Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
புத்தாண்டில் ஒரு சிறுமியின்..கனவாக...


புதுமைகள் புரிய 
வந்த புத்தாண்டே..
உன் புதுமைகள் என்ன 
சொல்லாண்டே..

இரவினில் பிறக்கிறாய்..
உன் பிறந்தநாள்...1.1.11 
அட இது கூட புதுமை எல்லோ
உன் பிறப்பே புதுமை ஆச்சே

இங்கே சமாதானத்தை
தந்திடு.. நீ
புதுமையை ஒன்றொன்றாய் 
காட்டிடு..
அன்பை எங்கும் 
பரப்பிடு,
ஆணவ அலைகளை
அடக்கிடு,
துன்ப மலைகளை
உடைத்திடு,
கருணை மழையினை
பொழிந்திடு..

உயர்ந்தவர் புகழினை
இறக்கதே..
ஏழைகள் வயிற்றில் 
அடிக்காதே..
நண்பரை நீ
பிரிக்காதே..
நன்றியை என்றும் 
மறவாதே..
ஆயுள் ரேகையை
அழிக்காதே...
விலைகளை தினமும்
கூட்டாதே..

எங்கும் எதிலும் காதல் 
கொண்டு....உன்
புதுமைகள் அனைத்தையும்
புரிந்துடு......

தமிழ் நிலா 
எத்தனை வருடங்கள் கடந்தாலும் போர் கால வடுக்கள் போகாது. மீண்டும் வளருமா எம் பொருளாதார வளம். போர்காலத்தில் அங்கே சிக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அன்று எழுதியது. 


னை மரத்தோப்பே...
பழகிய தெருவே சுகமா....
பச்சை சொர்க்கமே,
பனி விழும் பூவே நலமா...
மீண்டுவந்தேன் மீளவும்
நான் அம்மா....கையிழந்த 
தனி மரமா....!!!

நேற்றிருந்தோம் வீட்டினிலே...
சேர்ந்திருந்தோம் முற்றத்திலே...
விழித்திருந்தோம் இரவினிலே...
விடியும் முன்னே தனித்துவிட்டோம்
இரு உயிரை பிரிந்துவிட்டோம்....!!

இடம்தேடி நாம் நடந்து 
கால் தளர்ந்து போகையிலே...
கோயில் மடம் இருக்கு 
இளைப்பாற போய் இருக்க,
விழுந்தகுண்டிநிலே நாலுயிரை
அம்மனுக்கு பலி கொடுத்தோம்...!!

விடியம் இரவென்று காத்திருக்க
காட்டு நரிக்கூட்டம் கட்டவிழ்து
வருதென்று.. கால் போகும் இடம்
எங்கும் கையாலே தான் போனோம்...!!

பூச்சிக்கும் புல்லுக்குமம் மருந்தடிக்க
அஞ்சியோடும் எம் குழந்தைகளுக்கு
நச்சு புகையடிச்சு கருக்கிப்போன கயவரை
கண்டும் காப்பாற்ற முடியாம தவித்தோம்..

பாதுகாப்பு வலயம் என்று முள்ளுக்கம்பி
கட்டிவைச்சு நாளும் உயிர் கொன்று
சதை தின்னும் புத்தம் தெரிந்த ஆசாமிகளை
இன்னும் ஏன் விட்டு வைத்தோம்.....???

தமிழ்நிலா

காற்றுவெளி December 2010
தனங்களப்பு எனும் இடத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்.. இரண்டுபேர் கொல்லப்பட்டும், 3 பேர் காயமும் அடைந்தார்கள்... அந்த குடும்பத்தின் அழுகை வானை பிழந்து மழையை வரவைத்ததோ இல்லையோ. ஏன் மனதினை பிழந்து கண்ணீரை பொழிய விட்டது...


ரணியில் நாம் வாழ
தரையினிலே வைச்சோம்
வலது காலை வைக்க முன்னம்
வைச்ச காலை காணலயே..!!

