் எங்கும்
புதைக்கப்படுகின்றன
வேக வெடிகள்..
சந்திகளில் எல்லாம்
அமைக்கப்படுகின்றன
விபத்து நிலையங்கள்...

கனரக ஆயுத அழிவை
கடந்து வந்தால்,
கன(ரக) வாகன அழிவு...

சாரதியின் இருக்கைக்கு
அருகில் தான்
இயமனின் இருக்கை...
பிரயாண சீட்டு இன்றி
சித்திர குப்தர்களின் வருகை..
கண்ட இடத்திலும்
கணிக்கபடுகிறது...
பாவ புண்ணியங்கள்....!!


அரசுக்கும் தனியாருக்கும்
விபத்தில் கூடவா போட்டி..??
போட்டி போட்டு இடித்து
அழிக்கிறார்கள் மக்கள் கனவுகளை...


நீதி மன்றங்களில் இன்னமும்
தேங்கி இருப்பதெல்லாம்..
விபத்து வழக்குகள் தான்...

தமிழ்நிலா


இருண்ட மனதுக்குள் சிறகடிக்கும்
கறுப்பு மின்மினி
சாதி
*****

இறக்கைகள் கழன்ற பின்னும்
பறக்க துடிக்கும் ஈசல்
காதல்
*****

சிறகுடன் விழுங்கியபின்னும்
பறக்க முடியாத பல்லிகள்
சமூகம்
*****

தமிழ்நிலா


பேனா முனைகளில்
என் வலிகள்...
வலிகளில் தாகம்
இன்னும் ஒரு தடவை
மாறுமா இந்த
உலகத்தின் தலை எழுத்து ..??

இனங்கள்
மதங்கள்...
மொழிகள்,
சாதிகள்,
பேதங்கள்..
நாகரீகம்..

எத்தனை
எத்தனை

என்னால்
மாற்றமுடியவில்லை..
மடமைகளை
வளைக்க முடிந்தது
உடைக்க முடியவில்லை..

ஏனெனில்
நான் பாரதியில்லை..
இருந்தாலும்
எனக்குள் ஒரு பாரதி..

தமிழ்நிலா


காற்றுவெளி June 2012



வான புத்தகத்தில்..
எழுத்துகள் சிதறிக்கிடக்கின்றன..
நட்சத்திரங்கள்...
*****

நடுப்பக்கத்தில் வழமை போல்
சோக கவிதைகள் தான்..
அமாவசை இரவு..
*****

அட்டை பக்கத்தில்
அழகான தேவதையின் முகம் ..
நிலா...
*****

கவிதைகள் எழுதும்
முன்னுரை
அதிகாலைப்பொழுது..
*****

நீண்டு கொண்டு போகும்
ஏழு வரி கவிதை..
வானவில்...
*****

சின்ன சின்ன ஹைகூக்களின்
அணிவகுப்பு..
வெண் மேகங்கள்..
*****

இதோ கவிதைகளின் காதலன்
வருகிறான்..
சூரியன்..
*****

தமிழ்நிலா 13.02.2014

நிலாந்தன் ஈழத்தின் கவிதை மற்றும் பத்தி எழுத்தாளர். கவிஞராகப் பரவலாக அறியப்படும் இவர் இலக்கியம், அரசியல் தொடர்பாகக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர். ஈழம், அதன் பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் ஆராயுமொரு ஆராட்ச்சியாளரும் கூட...
என் பேருந்து பயணத்தின் நண்பர் ஒருவரின் கதை இது...



பருவம் ஆகிவிட வயதிருந்தும்
உன்மேல் எனக்கு அப்போதே காதல்...
பருவம் அடைந்தாய்
எல்லோருக்கும் சந்தோசம்..
எனக்கு மட்டும் கவலை..
எங்கள் கோட்டைக்குள்
குள்ளநரிகள் அன்று தான் வந்திருந்தன..

வான் சுற்றும் வண்டுகள் போல்
உன்னை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தேன்..
களமுனையில் தோட்டாக்கள்
சிதறிக்கொண்டிருந்தன..
உன்னை பாதுகப்பதற்காய் என்
பார்வை தோட்டாக்களும் கூட...
எம் காதல் வலயமானது..
முட்கம்பி வலயமானது...

கவிஞர்களின் கற்பனைக்குள்
எட்டாதவள் நீ.. என்
கண்களுக்குள் மட்டும் எப்படி
காவியமானாய்...


எனக்கு நீ சாதாரணமானவள் தான்..
மற்றவா்களுக்கு என்
அசாதாரணமாய் தெரிந்தாய்..
மலராத மலர் உன்னை
சருகாக கசக்கிய அந்த
கயவன் யார் என சொல்லாமல்
ஏன் மறைந்தாய்....

அன்பே..

மீண்டுவிட்டோம்...
மீளவில்லை...
மீட்கவில்லை...
உன் காதல்களோடு
நான் மட்டும்...
மீட்டுக்கொண்டிருகிறேன்...
உன் நினைவுகளை மட்டும்...

தமிழ் நிலா

காற்றுவெளி May 2012
Next PostNewer Posts Previous PostOlder Posts Home