கழனியில காலை வச்சோம்
எம் குலம் நீண்டு வாழ....
கால் போக தான் தெரிஞ்சுது
கண்ணியில வைச்சோம் என்று...!!

வைச்சவனும் தப்பிட்டான்
வந்தவனும் தப்பிட்டான்...
சண்டை முடிஞ்சுது எண்டு போன
சொந்தம் தான் செத்திச்சு...!!

குருதியில நான் கிடந்தேன்
அண்ணன் காலை காணலயே...
கட்டி பிடிச்சு அழுவம் எண்டா
உடம்பில உசிரும் இல்லை....!!

தமிழ் நிலா 
வஞ்சம் தீர்க்கப்பட்ட வன்னி மக்களின் இன்றய நிலை... மீள திரும்பாத மாணவர் மனநிலைகள்... எதிர்காலம் எரிக்கப்பட்ட இளஞர் யுவதிகள்... 



றப்பதற்கு சிறகிருந்தும்
நுடக்க முடியா எம் உறவுகள்
சத்தம் ஒன்று கேட்டாலே
பறந்து போகும் குருவிகள்... இது
ஏனோ தெரியவில்லை...!!

தினம் எண்ணி எண்ணி
செத்துப்போகும் இளசுகள்..
பெரும் காடாய் போன
தமிழ் பள்ளிகள்....
பள்ளி செல்ல முடியா
சிறிசுகள்... இது தான் எம்
சாபமோ தெரியவில்லை...!!

புத்தகம் இல்லா பைகளும்
மையே இல்லா பேனைகளும்
இரத்தம் படிந்த சீருடைகளும்
இது தான் இனி வாழ்கையோ
ஏனக்கு தெரியவில்லை...!!

கதிரைகள் இல்லா மேசைகளும்
மேசைகள் இல்லா கதிரைகளும்
தரையே கதிரையாய் மாறும்
சில நேரங்களும்... இது விதியா
அல்ல சதியா ஒன்றும் தெரியவில்லை..!!

கொட்டில்கள் இனி வகுப்பாய் போக
கைகள் இனி கால்களாய் போக
சோதனையில் வாடும் எம்மை
சோதனைகளும் விடவில்லை...
காரணமும் தெரியவில்லை...!!

பேய்க்காட்டும் பொய் கோலம் 
நிவாரணமும்... எம் 
பிள்ளைகள் பசியால்
சதா ரணமும்.. இது எல்லாம்
எவனுக்கோ சாதாரணமாய்
போனது ஏனோ தெரியவில்லை....!!

தமிழ்நிலா 

காற்றுவெளி November 2010

சுகமான சுமைகள் எல்லாம்
சுமக்கின்ற சுமைதாங்கி
சாயாமல் சாய்ந்திருக்கும்,
சகபாடி சகவாசம்...
ஒரு நொடி தாண்டி போகயில
நடிப்பாகி போனதனால்

உயிரான உறவெல்லாம்
வெறும் வேசமாக
தெரிந்ததனால்,
கரை சேரா படகொன்று
கவிழ்ந்தது நடு கடலினிலே.
உருவான நாள் முதலாய்
உருகாத நட்பொன்று
உடைந்தது இன்று தரணியிலே.............!!


தமிழ் நிலா 


கடத்தப்பட்டு, காணாமல் போய் கைது செய்யப்பட்ட, சிறைகளிலும் தடுப்பு முகாங்களிலும் வாழும் மக்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் விடுதலை என்று அறிவிக்கப்பட்ட மகிழ்சியில்...




என் பாசமுள்ள அம்மாவுக்கு
ஒரு பாச மடல்.......
அம்மா நலமா?

யாழ்ப்பாணம் பார்த்து
ஐயிரண்டு வருடம் அம்மா...!!
இங்கு வரும் பேப்பர் எலாம்
யாழ் செய்தி சொல்லும் அம்மா ... ??

தமிழினத்தை கொல்றாங்களாம்
தினம் தினம் சொல்லுறாங்கள்..
இப்பவும் நடக்குதாம்மா...
தமிழனுக்கு உரிமை கிடைச்சுதாம்மா???

A9 ம் திறந்தாச்சாம்
யாழ் தேவியும் வரப்போதாம்.....!!
யாழ்ப்பாணம் நான் வர
நீ இருக்கணும் எனக்காக.....
காணமல் போன உன் மகன்
உயிரோடு உள்ளேன் அம்மா......!!

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்தி விட்டாய்...
நாற்பது வயதுக்கு மேல் ஆகி இருக்கும்
என் அம்மா உனக்கு....

நீ பெத்த மகளுக்கு - இந்த
அண்ணனை நினைவிருக்க ..??
என் பெயர் சொல்வதுண்டா....???
அவள் கல்யாணத்துக்கு எனும்
வருவேனா சொல் அம்மா...??

கடத்தப்பட்ட காரணம் தெரியாமலே...
கடந்ததமா பத்து வருஷம்....
ஒவொரு நாளும் விடியும் போது
எங்களுக்கு விடியாத என்று
இருக்குதம்மா...!!!

பத்து வருசத்தில் எத்தனையோ
நண்பர் அம்மா...!!
வருவதும் போவதும்...
அன்றாட வழக்கம் அம்மா...!!!

போனவர்கள் இங்கு என்று
யாருக்கும் தெரியாதம்மா...!!
யாரேனும் வந்து என் செய்தி
சொன்னதுண்டா..????

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்திடம்மா...
நிச்சயம் ஒரு நாள் வருவேன்
அரசியல் கைதிகளுக்கு மறுவாழ்வாம்....!!

தமிழ்நிலா

காற்றுவெளி October 2010 

அண்மையில் பத்திரிகையில் பார்த்த செய்தி என்னை ஏதோ செய்தது.. இரு பிள்ளைகளுக்கு தாயான தான் மனைவி இன்னொருவனுடன் போவதை தடுக்க மக்கள் மத்தியில் காலில் விழுந்தாராம்... பாவாம் 



ற்றையடிப்பாதையில
ஓரமாய் போறவளே......
என் ஒற்றை மனசு கூட
உன் பின்னால போகுதடி....!!!

கன்னியே.... என் மனதை
களவாடி போனவளே......
இந்த காரிருளில்
கையில் பெட்டியுடன் நீ
களவாக போவதெங்கே.....??
உன் பின்னாலே புருஷன் வருகிறனே
ஒருதடவை பாத்தாயா...??
உன்பின்னால ஒரு உருவம் வருதென்று...
ஓரமாயேனும் பாரேண்டி.....

எங்கோ பாட்டு வர நீ 
எச பாட்டு பாடுகின்றாய்.. .
என் இதயம் இசை மீட்குதே.
சோகத்தோடு,.. அது..
காதோடு கேட்கலயா...???
 காரிருளில் என்ன சத்தம்.....??

இந்த நேரத்தில்.... இந்த பாதையில்
வருவது தான் யாரடி...?? வந்தவன்...
கைபோடுகிறான்.... ஏனடி
நீ கூச்சல் போடவில்லை....
அவன்..யாரடி... உன் கணவன் நானடி...??
தாலியை கூட காணவில்லையே....
எனை கழட்டி விட்டாயா...???
சிரிக்கின்றானே.... அவன்
உன் கண்ணாளனா......???

உன் பின்னால வந்த என் மனசு
நொருங்கிப்போனதடி....!!
என் பிள்ளைக்கு என சொல்ல..
உயிரை உறையவைத்த
ஒரு மணிக் காதலியே.....
ஒற்றையடிப்பாதையில ஒரு
குடும்பம் தான் போக......
கண்ணீரால் வாழ்தியபடி ஓரு
இதயம் தான் திரும்ப......
கலைந்து போனது...என்
வாழ்க்கயின் கனவு..!!

தமிழ் நிலா 
எனக்கு வாழ்க்கை கசக்கிறது அதை சுவைக்க கவியாக்கினேன் உவர்க்கின்றது கண்ணீர் வந்து. இது எல்லாம் மாறுமா??



மேகம் இல்லா வானை கண்டேன்,
நிலவே இல்லா இரவை கண்டேன்,
மண்ணை தொடாத மழையை கண்டேன்,
கடலை சேரா நதியை கண்டேன்...!!

குரலை மறந்த குயிலை கண்டேன்,
கால்கள் இழந்த மயிலை கண்டேன்,
கூட்டை தொலைத்த குருவிகள் கண்டேன்,
வீடே இல்லா உலகினை கண்டேன்.....!!

இலைகள் அற்ற கிளைகள் கண்டேன்,
மொட்டு வராத மரத்தை கண்டேன்,
மணமே இல்லா மலரினை கண்டேன்,
விதைகள் வராத கனிகளை கண்டேன்...!!

இசையே இல்லா ஸ்வரங்கள் கண்டேன்,
தாளம் மறந்த பாட்டை கண்டேன்,
துளையே இல்லா குழல்கள் கண்டேன்,
தந்தி அறுந்த வீணையைக் கண்டேன்......!!!

தந்தையை இழந்த பிள்ளையை கண்டேன்,
பிள்ளையை பிரிந்த தாயை கண்டேன்,
கணவனை மறந்த காரிகை கண்டேன்,
கற்பை தொலைத்த பெண்களை கண்டேன்....!!

நன்றி மறந்த நண்பர்களை கண்டேன்,
ஆயுள் குறைந்த மிருகம் கண்டேன்,
புத்தகம் இல்லா நூலகம் கண்டேன்,
நீதி இல்லா சட்டத்தை கண்டேன்....!!

கத்தி திரியும் கயவர் கண்டேன்,
எட்டி உதையும் உயர்ந்தவர் கண்டேன்,
தலையே இல்லா உடல்களை கண்டேன்,
மனிதம் செத்த உயிர்களை கண்டேன்....!!

தமிழ் நிலா


காற்றுவெளி September 2010

பாடசாலை எங்கும் ஆசிரியர் தினம் கொண்டாட பட்டாலும் ஆசிரியர்களுக்குரிய மதிப்பை கொடுப்பதில்லை... அவர்களது பணியை உணர்வதில்லை


லகத்தில் பல தினம் இருக்கு 
உமக்கும் ஒரு தினம் இருக்கு,
அன் நாளில், தரணியில் புகழ் சேர்க்க 
எமக்கு ஒளி ஊட்டும் இறைவா உமக்கு 
மலர் சூடுகிறோம் உம் குழந்தைகளாக....!

தினம் தினம் நீர் விளித்து 
எமை உயர வைத்தாய்... 
உறக்கம் ஏதும் இன்றி 
எமை மேலே ஏறிவிட்டீர்...!

நீர் ஏறிய ஏணியில் எமை ஏற்ற
பல முறை விழுந்துவிட்டீர்...!
உம் காலில் நாம் விழுவதற்கு
இன் நாள் ஒன்று போதாது குருவே..!

நாளும் நீர் கூறும் அறிவுரை புளிக்கும் எமக்கு... 
அது நம் வயது... எம் வெற்றியின் மறுகணமே 
இனிக்கும் அவையே தேனாக... அது தான் எம் மனது..!

யார் யாரோ கல்லில் காணும் கருணையை
உம் உளத்தில் காணுகிறோம்...
பூமிக்கு வந்த தெய்வங்கள் நீங்களே....
நீங்கள் தேய்ந்து எமை வளர்த்திர்கள்...
வளர்ந்தோம் உம்மையே திரியாய் கொண்டு....
நீர் ஏற்றிய தீபம் என்றும் அணையாது... 
உமை மறந்து எம் இதயம் ஒருநாளும் போகாது....!

உமை வாழ்த்த உயிர் உள்ள 
சொற்கள் இன்றி தவிக்கின்றோம்....! 
உங்கள் சந்தோசத்தை பார்த்து  நாம் 
ஊமையாகி போகின்றோம்...

தமிழ் நிலா 
மக்கள் முகாம்களில் அடைக்கப்படடு, முட்கம்பிக்குள் வாழ்ந்து ஆண்டொன்று முடிந்தும் அதன் வடுக்கள் மாறவில்லை... தடங்கள் அழியவில்லை...ஒரு தாயின் தாலாட்டாய் போன சோகம்...



கனே நீ உறங்கு...!!
(தாயின் தாலாட்டு)

சந்தன பூமியடா இது
குண்டு விழுந்ததால்
கந்தக பூமியடா...
வீர பூமியடா இது
காட்டி கொடுத்ததனால்
துரோக பூமியடா...

மகனே நீ உறங்கு....

நெல் விளைந்ததால்
செல்வந்த தேசமடா...
செல் விழுந்ததால் இன்று
பிணம் விளைந்திட்ட தேசமடா...
காற்றிலும் ரத்த வாசமடா...

சுமங்கலி பெண்கள்
விதவைகளடா...
கன்னிகள் கூட கர்ப்பிணிகளடா..
கர்பினிகளையே கற்பழித்த
கயவரடா...இவர் நெஞ்சம்
பிளந்திடும் நாள் ஏதுடா...

என் மண்ணில் நான்
அகதியடா.. உன்
தந்தையை இழந்ததால் நான்
அனாதையடா...
எம் சொந்தம் எல்லாம் முள்
கம்பிக்குள் தானடா...
உடன் பிறப்புகளோ தடுப்பு
முகாம்களின் உள்ளடா...

பிணத்தோடு இருந்தோம்
சில காலம்...
பசியோடு படுத்தோம்
பல மாதம்....
பயத்தோடு வாழ்கிறோம்
நெடுங்காலம்...
இனி எப்போது எமக்கு
விடிகாலம் ...

பள்ளிகள் எல்லாம்
முகம்களடா...
ஆலயங்கள் எல்லாம்
மயானங்களடா...
மைதானங்கள் கூட
தளங்களடா.....
கால் வைக்கும் இடம் எல்லாம்
கண்ணிகள் வெடிக்குமடா..

எம் உறவிழந்து ஆண்டு ஒன்று,
தமிழ் மண் மீளும் நாள் எது....
மகனே நீ உறங்கு....

தமிழ் நிலா

காற்றுவெளி August 2010
A9 வீதி திறக்கப்பட்ட பின்பு தம் ஊர்களுக்கு வந்து போகும் சொந்தங்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த சிறு துளி...



A9 வீதியால யாழ்ப்பாணம்
போப்போறம்....
அப்பா அம்மா காலத்தில
யாழ்தேவில வந்து போனம்...

செம் மண் வாசனை சொல்லுது
ஊருக்கு போறோம் எண்டு...
பனை ஓலை காற்று சொல்லுது...
யாழ்ப்பாணம் போறோம் எண்டு...

முகமாலை தொடக்கம்...
யாழ்ப்பாணம் வரை அப்போ
நம்ம சொந்தம்.... இது தானே
இப்போ நான் வாழும் சொர்க்கம்...

பனங்காய் பணியாரமும்,
பருத்தித்துறை வடையும்
நினைத்தாலே இனிக்கும்
சுவை வாயில் ஊறும்....
மீசாலை மாம்பழத்துக்கும்
கொக்குவில் கொய்யக்கும்
அடிபட்ட காலம் இப்ப கூட
நினைவிருக்கு....

மட்டுவில் கத்தரிக்காய் வாங்க
சாவகச்சேரி போட்டுவந்து,
அச்சுவேலி சந்தையில
ஆட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு..
மண்டான் சுருட்டடிக்க
தொண்டமனாறு போனகதை
சொல்லாமை மறைப்பேனா....

தட்டிவான் ஏறி வல்லிபுரம்
போகையில... காசு வாங்க
கிழவன் வர இடைல றங்கி
ஓடினதையும்.....
நல்லூர் திருவிழாக்கு
அடிக்கடி போனதையும், அங்கு
வந்த பெண்களுக்கு செல்லமாய்
இடிச்சதையும்...
மறக்க தான் முடியுமா??

எங்கள் சொர்க்கம் என்றும்
பச்சையாய் தான் இருக்கும்.
ஒழுங்கை எங்கும் சின்ன சின்ன
காதல்களும் நடக்கும்......
காதல் பெண்ணை பாக்க வேண்டி
பள்ளியில தவம் இருப்போம்...
பள்ளிக்கூடம் விட்டா காணும்
சைக்கிள்ள பறந்திடுவோம்...

யாழ்ப்பாணம் போறதெண்டால்
யாருக்கு தான் கஷ்டம்...
நான் யாழ்ப்பாணம் போறன்
என் வாழ்வை தொடர... .

தமிழ் நிலா

காற்றுவெளி july 2010



என் கனவே
சருகாக கலைந்ததேனோ..
விதியே..
என் ஆசைகள் கொன்று
புதைத்ததெங்கே..
நிழலே
நீ நிஜமாகி வந்ததென்ன..
நிலவே
தடுமாறி போனதெங்கே..

போட்டியே இல்லாமல்
தோற்று போகிறேன்..
போகும் இடம் எல்லாம்
வெக்கி சாகிறேன்...

காலமே....

கற்பனையை விட்டு
நெஞ்சை களவாடி
போனதேனோ..
புன்னகையை தீமூட்டி
புல்லாங்குழலை
நீ தந்துவிட்டாய்...

இறைவா..
பூக்காத மரமானேன்- என்
பூமி மட்டும் மண் ஆனதே...

கல்லே உன்னை கடவுள் என்றதார்..?
உயிரே உனக்கெனி இந்த உடல்ஏனோ...?
தோல்வியால் தினம் நோகும் ஒருவனின் மனம் பேசுகிறது...


நிலா போல் தேய்கிறேன்
வெய்யிலில் காய்கிறேன்
தினமும் இரவில் கண்ணீர் 
மழையில் நனைகிறேன்..

வீதியில் போகையில் 
பல முகம் காண்கிறேன்,
அவை எல்லாம் எனை நோக்க 
குனிந்து தான் போகிறேன்...

பள்ளி எனக்கு பிடிக்கவில்லை
பாடம் எனக்கு இனிக்கவில்லை,
கையெழுத்து அழகாய் இல்லை
தலை எழுத்தும் நல்லாய் இல்லை....

புத்தகம் பாக்கையில்
பந்திகள் சிரித்தன...
கொப்பியில் எழுத்துக்கள்
செருகியே கிடந்தன....

ஒரு முறை தோற்றால் 
தோற்றது தான் எதிலுமே..
ஜெயிக்க நினைக்க
தோற்கிறேன் மீண்டுமே...

பெற்றோர் வெறுத்தனர்
தொடர் தொடர் நொடிகளுமே..
சொந்தங்கள் வெறுத்தது
எனை தினமே...!!

நண்பர்கள் நிறைந்த 
என் பயணத்திலே..
எனக்காக ஒருத்தன் இல்லை
வரும் வீதியிலே....

 பட்டம் பெற்றோர் 
எனை மட்டம் தட்டிப்போக
நான் செத்து செத்து 
பிளைகிறேன் தினம் தினமே..

என்றுமே தோற்றதில்லை
கல்வியிலே -- எனக்கு 
இலட்சியம் இருந்தது நெஞ்சினிலே..
திசை மாறி போன பாதையாலே
சிதைந்து தான் போனது 
என் வாழ்க்கையுமே.....

தமிழ்நிலா 
பெண்கள் ஏமாறுகின்றார்களா இல்லை ஏமாற்றப்படுகின்றார்களா தெரியவில்லை... காதல் எனும் வார்த்தையின் வலிமையால் வதைக்கப்படுகின்றார்கள்... பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்.



நிலவுக்கு ஒளியை
கொடுத்த கடவுள்
அதை இரவில் மிதக்கவிட்டான்...!!
உயிருக்குள் உயிரை
வைத்த கடவுள்
எனை கண்ணீரில் மிதக்கவிட்டான்...!!!

நெஞ்ச்சோடு சுமக்கும்
அவன் நினைவும்...
வயிற்றோடு சுமக்கும்
அவன் உயிரும்....
எனை கொல்லுதடி
சமுகம் கூட ஒதுக்கி விட்டதால்...

உலகத்தில் உயிரை
படைத்த கடவுள்....
உயிருக்குள் ஆசையை
வைத்தான்...மறக்காமல்
காதலையும் வைத்தான்...
காதலில் காமத்தையும்
வைத்து விட்டான் அவன்.....!!
எனை வீதியில் விட்டுவிட்டான்...

காதல் எனும் வார்த்தையில்
காமத்தையும் புதைத்து...
பெண்களிடம் குளிர்காயும்
இவன் போல் காமுகர்களை
பெண்ணினமே ... விரட்டிவிடு....
உன்னையும் அணுகலாம்...
ஒரு வினாடிக்கு ஒரு தடவை
என்றாலும் சிந்தி....

அபலை என் கால்களோ
வாழ்வை முடிக்க நடக்கிறது...!!
எம் காதலின் சின்னமோ..
வாழ்வை தொடர கால்களால்
உதைக்கிறது....!!!!!

இந்த உலகத்தை புரியாமல் ........!! !

தமிழ்நிலா 
தவறான உறவினால் பிறக்கும் குழந்தைகள் அதிகரித்து விட்டார்கள். தப்பை மறைக்க பிள்ளையை கொல்லும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள் ஊரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று.


ன்னை பெத்த என் ஆத்தா
என்னை பெத்து போட்டா...!!
நல்ல தண்ணி முச்சு முட்ட
என் உசிரு வானை எட்டும்...!!

கொஞ்ச தண்ணி கிணறும் இல்ல
தப்பி வர வழியும் இல்ல....
உதவி கேக்க பேச்சும் இல்ல
கத்திப் பாத்தேன் யாரும் இல்ல...

யாரும் பாக்க இது பகலும் இல்ல
பெத்தவளுக்கு மனசும் இல்ல...
பெத்தும் அவள் தாயும் இல்ல...
விடிஞ்சா எனக்கு உசிரும் இல்ல...

தமிழ்நிலா 


காதல் காதலாக இல்லை, திருமணமான பின்னும் காதல். அது வேறு பெண்ணுடன். மணமாக முன்னும் காதல். சிறு வயதில் தாயாகும் பெண்கள்.. தற்கொலை செய்யும் பெற்றோர்... பல்வேறு நிகழ்வுகளால் எழுதிய உளறல்....





தாஜ் மகாலால் காதல் வாழ்கிறது
இங்கு காதலோ காமத்தில்
ஏரிகின்றது..... 


இது ஏன் ....???
இது காதலில் குளிர் காய்தலோ...!!

ஒழுங்கைக்கு ஒழுங்கை கட்டப்படுகிறது
நவீன தாஜ்  மகால்கள்.. இன்றய எம்
சாஐகான்களால்... 


இது ஏன் ....??
காதலின் நினைவுக்கோ....!!

காதலுக்கும் ஓராடாண்டாம் - அவர் தம்
குழந்தைக்கும் ஓராண்டாம்.. இது 
ஏன்ன மாயம்.... 


இது ஏன் ..??
காதலின் வேகமோ....??

முப்பது வயதாகியும் கன்னிகளாய்
பல பெண்கள்... பதினைந்து வயதிலே
கற்பிணிகளாய் சில பெண்கள்..


இது ஏன்....??
காதலின் சூதோ...??

கழுத்தில் தாலி இல்லை
வயித்தில் பிள்ளையாம்... 
இருக்கவீடில்லை.. 
அப்பனையே தெரியாமல்
பிறந்துதாம் பெண் பிள்ளை....!!

பள்ளிக்காதல், படலைக் காதல், 
சந்திக் காதல், சந்தித்த காதல்
கள்ள காதல், செல்லில் காதல் எல்லாம்
வர நம் நல்ல காதல் என்னாவது.....??

தமிழ்நிலா 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home